பாம்பே வெல்வெட் 29: தனக்குத் தானே போட்டி!

By செய்திப்பிரிவு

எஸ்.எஸ்.லெனின்

ரரஷ்ய அதிபராக மிக்கைல் கோர்பசேவ் பதவி வகித்தபோது இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது, அவருக்கு பிரதமர் ராஜிவ் காந்தி நாட்டின் முக்கியப் பிரமுகர்களை அறிமுகப்படுத்திவைத்தார். ‘எங்களுடைய சினிமா சூப்பர் ஸ்டார் இவர்’ என்று அமிதாப் பச்சனை அறிமுகம் செய்துவைத்தபோது, அமிதாப்புக்கு அடுத்து நின்ற நடிகரைக் கண்டுகொண்டவராக ‘ஹலோ மிதுன் சக்ரவர்த்தி...’ என்று கோர்பசேவ் இடைமறித்துக் கைகுலுக்கிவிட்டு, பின்னர் அமிதாபிடம் வந்தாராம்.

கோர்பசோவின் மனைவி நடிகர் ராஜ்கபூரின் ரசிகையாகவும், மகள் மிதுன் சக்ரவர்த்தியின் ரசிகையாகவும் இருந்தனர் என்பதைப் பின்னாளைய பேட்டி ஒன்றில் கோர்பசேவ் சிலாகித்துக் கூறியிருக்கிறார்.

அன்றைய கிழக்குப் பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசம்), வங்கக் குடும்பம் ஒன்றின் வாரிசாகப் பிறந்தவர் கௌரங்க சக்ரவர்த்தி. கல்கத்தா கல்லூரியில் படித்தபோது தீவிர இடதுசாரிச் சிந்தனைகளால் கவரப்பட்டார். அதன் விளைவாக நக்சலைட் குழுக்களில் ஐக்கியமானார். உடன்பிறந்த சகோதரரின் அகால மரணத்தால் அதிலிருந்து விலகியவர், இழப்பு ஏற்படுத்திய உளச்சிக்கலைச் சமாளிக்க புனே நடிப்புக் கல்லூரியில் சேர்ந்தார்.

அந்தக் கல்லூரி நிகழ்வொன்றுக்கு வந்திருந்தார் இயக்குநர் மிருணாள் சென். அவரது கண்ணில் பட்டதில், கௌரங்க சக்ரவர்த்தியின் திரை வாழ்க்கை மிதுன் சக்ரவர்த்தியாக மாறியது. வங்கத்தில் பிறந்து, பம்பாய், ஊட்டி, ரஷ்யா மார்க்கமாக வலம்வந்த மிதுன் சக்ரவர்த்தியின் ராஜபாட்டை, அவரது 68-ம் வயதில் இன்றும் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் தொடர்கிறது.

பம்பாய் பரமபதம்

ஒடிய சிறுகதை ஒன்றைத் தழுவி மிருணாள் சென் இயக்கிய படம் ‘ம்ரிகயா’ (1976). அதில்தான் மிதுன் சக்ரவர்த்தி அறிமுகமானார். அறிமுகப் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். ஆனால், மிதுனின் அப்போதைய பொருளாதாரச் சூழ்நிலை, கலைப்படங்களுக்கு அப்பாலிருந்த வணிகப் படங்களுக்கு அவரைத் தள்ளியது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் நடித்த ஓரிரு திரைப்படங்களும் பெரிதாகப் போகவில்லை. தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் வாகை சூடிய தேவர் ஃபிலிம்ஸின் ‘ஆட்டுக்கார அலமேலு’ திரைப்படம், ‘மேரா ரக்ஷக்’ (1978) என்ற பெயரில் இந்தியில் தயாராகி, மிதுன் சக்ரவர்த்தியின் திரைவாழ்வில் வெற்றிக் கணக்கைத் தொடங்கிவைத்தது.

அடுத்த ஆண்டின் பட்ஜெட் திரைப்படமான ‘சுரக்ஷா’வின் வெற்றியால் மிதுனைத் தயாரிப்பாளர்கள் மொய்க்கத் தொடங்கினார்கள். மிதுன் சக்ரவர்த்தியின் திரைப்படங்கள் ‘மினிமம் கியாரண்டி’ வசூலைத் தக்கவைத்தன. ‘வெற்றிபெற்றால் அதிக லாபம்; ஓட்டம் குறைவென்றாலும் கையைக் கடிக்காது’ என்ற நம்பிக்கையைத் தந்த மிதுனுக்கான வர்த்தகச் சந்தையால் புதிய தயாரிப்பாளர்கள், அவரை நம்பி சினிமாவில் நுழைந்தனர். 80, 90-களில் தலா நூற்றுக்கும் மேலான படங்கள் மிதுன் சக்ரவர்த்தி நடிப்பில் வெளியாகின. புற்றீசல்போல் வெளியான அவருடைய படங்கள் வந்த வேகத்தில் முடங்கிவிடாமல், ஒன்று மற்றொன்றுடன் வசூலில் போட்டியிட்டன.

ரஷ்ய ரசிக ராஜ்ஜியம்

‘டாக்ஸி சோர்’ (1980) திரைப்படத்தின் வெற்றியால், மிதுனின் இரட்டை வேடத் திரைப்படங்கள் அதிகரித்தன. ‘ஆம்னே சாம்னே’ (1982), ‘ரக் ஷா பந்தன்’ (1984) உள்ளிட்ட படங்களும் அந்த வகையில் வெற்றிபெற்றன. குறைந்தபட்ச வெற்றிக்கு அவசியமான அம்சங்கள் எனக் கருதப்பட்டுவந்த ஆக் ஷன் அதிரடி, குடும்பம் செண்டிமெண்ட், காதல், காமெடி என அனைத்துக் கதைகளிலும் அடுத்தடுத்து தோன்றினார். இவை எல்லாவற்றிலும் மிதுன், தன்னுடைய தனிப்பட்ட முத்திரையான நடனக் காட்சிகள் மூலமாக ரசிகர்களைக் கட்டிப்போட்டது நடந்தது. ‘டிஸ்கோ டான்சர்’ (1982) திரைப்படத்தின் வெற்றி மிதுனின் புகழை ஆசியக் கண்டமெங்கும் பரப்பியது.

அன்றைய ரஷ்யாவில், ஆண்டுதோறும் வெளிநாட்டுத் திரைப்படங்களில் அதிகம் வசூலித்துத் தருபவையாக மிதுனின் திரைப்படங்கள் இருந்தன. தொடர்ந்து ‘டான்ஸ் டான்ஸ்’ (1987), ‘கமாண்டோ’ (1989) என மிதுனின் நடனம் - ஆக் ஷன் திரைப்படங்களுக்கு ரஷ்ய ரசிகர்கள் அதிகரித்தனர். வருமானம் கொழித்ததில் 1985-86-ல் நாட்டின் வருமான வரிக் கொடையாளர்களில் மிதுன் சக்ரவர்த்தியும் முதல் வரிசையில் சேர்ந்தார். 1989-ல் மட்டும் அவருடைய நடிப்பில் 19 படங்கள் வெளியாகித் தமக்குள் போட்டி போட்டன. பாட்டு, நடனம், சண்டை எனச் சரிவிகிதத்தில் கலந்த அந்த ஃபார்முலா திரைப்படங்களால் எண்பதுகளின் பாலிவுட்டின் போக்கும் நிறமும் மாறின.

வங்கத்திலும் வளர்ச்சி

பம்பாயில் வெற்றிக்கொடி பறந்தாலும் அவற்றுக்கு இணையாக, தாய் மண்ணான வங்கத் திரைப்படங்களிலும் மிதுன் தொடர்ந்து நடித்துவந்தார். ‘நடி தேகே சாகரே’ (1978) படத்தில் தொடங்கிய எண்பதுகளின் திரைப்படங்கள் பல வெற்றிபெறவும் செய்தன. வணிக வெற்றிக்கு அப்பால், புத்ததேவ் தாஸ்குப்தா இயக்கிய திரைப்படமான ‘தகதேர் கதா’ (1992) மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டாம் முறையாக மிதுன் பெற்றார். 90-களில் பாலிவுட்டில் தொய்வுகண்டபோது முழுமூச்சில் வங்கத் திரைப்படங்களில் மூழ்கினார். ‘நோபல் சோர்’, ‘லே ஹல்வா லே’ (2012) எனப் புத்தாயிரத்திலும் அவருடைய வெற்றி வங்கத்தில் தொடர்ந்தது. பம்பாய்க்கு வெளியே வங்கம் மட்டுமன்றி போஜ்பூரி, பஞ்சாபி, ஒடியா, கன்னடம், தெலுங்கு, தமிழ் (யாகாவாராயினும் நா காக்க) வரை நடித்திருக்கிறார்.

ஊட்டியில் நாட்டம்

இந்திப் படங்களில் இடம்பெற்ற பாடல் காட்சிகளுக்காக அவ்வப் போது ஊட்டிக்கு வந்து சென்ற மிதுன் சக்ரவர்த்திக்கு, ஊட்டி மீது தனி நாட்டம் உண்டானது. 90-களின் தொடக்கத்தில் பம்பாயிலிருந்து தனது வசிப்பிடத்தை ஊட்டிக்கு மாற்றிக்கொள்ளும் அளவுக்கு, அது வலுத்தது. மிதுனால் லாபம் கண்ட தயாரிப்பாளர்கள், அவருக்காக ஊட்டிக்கே படையெடுத்துவந்தனர்.

அவர்களுக்காக மிதுன் சுட்டிக்காட்டிய ஊட்டி சுற்றுவட்டாரத்தில் புதிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கின. தனக்காகத் தெற்கே வந்த தயாரிப்பாளர்களுக்காக ஊதியத்தைக் குறைத்துக் கொண்டதுடன், ஊட்டியில் தான் கட்டிய தங்கும் விடுதியின் கட்டணத்திலும் சகாயம் செய்தார் மிதுன். கோலிவுட் நடிகைகள் பலரும் ஊதிய நிபந்தனைகளை தளர்த்திக்கொண்டு நடிக்க முன்வந்தனர்.

இப்படியாக மிதுனுக்காக ஊட்டியை மையங்கொண்ட குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் தயாராகி வெளிவந்தன. அவை வழக்கம்போல் குறைந்தபட்ச வெற்றியை உறுதிசெய்யவும் தவறவில்லை. அப்போது ஹாலிவுட் மோகத்தில் அகலக் கால் வைத்து சூடுபட்டுவந்த பாலிவுட்டுக்கு, மிதுனின் ‘தலால்’, ‘ஃபூல் அவுர் அங்கார்’, ‘ராவண் ராஜ்: எ ட்ரூ ஸ்டோரி’ உள்ளிட்ட குறைந்த பட்ஜெட் திரைப்படங்களின் வெற்றி ஆறுதல் தந்தது.

அதன் பலன்களைச் சொந்தமாகப் படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியும் மிதுன் அறுவடைசெய்தார். 90-களின் இறுதியில் குணச்சித்திர வேடங்களில் நடித்தும் தனி முத்திரை பதித்தார். ‘ஸ்வாமி விவேகானந்தா’ (1998) திரைப்படத்தில் ராமகிருஷ்ணராக நடித்ததில், மூன்றாம் தேசிய விருதையும் வென்றார், தான் மட்டுமே தனக்குப் போட்டியாக விளங்கிய மிதுன் சக்ரவர்த்தி.

‘டிஸ்கோ டான்ஸர்’ கதாபாத்திரமான ஜிம்மி பெயரில் ரஷ்யாவில் சிலைகள், டோக்கியோவில் கோயில், ஐரோப்பிய நகரங்களில் பொழுதுபோக்குப் பூங்கா என இந்தியாவுக்கு வெளியே வேறெந்த பாலிவுட் நடிகருக்கும் வாய்க்காத பெருமைகள் மிதுனுக்கு வாய்த்தன.

ஜிம்மி பெயரிலான சாகச நாயகனை மையங்கொண்ட காமிக்ஸ் கதைகளும் வெளியாயின. ‘எல்விஸ் பிரெஸ்லி’ நடனத்தின் மீது தணியாத தாகம் கொண்ட மிதுன் சக்ரவர்த்தி, ‘எல்விஸின் எக்குத்தப்பான பிரதியே என்னுடைய ஆட்டம்’ என ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார்.

ஆனபோதும் மிதுனின் நடன அசைவுகளுக்குத் தலைமுறை தாண்டிய ரசிகர்கள் உண்டு. அதற்கான விபரீத விலையாக தீராத முதுகு வலியால் முதுமையில் அவர் அவதிப்பட்டுவருகிறார். அப்போதும் ‘டான்ஸ் இந்தியா டான்ஸ்’ உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இளம் வயதினரின் நடன ஆர்வத்தை ஊக்குவித்துவருகிறார்.

மிதுன் தோன்றிய ‘ஐ எம் ய டிஸ்கோ டான்ஸர்’ பாடலின் தாக்கத்தில் ரஜினி நடித்த ‘தாய் வீடு’ படத்தில் இடம்பெற்ற ‘உன்னை அழைத்தது கண்’ பாடல் இடம்பெற்று ஹிட் வரிசையில் சேர்ந்தது. அசல் பாடலின் உரிமையைப் பெற்று, நாகேஷின் மகன் ஆனந்த் பாபு நடித்த ‘பாடும் வானம்பாடி’ படத்தில் ‘நானொரு டிஸ்கோ டான்ஸர்’ என எஸ்.பி.பி.யின் குரலில், அட்டகாசமான நடனத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்