அப்பாவே முதலில் சந்தேகப்பட்டார்! - ராதிகா சரத்குமார் நேர்காணல்

By மகராசன் மோகன்

திரை வாழ்க்கையில் 42 ஆண்டுகள் முத்திரை பதித்திருக்கும் ‘கலைச்செல்வி’ ராதிகாவுக்கு இன்று பிறந்தநாள். இவர் அறிமுகமானபோது நடிப்புக் களத்தில் நின்ற சக கலைஞர்கள் பலர் பணி ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டார்கள். ராதிகாகாவின் கலை ரயிலோ நான்கு பத்தாண்டுகளைக் கடந்து இன்னும் வேகமெடுத்திருக்கிறது. சின்ன திரை இவர் இல்லாமல் எதையும் எண்ண மறுக்கிறது. அங்கே கோடீஸ்வரியாக இருந்தாலும் பழகுவதற்கு ‘பாஞ்சாலி’ கதாபாத்திரம்போல் வெள்ளந்தியானவர். சீரியல் உலகில் சீசன் இரண்டுக்காக எதிர்பார்க்க வைத்துவிட்ட ராதிகா, ‘சித்தி 2’ படப்பிடிப்பின் இடைவேளையில் மனம் திறந்து உரையாடினார்.

உங்களது முதல் படம் கிராமிய மூடநம்பிக்கைகளைச் சாடியது. தன் வாழ்நாள் முழுக்க மூட நம்பிக்கைகளை எதிர்த்த ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவின் மகள் என்ற முறையில், இது அப்போது உங்களுக்கு மகிழ்ச்சி அளித்ததா? அல்லது அந்த அளவுக்கு உங்களுக்கு விவரம் போதாதா?

‘கிழக்கே போகும் ரயில்’படம் அமைந்த நேரத்துல எனக்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது. அறியாப் பருவம். முதல்முறையா பாவாடை, தாவணியில, செருப்புக்கூட அணியாமல் படப்பிடிப்புல இருந்தேன். பரதநாட்டியம் தெரியாது. சின்ன வயசுல அதைக் கத்துக்கப்போனப்போ முட்டியில அடிச்சாங்கன்னு வீட்டுக்கு ஓடி வந்துட்டேன். அறிமுகப்படம் ஒரு கதையா ரொம்பப் புதுசா தெரிஞ்சுதே தவிர அதுல என்ன கருத்து இருக்குன்னு அப்போ தெரியல. படம் வெளிவந்ததும், அப்பா பார்த்துட்டு ஏதோ கமெண்ட் சொன்னார். அதுவும் என்ன சொன்னார்னு நினைவுக்கு எட்டல. பிறகு நாட்கள் ஓட ஓட; நிறையப் படங்கள் நடிக்க நடிக்க கதாபாத்திரத்தையும் அது தரப்போற உணர்வையும் உணரத் தொடங்கினேன். இதுதான் நிஜம்.

தொடக்கம் முதலே உங்களுக்கு நகைச்சுவை நடிப்பும் சிறப்பாக வந்திருக்கிறது. ஆனால், ஆதை நீங்கள் தமிழில் முழுமையாக முயன்று பார்க்கவில்லையோ எனத் தோன்றுகிறது?

தெலுங்குல அந்த மாதிரியான படங்கள் நிறைய அமைஞ்சது. அங்கே அதைக் கெட்டியா பிடிச்சுகிட்டேன். தொடர்ந்து நடிச்சேன்னுகூடச் சொல்லலாம். தமிழ்ல அந்தமாதிரி அமையல. இங்கே இயக்குநர் கதை சொல்ல அமரும்போது, ‘எதுக்குங்க இவ்ளோ அழ வைக்கிறமாதிரி கேரக்டர்’ன்னு கேட்டிருக்கேன். உண்மையச் சொல்லனும்னா காமெடி காதாபாத்திரம்தான் ரொம்ப கடினமான விஷயம். ஆனால், எனக்கு ரொம்ப இஷ்டம்.

ஒவ்வொரு கலைஞருக்கும் ஏதோ ஓர் ஆற்றல் ஊக்கியாக அமையும். உங்களது அப்பாதானே உங்களுக்கு ஊக்கம் தந்தவர்?

தொடக்கத்துல இருந்தே என்னோட அம்மா, ‘உனக்குன்னு ஒருதனிப்பட்ட பார்வை வச்சிக்கோ; எதுலயும் ஒரு குறிக்கோள் வேணும்!’னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ஆனா, அப்பா நடிகவேள் சொல்ற ஒரே வார்த்தை, ‘எங்கேயும் தாமதமா போகக் கூடாது!’ என்பது மட்டும்தான். எம்.ஆர்.ராதா மகள்னு யாருக்கும் தெரியாமலேயே நடிக்க வந்தவள் நான். ஒரு கட்டத்துல அவரோட பொண்ணுன்னு தெரிஞ்சிகிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா, ‘என்னப்பா இதை யாருமே சொல்லலையே?’ன்னு அப்பாவை நேர்ல பார்க்கப் போய்விட்டார்.

என்னை நடிக்க வைக்கிற விஷயத்தைச் சொன்னப்போ, அப்பாவும் சந்தேகப்பட்டு நக்கலாகச் சிரித்திருக்கிறார். எனது அறிமுகப் படத்தோட படப்பிடிப்புத் தளத்துக்கு அப்பா திடீர்னு வந்தப்போ நான் மேக்கப் போட்டுக்கொண்டிருந்தேன். என் அருகே வந்து நெற்றியில் பொட்டு வைத்து, ‘என் தொழில் உனக்கு இருக்கட்டும்!’னு ஒரு வார்த்தை சொன்னார். அப்பா சொன்ன அந்த வார்த்தைகள்தான் நான் இத்தனை ஆண்டுகள் ஓடிக்கொண்டிருக்க சக்தி தந்ததுன்னு நம்புறேன்.

42 வருட திரைப்பயணத்தில், நடிப்பில் உங்களை வியக்கவைத்த கதாநாயகன் யார்?

‘ஷோலே’ இந்திப் படம் ரிலீஸ் ஆகியிருந்த நேரம். சத்யம் தியேட்டர்ல அடிச்சுப் பிடிச்சு வரிசையில நின்னேன். அடுத்த டிக்கெட் எனக்குத்தான் நினைக்கும்போது கவுண்டர்ல ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டினால் மனசுக்கு எப்படி இருக்கும்? அந்த அளவுக்கு அமிதாப் பச்சன்னா உயிர். அப்படிப்பட்ட ரசிகையான நான் பின்னாளில் அவரோட ‘ஆஜ் கா அர்ஜுன்’ (aaj ka arjun) இந்திப் படத்துல நடிச்சேன். இப்பவும் என்னிடம் யாராவது, ‘நீங்க யார் மாதிரி ஆகணும்னு ஆசை?’ன்னு கேட்கும்போது அமிதாப் பெயரைத்தான் சொல்கிறேன். ஒரு சிறந்த நடிகர்; நான் அவரது ரசிகைங்கிறது எல்லாத்தையும் கடந்து, அவரோட அணுகுமுறை, பழகுற விதம், பேச்சு, இயல்பு, எளிமைன்னு எல்லாத்தையுமே வியப்பாத்தான் பார்க்கிறேன்.

‘பாகுபலி’,‘பொன்னியின் செல்வன்’போன்ற படங்களில் இருக்க வேண்டிய கலைஞர் நீங்கள். ஆனால், சின்ன திரையின் ராணியாக இருப்பதால், இது போன்ற வேடங்களுக்கு உங்களை அழைக்கத் தயங்குகிறார்களா?

இந்தமாதிரி கதை, அந்தமாதிரியான கதாபாத்திரங்கள் என ஆசைப்பட்டதே இல்லை. காலையில்கூட ஒரு கதை கேட்டுட்டுத்தான் வந்தேன். இயக்குநர் சொல்லும்போது, ‘உங்களை நினைத்து எழுதின கதாபாத்திரம் இது?’ன்னு சொல்லிட்டுக் கதையைச் சொல்லத் தொடங்கினார். இந்த 42 வருஷங்கள்ல பெருமைப்படுற விஷயமா அதைத்தான் பார்க்கிறேன். இயக்குநர் சீனுராமசாமி ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் உங்களை மனத்தில் வைத்துதான் எழுதினேன்னு சொன்னப்போ, அந்த நேரத்துல என்னால நடிக்க முடியாத அளவுக்குப் பணி. பிறகு, அந்தப் படத்தைப் பார்த்தப்போ; என்னை நினைச்சுத்தான் எழுதியிருக்கார்னு புரிஞ்சுகிட்டேன். அதேபோல, எனக்குக் குழந்தை பிறந்த நேரம். நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தார் பாரதிராஜா சார்.

‘அடுத்த கதை தயாராயிடுச்சு. சீக்கிரம் வத்தலகுண்டுக்குக் கிளம்பி வா. விருமாயி கேரக்டரை நீதான் சுமக்கணும்!’னு சொன்னார். ‘குழந்தை பிறந்திருக்கு. ஹாஸ்பிடல்ல இருக்கேன். என்ன சார் விளையாடுறீங்களா?’ன்னு கேட்டேன். ‘அதெல்லாம் உன்னால முடியும்!’னு சொல்லிட்டுப் புறப்பட்டார். அடுத்த 2 மாதங்களில் படப்பிடிப்புத் தளத்துல போய் நின்னேன். ‘கிழக்குச் சீமையில’ படத்தோட அந்த விருமாயி கேரக்டர் எனக்கு எவ்வளவு பெயர் வாங்கிக்கொடுத்துச்சுன்னு எல்லோருக்குமே தெரியும். நான் நாயகியாக நடிக்கத் தொடங்கினப்போ, இந்தக் கதை சுஜாதாவுக்குச் சரியா இருக்கும். இதுல தேவி நடிச்சா நல்லா இருக்கும், இது ப்ரியாவுக்கு செட்டாகும்ன்னு சொல்வாங்க. அந்தமாதிரி ஒரு முத்திரை என் மேல் விழுந்திடக் கூடாதுன்னு அப்பவே தெளிவாக இருந்தேன். அது இப்போ வரைக்கும் தொடருது. எந்தக் கதாபாத்திரத்துக்கும் நான் எப்பவும் ரெடி.

1978-ல் அறிமுகமாகியிருக்கிறீர்கள். ஆனால் ஒரு ‘கிழக்குச் சீமையிலே’ கிடைக்க 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது அல்லவா?

என் கேரியர்ல... காத்திருந்தேன்... காத்திருக்கிறேன்... என்ற வார்த்தைகளுக்கெல்லாம் இடமே இல்ல. நான் நடிகையாக ஆவேன்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்ல. விளையாட்டுத்தனமாகத்தான் உள்ளே வந்தேன். ஒரு கட்டத்துல மனசு முழுக்க நடிப்பே ஆக்கிரமிச்சதால, நானே சீரியஸாக எடுத்துக்கொண்டு நம்மை நாம வளர்த்துக்குவோம்னு முயற்சியில இறங்கினேன். அந்த மாதிரியான நேரத்துல எனக்கு நல்ல நல்ல கதாபாத்திரங்கள் அமைஞ்சது. அது என் நேரம். சினிமாவுல யாரும், யாராலயும் இல்ல. ஒவ்வொருத்தருக்குமே பெரிய அளவுல முயற்சி இருக்கணும். அதுதான் வெற்றியைத் தீர்மானிக்கும்.

சின்ன திரைத் தொடர்கள் மனித வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளைப் பூதாகரமாக்குவதாக உங்களுக்குத் தோன்றியதில்லையா?

ஒரு சில தொடர்களைத் தவிர நான் பெரிதாக எதையும் பார்க்கிறதில்ல. ‘சித்தி’ முதல் பாகம் சீரியல் எடுத்தப்போ அதிகபட்சமா 4 பேர் சேர்ந்து ஒரு கதையை முடிவு செய்து ஷூட்டிங் போனோம். ஆனா, இன்னைக்கு ‘சித்தி 2’ எடுக்கும்போது அந்தச் சூழல் மொத்தமாக மாறியாச்சு. கதை, கதாபாத்திரத் தேர்வுன்னு சேனல் தரப்பு, தயாரிப்பு தரப்புன்னு தனித்தனியே பெரிய பெரிய குழு அமைச்சு வேலை பார்க்கிறாங்க. ஒரு சீரியல் புதுசா வரும்போது பல அமைதியான குடும்பங்களோட வரவேற்பறைக்குள்ள நுழையுது. அது விளையாட்டில்ல; அதுல நிறையப் பொறுப்பும், கட்டுப்பாடுகளும் இருக்கு. என்னோட சீரியல்ல யதார்த்தம், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம், பெண்களை இழிவுபடுத்துவதை அனுமதிப்பதில்லைங்கிற சில கறாரான விதிமுறைகளை எப்போதுமே வைச்சுருக்கேன். அதன்படிதான் இயங்கிக்கொண்டிருக்கிறேன்.

உங்கள் இளமையின் ரகசியம் சரத்குமார் என்றால் அது சரியா?

நிச்சயம் சரத்குமார்தான். சரியான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறைன்னு இருவருமே வாழ்க்கையைச் சரியாகத் திட்டமிட்டுப் பயணிக்கிறோம். நிறைய விமர்சனங்கள், பூங்கொத்துகள்ன்னு மாறி மாறி எதிர்கொண்டிருக்கிறோம். எது நடந்தாலும் அதை பாசிடிவாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவமும், தன்னம்பிக்கையும் இருப்பதால் எங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்