வா. ரவிக்குமார்
கடவுளின் சொந்த நாடான கேரளம் உலகுக்கு வழங்கிய இசைக்கொடை கே.ஜே. யேசுதாஸ். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி, ஒடியா, வங்காளி எனப் பெரும்பாலான இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், அரபி, லத்தீன், ரஷ்ய மொழிகளிலும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் கான கந்தர்வன் யேசுதாஸ்.
கொச்சின் துறைமுக நகரத்திலிருக்கும் கட்டச்சேரியும் அகஸ்டின் ஜோசப்பும் யேசுதாஸின் முதல் எழுத்துகளின் விரிவாக்கம். யேசுதாஸோ இசையின் சுருக்கம்! பக்தி இசை, செவ்வியல் இசை, திரை இசை என பல பரிமாணங்களிலும் அவரின் இசைப் பங்களிப்பு ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இசைக் கலைஞரும் நாடக நடிகருமான அகஸ்டின் ஜோசப்தான், யேசுதாஸின் பாடும் திறமையை உணர்ந்து அவருக்கு ஆரம்ப இசைப் பயிற்சிகளை வழங்கிய முதல் குரு. பொதுவாக மலையாள கிறிஸ்தவ குடும்பங்களில் தங்களின் குழந்தைகள் கல்வியில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அந்தக் காலகட்டத்தில், உறவுகளின் ஏளனப் பேச்சுகளை காதில் வாங்காமல் யேசுதாஸை முறையாக இசை கற்றுக் கொள்வதற்காக அவரின் தந்தை திருப்புனித்துராவிலிருக்கும் ராதாலஷ்மி விலாசம் இசைப் பள்ளியில் சேர்த்தார். அங்குதான் யேசுதாஸுக்கு இசையின் பால பாடங்கள் முறையாகத் தொடங்கின.
ஆரம்பம் நாலடி
`இளமையில் வறுமை கொடியது’ என்பது ஔவை வாக்கு. அத்தகைய வறுமையை பரிபூரணமாக அனுபவித்தவர் யேசுதாஸ். பல நாள் பட்டினி. சில நாட்களில் நீரே ஆகாரம், இருப்பதற்கு இடமில்லாமல் பிரபல சங்கீத வித்வான் ஒருவரின் கார் நிறுத்தும் இடத்தில் சில நாட்கள் தங்கி இசையைக் கற்றுக் கொண்ட நாட்களைப் பற்றி யேசுதாஸே பல மேடைகளில் பேட்டிகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
திரைப்படம் `கால்பாடுகள்’ என்னும் மலையாள திரைப்படத்தில் எம்.பி.ஸ்ரீனிவாஸின் இசையமைப்பில் ஸ்ரீ நாராயண குருவின் `ஜாதி பேதம் மத துவேசம்’ என்று தொடங்கும் நான்குவரி ஸ்லோகமே திரையில் ஒலித்த யேசுதாஸின் முதல் குரல் பிரவேசம். அதே படத்தில் ஒரு டூயட் பாடலையும் யேசுதாஸ் பாடுவதற்கு வாய்ப்பளித்தார் எம்.பி.ஸ்ரீனிவாஸ். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் சில படங்களில் பாடுவதற்கு வாய்ப்புகள் வந்தன.
தமிழில் பதித்த தடம்
வீணை எஸ்.பாலசந்தரின் `பொம்மை’ திரைப்படத்தில் வரும் `நீயும் பொம்மை நானும் பொம்மை’ பாடலின் மூலம் தமிழிலும் அறிமுகமானார் யேசுதாஸ். மலையாளத்தைப் போன்று தமிழில் யேசுதாஸுக்கு உடனடியாக வாய்ப்புகள் தொடர்ந்து வரவில்லை. தமிழ் மொழியில் தொடக்கத்தில் அவருக்கு இருந்த தடுமாற்றமும் ஒரு காரணம். ஆனால் மலையாளத்தில் சலீல் சவுத்ரி, தேவராஜன், வி. தட்சிணாமூர்த்தி போன்ற இசையமைப்பாளர்கள் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினர்.
சலீல் சவுத்ரி யேசுதாஸை வங்க மொழிப் படத்திலும் பாடவைத்தார். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பிறகே யேசுதாஸின் குரல் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ‘என்ன பார்வை உந்தன் பார்வை’, பாட்டின் மூலமாக விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணையரின் இசையில் ஒலித்தது.
இரு துருவங்களுக்கு பின்னணி
தமிழ்த் திரைப்பட உலகில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு பின்னணிப் பாடல்களைப் பாட ஆரம்பித்ததும் யேசுதாஸின் குரலை முழுமையாக வசப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது தமிழ்த் திரைப்பட உலகம். உரிமைக் குரல், உலகம் சுற்றும் வாலிபன், பல்லாண்டு வாழ்க போன்ற எம்.ஜி.ஆர். நடித்த படங்களிலும், சிவாஜிக்காக டாக்டர் சிவா, இமயம் போன்ற படங்களிலும் பாடி தான் ஒரு தவிர்க்க முடியாத பாடகர் என்பதை தமிழ் திரையுலகிலும் நிரூபித்தார்.
சர்ச்சைகளும் சவால்களும்
தொடக்கக் காலத்திலும் அதைத் தொடர்ந்து வந்த காலங்களிலும் யேசுதாஸின் தமிழ் உச்சரிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் யேசுதாஸின் தொடர் முயற்சியால் அத்தகைய விமர்சனங்களை அவர் தவிடுபொடியாக்கி, தமிழ் இசை சங்கத்தில் தமிழ்ப் பாடல்களைக் கொண்ட முழுக் கச்சேரியே அவர் நடத்தினார்.
கேரளத்தின் இசை முகமாகிப் போன யேசுதாஸின் குரலையே நிறைய பேர் பிரதி எடுத்துப் பாடியபோது, தான் பாடிய பாடலை தன்னுடைய அனுமதி இல்லாமல் ராயல்டி வழங்காமல் எவரும் பாடக் கூடாது என்று யேசுதாஸ் கூறியதற்கு நிறைய விமர்சனங்கள் எழுந்தன. அதன் பின் அந்தத் தடையை அவர் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
குரு பக்தி
திரையில் ஒருபக்கம் கோலோச்சிக் கொண்டிருந்தாலும் தன்னை ஒரு செவ்வியல் இசைக் கலைஞராகவும் செம்பை வைத்யநாத பாகவதர், செம்மங்குடி சீனிவாசய்யர், `பல்லவி’ நரசிம்மசார்யா ஆகிய மேதைகளிடம் இசை நுணுக்கங்களை கற்றுக் கொண்டே இருந்தார். அதனால் அவரால் பாரம்பரியமான கர்னாடக இசை மேடைகளிலும் திரை இசையைத் தாண்டி புகழ் பெற முடிந்தது.
நரசிம்மசார்யாவின் இறுதிக் காலம்வரை தன்னுடைய வீட்டிலேயே வைத்து அவரை பராமரித்துக் கொண்டார் யேசுதாஸ். செம்பை வைத்தியநாத பாகவதரின் நினைவைப் போற்றும் வகையில் செம்பையில் ஆண்டுதோறும் செம்பை ஆராதனை இசை நிகழ்ச்சிகளை நடத்திவருவதோடு அவரின் குரு செம்பை கச்சேரி செய்த சென்னை, கச்சாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் கச்சேரி செய்தும் வருபவர் யேசுதாஸ்.
சமரசம் உலாவும் சங்கீதம்
சபரிமலையில் அய்யப்பன் யேசுதாஸ் பாடியிருக்கும் சுப்ரபாதம் கேட்டுதான் கண்விழிக்கிறார். இரவில் அவர் பாடிய ஹரிவராசனம் கேட்டுதான் சயனிக்கிறார். யாருக்கும் கிடைக்காத கொடுப்பினை இது! யேசுதாஸின் இசை உலகம் சாதி, மத, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது.
எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர். பாடல் வரிகளின் உருக்கத்தால் உந்தப்பட்டு கண்களில் கண்ணீர் தாரையாக வழிய பாடிய சந்தர்ப்பங்களும் சில நேரங்களில் ஒலிப்பதிவையே ஒத்திவைத்த சம்பவங்களும்கூட நடந்திருக்கின்றன. “ஒரு இந்து நண்பர் மோசஸ் பற்றி எழுதிய பாடலைப் பாடும் போதும் கிருஷ்ணனைப் பாடும்போதும் கண்ணீர் கரைபுரண்டு ஓடும்” என்பார் அவர்.
“நான் சோர்ந்திருக்கும் சமயங்களில் எல்லாம் மூன்று இடங்களுக்குச் சென்றால் தெம்பாகிவிடுவேன். அவை, திருவையாறு, கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில், கொச்சினில் இருக்கும் புனிதர் ஜோசப் ஆலயம்” என்பார் யேசுதாஸ். இசையில் அவருக்கு இருந்த ஆழங்கால்பட்ட அறிவால் கர்னாடக இசையைக் கேட்கும் ரசிகர்களையும் அவரால் திருப்திபடுத்த முடிந்தது.
திரைப்பாடல்களின் சூழலுக்கேற்ற மெல்லிசை சூறாவளியை ரசிக்கும் ரசிகர்களையும் திருப்திபடுத்த முடிந்தது. எட்டு முறை தேசிய விருது, எண்ணற்ற மாநில விருதுகள், நாட்டின் உயரிய பத்ம விருதுகள் அவரைப் பெருமைப்படுத்தி இருக்கின்றன. ஆனால் அவர் மிகவும் விரும்பும் பெருமையான தருணமாக நினைப்பது குருவாயூர் சன்னிதானத்தில் கிருஷ்ணனின் முன்பாக பாடவேண்டும் என்பதைத்தான்!
`குழலூதும் குருவாயூர் கண்ணனுக்கு’ கேட்காமலா போகும் யேசுதாஸின் குரல்?!
தொடர்புக்கு: ravikumar.cv@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago