பாகுபலி படத்தில் அதன் நாயகன் ஏற முயற்சிக்கும் அருவி இந்தியாவில் எங்கே இருக்கிறது என்று வியக்காத ரசிகர்கள் இல்லை. ஆஹா...! கண்களில் கொள்ளாமல் எவ்வளவு அழகு! ஒளிப்பதிவு எத்தனை குளுமை! இப்படியெல்லாம் இனி எழுத முடியாது. திரையில் நாம் காணும் பல ஆச்சரிய லொக்கேஷன்கள் விஷுவல் எஃபெக்ட்ஸ் தரும் விருந்து.
பாகுபலி படத்தில் இடம்பெற்றது கேரளத்தின் சாலக்குடி அருவி. ஆனால் அதை இத்தனை பிரமாண்டமான அழகு கொண்ட அருவியாக மாற்றிக் காட்டியது விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பம். அருவி மலைகள், நதியை மட்டுமல்ல; காட்டில் தனிமையில் காயும் நிலவின் குளிர்ச்சியையும், பாலை நிலத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் வெம்மையையும்கூட இன்றைய கிராஃபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை உணரவைத்துவிடுகின்றன.
பாகுபலி படத்தின் கிராஃபிக்ஸ் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் தந்திருக்கும் பிரம்மாண்ட உணர்வு இந்திய ரசிகர்களைப் பெருமைகொள்ள வைத்திருக்கிறது. ஆனால் அந்தப் படத்தின் பல காட்சிகளில் இன்னும் நேர்த்தி தேவை; குறிப்பாக காட்டெருமையுடன் நடிகர் ராணா மோதும் காட்சி அப்பட்டமான கிராஃபிக்ஸ் என்று காட்டிக்கொடுத்துவிட்டது. அந்தக் காட்டெருமை வெறும் 3டி காட்டெருமையாக இருந்ததுதான் இதற்குக் காரணம். அதில் நிஜக் காட்டெருமையின் ஷாட்களையும் கலந்து உருவாக்கியிருக்க வேண்டும் என்று தொழில்நுட்ப உலகின் நெட்டிசன்கள் செல்லமாகக் குட்டிக் காட்டினார்கள். ஆனால், அந்நிய நாட்டு நிறுவனங்களை முழுவதும் சார்ந்திருக்காமல் முழுக்க இந்தியத் தொழில்நுட்பக் கலைஞர்களை அதிகம் பயன்படுத்தி பாகுபலியின் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளைக் கொண்டுவந்துவிட்டார் அந்தப் படத்தின் வி.எஃப்.எக்ஸ் சூப்பர்வைசரான ஸ்ரீ நினிவாசமோகன்.
இவரது ஸ்டைல், கிடைக்கும் பட்ஜெட்டில் திறமையான தொழில்நுட்பங்களைக் கொண்டுவருவதுதான். எந்திரன், மாற்றான் ஆகிய படங்களுக்காக இவர் பயன்படுத்திய ‘டிஜிட்டல் ஹெட் ரீபிளேஸ்மென்ட்’ உத்தியை இங்கே தெரிந்துகொள்வோம்.
எந்திரன் படத்தில் இரண்டு தோற்றங்களில் வந்தார் ரஜினி. ஒன்று ரோபாட்டிக் விஞ்ஞானி வசீகரன். அடுத்து, சிட்டி ரோபோ. மாற்றான் படத்தில் சூர்யா அகிலன் - விமலன் என்ற ஒட்டிப் பிறந்த இரட்டையர் கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால் இரண்டு கதாபாத்திரங்களுமே குணாதிசயத்திலும் உடல்மொழியிலும் பெரிய வேறுபாட்டைக் கொண்டிருந்தன.
ஒரு காலத்தில் இரட்டைக் கதாபாத்திரங்களை எடுக்க எத்தனை சிரமப்பட்டிருக்கிறார்கள் என்பதை முன்பே பார்த்தோம். 15 ஆண்டுகளுக்கு முன்புவரை ‘கேமரா மாஸ்க்’ மற்றும் ஆப்டிகல் முறையை மட்டுமே பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் இன்றைய தொழில்நுட்பம் எல்லாவற்றையும் எளிமையாக்கிவிட்டது.
முதலில் எந்திரன் படத்துக்கு வருவோம். அந்தப் படத்தில் சிட்டி ரோபோவுக்குக் காதல் உணர்வு வந்துவிடுகிறது. தன்னை உருவாக்கிய வசீகரனின் காதலி சனா மீதே காதல் கொள்கிறது. அதற்குக் குறுக்கே நிற்கும் வசீகரனை எதிர்த்து நிற்கும் சிட்டி ரோபோ வில்லனாக மாறி வசீகரனின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறிவிடுகிறது. தன்னைக் கண்டறிய வரும் வசீகரனிடமிருந்து தப்பிக்க சிட்டி செய்யும் முயற்சிகள் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விஷுவல் விருந்தாக இருந்தன. ஒரு காட்சியில் நூற்றுக்கணக்கான சிட்டி ரோபோக்கள் அணிவகுத்து நிற்க குழம்பிப்போவார் வசீகரன். இந்தக் காட்சியில் அச்சு அசலாக பல சிட்டி ரோபோ முகங்களை திரையில் கொண்டுவரக் கைகொடுத்தது ‘டிஜிட்டல் ஹெட் ரீபிளேஸ்மெண்ட்’ உத்தி.
அதேபோல மாற்றான் படத்தில் அகிலன் விமலன் ஆகிய இருவரையும் இடுப்பை ஒட்டிக் கொஞ்சம் சதைக்கோளம் ஒன்றாக இணைத்திருப்பதுபோல் காட்சி அமைத்திருந்தார் இயக்குநர். பொதுவாக இரட்டை வேடங்களில் ஒரே நடிகர் தனித்தனியே நடித்த பிறகு ‘காம்பாசிட்டிங்’ முறையில் இணைத்துவிடுவதை ஏற்கெனவே நாம் தெரிந்துகொண்டோம். ஆனால் மாற்றானில் அது பெரிய சவலாக அமைந்தது.
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைச் சித்தரிக்க எப்படி ஒரே நடிகரைத் தனித்தனியே நடிக்க வைத்து இணைக்க முடியும்? உண்மையில், அகிலனாக சூர்யா நடிக்க அவருடன் இணைந்து விமலனாக நடித்தது ஒரு டூப் நடிகர். சூர்யாவின் உயரம் மற்றும் அவரது உடல் அமைப்பு கொண்ட அந்த டூப் நடிகர் விமலனாக நடிக்க எல்லா காட்சிகளையும் ப்ளூமேட் பின்னணியில் படம்பிடித்தார்கள். இப்போது அந்த டூப் நடிகரின் தலைக்கு பதிலாக விமலன் சூர்யாவின் தலை இடம்பெற வேண்டும் அல்லவா? இந்த இடத்தில்தான் கைகொடுத்தது ‘டிஜிட்டல் ஹெட் ரீபிளேஸ்மெண்ட்’ உத்தி.
இந்த உத்தியில் நாற்புறமும் லேசர் விளக்குகள் பொருத்தப்பட்ட ஒரு மேடையில்((Lightstage, LA) சூர்யாவை அமரவைத்து, விமலனுக்குத் தேவைப்படும் 22 விதமான முக அசைவுகளை படம்பிடித்து இமேஜ்களாக ஆக்கிக் கொண்டார்கள். அதேபோல், எந்திரன் படத்தில் வசீகரன், சிட்டி ரோபோ ஆகிய இரண்டு கதாபாத்திரங்களும் தோன்றும் பல காட்சிகளுக்கும் தேவையான ரஜினியின் முக்கிய முக அசைவுகளும் இதே லைட் ஸ்டேஜ் முறையில் தனித்தனி இமேஜ்களாகப் படம்பிடிக்கப்பட்டன.
பிறகு முக அனிமேஷன் எனப்படும் ஃபேசியல் அனிமேஷன் முறையில் தலையில் ஹெல்மெட்டோடு கூடிய ரிக் அமைத்து முக அசைவு களைப் படம்பிடித்தார்கள். இந்தப் படங்களையும் ஃபேசியல் அனிமேசன் முறையில் படம்பிடித்த விஷுவலையும் இணைத்து ‘பேசியல் ரெண்டரிங்’ எனப்படும் ‘முக அசைவூட்டம்’ செய்து, அவை டூப் நடிகர்களின் முகம் இருந்த இடத்தில் கச்சிதமாக கம்போசிட்டிங் முறையில் பொருத்தப்பட்டன. இதை ஒருவகையில் கிராஃபிக்ஸ் உறுப்பு தானம் என்றுகூட வேடிக்கையாகக் குறிப்பிடலாம்.
மேட்ரிக்ஸ், அவதார், சூப்பர் மேன் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் தயாரிப்புகளில் முக அனிமேஷனுக்காக இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இம்முறையில் கிடைக்கும் துல்லியமான முக அனிமேஷன் ஒரு நடிகர் ஒரே படத்தில் எத்தனை வேடங்களில் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற ஆச்சரியத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago