ஆர்.சி.ஜெயந்தன்
ஊடகங்களில் இர்ஃபான் கான், ரிஷி கபூர் ஆகிய பிரபல நடிகர்களின் மறைவு முக்கியச் செய்தியாக இடம்பிடித்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், திரைக்குப் பின்னால் சாதனை படைத்த ஒரு மூத்த தொழில்நுட்பக் கலைஞரின் மறைவுக்கு, ஊடகங்களைத் தாண்டி சமூக வலைத்தளங்களில் பலராலும் ஆழ்ந்த இரங்கல் குறிப்புகள் பகிரப்பட்டன. பாடலாசிரியர்கள் சிலர் அஞ்சலிக் கவிதை எழுதினர்கள். இன்னும் பலர், அவருடனான நினைவுகளைப் பகிர்ந்திருந்தனர். அவர், ‘ஏவி.எம்.சம்பத்’, ‘ஆர்ஆர்’ சம்பத் என்று திரையுலகினரால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்டு வந்த, தேசிய விருதுபெற்ற ஒலிப்பதிவாளர், ஒலிப்பொறியாளர் சம்பத் கிருஷ்ணசுவாமி.
ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்கள், பின்னணி இசைச் சேர்ப்பு, ஆகியவைதாம் அதற்கு உயிரூட்டுபவை. இசையமைப்பாளர் படைக்கும் பாடலையும் பின்னணி இசையையும் கதை சொல்வதற்கான கருவியாக மாற்றிக் காட்டுவது ‘ஒலிப்பதிவு’ தொழில்நுட்பம். அந்த வித்தை, தொழில்நுட்ப அறிவைத் தங்களது கற்பனை வளத்துடன் இணைத்துக் கையாண்ட ஒலிப்பதிவாளர்களுக்கே சாத்தியப்பட்டது. ஒலிப்பதிவுத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்திவரும் இந்தக் காலத்தில், தவறுகளைச் சரிசெய்துவிடக்கூடிய மென்பொருட்கள் நிறையப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், அன்று மைக்குகள், மேக்னடிக் டேப், மோனோ ஈக்குவலைசர் என்னும் ஒருசில கருவிகளை மட்டுமே வைத்துக்கொண்டு, காதில் தேன் பாய்ச்சும் வண்ணம் ஒலிப்பதிவுசெய்துகொடுத்தார்கள். அப்படிப்பட்ட ஒலிப்பதிவாளர்களைத் தங்களது ‘காட் ஃபாதர்’களைப்போல் இசையமைப்பாளர்கள் பார்த்தார்கள். ‘ஒலிப்பதிவு’ வித்தை தெரிந்த அந்த வெகுசிலரில், காலத்தால் அழியாத சுமார் ஏழாயிரம் காவியப் பாடல்களைக் காதில் ஒற்றிக்கொள்ளும்விதமாகப் பதிவுசெய்துதந்த ஒலி வித்தகர்தான் இந்த ‘ஏவி.எம்’ சம்பத்.
தற்பெருமையும் இல்லை, தலைகனமும் இல்லை
கே. சம்பத்துடைய ஒரே மகளான மீராவை மணந்தவர் காந்த். அவரிடம் மாமனாரின் நினைவுகளைப் பற்றிக் கேட்டபோது, “இசை மீது அவருக்கு இருந்த ஈடுபாடு காரணமாகவே மகளுக்கு ‘மீரா’ என்று பெயர் சூட்டியதாக என்னிடம் கூறியிருக்கிறார். எனக்கும் மீராவுக்கும் திருமணமானபோது அவருக்கு 60 வயது. ஒரு விருந்தினரைப்போல முகூர்த்த நேரத்துக்குத்தான் கல்யாணத்துக்கு வந்தார். அந்த அளவுக்குத் தொழில்பக்தியால் பதிவுக்கூடமே உலகம் என்று வாழ்ந்தவர். சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம். என் மாமியாருக்குத் திடீர் உடல்நலக் குறைவு. மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்த்துவிட்டு அவருக்குத் தகவல் கொடுத்தோம்.
அன்று புதன்கிழமை, வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் ஒரு படத்தின் பின்னணி இசை ஒலிப்பதிவில் தீவிரமாக இருந்தார். ‘நீங்கள் இருக்கும்போது எனக்குக் கவலை இல்லை. இந்த வேலையை முடித்துக்கொடுக்காவிட்டால் என் மீது இருக்கிற நம்பிக்கை போய்விடும்’ என்று சொன்னவர், மறுநாள்தான் மனைவியைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், அப்போது மாமியார் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். சில நிமிடங்களைக்கூட அவர் மருத்துவமனையில் வீணாக்க விரும்பவில்லை. வந்த காரிலேயே உடனேஏறி ‘ஆர் ஆர்’ தியேட்டருக்குப்போய்விட்டார். வேலையை முடித்துக்கொடுத்துவிட்டுப் பிறகே வந்தார். பல திறமையான உதவியாளர்களை அவர் தயார் செய்து வைத்திருந்தாலும் அவர் இல்லாமல் பதிவு செய்ய படைப்பாளிகள் விரும்பியதே இல்லை.
ஒரு கட்டத்தில் ஏவி.எம். நிறுவனத்தின் அனுமதியுடன் பணியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு குடும்பத்தில் ஐக்கியமாகிப்போனார். அவரைப்போல் சுறுசுறுப்பான மனிதரைப் பார்க்க முடியாது. அவரிடம் துளிகூடத் தற்பெருமையோ தலைகனமோ இருந்ததில்லை” என்று நெகிழ்ந்தவர், சம்பத் ஒலிப்பதிவுத் துறைக்கு வந்த பின்னணியை விவரித்துக் கூறினார்.
திரைப்படக் கல்லூரி மாணவர்
“அவர் பிறந்து வளர்ந்தது திருச்சியின் சிங்காரத்தோப்பில். அவருடைய தந்தையார் ஒரு கணக்காளர். இவருக்குப் பள்ளிக் காலத்திலேயே திரையிசைப் பாடல்கள் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. திருச்சியில் ஜே.எஸ்.ரேடியோஸ் என்ற வினைல் ரெக்கார்ட்ஸ் பதிவு மற்றும் விற்பனைக் கூடம் அவரைக் கவர, அங்கே அடிக்கடி போகத் தொடங்கியிருக்கிறார். அவரது ஆர்வத்தைக் கண்ட அக்கடையின் உரிமையாளர் அப்பாய், ‘இண்டர்மீடியட் முடித்ததும் ‘மெட்ராஸ் சென்ட்ரல் பாலிடெக்னிக்’கில் இருக்கும் ஆடியோகிராஃபி இன்ஜினீயரிங் பிரிவில் சேர்ந்து படி, அதில் நிறைய சாதிக்கலாம் என்று சொல்லி அவரைத் தூண்டியிருக்கிறார். அன்று, பிராட்வேயிலிருந்து அடையாறு தரமணிக்கு மெட்ராஸ் சென்ட்ரல் பாலிடெக்னிக் இடம்பெயர்ந்து இருந்தது.
பின்னர் அங்கிருந்து ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு ஆகிய இரண்டு பாடப்பிரிவுகளை பிரித்துக்கொண்டு வந்து தனியே தொடங்கப்பட்டதுதான் அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட். தன்னை அந்த இன்ஸ்டிடியூட்டின் முன்னாள் மாணவன் என்று இன்றைய ஒலிப்பதிவு மாணவர்கள் தேடிவந்து சந்திக்கும்போது குறிப்பிட மறக்கமாட்டார். ‘அன்று நாங்கள் இன்ஸ்டிடியூட்டில் ஒலிப்பதிவுக் கருவிகள் இல்லாமல் அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டோம். இன்று எல்லாமே உங்கள் கையில் இருக்கிறது. நீங்கள் இன்னமும் அதிக சாதனை படைக்கலாம்’ என்று கூறுவார். அவர், பாலிடெக்னிக்கில் மாணவனாக இருந்தபோது, ஒலிப்பதிவு ‘இன்டேர்ன்ஷிப்’ பயிற்சிக்காக ஏவி.எம் ஸ்டுடியோவில் சேர்ந்திருக்கிறார். அங்கே கௌரவம் பார்க்காமல் படப்பிடிப்பில் ‘பூம்’ மைக் தூக்கும் பையனாக வாழ்க்கையைத் தொடங்கி, அந்த நிறுவனத்தின் தன்னிகரற்ற ஒலிப்பதிவாளராக அவர் உயர்ந்த கதை, ஒரு விறுவிறுப்பான நாவலைப்போன்ற சம்பவங்களை உள்ளடக்கியது” என்று வியந்துபோகிறார்.
அங்கீகாரத் தருணங்கள்
கடந்த பத்தாண்டுகளாக சம்பத்துடன் இணைந்து பயணித்தவர் கே.பாலசுந்தர் என்கிற ராஜா. ‘சம்பத்தின் தொழில்நுட்ப வாரிசு’ என்று பலரும் இவரையே கைகாட்டுகிறார்கள். அவரிடம் பேசியபோது, சம்பத் கடந்து வந்த சாதனைப் பயணத்தில் சில முக்கியமான, சுவாரசியமான தருணங்களைக் குறிப்பிட்டார். “தமிழ் சினிமா எத்தனையோ ஒலிப்பதிவு மேதைகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், 40 ஆண்டுக் காலம் ‘ஏவி.எம்’ சம்பத் - ‘பிரசாத்’ பாண்டுரங்கன் ஆகிய இருவரும் இத்துறையில் சக்கரவர்த்திகளாக இருந்தார்கள். நான் ‘பிரசாத்’ பாண்டுரங்கனின் மாணவன். என் குருதான், ‘சம்பத்திடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது’ என்று அவரிடம் அனுப்பினார். இவர்கள் இருவரும், ஸ்டீரியோ ஆடியோவில் உள்ள இடது வலது ட்ராக்குகளைப்போல நண்பர்களாகவும் தொழில் நேர்த்தியுடன் புகழ்பெற்று விளங்கினார்கள்.
இளையராஜாவின் ‘அன்னக்கிளி’ படத்துக்கான முதல் பாடல் பதிவில் ஏற்பட்ட மின்வெட்டு தடங்கல் பற்றி உலகத்துக்கே தெரியும். மீண்டும் மின்சாரம் வந்து பாடலை பிளே செய்தபோது பாடல் பதிவாகியிருக்கவில்லை. அதை சம்பத், இளையராஜா உட்பட யாருக்கும் சொல்லவில்லை. ‘வேறொரு நாளில் வைத்துக்கொள்ளலாம்’ என்று பலரும் கேன்சல் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சம்பத், ‘இல்லை இன்னொரு டேக் போகலாம்’ என்று கூறி அப்போதே பதிவுசெய்து கொடுத்திருக்கிறார். இப்படிப் பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்தக் காலத்தில் லைவ் எடுக்கும்போது எந்த வாத்தியக்காரர் மைக்கிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதில் அவர் கில்லாடி. பாடகர்களை வேலை வாங்குவதிலும் திறமைசாலி. நடிகர் சந்திரபாபு, பாடல் பதிவில் ஆடிக்கொண்டே பாடுவாராம், துள்ளிக் குதிப்பாராம். அதனால் அவருடைய
‘வாய்ஸை கேப்சர்’ பண்ணுவது பெரும் சவாலாக இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் துள்ளிக் குதித்து ஆடமுடியாதபடி சுற்றியும் டம்மி மைக்குகளை வைத்து ஒயர்களை கனெக்ட் செய்து பதிவு செய்திருக்கிறார். இந்தியாவின் தலைசிறந்த ஒலிப்பதிவாளர்களான ராபின் சாட்டர்ஜி, பி.எல்.மிஸ்ரா,முகுல் போஸ். ஜே.ஜே.மாணிக்கம்போன்றோரின் கீழ் பணிபுரிந்து அவர்களிடம் பாராட்டுகளைப் பெற்றவர்.
எம்.எஸ்.விஸ்வநாதன்,‘எல்லாத்தையும் சம்பத் பாத்துக்குவான்’ என்று முழுப்பொறுப்பையும் சம்பத்திடம் விட்டுவிடுவாராம். எம்.எஸ்.விக்கு முன்பு, இசைமேதை ஜி.ராமநாதன் இசையமைத்த ‘உத்தம புத்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘முல்லை மலர் மேலே’ பாடலை 24 வயதில் சம்பத் ஒலிப்பதிவு செய்துகொடுக்க, அதைக் கேட்டுவிட்டு ஒலிப்பதிவுக் கூடத்துக்கே ஓடிவந்து சம்பத்தைத் தேடிப்பிடித்துப் பாராட்டியிருக்கிறார். அப்போது தொடங்கிய சம்பத் சாரின் பயணம் அவரது இறுதி மூச்சுவரை நிற்கவில்லை. அவரைக் கட்டாயப்படுத்தி தென்னிந்திய ஒலிப்பதிவாளர் சங்கத்துக்குத் தலைவராக்கி அழகு பார்த்தோம். அவர் இல்லாவிட்டாலும் காற்றில் அவரது கலை வண்ணம் இருந்துகொண்டே இருக்கும்” என்று நினைவுகூர்கிறார் ராஜா.
படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago