ஓர் அடர்த்தியான நாவல் காட்சிகளாய் விரிந்த உணர்வைத் தந்த படம் ‘அவள் பெயர் தமிழரசி’. அதை இயக்கிய மீரா கதிரவன் நம்பிக்கைக்குரிய இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்தவர். அடுத்து இவர் இயக்கியிருக்கும் படம் ‘விழித்திரு’. படத்தின் ட்ரைலரும், பாடல்களும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் நிலையில் அவரிடம் உரையாடினோம்...
மீரா. கதிரவனின் பின்னணியைக் கொஞ்சம் சொல்லுங்கள்?
தென்காசி அருகிலுள்ள திரிகூடபுரம் என்ற சின்ன கிராமம்தான் எனது ஊர். தொடக்கத்தில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். சென்னைக்கு வந்தபிறகு மலையாளத்திலிருந்து அடூர், எம்.டி வாசுதேவன் நாயர், பத்மராஜன் ஆகியோரின் புகழ்பெற்ற திரைக் கதைகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்தேன். அவை கனவுபட்டறை வெளியீடாக வந்தன.
இந்தப் புத்தகங்கள் மூலம் கிடைத்த அறிமுகம் வழியாகத் தங்கர்பச்சானிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். பிறகு மலையாள இயக்குநர், எழுத்தாளர் லோகிதாதாஸிடம் பணியாற்றினேன். கல்கியில் வெளியான ’மழை வாசம்’ என்ற எனது சிறுகதையைப் படித்த பாலுமகேந்திரா என்னைத் தேடி அழைத்துவரச் செய்தார். எனது கதையை ’ கதை நேரம்’ நிகழ்ச்சிக்காக டெலிபிலிம் செய்ய விரும்புவதாகச் சொன்னார். இனி நீ என் உதவியாளன் என்றார். அவர் இயக்குவதாக இருந்த படத்தின் கதை விவாதம், முன்தயாரிப்பு அனைத்திலும் பணியாற்றினேன். அந்தப் படம் தொடங்கும் முன்னரே எனக்கு ’அவள் பெயர் தமிழரசி’ வாய்ப்புக் கிடைத்துவிட்டதால் அவரது அனுமதியுடன் எனது படத்தில் மூழ்கிப் போனேன்.
முதல் படத்துக்குப் பிறகு இடைவெளி ஏன்?
எனது சொந்த வாழ்க்கையில் மிகப்பெரிய ஏமாற்றம் ஒன்றைச் சந்தித்தேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன. அதேபோல் அவள் பெயர் தமிழரசி படத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக எனது இரண்டாவது படத்தை நானே தயாரித்து இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இந்த இரண்டு காரணங்கள்தான் இடைவெளிக்குக் காரணம்.
இது ஒரு த்ரில்லர் படமென்று செய்திகள் வெளியாயின. என்ன மாதிரியான த்ரில்லர்?
’அவள் பெயர் தமிழரசி’ அழிந்துபோன ஒரு கலையின் பின்னணியில் வாழ்க்கையை ஆழமாக நோக்கிய முதிர்ச்சியான படம் என்று விமர்சனம் கிடைத்தது. அதனால் அது தேர்ச்சிபெற்ற ரசிகர்களுக்கான படம் என்றார்கள். இரண்டாவது படத்தை எல்லாருக்குமான ஒரு படமாக எடுக்க விரும்பினேன். அது முழுவதும் ஒரு வணிக சினிமாவாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். என்றாலும் ஒரு இயக்குநராக எனக்குக் கிடைத்திருக்கும் நல்ல பெயரைச் சிதைக்கும் படமல்ல இது. நான்கு வெவ்வேறு பின்னணியிலிருந்து வரும் நான்கு வெவ்வேறு சூழ்நிலைகளைச் சந்திக்கும் கதாபாத்திரங்களின் நான்கு கதைகள். அவை எப்படி ஒரு இழையில் பின்னப்பட்டிருக்கின்றன என்பதுதான் திரைக்கதை.
ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம் படத்தில் இருக்கிறது. எல்லோருக்குமே திரைக்கதையில் உரிய முக்கியத்துவம் இருக்கிறதா?
இந்தப் படத்தில் திரைக்கதைதான் ஹீரோ. ஆனால் விதார்த், வெங்கட்பிரபு, கிருஷ்ணா, எஸ்.பி.பி சரண், தம்பி ராமையா, ராகுல், தன்ஷிகா, எரிக்கா ஃபெர்னாண்டஸ், அபிநயா, நாகேந்திரபாபு, பேபி சாரா என அத்தனைபேருக்கும் சரி சமமான முக்கியத்துவத்தைக் கதை அளித்திருக்கிறது. தனித்தனி ஹீரோக்களாக பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்ததற்குக் காரணம் கதைதான்.
அத்தனை சீக்கிரம் பாராட்டிவிடாத இசை விமர்சகர் ஷாஜியே இந்தப் படத்தின் பாடல்களைப் பாராட்டியிருக்கிறாரே?
ஒரு த்ரில்லர் படத்தில் இத்தனை பாடல்களாக என்று பலரும் கேட்டார்கள். ஆனால் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆறு பாடல்களுமே கதாபாத்திரங்களின் ஆன்மாவைப் பிரதிபலிப்பவை. அந்த ஆறு பாடல்களையும் தமிழ் சினிமாவின் இன்றைய முன்னணி இசையமைப்பாளர்கள் பாடிக்கொடுத்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கும் பாடலுக்கு முழுவதும் வாயால் இசை வாத்தியங்களின் ஒலிகளை எழுப்பி பதிவு செய்திருக்கிறோம். இந்தப் பதிவைக் கேட்டுவிட்டே இசை விமர்சகர் ஷாஜி பாராட்டினார்.
உயிரினும் மேலாகக் கருதிய ஒன்றை இழந்துவிட்ட தவிப்பை, வார்த்தைகளில் விவரிக்க முடியாத பெருவலியை உங்களுக்குள் இசை மொழியாய்க் கடத்த முயன்றிருக்கிறோம்.வைக்கம் விஜயலட்சுமியும் அல்போன்ஸும் பாடிய இப்பாடலில் பிரதானமாக ஒலிக்கின்ற Cor anglais எனும் மேற்கத்திய இசைக்கருவியை வாசித்திருப்பவர், லண்டனைச் சேர்ந்த ஏமி டர்னர் (Amy Turner) என்கிற பெண் இசைக்கலைஞர் .
விழிகளின் வழியாக அல்லாமல் ஒலிகளின் மூலமாகவே உலகத்தைத் தரிசிக்கும் உன்னதமான மாற்றுத்திறன் கொண்ட சகோதர சகோதரிகளுக்கும் தேவதைகளைப் பெண் பிள்ளைகளாகப் பெற்றெடுத்த அனைத்துப் பெற்றோர்களுக்கும் ஆழி அலைப் பாடலை சமர்ப்பணம் செய்திருக்கிறோம். இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்தப் பாடல்.
அதேபோலத் தனது படங்களைத் தவிர வேறு படங்களுக்கு பாடல் எழுதாத டி. ராஜேந்தர் இந்தப் படத்தின் கதையையும் பாடலின் சூழ்நிலையையும் கேட்டு அவரே எழுதிப் பாடியிருக்கிறார் ஒரு பாடல். அதுவும் ரசிகர்களுக்குப் புது அனுபவமாக இருக்கும். இத்தனை சிறப்பான பாடல்களை உருவாக்கியிருக்கும் சத்யன் மகாலிங்கம் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago