டி. கார்த்திக்
சில நடிகர்களின் பெயர்களைச் சொன்னால், ஞாபகத்துக்கு வரவே மாட்டார்கள். ஆனால், அவர்கள் நடித்த கதாபாத்திரத்தைச் சொன்னால், சட்டென அவர்கள் முகம் மனத்திரையில் தோன்றும். விநோத்தும் அந்த ரகம்தான். ‘மெட்ராஸ்’ படத்தில் மாரி என்ற கதாபாத்திரம் மூலம் அறிமுகமானவர். இன்று ‘மெட்ராஸ்’ விநோத் ஆக உருவெடுத்திருக்கும் இவர், அடிப்படையில் நாடகக் கலைஞர்!
சென்னைக்குப் பக்கத்தில் உள்ள திருநின்றவூர்தான் விநோத்தின் சொந்த ஊர். கல்லூரி முடித்துவிட்டு ஒரு கப்பல் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அடிப்படையில் கால்பந்தாட்ட வீரர். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். கட்டுமஸ்தான அவரது தோற்றத்தால் ஈர்க்கப்பட்ட அவருடைய நண்பர், சினிமா உதவி இயக்குநர் சிவன்தான் சினிமா ஆசையை விநோத்துக்குள் விதைத்தார். விநோத்துக்கு இருந்த கூச்ச சுபாவமும் திக்குவாய் பாதிப்பும் சினிமா ஆசையைப் பற்றி அவரை யோசிக்கக்கூட விடவில்லை.
அந்த நேரத்தில்தான் விநோத்தின் வாழ்க்கையில் ஒரு மாற்றம். பார்த்துக்கொண்டிருந்த ஷிப்பிங் வேலையைவிட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. வேலைபோனதும் என்ன செய்வது என்ற பல யோசனைகள். அப்போதுதான் சினிமாவுக்குள் செல்லும் முடிவை எடுத்தார் விநோத். “எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. சினிமா குடும்பத்திலிருந்து வந்தவனும் இல்லை.
அதனால், நடிப்பைக் கற்றுக்கொண்டு சினிமாவுக்குள் காலடி எடுத்து வைக்கணும்னு நினைச்சேன். அப்போதான் வீதி நாடகம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அதுல நல்லா நடிச்சதா எல்லோரும் பாராட்டுனாங்க. அந்தப் பாராட்டு சினிமாவில் காலடி எடுத்து வைக்க தைரியத்தைக் கொடுத்துச்சு” என்கிறார் விநோத்.
சினிமா கனவை மனத்தில் நிறுத்தி வீதி நாடகம், பிறகு மேடை நாடகம் எனக் கொஞ்சம் கொஞ்சமாக விநோத் முன்னேறிக்கொண்டிருந்தார். தொடர்ந்து நாடகங்களில் புழங்கிக்கொண்டிருந்தபோதுதான் அவருக்கு பிரபு சாலமன் இயக்கிய ‘கொக்கி’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
“அந்தப் படத்தில் ஒரு சின்ன ரோல் பண்ணேன். படத்தில் நடிக்கும்போது இயக்குநருடன் மனஸ்தாபம் ஏற்பட்டது. அதனால, நான் ஷூட்டிங் போகல. ஆனாலும், படம் வெளியானபோது ஒரு சீன்ல நான் வந்தேன். அதுதான் எனக்கு சினிமாவில் முதல் ஷாட்” என்கிறார் விநோத்.
சினிமாவில் வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த வேளையிலும் நாடகங்களில் விடாமல் நடித்துக்கொண்டிருந்தார் விநோத். 2006-ல் ஒரு பிரெஞ்சு குழுவோடு சேர்ந்து நாடகங்களில் இயங்கிக்கொண்டிருந்தார். இந்த வேளையில், 2012-ம் ஆண்டில் ‘அட்டக்கத்தி’ வாய்ப்பு விநோத்துக்கு வந்தது.
“இயக்குநர் பா. ரஞ்சித்தை எனக்கு நல்லா தெரியும். தினேஷும் எனக்கு நெருங்கிய நண்பர். ‘அட்டக்கத்தி’யில் தினேஷுக்கு வாய்ப்பு வந்ததும், பா. ரஞ்சித்தைப் போய்ப் பாருன்னு என்னை தினேஷ் நெருக்கினார். ரஞ்சித்தைப் பார்ப்பதற்குள் பெரும்பாலான கதாபாத்திரங்களை ஃபிக்ஸ் செய்துவிட்டார். இருந்தாலும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க ரஞ்சித் வாய்ப்பு அளித்தார்.
அடுத்தப் படத்தில் நல்ல வாய்ப்பு தருகிறேன் என்று பா. ரஞ்சித் உறுதி கொடுத்தார். அவர் சொன்னபடி அடுத்த ஆண்டே ‘மெட்ராஸ்’ படத்தில் நடிக்க என்னை அழைத்தார்.” என்று பா. ரஞ்சித்தைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் விநோத். அந்தப் படத்தில் விநோத்துக்கு ரஞ்சித் வழங்கிய மாரி என்ற கதாபாத்திரம் புரூட்டஸ் வேலை பார்க்கும். அதனாலோ என்னவோ ரசிகர்களின் மனதில் பதிந்தது.
ஆனால், “மெட்ராஸ் படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் வராமல் போனது பெரிய ஏமாற்றமாகத்தான் இருந்துச்சு. ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டால், தொடர்ந்து அதேபோன்ற கதாபாத்திரங்கள் மாதிரியே வாய்ப்புகள் வரும். அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடியாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால், ரஞ்சித் மூலமே எனக்கு மீண்டும் வாய்ப்பு வந்தது.
‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த குழுவை அப்படியே தூக்கி ‘கபாலி’ படத்தில் வைத்தார். அது ரஞ்சித்தின் பெருந்தன்மை. என்னைப் போன்ற நடிகர்கள் ரஜினி படத்தில் நடித்தால், அது எங்களுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் என்ற எண்ணத்தில் ரஞ்சித் செய்தார்.” என்கிறார் விநோத். ‘கபாலி’ படத்தில் நாசரின் மகனாக ரஜினியின் நண்பனாக நடித்தேன்” என்கிறார்.
தொடர்ந்து பா. ரஞ்சித்தின் படங்களில் நடித்ததன் மூலம் உங்கள் மீது ஏதேனும் முத்திரை விழுந்துள்ளதா என்று கேட்டதும் சற்று யோசிக்கிறார் விநோத். “கண்டிப்பா அது விழத்தான் செய்யும். அது எனக்கு பாசிட்வ்தான். அவர் படத்தில் நடிப்பதன் மூலம் ஒடுக்கப்பட்ட, தமிழ் தேசிய கருத்துடையவர்கள் என்ற பிம்பம் சினிமா வட்டாரத்தில் விழுந்துள்ளது உண்மைதான்.
ரஞ்சித் படங்களில் நடிப்பதை வைத்து ஓர் இயக்குநர் என்னிடம் பேசும்போது, உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? என் படத்தில் ஆங்கில வசனக் காட்சிகளும் இருக்கு என்று சொன்னார். ரஞ்சித் படங்களில் நடிப்பதற்கும் ஆங்கிலம் பேசுவதற்கும் என்ன தொடர்பு? எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது என்றுதான் எண்ணினேன். எந்த முகாமிலும் நான் இல்லை; நடிப்புதான் எனது எல்லை.” என்கிறார் விநோத்.
கபாலிக்குப் பிறகு ‘எட்டு தோட்டாக்கள்’, ‘எய்தவன்’, ‘டிராபிக் ராமசாமி’, ‘மாஸ் என்கிற மாசிலாமணி’, ‘கோலமாவு கோகிலா’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என டஜன் கணக்கான படங்களில் நடித்துவிட்டார் விநோத். ‘சைத்தான் கி பச்சா’ என்ற படத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் சொன்னார் விநோத்.
“ 2015-ல் தொடங்கிய படம் இது. கிட்டத்தட்ட அது ஹீரோ வேடம்தான். 85 விழுக்காடு படம் முடிஞ்சிடுச்சி. கிளைமாக்ஸ் மட்டும்தான் பாக்கி. சித்தார்த், யோகிபாபு, நான் மட்டும்தான் படத்தில். வேறு மாதிரி என்னைக் காட்டியிருக்கிறார்கள். அந்தப் படம் வந்தால், அது என்னை வேறு தளத்துக்குக் கொண்டுசெல்லும்” என்று நம்பிக்கை குறையாமல் பேசுகிறார் விநோத்.
மினி பேட்டி
பெயர் வாங்கிய படம்?
‘மெட்ராஸ்’, ‘கோலமாவு கோகிலா’.
நாடகம்?
கடைசியாக 2017-ல் பிரான்ஸில் ஒரு நாடகத்தில் நடித்தேன்.
நாடகத்துக்கு ஏன் இடைவெளி?
சினிமா அல்லது நாடகம் என்று ஏதாவது ஒன்றுக்கு உண்மையாக இருக்க வேண்டும். தற்போது சினிமாவில் மட்டுமே கவனம் உள்ளது.
விரும்பும் கதாபாத்திரம்?
காமெடி. கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் செய்ய வேண்டும்.
ஆசை?
நண்பர்களுடன் சேர்ந்து ஒரு படத்தை இயக்குவது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago