காதல் விஷயத்தில் மாய நாடகங்கள் நுழைந்தால் என்ன நடக்கும்? அதுதான் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வந்திருக்கும் ‘இது என்ன மாயம்’.
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பெரிதாக வேலை எதுவும் இல்லாமல் நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு மேடை நாடகம் போட்டு வருகிறார் நாயகன் அருண் (விக்ரம் பிரபு). மக்களிடையே நாடகத்துக்கு சரியான வரவேற்போ, லாபமோ இல்லாததால் வேறு என்ன தொழிலைத் தேர்வு செய்யலாம் என்று ஒரு ரெஸ்டாரண்ட்டில் அமர்ந்து நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் போடுகிறார். அந்த நேரத்தில் ரெஸ்டாரண்ட்டில் எதிர்முனையில் அமர்ந்திருக்கும் லுத்புதின், ஒரு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதை ஏற்றுக்கொள்ளாத அந்தப் பெண் கோபமாகத் திட்டுவிட்டு புறப்படுகிறாள். இதை கவனிக்கும் விக்ரம் பிரபு, ஃபீலிங்கோடு அமர்ந்திருந்த லுத்புதின் அருகே சென்று, ‘உன் காதல் வெற்றியடைய நாங்க கியாரெண்டி’ என்று உத்தரவாதம் கொடுக்கிறார்.
மேடையில் நாடகம் போட்டவர்கள், அப்போது முதல் அந்தக் காதலை சேர்த்து வைக்க நாடகம் போடுகிறார்கள். திட்டம் வகுத்தபடி அவர்களை காதல் ஜோடிகளாக்கி வெற்றியும் அடைகிறார்கள். பின், அதையே வருமானம் ஈட்டும் தொழிலாகவும் மாற்றுகிறார்கள். தொடர்ந்து காதல் ஜோடிகளை இணைத்து வைக்கும் வேலையில் பிஸியும் ஆகிறார்கள். இந்தச் சூழலில் இவர்களைப் பற்றி கேள்விப்பட்டு சந்தோஷ் (நவ்தீப்) தான் நேசிக்கும் மாயா (கீர்த்தி சுரேஷ்) என்ற பெண்ணைப் பற்றி விக்ரம் பிரபு குழுவினரிடம் சொல்கிறார். இருவரையும் சேர்த்து வைக்க கோடி ரூபாய் வரைக்கும் செலவு செய்ய தயாராக இருப்பதாகவும் கூறுகிறார். அந்தப் பெண் யார் என்று விக்ரம் பிரபுவுக்குத் தெரியவரும் இடத்தில் ஒரு அதிர்ச்சி. அந்த அதிர்ச்சிக்கான காரணமும் விக்ரம் பிரபு எடுக்கும் முடிவும் மீதிக் கதை.
ஒருதலைக் காதலை உண்மைக் காதலாக மாற்ற விக்ரம் பிரபு தன் சகாக்களுடன் சேர்ந்து எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் ரசிக்க வைக்கிறது. இது முதல் முப்பது நிமிடங்களைக் கலகலப்பாக நகர்த்தவும் செய்கிறது. குறிப்பாக சார்லி, ஆர்.ஜே. பாலாஜி இருவரும் செய்யும் காமெடி அட்டகாசம் கலகலப்பு.
கதை கொச்சி கல்லூரிக்கு நகரும் இடத்தில்தான் திரைக்கதையில் நடுக்கம் ஏற்படுகிறது. தமிழ் சினிமா பல நூறு முறை பார்த்துவிட்ட கல்லூரி காதல் பின்னணி. அது தரும் அலுப்பு போக, கல்லூரியில் ஜூனியர் சீனியர் சண்டை, கிரிக்கெட் போட்டி என்று குறைவில்லாத க்ளீஷேக்கள். விக்ரம் பிரபு தன்னை அந்தக் கல்லூரியின் நட்சத்திரமாக அடையாளப்படுத்திக்கொள்ளும் இடங்கள் எல்லாம் தேவையா? பொழுதுபோக்குப் படத்துக்கு ஹீரோயிஸம் தேவைதான். ஆனால் கொஞ்சமாவது புதிதாகச் சிந்திக்கக் கூடாதா? இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் கற்பனைக்கு என்ன ஆயிற்று?
காதல் காட்சிகள், பாடல்கள், சண்டை, தன்னுடைய காதல் விஷயத்தைச் சொல்ல வேண்டாம் என்று நண்பர்களைச் சந்தித்துக் கேட்டுக்கொள்ளும் இடம், தன்னுடைய சங்கடத்தை மறைத்துக்கொண்டு நவ்தீப்புக்கு உதவும் இடம் இப்படி எல்லா இடங்களிலும் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ரம் பிரபு. காதல் தருணங்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
கீர்த்தி சுரேஷுக்கு தமிழில் முதல் படம். நடிப்பிலும், தோற்றத்திலும் கவர்கிறார். கதைக்கும் கச்சிதம். கல்லூரி மேடையில் பாடகியாக அறிமுகமாகும் இடம் தொடங்கி காதலில் கலப்பது, காதல் தோல்வியைச் சந்திக்கும்போது கண் கலங்குவது என்று கலக்குகிறார்.
நவ்தீப்புக்கு லவ்லீ பாய் ரோல். நடிப்பில் குறையொன்றுமில்லை. நாசர், அம்பிகா இருவருக்கும் படத்தில் பெரிதாக வேலை இல்லை.
படத்தின் நாயகியைப் போல இன்னொரு அழகு ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை. ஆனால், பாடல்களில் அவர் பெரிதாக மெனக்கெடவில்லை. அதேபோல நீரவ் ஷா ஒளிப்பதிவும், ஆன்டனியின் படத்தொகுப்பும் சிறப்பு. இவ்வளவு இருந்தும் மிகமிக மந்தமாக நகரும் திரைக்கதையும், புதுமையில்லாத பல காட்சிகளும் படத்தை மாயம் செய்ய விடாமல் தடுக்கின்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago