காற்றில் கலந்த இசை 18: வன தேவதைகளின் விருப்பப் பாடல்

By வெ.சந்திரமோகன்

மாலைக்கும் இரவுக்கும் இடைப்பட்ட நேரம். குளிர்காற்று வருடும் வனப் பாதை ஒன்றில் ஊர்ந்து செல்கிறது வாகனம். அதன் விளக்கொளியில் கரும்பச்சைக் குவியல்களாகத் தெரிகின்றன புதர்க் காடுகள். வனத்தின் மவுனத்தைக் கலைத்தபடி குளிர்க்காற்றுடன் கலந்து பரவத் தொடங்குகிறது வாகனத்தின் மியூசிக் சிஸ்டத்திலிருந்து ஒலிக்கும் அந்தப் பாடல்.

‘ராசாவே ஒன்ன நான் எண்ணித்தான்’. அருகில் எங்கோ ஒரு மலைக் கிராமத்துப் பெண் தனது காதலனை நினைத்துப் பாடிக்கொண்டிருக்கிறாள் என்று நினைக்க வைக்கும் உயிர்ப்பான பாடல் இது. வி.சி. குகநாதன் இயக்கத்தில் ரஜினி, தேவி, ப்ரியா நடித்த ‘தனிக்காட்டு ராஜா’ (1982) படத்தில் இடம்பெற்றது. ஜெய்சங்கர், ஆர்.எஸ். மனோகர், செந்தாமரை, சங்கிலி முருகன், விஜயகுமார் என்று ஏகப்பட்ட வில்லன்களை எதிர்த்து நிற்கும் கோபக்கார இளைஞன் பாத்திரத்தில் நடித்திருப்பார் ரஜினி. இப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. ரஜினியின் காதலியாக வரும் தேவி, அவரைக் காப்பாற்ற வில்லன் ஜெய்சங்கரை மணந்துகொள்வார். வெற்றி பெறாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்பவர்கள் உண்டு.

குளிர்க் காற்றை ஊடுருவிச் செல்லும் கூர்மையான குரலில் எஸ்.பி. ஷைலஜா பாடிய பாடல்களில் ‘ராசாவே உன்ன நான் எண்ணித்தான்’ பாடலும் ஒன்று. பாடலின் தொடக்கத் தில் ஜலதரங்கமும் புல்லாங்குழலும் இணைந்த இசைக் கலவையைக் கரும் பாறையில் பட்டுத் தெறிக்கும் சாரலாக ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. மழை ஈரம் படிந்த குன்றின் மீது வரிசையாக வைக்கப்பட்ட விளக்குகளின் காட்சியை மனதுக்குள் எழுப்பும் இசை இப்பாடல் முழுவதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்.

காதலனின் நினைவில் நாயகி பாடும் இப்பாடல் முழுவதும் அவளது தோழிகளின் ஆறுதல் மொழியாகப் பெண் குரல்களின் ஹம்மிங் பயன்படுத்தப்பட்டிருக்கும். ‘ராசாவே’ எனும் பல்லவியின் முடிவில் நாயகியின் காதல் மனதுக்கு வாழ்த்துச் சொல்லும் தோழிகளின் ஹம்மிங் ஒலிக்கத் தொடங்கும். ‘தனதம் தம்தம் தம்தம் தம்தம்’ எனும் அந்த ஹம்மிங் செறிவான மரங்கள் அடர்ந்த வனப் பாதையில் ஒரு கற்பனை உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும். துல்லியமான ஒலியமைப்பில் மெலிதான தாளக்கட்டும் கிட்டார் இசையும் துணைக்கு வரும். குளிர்ந்த ஓடையின் நீர்ப்பரப்பில் மிதக்கும் கிட்டாரை மீட்டி ஒலிப்பதிவு செய்திருப்பார்களோ என்று தோன்றும் அளவுக்கு கிட்டார் கம்பிகளின் வழியே ஈரத்தைக் கசிய விட்டிருப்பார் இளையராஜா.

‘மாக்கோலம் போட்டு மாவிளக்கேத்தி நீ கிடைக்க நேந்துக்கிட்டேன்’ எனும் வரியில் பெண் மனதின் காதல் பிரார்த்தனையை எளிய மொழியில் சொல்லியிருப்பார் வாலி. வன தேவதைகள் எனும் விஷயம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் உங்கள் வாகனத்தில் ஒலிக்கும் இப்பாடலை அடர்ந்த மரங்களுக்குப் பின்னே வலம் வரும் அந்தத் தேவதைகள் ரசித்துக்கொண்டிருக்க வாய்ப்புண்டு. இப்பாடல் உருவாக்கும் கற்பனை வனத்துக்கும் பாடல் படமாக்கப்பட்ட விதத்துக்கும் அத்தனை பொருத்தம் இருக்காது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஒலிப்பதிவின் புதுமைக்கு உதாரணம் என்று சொல்லத்தக்க மற்றொரு பாடல் ‘சந்தனக் காற்றே’. எஸ்.பி.பி. – ஜானகி ஜோடியின் மாஸ்டர் பீஸ் பாடல்களில் ஒன்று இது. மேற்கத்திய இசைக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்பாடலும் அடர்ந்த வனத்தின் சித்திரத்தைக் கண் முன் நிறுத்தும். நெடிய மரங்களுக்கு நடுவே, முகத்தில் அறையும் சிலீர் காற்றைக் கிழித்துக்கொண்டு பைக்கை ஓட்டிச் செல்லும் உற்சாகத்தைப் பிரதிபலிக்கும் முகப்பு இசையுடன் பாடல் தொடங்கும். வனப் பகுதியில் உலவச் செல்லும் நகரவாசியின் கண்களுக்குப் படும் காட்சிகளின் இசை வடிவம் என்று இப்பாடலைச் சொல்லலாம். வனப் பாதைகளில் பகல் நேரத்தில் ஒலிக்கும் சில்வண்டுகளின் ரீங்காரத்தின் சாயலை இப்பாடலில் உணர முடியும். பல்லவி மற்றும் சரணங்களின் முடிவில் எஸ்.பி.பி.-ஜானகி குரல்கள் சங்கமித்துக் கரைவதைப் போல் ஒலிப்பதிவை வடிவமைத்திருப்பார் இளையராஜா. ‘நீர் வேண்டும் பூமியில் பாயும் நதியே’ எனும் வரி வாலியின் அற்புதக் கற்பனை.

உள்ளூர்ப் பண்ணையாரான ஜெய் சங்கரின் அடக்குமுறைக்கு எதிராக விவசாயிகளை ஒன்றுதிரட்டி ரஜினி பாடும் ‘கூவுங்கள் சேவல்களே’ எழுச்சியூட்டும் இசையும் புரட்சிகரமான பாடல் வரிகளும் கொண்ட பாடல். வயலின்கள், ட்ரம்பெட் இசையுடன் அதிரும் தாளக்கட்டுடன் தொடங்கும் பாடல் இது. ஆவேசத் துடிப்புடன் எஸ்.பி.பி. பாடியிருப்பார். ‘திண்ணைக்கும் பண்ணைக்கும் அலைந்து தலை எண்ணெய்க்கும் வக்கு இல்லை’ என்ற வரிகளில் ஏழை மக்கள் மீது நாயகன் காட்டும் கரிசனத்தைப் பதிவுசெய்திருப்பார் வாலி. இப்பாடலின் தொடக்க இசை, வானொலி நிகழ்ச்சியொன்றின் முகப்பு இசையாகப் பயன்படுத்தப்பட்டது.

இப்படத்தில் ‘நான்தான் டாப்பு’, ‘நான்தாண்டா இப்போ தேவதாஸ்’ ஆகிய இரண்டு பாடல்களும் உண்டு.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்