வசூல், வியாபாரம் என்று விறுவிறுப்பான ஏற்றம் தந்திருக்கும் சினிமாவில் எதையும் தன் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் யதார்த்தமாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கிறது 'ரஜினி முருகன்' என்ற திரைப்படம். அதுபற்றியே அதிகம் பேசித் தீர்த்தார் நம்மிடம்..
இந்தப் படத்தில் மதுரை இளைஞரா நடிக்கிறீங்க போல இருக்கே?
கூட்டுக்குடும்பம், திருவிழா என்று மதுரையை நீங்கள் இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத ஒரு கலரில் இப்படம் இருக்கும். ராஜ்கிரண், சமுத்திரக்கனி என்று ஒரு பெரிய ஜாம்பவான்களோடு நடித்த நாட்கள் மறக்க முடியாதவை.
வில்லனாக பல படங்களில் சமுத்திரக்கனி நடித்து வந்தாலும், இப்படத்தில் ஏழரை மூக்கன் என்ற பாத்திரம் புதுசா இருக்கும். கொடூரமான வில்லனாக அல்லாமல் சூழ்ச்சி செய்யுற வில்லனாக நடித்திருக்கிறார். ராஜ்கிரண் சாருடைய பேரன் ரஜினி முருகனாக நான் நடித்திருக்கிறேன். ராஜ்கிரண் சார் படம் என்றாலே குடும்பப் பாங்கான காட்சிகள் இருக்கும். அதை நீங்கள் இப்படத்திலும் காணலாம். படத்தின் இயக்குநர் பொன்.ராம் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்லணும். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சத்யராஜ் சார் நட்பு கிடைத்தது, இப்படத்தில் ராஜ்கிரண் சார் நட்பு கிடைத்திருக்கிறது.
சதீஷ், சூரி இந்த இரண்டு பேரைத் தவிர வேறு காமெடியன்கள் கூட நடிக்க தயங்குவது ஏன்?
என்னுடைய படத்தில் நான் எப்போதுமே நாயகி, காமெடி போன்ற பாத்திரங்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை. அனைத்துமே இயக்குநரோடு பணி தான். 'காக்கி சட்டை' படத்தில் இமான் அண்ணாச்சிக் கூட நடித்தேன். இயக்குநர்கள் எனக்காக கதை யோசிக்கும் போதே சூரி, சதீஷ் என்று எழுதிவிடுகிறார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் நடித்த படங்களில் இவர்கள் இருவருடன் தான் நடித்திருக்கிறேன். எனது அடுத்த படத்தில் சதீஷ் உடன் காமெடி பண்ணவிருக்கிறேன்.
உங்களுடைய அடுத்த படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி அப்படினு பெரிய பட்ஜெட்டுக்கு போய் இருக்கிறீர்கள். அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும் என திட்டமா?
அடுத்த கட்டம் என்றெல்லாம் நான் எப்போதுமே திட்டமிடுவது கிடையாது. படமாக வேறு ஒரு கலரில் இருக்க வேண்டும் என்று முடிவு பண்ணி செய்தது. காதல், காமெடி கலந்த படம் தான், ஜாலியாக இருக்கும். பெரிய பட்ஜெட், பிரம்மாண்டமாக பண்ணவிருக்கிறார்கள் என்பது எல்லாம் பி.சி. ஸ்ரீராம் சார், ரசூல் பூக்குட்டி சார், ஷான் ஃபூட் வந்ததற்கு பிறகு அப்படி தெரிகிறது. இயக்குநர் பாக்யராஜ், அனிருத், நான் மூவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று திட்டமிட்டது மட்டுமே நான். மற்ற அனைவருமே தயாரிப்பாளர் ராஜாவோட முயற்சி தான்.
அதே போல இப்படத்தைப் பற்றி பல்வேறு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது, நானும் படித்துக் கொண்டே இருக்கிறேன். நான் எதுவும் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. இனிமேல் தான் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறோம். ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்றேன், இதுவரை என் படங்களில் நான் பண்ணாத விஷயங்கள் இப்படத்தில் இருக்கிறது.
பல நடிகர்கள் இப்போது நினைப்பது உங்களுடைய வளர்ச்சியைப் பற்றி தான். உடனே இவ்வளவு பெரிய வளர்ச்சி கிடைக்கும் என நினைத்தீர்களா?
நாம் இவ்வளவு பெரிய உயரத்துக்கு போக வேண்டும் என நினைத்து வரவில்லை. நான் பண்ணிய படங்கள் இவ்வளவு பெரிய ரீச் கிடைக்கும் என நினைக்கவில்லை. அப்படி பெரியளவில் ரீச் கிடைக்கும் போது சரியான அணி கூடத் தான் பயணம் பண்றோம் என தோன்றுகிறது. என் மீது பெரிய பொறுப்பு விழுந்துவிட்டதாக உணர்கிறேன். 8 படங்கள் பண்ணியிருக்கிறேன், பாண்டிராஜ் சார் தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள் தான். என் படங்கள் பெரிய தவறு எதுவும் பண்ணவில்லை. மெதுவாக எனது பாணியிலே பயணித்து சவாலான படங்கள் பண்ணுகிற திட்டம் இருக்கிறது. திரையுலகில் நுழைந்த உடன், ஆசைகளை மட்டும் நிறைய வைத்துக் கொண்டு வந்தேன். அவ்வளவு தான்.
மெரினா படம் பண்ணும் போது இருந்த உங்கள் லட்சியம் என்ன? இப்போது உங்களுடைய லட்சியம் என்ன?
அந்தப் படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் நடித்தேன். முழுக்க பசங்களை முன்னுறுத்தி தான் கதை நகரும். அப்படத்தில் நடிக்கும் போது சினிமாவில் ஏதாவது ஒரு இடத்தில் இருந்துவிட வேண்டும், நல்ல பாத்திரங்கள் பண்ண வேண்டும் என நினைத்தேன். நாயகனாக வேண்டும் என நான் அப்போது நினைக்கவில்லை, எப்படியாவது பெரிய படங்களில் நாம் இருக்கிற அளவுக்கு வளர வேண்டும் என நினைத்தேன். அதுவே அப்போது எனது லட்சியமாக இருந்தது. இப்போது எனது லட்சியமாக மக்கள் அனைவருமே "இந்த சிவகார்த்திகேயன் எந்த வேடம் கிடைத்தாலும் பின்றேன் இல்ல" என்று பேசுற அளவுக்கு வளரணும். அது தான் என் லட்சியம்.
தொடர்ச்சியாக காமெடி சார்ந்த படங்களே பண்ணும் திட்டமா.. இல்லையென்றால் நாலு சண்டை, குத்துப்பாட்டு போன்ற கமர்ஷியல் படம் பண்ணும் எண்ணமும் இருக்கிறதா?
எனக்கு வரும் கதைகளில் பிடித்ததைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். அந்த மாதிரி படங்கள் எல்லாம் இப்போது நான் பண்ணுவது ரொம்ப சீக்கிரம் என நினைக்கிறேன். பொழுதுப்போக்கான படங்கள் பண்றது எனது திட்டம். அவ்வளவு தான். வேறு மாதிரியான கதைகள் எல்லாம் வருகிறது. 5 சண்டைக்காட்சிகள், 1 குத்துப்பாட்டு அந்தக் கதைக்கு தேவைப்பட்டால், அக்கதைக்கு எனக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக பண்ணுவேன்.
முன்பை விட நிறைய சர்ச்சையில் சிக்கும் போது என்ன நினைக்கிறீர்கள்..
தொலைக்காட்சியில் இருந்த போது உள்ள சிவகார்த்திகேயன் இப்போதும் மாறாமல் இருக்கிறேன். நான் ஒரு வார்த்தை பேசினால் அப்போது ஒரு மாதிரி புரிந்து கொண்டார்கள், இப்போது வேறு மாதிரி புரிந்து கொள்கிறார்கள். நடுவில் இந்த மாதிரி விஷயங்களை நினைத்து ரொம்ப குழம்பினேன். நான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. இவரை வீழ்த்தி அடுத்த இடத்துக்கு செல்ல வேண்டும் என நினைத்ததும் இல்லை. நான் சூழ்நிலைகளுக்காக மாற்றி மாற்றி பேசினால் என்னை நான் இழந்துவிடுவேன்.
'மெரினா' வெளியாகும் முன்பே திருமணமாகி விட்டது. இப்போது உங்களுடைய வளர்ச்சியை மனைவி ஆர்த்தி எப்படி பார்க்கிறார்?
முன்பு அவங்களோடு நிறைய விவாதிப்பேன், நிறைய பேசுவேன். இப்போது நிறைய பணிகள் சம்பந்தமாக மும்முரமாக இருப்பேன். இப்போது ரொம்ப மாறியிருக்கிறேன் என அவங்களுக்கு தெரியுது. நமது கணவர் ரொம்ப கஷ்டப்பட்டு படம் பண்ணி முன்னுக்கு வந்திருக்கிறார் என அவங்க நினைக்கிறாங்க. எனக்கு எனது குடும்பத்துடன் ரொம்ப நேரம் செலவு பண்றது ரொம்ப பிடிக்கும். எனக்கு குழந்தை பிறந்த போது போய் 1 மணி நேரம் இருந்துட்டு படப்பிடிப்பு போய்விட்டேன். அந்த சமயத்தில் நான் அவங்க கூட இருந்திருக்கணும். அது தான் முறை. ஆனால், அதைக் கூட அவங்க குறையாக என்னிடமும், வெளியேயும் சொன்னதில்லை. என்னுடைய வளர்ச்சியில் மிகவும் சந்தோஷப்படுறாங்க என்பது மட்டும் எனக்கு தெரியும். ஏனென்றால் அவங்க வெளியே சொல்லும் போது என்னைப் பற்றி அவங்ககிட்ட எல்லாரும் கேட்கிறாங்க, நலம் விசாரிக்கிற போது அவங்களுக்கும் என் மீது நம்பிக்கை வந்திருக்கிறது.
உங்க குழந்தை ஆராதனாவுக்கு உங்களுடைய படம் எல்லாம் போட்டு காட்டினீர்களா..
அவங்களுக்கு என்னுடைய பாடல்கள் ரொம்ப பிடிக்கும். தினமும் படப்பிடிப்பில் இருந்து ஏதாவது வீடியோ எடுத்துக் கொண்டுவந்து காட்ட வேண்டும். இல்லையென்றால் YOUTUBEல் எனது வீடியோ பார்க்க வேண்டும். 6 மாதங்களுக்கு முன்பு வரை "டார்லிங் டம்பக்கு" பாட்டை அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தாள், இப்போது "காதல் கண் கட்டுதே" பாடல் அடிக்கடி பார்க்கிறாள். "என்னமா இப்படி பண்றீங்களேமா" பாட்டை எடிட்டிங் ஸ்டூடியோவுக்கு கூட்டிச் சென்று காண்பித்தேன். அவளுக்கு ரொம்ப பிடித்துவிட்டது. மறுபடியும் மறுபடியும் பார்க்க 'ரஜினி முருகன்' படத்துக்கு அவங்க வெயிட்டிங்.
முன்பு மாதிரி உங்களால் சென்னையில் சுதந்திரமாக நடமாட முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா..
நான் வெளியே போவது என்றால் சினிமா மற்றும் ஹோட்டல் இரண்டுக்கும் தான். மற்றபடி வீட்டில் தான் இருப்பேன். இப்போதும் போகிறேன். புகைப்படம் எடுக்கிறார்கள், நலம் விசாரிக்கிறார்கள். வேறு எங்கு செல்வதில்லை என்பதால் எனக்கு வருத்தம் எல்லாம் கண்டிப்பாக இல்லை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago