தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கான தேர்தலை வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டதுமே அணிகள் பரபரக்கத் தொடங்கிவிட்டன. ஏனென்றால், தயாரிப்பாளர் சங்கம் கடந்த பத்தாண்டு காலமாகவே சர்ச்சைக்குரிய சங்கமாகவே பார்க்கப்படுகிறது.
இம்முறை விஷால் அணியிலிருந்து யாருமே தேர்தலில் நிற்கவில்லை. விஷால் அணியில் முக்கியப் பொறுப்புகள் வகித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, கதிரேசன் உள்ளிட்டோர், ‘நம்மைக் குறை சொன்னவர்கள் ஜெயித்து என்ன செய்துவிடப் போகிறார்கள் என்று பார்ப்போம்’ என ஒதுங்கிவிட்டார்கள்.
விஷால் அணியின் சரிவுக்கு என்ன காரணம் என்று சிலரிடம் விசாரித்தபோது, ‘விஷால் அணியி லிருந்து எந்தவொரு விஷயத்தை முன்னெடுத்தாலும் ஏதாவது ஒரு வகையில் அதைக் குழப்பி, கிடப்பில் போட்டுவிடுவார்கள். இதனால் விஷால் அணியால் உருப்படியாக எதையும் செய்ய முடியவில்லை’ என்கிறார்கள்.
விஷாலின் சரிவு
நடிகர் சங்கச் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என ஆற்றல்வாய்ந்த மனிதராக வலம் வந்தார் விஷால். அப்போதே தமிழக அரசுக்கு இணக்கமாகப் போயிருந்தால் எந்தவொரு பிரச்சினையும் வந்திருக் காது. ஆனால், ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்கப் போகிறேன் என்று களமிறங்கிய அவர், அரசுக்கு எதிராகப் பேசியதில் அவர்களின் கோபத்துக்கு ஆளானார். மேலும், தேர்தல் களத்தில் இறங்கியது அவரது அணியிலிருந்த பலருக்கும் பிடிக்கவில்லை.
விஷால் அணியிலிருந்து ஞானவேல் ராஜா விலகி, விநியோகஸ்தர்கள் தேர்தலில் போட்டியிட்டபோதே அவர்களது அணியில் குழப்பம் தொடங்கிவிட்டது. ஞானவேல்ராஜா இடத்தை யார் பிடிப்பது என்ற அதிகாரச் சண்டை தொடங்கியது. இந்த மோதலால் எதிரணி வலுப்படத் தொடங்கியது. தமிழக அரசும் விஷாலுக்கு எதிராக இருந்ததால் எதிரணியினர் இதைச் சாதமாக்கிக் கொண்டார்கள்.
“தான் அனைத்து இடத்தையும் ஆக்கிரமித்திருக்க வேண்டும் என நினைத்ததுதான் விஷால் செய்த முதல் தவறு. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பு, நடிப்பு, தேர்தல் களம் என அனைத்திலும் கால் வைத்ததால், எதற்கு நேரம் ஒதுக்குவது என்ற குழப்பத்தில் விஷால் இருந்தார். அதனால் நண்பர்களை இழக்கத் தொடங்கினார்.
தனிப்பட்ட பொருளாதாரச் சிக்கல், குடும்பச் சிக்கல் ஆகியவற்றுடன் அனைத்துப் பிரச்சினைகளும் சேரவே விஷால் ஒரு கட்டத்தில் சரியத் தொடங்கினார். அவருடைய சரிவு அவர் சார்ந்த அணியையும் சரித்தது” என்று பல நடுநிலையான தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால், ‘அவ்வளவு பிரச்சினையிலும் பெப்சி தொழிலாளர்களுடன் தயாரிப்பாளர்கள் சங்கம் போட்டுக்கொண்ட ஊதிய ஒப்பந்தம் மிக முக்கியமானது’ என்பதையும் அவர்கள் மறுக்கவில்லை.
எடுபடாத முயற்சி
தயாரிப்பாளர் சங்கத்துக்கு அரசாங்கம் நியமித்த வழிகாட்டும் குழுவில் பாரதிராஜா இடம்பெற்றிருந்தார். அவர் விஷாலை விமர்சித்துப் பேசிவந்தார். தேர்தல் வந்தவுடன் அவரை முன்னிலைப்படுத்தி ஒருமனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவார், மற்ற முக்கியப் பொறுப்புகள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க மட்டுமே தேர்தல் நடக்கும் என்று சங்க உறுப்பினர்கள் பலரும் எதிர்பார்த்ததாகத் தெரிய வருகிறது.
அதற்கேற்ப, ‘தேர்தலே வேண்டாம். அனைவரும் கூடிப்பேசி பொறுப்பாளர்களைத் தேர்வுசெய்வோம். செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தலாம்’ என்று பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இவர்களின் வேண்டுகோள் யார் காதிலும் விழவே இல்லை என்பதுதான் நிதர்சனம். பாரதிராஜா முயற்சி எடுபடாத நிலையில், சங்கத் தேர்தலில் போட்டி உண்டு என்பதைத் தயாரிப்பாளர் டி.சிவா தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் முதல் அணி உறுதிசெய்திருக்கிறது.
தலைவராக டி.சிவா, பொருளாளராக முரளிதரன், செயலாளர்களாக தேனப்பன், ஜே.சதீஷ் குமார், துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், தனஞ்ஜெயன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இதில் செயற்குழு உறுப்பினர்களாகப் போட்டியிட கே.ராஜன், ராதாரவி, சித்ரா லட்சுமணன், ஹெச்.முரளி, எஸ்.எஸ்.துரைராஜ், ஆர்.வி.உதயகுமார், மனோபாலா உள்ளிட்ட பலர் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார்கள். விஷாலின் நகர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தவர்கள் இப்போது முதல் அணியாக உருவாகி இருப்பதைக் கவனிக்கலாம்.
சத்தமின்றி யுத்தமின்றி
தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி சத்த மின்றித் தனக்கான ஆதரவைத் திரட்டி வருகிறார். இவருடைய அணியினர் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், தங்களுடைய அணி போட்டியிடுவது தொடர்பாகத் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவைச் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.
இந்த அணியில் கே.ஜே.ஆர் ராஜேஷ், ராதாகிருஷ்ணன், மைக்கேல் ராயப்பன், சந்திரபோஸ், சந்திரபிரகாஷ் ஜெயின் உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள். யார் எந்தப் பதவிக்குப் போட்டியிடுவார்கள் என்பது கூடிய விரைவில் முடிவாகும் எனத் தெரிகிறது. இவருடைய தந்தையான மறைந்த ராம.நாராயண னுக்குத் தயாரிப்பாளர் சங்கத்தில் செல்வாக்கு அதிகம் எனத் தெரிகிறது. அதைப் பயன்படுத்தித் தலைவர் பதவிக்கு காய் நகர்த்தி வருகிறார் முரளி.
மேலும் ஒரு அணி
தாணு தலைவராக இருந்தபோது, பொருளாளராக இருந்தவர் சத்யஜோதி தியாகராஜன். சமீப காலமாகத் தயாரிப்பாளர் சங்கத்தின் வழிகாட்டும் குழுவிலும் பணிபுரிந்துவந்தார். டி.சிவா தலைமையிலான அணியில் அவர் அங்கம் வகிப்பார் எனப் பலரும் எதிர்பார்த்தனர். அவரோ அமைதியாகிவிட்டார். அது பற்றி விசாரித்தபோது, "எந்தவொரு பிரச்சினை என்றாலும் யாருடைய மனமும் நோகாமல் பேசி முடித்துவிடுவார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் பெரும் அனுபவம் கொண்டவர், இந்த முறை யாருக்கு ஆதரவு அளிப்பது, எந்த அணிக்குச் செல்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார்" என்கிறார்கள். தாணு தலைவராக இருந்தபோது செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன் பொறுப்பு வகித்தனர். தற்போது இந்தத் தேர்தலில் இவர்களே இரண்டு அணியாக நிற்கிறார்கள். ‘யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம், ஒதுங்கி இருக்கலாம்’ என அவர் முடிவு செய்திருக்கிறார் என்கிறார்கள்.
அதிமுக Vs திமுக
வழக்கம் போல் இந்த முறையும் அதிமுக vs திமுக எனும் அரசியல் சார்புடன் அணிகள் மோதும் என்பதும் தெளிவாகிறது. தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, திமுக ஆதரவாளர். அந்த அணியில் இருக்கும் சந்திரபிரகாஷ் ஜெயின் 'தலைவா' படத்தின் போது அதிமுக அரசின் சர்ச்சையில் சிக்கியவர். ஆகவே இந்த அணிக்கு திமுக சார்புகொண்ட தயாரிப்பாளர்களின் ஆதரவு இருக்கும். இந்த அணியில் அதிமுக சார்புகொண்ட மைக்கேய் ராயப்பன் மட்டும் இருக்கிறார். இது எப்படி என விசாரித்தபோது, ‘கூடிய விரைவில் காட்சிகள் மாறலாம்’ என்கிறார்கள்.
டி.சிவா, தேனப்பன், கே.ராஜன் உள்ளிட்டோர் அதிமுக சார்பு கொண்டவர்கள் எனத் தெரிகிறது. அந்த அணியில் இருக்கும் ஜே.சதீஷ்குமார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருக்கிறார். அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு அதிமுக மாநிலங்களவைக்கான சீட் கொடுத்துள்ளது. இதனால் இந்த அணி அதிமுக ஆதரவு பெற்ற அணி என்பது தெளிவாகிறது. ஆக, இம்முறை தேர்தலில் ஜெயிக்கப்போவது யார் என்பது அரசியல் கட்சிகளின் போட்டியாகவே பார்க்கப்படுகிறது.
காட்சிகள் மாறுமா?
தயாரிப்பாளர்கள் தாணு, சத்யஜோதி தியாகராஜன், கேயார் உள்ளிட்ட மூத்த தயாரிப்பாளர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கப் போகிறார்கள் என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். காரணம், மூவருமே தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும்போது பலருடைய ஆதரவையும் பெற்றவர்கள்.
இதை வைத்து இந்த முறை எந்த அணி ஜெயிக்கும் என்பதை எளிதாகக் கணித்துவிட முடியும். ஆனால், யார் பொறுப்புக்கு வந்தாலும் மீண்டும் குடுமிபிடிச் சண்டை நடத்தாமல், சங்கத்தின் நலனுக்கு பாடுபட வேண்டும் என்பதுதான் பலருடைய கோரிக்கையாக இருக்கிறது. ஏனென்றால், சண்டையின்றி சங்கம் செயல்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இதை வெல்லப்போகிறவர்கள் உள்ளத்தில் நிறுத்த வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago