சினிமா ரசனை 15: சூப்பர் ஹீரோக்களை வீட்டுக்கு அனுப்புங்கள்!

By கருந்தேள் ராஜேஷ்

நுழைவாயில்

ஆங்கிலப் படங்களை மட்டுமே பார்க்கும் உலகில் அலெஹந்த்ரோ ஹொதரோவ்ஸ்கி என்ற பெயர் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, சிலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மறக்கவே முடியாத பெயர் இது. உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களையும் காமிக்ஸ்களையும் ஒருங்கே உருவாக்கியவர். நாடகங்கள் இயக்கியிருக்கிறார். கவிஞரும் கூட. நடித்தும் உள்ளார்.

அலெஹந்த்ரோ ஹொதரோவ்ஸ்கி (Alejandro Jodorowsky), முற்றிலும் வித்தியாசமான தனது படங்களால் உலகப் புகழ் பெற்ற ஓர் இயக்குநர். இவரது படங்களில் இடம்பெறும் சர்ரியலிஸம் நிரம்பிய கதைகள், அவற்றில் வரும் குறியீடுகள், அவற்றில் சொல்லப்படும் மறைஞானம் நிரம்பிய கருத்துகள் (Mysticism) ஆகியவை தீவிர உலக சினிமா ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலம். இன்றளவும் இவரது மிகவும் முக்கியமான படைப்புகளாக ‘எல் தோப்போ’ El Topo (1970) மற்றும் ‘த ஹோலி மவுண்டெய்ன்’ (The Holy Mountain-1973) ஆகியவை விளங்குகின்றன.

இவற்றுக்குப் பிறகும் ‘டஸ்க்’ (Tusk-1978), ‘சாந்த சாங்ரே’ (Santa Sangre -1989) ஆகிய படங்களும், இவரே இப்போதுவரை மறுதலித்துவரும் ‘த ரெயின்போ தீஃப்’ (The Rainbow Thief-1990), ‘த டான்ஸ் ஆஃப் ரியாலிட்டி’ (The Dance of Reality- 2013) ஆகிய படங்களும் இயக்கியிருக்கிறார். ‘ரெயின்போ தீஃப்’ படத்தின் தயாரிப்பாளர்கள், கதையிலும் திரைக்கதையிலும் இவரது கருத்துகளை ஏற்றுக்கொள்ளாமல், வெறுமனே இயக்க மட்டும் நிர்ப்பந்தித்ததால் அப்படத்தை இன்றுவரை தனது படமாகக் கருதாமல் எதிர்த்துக்கொண்டே இருக்கிறார். இறுதியாக வெளியான ‘டான்ஸ் ஆஃப் ரியாலிடி’ படத்தில் இவரது வாழ்க்கையின் சில சம்பவங்கள் உண்டு. கான் திரைப்பட விழாவில் பெரிதும் பாராட்டப்பட்ட படம் அது.

இவரது இன்னொரு மிகப் பிரபலமான முகம் திரைப்படங்களை விடவும் அவரது பெயரைப் பல ரசிகர்களிடம் கொண்டுசேர்த்த இன்னொரு பக்கத்தைப் பற்றியது.

ஹொதரோவ்ஸ்கி, காமிக்ஸ் உலகில் புகழ் வாய்ந்தவர். திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்னரே காமிக்ஸில் இறங்கிவிட்டவர். உலகப் பிரசித்தி பெற்ற பல ஆர்டிஸ்ட்களுடன் சேர்ந்து காலத்தால் அழியாத பல காமிக்ஸ்களை அளித்திருக்கிறார். இவருடன் சேர்ந்து பணியாற்றியவர்களில் சிலர்: ஸான் ஷிரோ (Jean Giraud) - இவரைப் பற்றியே பல பக்கங்கள் எழுதலாம்; அத்தனை பிரபலமான ஓவியர். உலகெங்கும் இவரது காமிக்ஸ்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு ஃப்ரான்ஸ்வா புக் (Franois boucq), யுவான் கிமெனஸ் (Juan Gim nez), மிலோ மனாரா (Milo Manara) போன்றோர். இந்தப் பெயர்கள் எல்லாம் சாதாரணமானவையே அல்ல. காமிக்ஸ் உலகில் இவர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.

இவர்கள் தவிர, உலகப் புகழ்பெற்ற ஓவியர் சால்வதோர் டாலியுடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஆர்ஸன் வெல்ஸ் (சிட்டிசன் கேன் இயக்குநர்), புகழ்பெற்ற இசைக்குழு பிங்க் ஃப்ளாய்ட் (Pink Floyd), ஸான் ஷிரோ, டாலி ஆகிய கில்லாடிகளுடன் சேர்ந்து ‘ட்யூன்’ (Dune) என்ற பிரபல சயன்ஸ் ஃபிக்‌ஷன் நாவலின் திரைவடிவத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அது பலிக்காமல் போனது. அப்படத்தைப் பின்நாட்களில் இயக்குநர் டேவிட் லிஞ்ச் (இவரைப் பற்றி indie படங்கள் பற்றிய அத்தியாயத்தில் பார்த்திருக்கிறோம்) இயக்க, அதைப் பற்றி ஹொதரோவ்ஸ்கி சொல்லும்போது, “அப்படத்தை ஒரே ஒரு நிமிடம் மட்டும் பார்த்தேன். உடனடியாக டிவியை அணைத்துவிட்டேன். மிகச் சாதாரணமாக உருவாக்கப்பட்ட ஒரு மோசமான படைப்பு அது” என்று சொல்லியிருக்கிறார்.

ஹொதரோவ்ஸ்கியும் ஸான் ஷிரோவும் சேர்ந்த முதல் காமிக்ஸ்- த இன்கால் (The Incal). 1981-லிருந்து 1988 வரை ஆறு பாகங்களாக வெளியான காமிக்ஸ். இது ஒரு சயன்ஸ் ஃபிக் ஷன் கதை. ஹொதரோவ்ஸ்கியே உருவாக்கிய ஒரு பிரத்தியேக உலகில் நடப்பது. இந்த உலகில் நடப்பது போன்ற கதைகள் இன்னும் சிலவற்றையும் ஹொதரோவ்ஸ்கி எழுதியுள்ளார். மிகவும் விறுவிறுப்பான காமிக்ஸ் இது. படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாது. அதேசமயம் உணர்ச்சிகள், நகைச்சுவை ஆகியவையும் காமிக்ஸ் முழுவதுமே நிரம்பியிருக்கும்.

இன்கால் எந்த அளவு பிரபலம் என்றால், பிரபல ஃப்ரெஞ்ச் இயக்குநர் லுக் பெஸ்ஸன் 1997-ல் ‘த ஃபிஃப்த் எலிமெண்ட்’ (The Fifth Element) என்ற ஒரு ஹாலிவுட் படம் இயக்கினார். அதில் இன்காலின் சில அம்சங்கள் அப்படியப்படியே எடுத்துக் கையாளப்பட்டிருந்தன. இதனால் வெகுண்ட ஹொதரோவ்ஸ்கி, பெஸ்ஸன் மேல் வழக்குத் தொடர்ந்தார்.

அவருக்கு உறுதுணையாக ஸான் ஷிரோவும் இவ்வழக்கில் பங்கேற்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. இதற்குக் காரணம், அந்தப் படத்தில் கவுரவ ஆலோசகராகப் பணியாற்றியவர் சாட்சாத் ஸான் ஷிரோ. இன்காலின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த ஆர்டிஸ்ட். இவர் பெஸ்ஸனுடன் கூட்டு என்று ஒரு குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார் ஹொதரோவ்ஸ்கி.

இன்காலின் காலகட்டத்துக்கு முன்னர் நடக்கும் கதைகள் பின்னர் நடக்கும் கதை என்று சிலவற்றையும் ஹொதரோவ்ஸ்கி உருவாக்கியிருக்கிறார். இதேபோல், மெடாபேரன்ஸ் (Metabarons) என்ற காமிக்ஸின் களமும் இன்கால் நடக்கும் அதே களன்தான்.

இவற்றைத் தவிர ஹோடரோவ்ஸ்கியின் உருவாக்கத்தில் முக்கியமான காமிக்ஸ் - பௌன்ஸர் (Bouncer). தற்போது லயன் காமிக்ஸில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கும் காமிக்ஸ் இது. இதன் நாயகன், ஒரு கை இல்லாதவன். துப்பாக்கிகள் ஆட்சிபுரியும் பழைய அமெரிக்காவில் அவன் சந்திக்கும் பிரச்சினைகளே கதை. கதை சாதாரணமானதாக இருந்தாலும், சம்பவங்கள், கதாபாத்திரங்கள், கதைகளில் தெறிக்கும் வன்முறை என்று எல்லாமே ஹொதரோவ்ஸ்கியின் பிரத்தியேக உருவாக்கங்கள். ஒரு சில பக்கங்களைப் படித்தாலேயே ஹோதரோவ்ஸ்கியின் பங்களிப்பை அறிந்துகொள்ளலாம்.

இவற்றைத் தவிரவும் ஏராளமான காமிக்ஸ்களை உருவாக்கியுள்ளார் ஹொதரோவ்ஸ்கி.

காமிக்ஸ்களின் உருவாக்கத்தில், அவரது கதைகளை வரையப்போகும் ஆர்ட்டிஸ்டின் பங்கு மிகவும் முக்கியமானது என்பது ஹொதரோவ்ஸ்கியின் கருத்து. ‘ஒரு ஆர்டிஸ்ட்டுடன் இணைவதற்கு முன்னால் அவருடன் நிறையப் பேசி, அவரது விருப்பு வெறுப்புகளை அறிந்துகொண்டுவிடுவேன். இதனால் அவரது அடிமனதில் இருக்கும் விஷயங்கள் எனக்குத் தெரிந்துவிடும்.

அதன்பின், அவற்றில் அவருக்குப் பிடித்தவற்றை என் கதைகள் தொட்டுச்செல்லுமாறு எழுதுவேன். எனக்காக மட்டுமே என் கதைகளை நான் எழுதுவதில்லை; மாறாக, ஆர்டிஸ்டுக்காகவேதான் எழுதுகிறேன். இதன்மூலம் அந்த ஆர்டிஸ்ட்டை, என் மனதில் இருக்கும் கருத்துகளை அவரது படங்கள் மூலம் வெளிப்படுத்த வைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

ஹொதரோவ்ஸ்கிக்கு சூப்பர் ஹீரோக்கள் பிடிக்காது. அவர்களைப் பற்றிய காமிக்ஸ்களும் படங்களும் எடுப்பது நேரவிரயம் என்று நினைப்பவர். அவரது பல பேட்டிகளில் ‘சூப்பர் ஹீரோக்களைக் கொல்லுங்கள்; உங்களது மனதில் இருக்கும் கனவை எழுதுங்கள். அதுவே போதுமானது’ என்று சொல்லியிருக்கிறார். இருந்தும், சூப்பர் ஹீரோக்களின் பிதாமகன் ஸ்டான் லீ பெரிதும் மதிக்கும் காமிக்ஸ் எழுத்தாளர்களில் ஹொதரோவ்ஸ்கியும் ஒருவர்.

ஹொதரோவ்ஸ்கிக்கு வயது தற்போது 86. இன்னும் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார். திரைப்படங்கள் தவிர, கவிதை, நாடக இயக்கம், நடிகர் என்ற பல முகங்கள் இவருக்கு உண்டு. இவற்றைத் தவிர, உளவியலில் ஏராளமான அனுபவம் கொண்டவர். பல ஆண்டுகளாக அத்துறையில் எக்கச்சக்கமான உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். இவரது படங்களில் இதன் தாக்கத்தை எளிதில் உணரலாம்.

தொடர்புக்கு: rajesh.scorpi@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்