இதயம்வரை நனைகிறதே...

By செய்திப்பிரிவு

எஸ் வி வேணுகோபாலன்

நான் கோவையில் வேதியியல் முதுநிலை மாணவராக இருந்த நாட்கள் அவை. சைக்கிள்தான் உலகம். ஏதோ ஒரு தேநீர்க் கடை ரேடியோவில்தான் அந்தப் பாடலை முதன் முறை கேட்ட நினைவு. அதுவும், ஒரு பொன் மாலைப் பொழுதுதான்...

திரைப்படப் பாடல்தானா இது என்று ஒரு கிறக்கத்தை ஏற்படுத்திய எஸ்.பி.பி.யின் குரல், உள்ளத்தைத் தொடும் மெல்லிய இசையைத் தூவிய இளையராஜா, அப்புறம், அப்புறம் வேறேதோ ஒன்று, அதுதான், அந்தப் பாடல் வரிகளேதான்! ‘வான மகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள்’ என்பதில் தொடங்கி, ஆயிரம் நிறங்கள் ஜாலமிட்டதும், ராத்திரி வாசலில் கோலமிட்டதும் மட்டுமல்ல, வேலை தேடிக்கொண்டிருக்கும் வாலிப வயதில், வானம் போதி மரம் ஆவதும், நாளும் ஒரு சேதி தருவதும்... இனிய புல்லாங்குழல் இசையும் வயலின் புறப்பாடும் நடன ஜதி போன்ற தபலாக் கட்டும் பல மாதங்களுக்கு ரசிகர்கள் பாடிக்கொண்டே இருந்ததில் வியப்பென்ன இருக்க முடியும்?

சொற்களின் ஊற்று!

‘ராஜ பார்வை’யில் அந்தி மழை பொழிந்தது... கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது என்ற காதல் பரிதவிப்பு. ‘நினைவெல்லாம் நித்யா’வின், ‘பனி விழும் மலர் வனம்’ என்று ஏதோ யோக நிலையில் இருக்கும் முனிவரைப் போல் தொடங்கும் பாடல், இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரமாயிற்று.

இதழ்களில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலையில், ரோஜாவைத் தாலாட்டும் தென்றலும் சரி, நீ தானே என் பொன் வசந்தமும் சரி .... தோளின் மேலே பாரம் இல்லாது, அந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே அவர் எழுதியவைதாம். எளிமையான சொற்களில் இருந்து, தமிழ்த் திரைப்பாடல்கள் கொஞ்சம் கூடுதல் ரசனையை, ‘ஊற்று மலைத் தண்ணீரே என் உள்ளங்கை சர்க்கரையே’ என்று (கண்ணான பூ மகனே - தண்ணீர் தண்ணீர்) தொட்டுக் கொள்ளத் தொடங்கின.

‘அலைகள் ஓய்வதில்லை’யில், ‘இங்கு தேனை ஊற்று, இது தீயின் ஊற்று’ என்று கொதித்த காதல், ‘விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய், விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்’ என்று காதல் ஓவியத்தில் அரற்றியது. ‘பயணங்கள் முடிவதில்லை’யில், ‘இளைய நிலா பொழிந்தால், இதயம் வரை நனைய’ வைத்த சொற்களின் ஊற்றானது.

இரட்டை மேதைகள்

‘முதல் மரியாதை’யும், ‘சிந்து பைரவி’யும் ராஜாவுக்கும் சரி, வைரமுத்துவுக்கும் சரி, ஒரு கதை சொல்லியின் தேடலுக்கு ஏற்ற பாடல்களை வழங்கும் சவாலான வாய்ப்பை வழங்கின. ஒன்று, தெற்கத்திய மண்ணின் பண்பாட்டுச் சுவடுகளில் கிளைத்தெழுந்த வித்தியாசமான ‘வெட்டி வேரு வாசம், விடலைப்பிள்ளை நேசம்’. இரண்டாவது, ‘என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே’ என்ற நாடோடி சிந்துவின் கொந்தளிப்பு.

‘மெத்த வாங்குனேன், தூக்கத்த வாங்கல’ என்கிற மனிதனின் பரிதவிப்புக்கு, ‘இந்த வேதன யாருக்குத்தான் இல்ல...’ என்று எசப்பாட்டுக் குரல் கொடுக்கிறாள் ஒருத்தி. அது மட்டுமா, ‘ராசாவே ஒன்ன நம்பி’ என்ற பிடிமானம் எடுத்து, ‘மந்தையில நின்னாலும் நீ வீர பாண்டித் தேரு’ என்று சோகத்திலும் சொந்தம் கொண்டாடுகிறாள். சுழியிலே படகு போல மனசு கிடந்து அல்லாடிப் படும் வேதனையை அந்தக் கவிதை மொழி வல்லமையோடு வெளிப்பட்டது.

தெலுங்குப் படத்தின் தமிழ் வடிவம்தான் என்றாலும், ‘சலங்கை ஒலி’யில், ‘மௌனமான நேரமும்’, ‘என் கதை எழுதிட மறுக்குது என் பேனாவும்’ ஏற்கெனவே நடித்துவிட்ட கதாபாத்தி ரத்தின் வாயசைவுக்கு வார்த்தைகளைப் பொருத்திய வித்தையை என்னவென்பது!.‘புன்னகை மன்னன்’ படத்தில், 'ஏதேதோ எண்ணம் வளர்க்கவும்', 'என்ன சத்தம் இந்த நேரம்' என்று கேட்கவுமாக, 'கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது நாதம்' என்று கொண்டாடும் பாடல்களின் இசையும் வரிகளும் இன்றைக்கும் நவீனத்தின் அடையாளத்துடன் இருப்பது இளையராஜா - வைரமுத்து எனும் இரட்டை மேதைகளின் கூட்டணியால்தானே!

இசைப் புயலில் கலந்த மண் வாசம்

தொண்ணூறுகளில், ‘ரோஜா’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானின் வரவு, ‘சின்னச் சின்ன ஆசை’ அல்ல, பெரிய பெரிய கனவுகளையும் வளர்த்தெடுத்தது. ‘கிழக்குச் சீமையிலே’ கதைக்களம், கத்தாழம் காட்டு வழியல்லவா, ‘அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சுகம் தானா’ என்று ஆத்தங்கரை மரத்திலிருந்து கிராமத்து வாழ்க்கையை வரிசைப்படுத்தியது. அவரைக்குப் பூ அழகு, அவருக்கு நான் அழகு (கண்ணுக்கு மையழகு - ‘புதிய முகம்’) என்கிறாள் நாயகி. ‘பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது’ (ஒட்டகத்தை - ‘ஜென்டில்மேன்’) என்கிறான் நாயகன்.

ரஹ்மான் இசையில், சொர்ணலதாவின் அசாத்திய குரலில் உயிருக்குள் இறங்கிய ‘போறாளே பொன்னுத்தாயி’ (‘கருத்தம்மா’), ‘சேமிச்ச காசு செல்லாமப் போச்சு’... ‘கடைசியில் சாமிக்கு நேர்ந்தது சாதிக்கு ஆனதடி ...’ என்ற இடங்களில் எப்போது கேட்டாலும் உலுக்கி எடுக்கும் வரிகளை வைரமுத்துவால் மட்டும்தான் எழுதியிருக்க முடியுமோ! ‘பால் பீய்ச்சும் மாட்ட விட்டுப் பஞ்சாரத்துக் கோழிய விட்டுப்’ போகும் பொட்டப்புள்ள வாழ்க்கையின் கண்ணீர்க் கோடுகளை நவீன இசை மட்டுமே இவரிடமிருந்து வரும் என்ற விமர்சனத்துக்கு முற்றுபுள்ளி வைத்து, இசைப்புயலின் மெட்டுகளில் மண் வாசத்தைக் கலந்த வைரமுத்துவின் கவிதை பேசியது.

‘பம்பா’யில், ‘வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே, அதற்காகத் தான் வாடினேன்’ என்று ‘உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு’ என்ற ஹரிஹரன் குரலில் தழுதழுத்த வரிகள்... ‘கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன், கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்' (ஒருவன் ஒருவன் - ‘முத்து’) என்று தெறித்த இடங்கள்... ஒருநாளும் நினைவைவிட்டு அகலாத எளிய தத்துவங்கள்.

எதைத் தொட, எதை விட?

தங்கத் தாமரை மகளிடம் (‘மின்சாரக் கனவு’), ‘பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார் காலம்’ என்று தாபம் மிகுந்து பாலு பாடிய வரிகள். ‘கலகல ரெட்டைக் கிளவி, சலசல ரெட்டைக் கிளவி உண்டல்லோ’ என்று (‘ஜீன்ஸ்’) சந்தம் எடுத்து, ரெண்டல்லோ ரெண்டும் ஒன்றல்லோ என்றும், பின்னர் ‘சூரியன் வந்து வா எனும் போது என்ன செய்யும் பனியின் துளி’ (‘சங்கமம்’) என்றும் நித்ய ஸ்ரீ இழைத்த வரிகள்... எதை எல்லாம் சொல்ல, எதை எல்லாம் மெல்ல! ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தின் ‘எங்கே எனது கவிதை’,‘என்ன சொல்லப் போகிறாய்’, எதை எல்லாம் தொட, எதை விட?

‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தின், கள்ளிக்காட்டில், முள்ளுக்காட்டில் பிறந்த பாடல்கள். ‘சிவாஜி’ படத்தின் ‘சஹானா சாரல் தூவுதோ ....’ எதையெல்லாம் உரைக்க, எதைக் கழிக்க? எத்தனை எத்தனை இசை அமைப்பாளர்கள். எத்தனை எத்தனை குரல்கள். எத்தனை எத்தனை தேசிய, மாநில விருதுகள்...!

‘மனிதா மனிதா இனியுன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்’ (‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’) என்றும், ‘ஓ ஒரு தென்றல் புயலாகி வருமே’ (‘புதுமைப் பெண்’) என்றும் பலவிதங்களில் வெளிப்பட்டதையும் பார்க்க முடியும். திரைக்கதை கேட்கும் உறவுகளை, பிரிவுகளை, காதலை, மோதலை, கனவை, கண்ணீரை வடுகப்பட்டி வாசனையோடும் வாழ்க்கைப்பட்டியின் சுவடுகளோடும் பெருமிதம் பொங்க எழுதிக்கொண்டிருக்கும் வைரமுத்து, தமிழ்த் திரையிசையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சகாப்தம். அவரை கொண்டாட இதுவும் சிறந்த தருணம்.

தொடர்புக்கு: sv.venu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்