‘நல்லி’ என்ற சொல்லுக்கு ‘நம்பிக்கை’ என்று எதிர்கால அகராதி, பொருள் கூறலாம். அந்த அளவுக்குக் கடந்த 90 ஆண்டுகளைக் கடந்து, 3 தலைமுறைகளின் நம்பிக்கையை வென்றெடுத்த நிறுவனம். பட்டு ஜவுளித் தொழிலில் தொடரும் அதன் பாரம்பரிய வெற்றியின் இன்றைய அடையாளம் 'நல்லி' குப்புசாமி செட்டியார்.
செய்யும் தொழிலில் கோலோச்சுவோருக்கு வேறு துறைகளில் நாட்டம் செல்லாது. நல்லி குப்புசாமியோ இதற்கு நேர்மாறானவர். ‘எட்டு வயது முதல் நான் வாசகன்’ எனும் 80 வயது நல்லி, இன்று 50-க்கும் அதிகமான நூல்களின் ஆசிரியர். ‘தமிழ் பதிப்புலகம் - ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் புகழ்பெற்ற பதிப்பு நிறுவனங்களைப் பற்றி, இவர் தனி நூலாக எழுதி அறிமுகப்படுத்தியிருப்பதில், ஓர் ஆழ்ந்த வாசகனின் அக்கறையைக் காணலாம்.
பட்டுத் தொழில், வணிக நிர்வாகம், வரலாறு, ஆன்மிகம், தேசியம், அறம், தன்னம்பிக்கை என இவர் எழுதாத தலைப்புகளே இல்லை. ‘வள்ளுவர் வகுத்த வாணிபம்’ என்ற இவரது நூலின் முகப்பில், அய்யன் வள்ளுவனுக்கு கோட் சூட் அணிவித்து அழகு பார்த்திருக்கும் நவீனமும் நல்லியின் பன்முகங்களில் ஒன்று. பாரதி ஆய்வுகளைத் தேடித் தேடிப் பதிப்பித்திருக்கும் இவரது எழுத்தும் மேடைப் பேச்சும் கற்ற அனைத்தையும் பிறருக்குக் கற்றுக்கொடுக்கும் வித்தையைச் செய்பவை. சங்கீதம், நாட்டியம், நாடகம், இலக்கிய இதழ்கள், எழுத்தாளர்களை நிபந்தனையின்றி ஆதரிக்கும் இந்தப் பட்டுலக மன்னருக்கு படவுலக அனுபவங்கள் இல்லாமல் இருக்குமா?
‘கட்’ அடித்த காலம்
கேட்டதுமே உற்சாகம் கரைபுரள தனது பால்ய காலத்துக்குப் பயணித்துவிட்டார். “நான்கு வயதில் பெற்றோருடன் ‘ஹரிதாஸ்’ படம் பார்த்தது நினைவுக்கு வருகிறது. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘கிருஷ்ணா முகுந்தா முராரே’ பாடலின் பல்லவியைப் பல நாள்கள் நான் பாடிக்கொண்டிருந்ததை அம்மா நினைவூட்டியிருக்கிறார். பின்னர் வளர்ந்து பெரியவனாகி, சென்னை தியாகராய நகர் விவேகானந்தா மிஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்தில், வெலிங்டன், ராஜகுமாரி திரையரங்குகளில் வெளியாகும் ஹாலிவுட் சாகசப் படங்களைப் பார்த்துக் களித்திருக்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமைகளில் ஹாலிவுட் படம் பார்க்க எனது வகுப்பு நண்பர்களான கருணாநிதி, கிருஷ்ணன், விஜயராகவன், ராஜகோபால் ஆகியோருடன் கூட்டணி அமைத்துக்கொள்வேன். எங்களால் பிற்பகல் காட்சிக்கு மட்டும்தான் செல்ல முடியும். ஏனென்றால், ஆறு மணிக்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்பது கண்டிப்பான உத்தரவு. பள்ளிக் காலத்தில் நாள்தோறும் ‘நாலணா’ பாக்கெட் மணி கொடுப்பார்கள். அதை ஆறு நாள் சேமித்துவைத்து, ஒரு படம் பார்ப்பேன். அறுபதுகளில் முதல் வகுப்புக் கட்டணம், ஒன்றே கால் ரூபாய்.
அன்று வியாழக்கிழமை. பள்ளிக்கு எதிரே இருந்த சுவரில் ‘இப்படம் இன்றே கடைசி’ என்ற சுவரொட்டியைப் பார்த்தோம். எங்களுக்கு அந்தப் படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவல் மேலோங்கிவிட்டது. காரணம், 50 நாள்களைக் கடந்து, அந்தப் படம் ஓடிக்கொண்டிருந்தது. தனித்தனியாக ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி ‘லீவ் லெட்டர்’ எழுதிக் கொடுத்துவிட்டு, திருவல்லிக்கேணி ‘ஸ்டார்’ திரையரங்கு சென்று அந்தப் படத்தைப் பார்த்து மகிழ்ந்தோம். மீண்டும் பனகல் பார்க் வரை பேருந்தில் வரப் போதுமான சில்லறை எங்களிடம் இல்லை.
அதனால் கையிலிருந்த காசுக்கு வாணி மஹால்வரை டிக்கெட் எடுத்துக்கொண்டு வந்து இறங்கி, வீட்டை நோக்கி ‘நடராஜா சர்வீஸில்’ வந்துகொண்டிருந்தோம். எதிரே மிதிவண்டியில் வகுப்பாசிரியர் வருவதைக் கண்டு எங்களுக்கு வயிறு கலங்கிவிட்டது. நல்லவேளையாக எங்களை அவர் பார்க்கவில்லை. நாங்கள் ‘கட்’ அடித்துவிட்டு சினிமாவுக்குப் போனோம் என்று தெரிந்தால், தோலை உரித்து உப்பைத் தடவியிருப்பார். ஆசிரியர் அடித்தால் பெற்றோர் பாராட்டும் காலம் அது. நாங்கள் விரும்பிப் பார்த்து ரசித்த அந்த இந்திப் படத்தின் கதாநாயகி வைஜெயந்தி மாலா. படத்தின் பெயர் 'மதுமதி'.
எங்கள் நல்லி நிறுவனத்தின் வி.ஐ.பி. வாடிக்கையாளர்களுள் ஒருவராக இருக்கும் வைஜெயந்தி மாலா, இன்றைக்கும் சுறுசுறுப்பு குன்றாமல் புடவைகளை ஷாப்பிங் செய்ய அவரே வருவார். கடந்த 2018-ம் ஆண்டும் தனது 86-வது வயதில் துளி உற்சாகமும் குறையாமல் பரத நாட்டியம் ஆடி, தன் கலா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். அவர் எப்போது ஷாப்பிங் வந்தாலும் “எங்கே பசும் பால் காபி?” என்று கேட்பார். எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு பசும் பாலில் காபி தருவதற்காகவே, பசுக்களை வளர்க்கிறோம்.
அந்தக் காபியின் பரம ரசிகை அவர். வைஜெயந்தி மாலா மட்டுமல்ல… பானுமதி, சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி தொடங்கி இன்றைய கதாநாயகிகள்வரை நல்லியின் வாடிக்கையாளர்கள்தான்” என்ற நல்லி குப்புசாமி செட்டியார், கடந்த 2017-ல் வைரவிழா கொண்டாடியிருக்கும் ‘மெட்ராஸ் பிலிம் சொசைட்டி’யின் தலைவராகப் பொறுப்புவகித்து வருகிறார். தணிக்கை குழு உறுப்பினராக நெடுங்காலமாகச் செயலாற்றிவந்தவர்.
‘பர்மா ராணி’யின் கேள்வி
“தணிக்கை விதிகளை மனதில் இருத்தி, நூற்றுக்கணக்கான வெகுஜனப் படங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றில் பல முத்துகளாக இருக்கும். பல சொத்தைகளாக இருக்கும். ஆனால், தமிழ் சினிமாவில் இன்றைக்கு நம்பிக்கையளிக்கும் பல இளைஞர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் தங்களை வளர்த்துக்கொள்ள உலகின் தலைசிறந்த படங்களைக் காணும் வாய்ப்பை திரைப்பட சங்கங்கள்தான் முதலில் ஏற்படுத்திக் கொடுத்தன. திரைப்பட சங்கத் திரையிடல்களுக்குச் சென்று வரும், எனது அனுபவங்களையும் மறக்க முடியாது.
அவற்றில் ‘விண்டேஜ் ஹெரிடேஜ்’ திரைப்படச் சங்கத்தை நடத்திவந்த சுந்தர், புனே திரைப்பட ஆவணக் காப்பகத்திலிருந்து மிகப் பழமையான படங்களை எடுத்துவந்து திரையிட்ட நாள்கள் மீட்டெடுக்க முடியாதவை. மிகக் கடினமான இந்தப் பணிக்கு, நான் துணையாக இருக்கமுடிந்ததை எண்ணி மகிழ்கிறேன்.
அந்தத் திரையிடல்கள் தொடங்கும் முன்னர், மூத்த திரைப்பட ஆய்வாளரான ராண்டார் கய், அன்று திரையிடப்படும் படத்தைப் பற்றி அரை மணி நேரத்துக்கு அரிய தகவல்களைப் பொழிந்து தள்ளுவார். அதைக் கேட்பதற்காகவே அரங்கம் கொள்ளாத அளவு ‘விண்டேஜ்’ பட ரசிகர்கள் குவிந்துவிடுவார்கள். ஒருமுறை டி.ஆர்.சுந்தரம் இயக்கி 1945-ல் வெளிவந்த ‘பர்மா ராணி’ படத்தைத் திரையிட ஏற்பாடு செய்திருந்தோம். அந்தப் படத்தின் கதாநாயகி, அக்காலத்தின் கனவுக்கன்னி கே.எல்.வி.வசந்தாவைச் சிறப்பு விருந்தினராக அழைக்கலாம் என்று ஆலோசனை சொன்னேன்.
அந்த முதுபெரும் நட்சத்திரத்தின் வீடு பாண்டி பஜார் அருகில்தான் இருந்தது. அவரது முகவரியைத் தேடிப்பிடித்து, நிகழ்ச்சிக்கு அழைத்து வரும்படி கூறினேன். திரைப்படச் சங்க நிர்வாகி அவரை சந்தித்து அழைத்தபோது, “நான் இங்கே வசிக்கிறேன் என்று எப்படித் தெரியும். என்னை தமிழ்நாடு இன்னும் நினைவில் வைத்திருக்கிறதா?” என்று அவர் கேட்டிருக்கிறார். அப்போது ‘நான்தான் விலாசம் கொடுத்தேன்’ என்பதைக் கூற, “செட்டியார் பட்டு விற்கிறார் என்று தெரியும், இப்படித் தொலைந்துபோன விலாசங்களையும்கூட கொடுப்பாரா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாராம். நட்சத்திரங்கள் என்றில்லை; பல துறைச் சாதனையாளர்கள் பலரையும் நாம் காலப்போக்கில் மறந்துவிடுகிறோம். ஒரு சிறந்த சமூகத்துக்கு ஞாபகமறதி இருக்கக் கூடாது” என்றவரிடம், திரைப்படங்களில் நடித்த அனுபவம் பற்றிக் கேட்டதும் இன்னும் உற்சாகம் கூட்டினார்.
வாடிக்கையாளரின் கோபம்
“நான் நடித்தது இருக்கட்டும், எங்களுடைய பல கடைகள் படங்களில் நடித்துவருவது நாங்கள் சம்பாதித்த நற்பெயருக்கான அடையாளம் என நினைக்கிறேன். சென்னை பனகல் பார்க் நல்லி ஷோரூமில் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் தொடங்கி சுமார் 20 படங்களில் ஜவுளிக்கடை காட்சியைப் படம் பிடித்திருக்கிறார்கள். நாகேஷ் எனது ஆருயிர் நண்பர். ஒருமுறை அவர் கலந்துகொண்ட படப்பிடிப்பு எங்களது சென்னை ஷோரூமில் நடந்தது. பெரும் ஜனக்கூட்டம், போக்குவரத்து நெரிசல். ஒரு வாடிக்கையாளர், “உங்களுக்கு சினிமா ஷூட்டிங் முக்கியமா, கஸ்டமர் முக்கியமா?” என்று கேட்டுவிட்டார். அப்போதுதான் நியாயம் புரிந்தது. அதன்பின் அடுத்துவந்த 10 ஆண்டுகளுக்குப் படப்பிடிப்புக்கு அனுமதிக்கவில்லை.
நல்லி கடைக்குப் பக்கத்தில் புகழ்பெற்ற ‘தமிழ்ப் பண்ணை’ பதிப்பகம் இருந்த காலத்திலிருந்து, வாலியும் ஆரூர்தாஸும் எனக்கு நெருங்கிய நண்பர்கள். தேசியச் செம்மல், தமிழ்ப் பண்ணை - சின்ன அண்ணாமலையார் பன்முக வித்தகர். அவரால் தாக்கம் பெற்று வளர்தேன். அவரது பதிப்பகத்திலிருந்து தன்னை வளர்த்துக்கொண்டவர் வாலி. கவிஞர் வாலியின் வீட்டுக்கு மாலை 6 மணிக்குப்போனால் எங்கள் உரையாடல் முடிய இரவு 10 மணி ஆகும். இன்றைக்கும் ஆரூர்தாஸை சந்தித்துப் பேசுவது பிடிக்கும்.
அதேபோலத்தான் கமலும் ரஜினியும். இருவருமே குடும்ப அளவில் நெருங்கிய நண்பர்கள். எல்லா குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் அழைத்துவிடுவார்கள். கமலிடம் தொழில் பக்தியையும் மானுட நேயத்தையும் கற்றுக்கொள்ளலாம். ரஜினியோ தாம் பெறும் ஆன்மிக அனுபவங்களை, நமக்கும் கடத்தும் அன்பு கொண்டவர். சந்தித்துவிட்டுப் புறப்படும்போது கார்வரை வந்து வழியனுப்பும் அவரது பணிவு, கோடி பெறும். கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட உச்ச நட்சத்திரங்களின் நண்பராக இருந்தபோதும், திரையுலகில் விரும்பி அழைத்தாலன்றி திரைப்படங்களில் நடிக்க நான் விரும்பியதில்லை.
அப்படி அழைத்து சில படங்களில் தோன்றியிருக்கிறேன். அவற்றில் மறக்கமுடியாத அனுபவம் என்றால், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞான ராஜசேகரன் இயக்கிய கணித மேதை ‘ராமானுஜன்’ படத்தில், பாரிஸ்டர் ஆதிநாராயணன் செட்டியார் கதாபாத்திரத்தில் நடித்ததைக் கூறலாம். மேக்-அப் போட்டு நடிக்கும்போதுதான் ஒரு படத்தில், ஒவ்வொரு காட்சியையும் உருவாக்க எவ்வளவு பெரிய உழைப்பு தேவைப்படுகிறது என்பதைக் களத்தில் கண்டுணர்ந்தேன்.
மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்ட நல்லி ஜவுளி நிறுவனத்தைக் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக நிர்வகித்துவருவதில், பொதுமக்கள் தொடர்பும் திரையுலகத் தொடர்பும் இயல்பாகவே ஏற்பட்டுவிட்டன. அவற்றைப் போற்றிப் பாதுகாத்துவருகிறேன்” எனும் நல்லி குப்புசாமி செட்டியார், தனது திரையுலகத் தொடர்புகளையும் அனுபவங்களையும் தனி நூலாக எழுதிக்கொண்டிருக்கும் தகவலையும் கூடுதலாகத் தெரிவித்தார்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
படங்கள் உதவி: கலைமாமணி யோகா
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago