இந்திய சினிமா: பகடையென உருளும் வாழ்வு!

By செய்திப்பிரிவு

எம்.ஸ்டாலின் சரவணன்

காலையில் தூங்கி எழும் மகள் தெருவில் கூலி வேலை செய்து கொண்டிருக்கும் இளம் தாய் கமலாவைத் தேடிக்கொண்டு வருகிறாள். அவளை வாரி அணைக்க வேண்டியவள், வேலை நேரமென்பதால் விரைந்து பள்ளிக்குச் செல்லும்படி குரல் கொடுக்கிறாள். தேடல் என்பது படத்தின் முதல் காட்சியிலிருந்தே தொடங்கிவிடுகிறது.

இந்திய சீன எல்லையில் இருக்கும் ஒரு மலைவாழ் கிராமம். அங்கிருந்து குடும்பச் சுமையின் பொருட்டு டெல்லிக்குக் கட்டிட வேலைக்காகச் செல்லும் கமலாவுடைய கணவன், ஐந்து மாதங்களாகத் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிடுகிறான். உள்ளூரில் இருந்துகொண்டு அவன் நிலைமையைக் கண்டறிய அவள் எடுக்கும் முயற்சிகள் பயனற்றுப் போய்விடுகின்றன.

வேறு வழியின்றித் தனது எட்டு வயது மகள், ஆசையாய் வளர்த்த ஆட்டுக்குட்டியோடும் அவனைத் தேடி கிராமத்திலிருந்து யாரிடமும் சொல்லாமல் பயணத்தைத் தொடங்குகிறாள். அந்தப் பயணத்தில் இணையும் நடுத்தர வயது ஆண் நவாஸுதீன்.

இந்தப் பயணத்தின் முடிவில் கமலா கணவன் கண்டறியப் பட்டானா? அவளின் எஞ்சிய குடும்ப வாழ்வு என்னவாயிற்று என்று நம்மையும் கமலாவுடன் இணைந்து தேட வைக்கிறது திரைக்கதை. முழுக்க சாலையோரப் பயணம்தான் கடந்த 2014-ல் வெளியான ‘லயர்ஸ் டைஸ்’ (Liar's dice) படத்தின் காட்சிக் களம்.

ஆனால், இயக்குநர் கீது மோகன்தாஸ், இந்தப் பயணத்தை வைத்துக்கொண்டு அரசியல், நுகர்வு கலாச்சாரம், வேலையின்மை, நகரமயமாதல், பெண்களுக்கான பாதுகாப்பற்ற வெளி, கைவிடப்படும் மனிதர்கள் என்று சமகால இந்தியாவின் முகங்களை நமக்குத் திறந்து காட்டுகிறார். துருத்தல் இன்றி காட்சி வழி உணர்வை ஏற்படுத்துகிறது கலையம்சம்.

நம் வீட்டுவாசலில் பஞ்சு மிட்டாய், போர்வை விற்பவர்கள், டைல்ஸ் போடும் கூலி தொழிலாளர்கள் என்று நகரத்துக்கு வேலைதேடி வந்து தொலைந்து போகும் எத்தனையோ மனிதர்களின் வாழ்வை யோசிக்கையில் மனம் பதறுகிறது.

கணவன் நகரத்துக்கு வேலைக்கு வந்து, ஒரு கட்டத்தில் நூலில் இருந்து அறுபட்ட பட்டமாக தொலைந்தே விடுகிறான். பட்டத்தைத் தேடி அலையும் சிறுமியின் கண்களோடு நாயகி கமலா காட்சி தருகிறாள். அவளின் துயரம் கசியும் கண்களைப் பார்க்க, அது நம்மையே உற்றுப்பார்ப்பது போல் இருக்கிறது. இந்த அமைப்பின் கீழ் வாழும் நாமும் அவளின் துயரத்துக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளும் குற்ற உணர்ச்சியைக் கிளர்த்துகிறது.

இரவு பகலாக முன்பின் அறிமுகமற்ற ஆணோடு செல்லும் பயணத்தில் கள்ளமில்லா அன்பை கமலா போன்ற பெண்களால் மட்டுமே உணர்த்த முடிகிறது. உடைந்து அழும் ஒரு இடத்தில் ‘அவள் அழட்டும், அவளை அழவிடுங்கள்’ என்று சொல்லத் தோணுகிறது.

பக்கம் பக்கமாக வசனம் மூலம் சொல்லக்கூடியதை, ஒரு பர்ஸ், அதிலிருக்கும் ஓர் ஒளிப்படம், சிறிய தோல்பை என்று ஒரே காட்சியின்மூலம் கடத்தும் நேர்த்தியில் இயக்குநர் மிளிர்கிறார். இப்படிப் படம் முழுக்க பல காட்சிகளைக் கூறிக்கொண்டே போகலாம்.

எளிய மனிதர்கள் வாழ்கை தரும் துயர்கள் தொடர்ந்தாலும் தங்களை அண்டிப் பிழைக்கும் சிறு உயிர்களை அவர்கள் கைவிடுவதில்லை என்பதற்குக் கட்டியம் கூறும் விதமாக, மகளும் தாயும் ஆட்டுக்குட்டியை மடியோடு கட்டிக்கொண்டு திரிகின்றனர்.

பெருநகரமோ ஒரு எளிய மனிதனைச் சட்டென்று கைவிடுகிறது, ஏறி மிதித்து நசுக்கத் தயங்குவதில்லை. உயிர்கள் காலித் தகர டப்பாவைப் போலவே பெரு நகரத்தின் பூட்ஸ் கால்களின் கீழ் நசுங்கிக் கிடப்பதை இயக்குநரின் காட்சிகள் நம்மிடம் எடுத்து வைக்கின்றன.

சதா பீடியைப் புகைத்துக்கொண்டே தொழில்நிமித்தம் பகடைகளை உருட்டும் நவாஸுத்தின், இயக்குநர் கேட்கும் நடிப்பின் சித்திரத்தை எந்த இடத்திலும் மிகையின்றித் தந்திருக்கிறார். முரட்டு அன்பின் கதாபாத்திரம். ஒரு காட்சியில் அவளைத் தேற்றுவதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவளை அணைக்க முயன்று அவளால் கன்னத்தில் அறைபட்டு நிற்பான்.

காசுக்காக வந்து அவர்களின் வழித்துணையாகி தவிர்க்க முடியாத இடத்துக்குக் கதை அவனை நகர்த்துகிறது. பகடையை உருட்டி விளையாடும் காட்சியில் ஒரு தொழில்முறைப் பொய்யனைத் தன் உடல் மற்றும் குரல் மொழியில் வெளிப்படுத்தும் நவாஸுத்தினை நடிப்பு ராட்சசன் என்றால் மிகையல்ல.

நம் வாழ்வில் எத்தனை பொய்யர்கள் வருகிறார்கள், எவ்வளவு அழகாக நம் கண் முன்னே பகடைகளை உருட்டுகிறார்கள், இருந்தும் நாம் தொடர்ந்து ஏமாந்துகொண்டே இருக்கிறோம் என்றாலும் பயணங்கள் நிற்பதே இல்லை.

தேச வரைபடத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை தேடி இடம் பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களின் உழைப்பு முடிந்தவரை சுரண்டப்படுகிறது. குறிப்பாகக் கட்டிடவேலை என்ற பெயரில் இந்த நாட்டில் நிகழும் உழைப்புச் சுரண்டலில் ஒவ்வொரு கட்டிடமும் சாமானியத் தொழிலாளிகளின் ரத்ததை உறிஞ்சிக் கொழுத்து நிற்கின்றன.

எளிய மனிதர்களை வெறும் எண்களாக மட்டும் பாவிக்கும் கார்ப்பரேட் மனநிலை, சாமானியர்களை அலட்சியப்படுத்தும் அதிகார அமைப்பின் அவலங்கள் ஆகியவற்றை ரசம் பூசப்பட்ட கண்ணாடியென இந்தப் படம் பின்னிறுத்துகிறது. ஒவ்வொரு திசையிலிருந்து பார்க்கும்போதும் நாட்டின் அரசியல், சமூகம், அதிகாரத்தின் கோரமுகம் சிரிக்கிறது.

தொடர்புக்கு: stalinsaravanan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்