எஸ்.எஸ்.லெனின்
“படப்பிடிப்பு முடிந்து மதராஸின் தங்கும் விடுதிக்குத் திரும்பியபோது நள்ளிரவாகிவிட்டது. அந்தப் பனியிலும் விடுதிக்குள் நுழைய வழியின்றி இளம் பெண்கள் திரண்டிருந்தனர். ராஜேஷ் கன்னாவைப் பார்த்ததும் உற்சாகமாகக் குரல் எழுப்பினார்கள். அவரைத் தொட்டுப் பார்க்க முண்டியடித்தார்கள்.
அந்த ரசிகைகளிடமிருந்து அவரைக் காப்பாற்றிக் கடப்பதற்குள் எல்லோரும் திணறிப்போனோம்” ராஜேஷ் கன்னா குறித்த எழுபதுகளின் சென்னை சம்பவத்தை இப்படி வர்ணித்தவர், எட்டுத் திரைப்படங்களில் அவருடன் ஜோடி சேர்ந்த நடிகை மும்தாஜ்.
அந்த அளவுக்கு ரசிகையரின் அன்புத் தொல்லைகளுக்கு ஆளானார் ராஜேஷ் கன்னா. இதனால் பொது இடங்களில் நடமாட காவல்துறையிடம் பாதுகாப்பு கோரிய முதல் நடிகரானார். ரத்தத்தில் எழுதிய கடிதங்கள், ஒளிப்படத்தை ‘மணந்துகொண்டு’ வாழும் பெண்கள் என விநோத செய்திகள் அடிக்கடி வெளியாகும் அளவுக்குமீறி ரசிகப் பித்தேறிய பெண்கள் ராஜேஷ் கன்னாவின் திரை வெற்றிகளுக்குக் காரணமானார்கள்.
முதல் இந்திய சூப்பர் ஸ்டார்
இந்தி சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக கே.எல்.சைகல் என்ற முப்பதுகளின் பிரபலமான பாடக நடிகரைக் குறிப்பிடுவார்கள். அவர் காலத்துக்குப் பிந்தைய சினிமா விமர்சகர்கள் வழங்கிய அங்கீகாரம் என்பதால், அதனை சைகல் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தனது வாழ்நாளிலே ஒரு சூப்பர் ஸ்டாருக்கான சகல அடையாளங்களுடன் வளைய வந்த முதல் இந்திய நடிகர் ராஜேஷ் கன்னா! பிராந்திய மொழிகள் பலவற்றிலும் சமகாலத்து சூப்பர் நடிகர்கள் பலர் உருவானபோதும், ராஜேஷ் கன்னா அளவுக்கு தேசம் நெடுக அபிமானம் பெற்ற நடிகர் எவருமில்லை. மொழி புரியாதபோதும் அவர் ரசிகர்களைக் கிறங்கடித்தார். படுசோபையான திரைக்கதைகளும் ராஜேஷ் கன்னாவுக்காகவே வெற்றிபெற்றன. இந்திக்கு அப்பாலும் இப்படி இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் ஆனார் ராஜேஷ் கன்னா.
முதல் படமே ஆஸ்கர் தடம்
அமிர்தசரஸில் பிறந்த ‘ஜதின் கன்னா’ சிறு வயதிலேயே செழிப்பான குடும்பம் ஒன்றுக்குத் தத்து கொடுக்கப்பட்டார். பள்ளி, கல்லூரிக் காலத்தில் மேடை நாடகப் போட்டிகளில் வரிசையாய் வாகை சூடினார். நண்பர்களின் வற்புறுத்தலுக்காக ‘திரைக்கான தனித் திறமையாளர்களை அடையாளம் காணும் அகில இந்தியப் போட்டி (1965)’ ஒன்றில் பத்தாயிரம் பங்கேற்பாளர்களில் ஒருவராகக் கலந்துகொண்டார்.
வெற்றி பெற்றவருக்கு அந்தப் போட்டியின் நடுவர்களாக இருந்த இயக்குநர்களே வரிசையாக வாய்ப்பளிக்க, ஜதின் கன்னா ‘ராஜேஷ் கன்னா’வாகத் திரையில் உதயமானார். அறிமுகமான ‘ஆக்ரி கத்’ (1966) சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்துக்கான திரைப்படப் பிரிவில் ஆஸ்கருக்கான இந்தியப் பரிந்துரையானது. ஆனால், அது உட்பட அடுத்து வெளியான ராஜேஷ் கன்னாவின் பல திரைப்படங்கள் வெற்றியை ருசிக்கவில்லை. ஆனபோதும் அவரது பிரத்யேக வசீகரம் பட வாய்ப்புகளுக்குக் குறைவில்லாது செய்தது.
ஆராதனையின் தொடக்கம்
மூன்று சத்யஜித் ரே படங்கள், பல்வேறு பாலிவுட் பட வெற்றிகள் என 25 வயதில் முன்னணி நடிகையாக இருந்தார் ஷர்மிளா தாகூர். நடிப்புத் திறன் மட்டுமன்றி, அறுபதுகளில் ஒரு பாடல் முழுக்க நீச்சலுடையில் நடிக்கத் துணிந்ததில் இளைய வயதினரையும் கவர்ந்திருந்தார். அவரது நடிப்பில் வெற்றிக் காவியமான ‘ஆராதனா’ (1969), பெண்ணின் போராட்ட வாழ்க்கையைப் பேசிய வகையிலும், ஐயமின்றி அது ஷர்மிளா தாகூரின் திரைப்படமாகவே கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்போது வளர்ந்து வந்த ராஜேஷ் கன்னாவின் திரை வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட படமானது.
‘ஆராதனா’வில் இருவேடங்களில் தோன்றி ரசிகைகளின் மனத்தில் வலதுகால் வைத்தார் ராஜேஷ் கன்னா. ‘டு ஈச் ஹிஸ் ஓன்’ (To each his own) என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பதால், கதை இந்திய மண்ணுக்குப் புதிதாக இருந்தது. திருமணத்துக்கு முந்தைய உறவு, மணமாகாது தாயான இளம்பெண் என அக்காலத்தின் சர்ச்சைக்குரிய அம்சங்களைக் கதை கொண்டிருந்தும், ராஜேஷ் கன்னா என்ற ஒரே வசீகரம் அனைத்தையும் பின் தள்ளிய அதிசயம் நிகழ்த்தியது. ராஜேஷ் கன்னா தோன்றும் ‘ஆராதனா’ பாடல் காட்சிகள் இன்றைக்கும் பிரபலத்தன்மை குறையாதிருக்கின்றன.
‘ஆராதனா’ பணிகளின்போது இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மன் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். தந்தையின் இசைக் கற்பனைக்கு மகன் ஆர்.டி.பர்மன் புதுமையாய் வடிவம் தந்தார். ‘மேரே சப்னோ கி ராணி..’, ’ரூப் தேரா மஸ்தானா..’ என ‘ஆராதனா’ பாடல்கள் அனைத்தும் ராஜேஷ் கன்னா என்ற புதிய திரைக் கடவுளுக்கு அதன்பின் ஆராதனைப் பாடல்கள் ஆயின.
ராஜேஷ் கன்னாவின் பாணி
சக பாலிவுட் நடிகர்களைப் பதறடிக்கும் அளவுக்கு ‘ஆராதனா’வில் தொடங்கி அடுத்த, மூன்று ஆண்டுகளில் 15 வெற்றிப் படங்களைத் தந்தார் ராஜேஷ் கன்னா. இவர், நாடு முழுவதும் பரவலான ரசிகர்களை ஈர்க்க அவரது வசீகரமே முதன்மைக் காரணமாக இருந்தது. அதற்கு அப்பால் ராஜேஷ் கன்னாவின் தனித் திறமைகளைத் திரையில் தேடினால் ஏமாற்றமே மிஞ்சும். அவரது அட்டகாச நடிப்பைப் பாடல் காட்சிகளில் மட்டுமே தரிசிக்கலாம். இசைக்கேற்ப, பாடலின் லயத்துக்கேற்பத் தலையசைத்து, கண் சிமிட்டி, கிஷோர் குமாரின் பின்னணிக் குரலுக்குப் பொருத்தமாய் வாயசைத்தே ரசிகர்களைக் கரைத்துவிடுவார்.
மற்றபடி ராஜேஷ் கன்னாவுக்கு நடனமும் தோதுப்படாது. தலையசைப்பு, கண்சிமிட்டல் பாணியில் பாந்தமான உடலமைப்புகளை மட்டுமே வெளிப்படுத்திச் சமாளிப்பார். பிற்பாடு அதுவே ராஜேஷ்கன்னா பாணி நடனமாகவும் புகழடைந்தது. ‘ஹாதி மேரே ஸாதி’ படம் அதுவரையிலான வசூல் சாதனைகளை உடைத்தது. தொடர்ந்து ‘கதி பட்நாக், ஆனந்த், அமர் பிரேம், டாக், ஆப் கி கசம்’ என எழுபதுகளின் மிகப் பெரும் வெற்றிப்படங்கள் வெளியாயின. அடுத்த திரைப்படம் பொன்விழாவா, வெள்ளி விழாவா என்பதே பேச்சாக இருந்தது.
சரிந்த தர்பார்
புகழேணியின் உச்சியில் சறுக்கவும் செய்தார் ராஜேஷ் கன்னா. திரைப்படங்களின் வெற்றி வரிசை அவரை நிதானமிழக்கச் செய்தது. படப்பிடிப்புத் தளங்களில் ராஜேஷ் கன்னாவின் தனி தர்பார் அப்போது ஏகப் பிரபலம். உயர சிம்மாசனத்தில் அவர் வீற்றிருக்க, பரிசில் புலவர்களைப் போலத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் முறைவாசலுக்குக் காத்திருப்பார்கள். சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரது பணிகளில் மூக்கை நுழைப்பதுடன், படப்பிடிப்பு தொடங்கியதும் தாமதமாக வருவது, வராது தவிக்கவிடுவது என அலைக்கழிக்கத் தொடங்கினார்.
தன்னுடன் இரண்டாம் கதாநாயகனாகத் தோன்றும் அமிதாப் பச்சன் போன்றோருக்கு இடைஞ்சல்கள் தருவது, துதிபாடிகளை மட்டுமே நம்புவது என மாய உலகிலும் சஞ்சரித்தார். திரையுலகின் மாற்றங்களை உள்வாங்கத் தவறியதில் அவரது இடத்தை அமிதாப் பச்சன் போன்ற துடிப்பான இளைஞர்கள் ஆக்கிரமித்தனர். ஆனபோதும் எண்பதுகள் வரை ராஜேஷ் கன்னா திரைப்படங்களுக்கு அந்தத் தலைமுறை ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்தது. தலைமுறை மாற்றம் நேர்ந்த பிறகே ராஜேஷ் கன்னாவுக்கான அலை ஓய்ந்தது.
ராஜேஷ் கன்னாவின் வெற்றிப் பட வரிசையில் முக்கியமானது ‘ஆனந்த்’. புற்றுநோய் பீடித்தவர்கள் இறப்புக்கு ஆளாகும் துயரத்தை நாட்டுக்குச் சொன்ன திரைப்படம் அது. ராஜேஷ் கன்னாவின் கதாபாத்திரம் மரித்தால் திரைப்படம் வெள்ளிவிழா காணும் என்ற நம்பிக்கை அப்போது நிலவியதில் ‘ஆனந்த்’ பாணியில் பலவிதமாய் ராஜேஷ் கன்னாவைத் திரையில் சாகடித்தார்கள்.
துரதிருஷ்டமாகராஜேஷ் கன்னாவின் கடைசிக் காலமும் ‘ஆனந்த்’ பாணியில், நீண்ட புற்றுநோய்ப் போராட்டமாக முடிந்தது. 16 வயது டிம்பிள் கபாடியாவை 31 வயது ரஜேஷ் கன்னா மணந்ததில், டிவிங்கிள், ரிங்கி என இரு மகள்களுடன் பத்தாண்டு மட்டுமே அந்த இல்லற வாழ்க்கை நீடித்தது. திருமணத்துக்கு அப்பால் சக நடிகையர் மட்டுமன்றி கடல் தாண்டியும் ராஜேஷ் கன்னாவுடன் பெண்கள் நெருக்கம் பாராட்டினார்கள். அவர் கட்டிக்காத்த ஸ்டார் பிம்பத்துக்கு இந்த நெருக்கமும் ஒருவகையில் காரணமானது.
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago