திரை விமர்சனம் - தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2

By செய்திப்பிரிவு

பீட்டர் பார்க்கர் (ஆன்ட்ரூ கார்ஃபீல்டு) என்ற சாமானியனின் காதல், ஸ்பைடர் மேனுக்கு இருக்கும் அசாதாரண பொறுப்புகள் இரண்டுக்கும் நடுவில் சிக்கித் தவிக்கும் ஸ்பைடர் மேனின் போராட்டமே படம். இந்த முறை இரண்டு வில்லன்கள் இருந்தாலும் ஸ்பைடர் மேனின் சாகசங்களை விட அவருடைய காதல் கதையை அற்புதமாகத் திரையில் கொண்டுவருவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் மார்க் வேப்.

பெரியப்பா இறந்துவிட, பெரியம்மா வளர்ப்பில் கல்லூரியில் படித்துப் பட்டம் பெறுகிறார் பீட்டர் பார்க்கர். பெரியப்பா இறந்துவிட்டதால் பீட்டரை வளர்க்கப் பெரியம்மா சிரமப்படுகிறார் . ‘த அமேசிங் ஸ்பைடர் மேன் 1’ல் பீட்டரின் பெற்றோர் பற்றி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு இதில் சில விடைகள் கிடைக்கின்றன. ஆனால் காதலி க்வென் ஸ்டேசியின் (எம்மா ஸ்டோன்) உறவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. க்வென் தந்தைக்குக் கொடுத்த வாக்கு காரணமாக அவள் காதலை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார் பீட்டர். ஒரு கட்டத்தில் அவர்கள் காதல் முறிந்தும்விடுகிறது.

இந்நிலையில் பீட்டரின் பழைய நண்பர் என்று கூறும் ஹாரி ஆஸ்போர்னும் (டேன் டிஹான்) பீட்டரும் சந்திக்கின்றனர். ஹாரி தன் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து தன்னைக் காப்பாற்றும்படி பீட்டரிடம் கேட்கிறார். ஆனால், பீட்டரால் அதைச் செய்ய முடியாமல் போனவுடன் ஹாரி வில்லனாகிறார். ஹாரியின் நிறுவனத்தில் பணிபுரியும் மின் பொறியாளர் மேக்ஸ் (ஜேமி ஃபாக்ஸ்) சூழ்ச்சியால் எலக்ட்ரோவாக மாற்றப்படுகிறார். கடைசியில் வில்லன்களிடம் இருந்து நகரத்தைக் காப்பாற்றி காதலியுடன் ஸ்பைடர் மேன் இணைந்தாரா என்பதுதான் க்ளைமேக்ஸ்.

எலக்ட்ரோ வரும்வரை குறைவான சூப்பர் ஹீரோ தருணங்களே இருக்கின்றன. சிறுவன் ஒருவனைக் கொடுமைப்படுத்திக்கொண்டிருக்கும் கும்பலிடமிருந்து அவனைக் காப்பாற்ற ஸ்பைடி வரும் காட்சிக்குத் திரையரங்கில் சிறுவர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். இதே சிறுவன்தான் இறுதியில் ஸ்பைடர் மேன் மீண்டும் வருவதற்குக் காரணமாக இருப்பதாகக் காண்பித்திருப்பது திரைக்கதையின் இணைப்புக் கூறுகள் சரியாகப் பின்பற்றப்பட்டிருப்பதற்கு உதாரணம்.

எலக்ட்ரோவாக நியூயார்க் நகரை மிரட்டும் வில்லனை ஒரேயடியாக வெறுக்க முடியவில்லை. நண்பர்களற்று, பணியிடத்தில் மரியாதையின்றித் தனிமையின் கொடுமையை அனுபவிக்கும் ஒரு சாதாரண மனிதன் அவனுக்கே தெரியாமல் சோதனை எலிபோல் தன் நிறுவனத்தால் எலக்ட்ரோவாக மாற்றப்படுகிறான். அப்படி மாறிய பிறகும் அவன் தன் நிலையைப் பற்றி மற்றவர்களுக்குப் புரியவைக்க முயற்சி செய்கிறான். ஆனால் அவன் உணர்வுகளுக்குச் செவி சாய்க்க யாரும் இல்லை என்று அறியும்போது நகரை அழிக்க முற்படுகிறான். இந்தக் கதாபாத்திரத்திற்கு முற்றிலும் நேர்த்தியாகப் பொருந்துகிறார் ஜேமி ஃபாக்ஸ். மற்றொரு வில்லன் ஹாரி ஆஸ்போர்னின் கதாபாத்திரம் எலக்ட்ரோ அளவிற்கு வலிமையானதாக இல்லை. சுயநலமிகுந்த சராசரி பணக்கார இளைஞனின் குணநலன்களுடன் மட்டுமே அது அமைந்திருக்கிறது.

இப்படத்தின் பெரிய சிறப்பம்சம் பீட்டர் , க்வென் காதல்தான். விளையாட்டுத்தனமான வேடிக்கைகள், விவாதங்கள், குழப்பங்கள் என இந்தக் காதலை நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் . என்னதான் காதலன் சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் அவன் முடிவிற்காகக் காத்திராமல் தன் கனவைத் தொடர்வதற்குத் தயாராக இருக்கும் தனித்தன்மையுள்ள கதாநாயகியை நம்மால் ஹாலிவுட்டில் மட்டுமே பார்க்க முடியும்.

திரைக்கதையில் இருக்கும் புத்துணர்ச்சியும், ஆன்ட்ரூ கார்ஃபீல்டின் நடிப்பில் இருக்கும் உயிர்ப்பும், 3டி பிரமாண்டமும், அதற்கேற்ற பின்னணி இசையும் படத்திற்கு வலுவூட்டுகிறது. ஆன்ட்ரூ கார்ஃபீல்டின் நடிப்பு ஸ்பைடர் மேனாக மெருகேறியிருக்கிறது. சி.ஜி.ஐ. எஃபக்ட்டில் மென்ஹாட்டனில் ஸ்பைடர் மேன் பறக்கும்போது 3டியில் நாமும் பறக்கிறோம். டேனியல் மின்டலின் காமிரா அதற்குப் பெரும் உதவி செய்திருக்கிறது.

ஆனால் அதே சமயம், மிக எளிமையாக எலக்ட்ரோவைச் சமாளிக்கும் உத்தி, ஸ்பைடர் மேன் உருவாகும் ரகசியத்தை எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் வெளியிடுவது, க்ளைமேக்ஸில் வில்லன்களை சர்வ சாதாரணமாக வீழ்த்துவது எனத் திரைக்கதையில் சில குறைகளும் இருக்கவே செய்கின்றன. ‘த அமேசிங் ஸ்பைடர் மேன் 1’ல் தன் பெரியப்பாவைக் கொன்ற கொலையாளியை பீட்டர் தேடுவதாகக் காட்டியிருப்பார்கள். அவன் என்ன ஆனான் என்பதற்கான தொடர்ச்சியை இதில் அளிக்க மறந்துவிட்டார்கள்.

சண்டைக் காட்சிகளுக்கும், விஷுவல் எஃபக்டுகளுக்கும் அளித்திருக்கும் முன்னுரிமையைவிட மனித உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கும் வகையில் இந்த ஸ்பைடர் மேன் உண்மையிலேயே ‘அமேசிங்’ ஸ்பைடர் மேன்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்