பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்...

By பி.ஜி.எஸ்.மணியன்

எழுபதுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரை இசையில் சத்தமே இல்லாமல் ஒரு மாறுதல் நிகழ ஆரம்பித்தது.

அறுபதுகளின் இறுதிவரை கனமான குரல் வளம் கொண்ட பாடகர்களை முன்னிலைப்படுத்தி இயங்கி வந்த திரையிசை, எழுபதுகளில் புதிய தலைமுறை நடிகர்களான கமல், ரஜினி போன்றவர்களின் வருகையால் மென்மையான குரல்வளம் நிறைந்த பாடகர்களின் வசம் வந்தது.

இளைய தலைமுறையின் துள்ளல், துடிப்பு, உற்சாகத்தைப் பிரதிபலிக்க ஒரு எஸ்.பி.பி. கிடைத்தார். அமைதியான நதியோட்டமாக மனத்தை வருட ஒரு ஜேசுதாஸ் கண்டெடுக்கப்பட்டார். இந்த இருவரின் ஆளுமை திரையிசையை வசப்படுத்திக்கொண்ட நேரத்தில், மலையாளத் தேசத்திலிருந்து மற்றுமொரு மயக்கும் குரலால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட வந்தவர்தான் பளியத்து ஜெயச்சந்திரக்குட்டன் என்ற பி. ஜெயச்சந்திரன்.

1944-ம் வருடம் மார்ச் மாதம் மூன்றாம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள ரவிபுரம் பகுதியில் பத்ராலயம் என்ற சிற்றூரில் ரவிவர்மா கொச்சனியன் தம்புரான் - பளியத்து சுபத்ரா குஞ்சம்மாள் தம்பதிக்கு இவர் மூன்றாம் மகனாகப் பிறந்தார்.

குடும்பம் இரிஞ்ஞாலக்குடாவுக்குக் குடிபெயர்ந்ததால் மாணவப் பருவம் இரிஞ்ஞாலக்குடாவிலேயே கழிந்தது. 1958-இல் மாநில இளைஞர் திருவிழாவில் பதினான்கு வயது ஜெயச்சந்திரன் சிறந்த இளம் மிருதங்கக் கலைஞராகச் சிறப்பிக்கப் பட்டார். அதே மேடையில் சிறந்த இளம் கர்நாடக இசைக் கலைஞர் விருது பெற்றவர் பதினெட்டு வயது வாலிபரான கே.ஜே.ஜேசுதாஸ்.

முதல் பாடல்

பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடிய ஜெயச்சந்திரனுக்குக் கிடைத்த பாராட்டுகளும் பரிசுகளும் அவருடைய இசை ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தன. முதல் வாய்ப்பு இருபத்து மூன்றாம் வயதில் ‘உத்யோகஸ்தா’ என்ற மலையாளப் படத்தில் எம்.எஸ்.பாபுராஜ் இசையில் ‘அநுராக கானம் போலே’ என்ற பாடல். இவருடைய திறமையை மேலும் புடம்போட்டுத் தங்கமாக ஒளிரவைத்த பெருமை இசையமைப்பாளர் தேவராஜனையே சேரும்.

அந்த ஏழு நாட்கள்

வசீகரக்குரலால் சேட்டன்களைக் கட்டிப்போட்ட ஜெயச்சந்திரனுக்கு மெல்லிசை மன்னர் இசை அமைத்த ‘பணி தீராத வீடு’ படத்தில் பாடிய ‘சுப்ரபாதம்’ பாடல், கேரள மாநில அரசின் சிறந்த பாடகருக்கான விருதைப் பெற்றுத் தந்தது. 1973-இல் சத்யா மூவிஸின் ‘மணிப்பயல்’ படத்தில் ‘தங்கச்சிமிழ் போல் இதழே’ பாடலின் மூலம் ஜெயச்சந்திரனின் குரலைத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார் எம்.எஸ். விஸ்வநாதன்.

“அந்த இணையற்ற கலைஞர் என் கிட்டே இருந்த திறமையை அழகா வெளியே கொண்டு வந்தார். சொல்லப்போனால் எனக்கு முதல் முதலாகக் கிடைச்ச அவார்டே ‘பணி தீராத வீடு’ படத்துலே அவர் இசையில் பாடிய ‘சுப்ரபாதம்’ பாட்டுக்குத்தான்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார் ஜெயச்சந்திரன். 1976-ல் வெளிவந்த பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்தில் ஜெயச்சந்திரன் வாணி ஜெயராமுடன் பாடிய ‘ஆடி வெள்ளி தேடி வந்த’, ‘வசந்த கால நதிகளிலே’ ஆகிய பாடல்கள் பெரிய வெற்றியைப் பெற்றன.

மாஞ்சோலைக் கிளிதானோ..

புதுமை இயக்குநர் தரின் ‘அலைகள்’ படத்தில் ஜெயச்சந்திரன் மெல்லிசை மன்னரின் இசையில் பாடிய கவியரசரின் ‘பொன்னென்ன பூவென்ன கண்ணே’ பாடலில் ஜெயச்சந்திரனின் குரலில் தென்படும் வசீகரம் மனத்தை வருடி சாந்தப்படுத்தும்.

1975-ல் ‘பெண்படா’ என்ற மலையாளப்படம். ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே. சேகர் இசையமைப்பாளர். இந்தப் படத்தில் ‘வெள்ளித் தேன்கிண்ணம் போல்’ என்ற பாடலை ஜெயச்சந்திரன் பாடினார். இளையராஜாவின் இசையில் முதல்முதலாக ‘காற்றினிலே வரும் கீதம்’ படத்தில் பாடிய ‘சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்’ பாடலும், ‘கிழக்கே போகும் ரயி’லின் ‘மாஞ்சோலைக் கிளிதானோ’ பாடலும் பெரு வெற்றிபெற்று முன்னணிப் பாடகர் வரிசையில் ஜெயச்சந்திரனைச் சேர்த்தன.

‘ஒருதலை ராகம்’ படத்தில் ‘கடவுள் வாழும் கோவிலிலே,’ ‘இரயில் பயணங்களில்’ படத்தில் ‘வசந்த காலங்கள்’ ஆகிய பாடல்கள் டி.ராஜேந்தரின் இசையில் ஜெயச்சந்திரன் தொடுத்த வெற்றிக்கோலங்கள். கே. பாக்யராஜின் சிறந்த திரைக்கதை அமைப்புக்கான படங்களில் முதலிடத்தில் இருக்கும் ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’ பாடலை எஸ். ஜானகியுடன் இணைந்து வெகு அற்புதமாகப் பாடி அசத்தி இருப்பார் ஜெயச்சந்திரன்.

‘ராஜ’ கீதங்கள்

‘கடல் மீன்கள்’ படத்தில் ‘தாலாட்டுதே வானம்’ என்று எஸ். ஜானகியுடன் சேர்ந்து இசையலைகளை மனத்தில் பாயவைத்தார் ஜெயச்சந்திரன்.

பாடல்களுக்காவே பெரிய வெற்றிபெற்ற ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் கதாநாயகன் பாடுவதாக அமைந்த மூன்று பாடல்களையுமே ஜெயச்சந்திரனைத்தான் பாடவைத்தார் இளையராஜா. ‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு’ , ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே’, ‘காத்திருந்து காத்திருந்து’ மூன்றுமே வெற்றிக்கனியை ஜெயச்சந்திரனின் மடியில் போட்ட முத்தான பாடல்கள்.

கிழக்கே போகும் ரயில்

‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்தில் ‘பூவை எடுத்து’, ‘கொடியிலே மல்லியப்பூ’ (கடலோரக் கவிதைகள்) ஆகியவை ஜெயச்சந்திரனின் குரல் தனித்தன்மையோடு வெளிப்பட்ட பாடல்கள். ரஜினிகாந்த்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றான ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படத்தில் ‘வாழ்க்கையே வேஷம்’ பாடலில் சொந்தபந்தங்களால் ஒதுக்கப்பட்ட ஒரு மனிதனின் மனநிலையைத் தனது குரலால் அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார் ஜெயச்சந்திரன்.

இதே போல் ‘ரிஷி மூலம்’ படத்தில் குற்ற உணர்வு நீங்கி பாரம் அகன்ற மனிதனின் உணர்வை ‘நெஞ்சில் உள்ள காயம் ஒன்று’ பாடலில் வெளிப்படுத்தி இருப்பார் ஜெயச்சந்திரன். எம்.ஜி.ஆரின் கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் வாணிஜெயராமுடன் பாடிய ‘அமுதத் தமிழில் எழுதும் கவிதை’ என்ற துவிஜாவந்தி ராகப் பாடல் இனிய தேனமுது. என்றாலும் இளையாராஜாவின் இசையில் இவர் பாடிய அனைத்தும் ‘ராஜ’கீதங்கள் எனலாம்.

புதிய தலைமுறைக்கும்..

துல்லியமான உச்சரிப்பு, பொருளுணர்ந்து பாவநயத்தோடு குரலால் மெருகூட்டுவது ஆகியவற்றில் தனித்தன்மையோடு பிரகாசித்தார் ஜெயச்சந்திரன். பி. சுசீலாவுடன் பாடிய ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ (‘நானே ராஜா நானே மந்திரி’) பாடலுக்கு மயங்காதவர் யாருமே இல்லை. மனோஜ் கியான் இசையில் ‘இணைந்த கைகள்’ படத்தில் ‘அந்திநேரத் தென்றல் காற்’றை எஸ்.பி.பி.யுடன் சேர்ந்து வரவழைத்தார்.

விக்ரமனின் ‘பூவே உனக்காக’ படத்தில் எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசையில் சுஜாதாவுடன் பாடிய ‘சொல்லாமலே யார் பார்த்தது’ பாடலில் ஜெய் சேட்டனின் குரல் வசீகரம் சொல்லாமலே புரியும்.

‘மன் நாராயண குரு’ மலையாளப் படத்தில் ‘சிவசங்கர சர்வ சரண்ய விபோ’ பாடலுக்காக 1975-ம் ஆண்டு சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றார் ஜெயச்சந்திரன். ஜேசுதாஸ் சம்பந்தப்பட்ட மறக்க முடியாத நிகழ்வும் இவர் வாழ்வில் உண்டு. தனது பதினான்காவது வயதில் முதல்முதலாக எந்த ஜேசுதாஸ் சிறந்த இசைக் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேடையில் சிறந்த மிருதங்க இசைக் கலைஞராக ஜெயச்சந்திரன் கௌரவிக்கப்பட்டாரோ அதே ஜேசுதாஸின் பெயரால் ஆண்டுதோறும் இசைத்துறையில் சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் ‘ஸ்வரலயா கைரளி யேசுதாஸ் விரு’தை முதல்முதலாக - இரண்டாயிரமாண்டில் - ஜேசுதாஸின் கையாலேயே பெற்றுக்கொண்டார் ஜெயச்சந்திரன். சாதனைகள் தொடரட்டும் ஜெயேட்டா !

தொடர்புக்கு: pgs.melody@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்