தத்துவப் பாடல்கள் என்று முத்திரை குத்தப்படும் திரை இசைப் பாடல்கள் இரண்டு விதமானவை. வாழ்க்கையின் நிலையாமை, கனமான மன உணர்வுகள் மற்றும் உணர்வுகளின் முரண்பாடுகளை வெளிப்படுத்துவது ஒரு வகை. இந்தியத் திரை இசையில் இன்னொருவரை ஒப்பிட முடியாது என்று சொல்லத்தக்க அளவில் கண்ணதாசன் இவ்வகையான பாடல்களை நிறைய எழுதியிருக்கிறார். மற்றொரு வகை, நடைமுறை வாழ்க்கைக்கான எளிய போதனைகளை அழகாகச் சொல்வது. தமிழிலும் இந்தியிலும் இப்படிப் பல பாடல்கள் உள்ளன.
‘உண்மையே பேசு, ஒற்றுமையாய் இரு’ போன்ற எளிய போதனைகளை எளிய வரிகளுடன் இனிய மெட்டுக்களில் சொன்ன இந்தி - தமிழ் பாடல்களைக் காண்போம்.
முதலில், ‘தீஸ்ரி கசம்’ (மூன்றாவது உறுதி மொழி) என்ற படம் வெளியாகி 46 வருடங்களாகிய பின்னரும் இன்றும்கூட அதன் மென்மையான கதையம்சத்திற்காகப் பேசப்படும் ராஜ்கபூர் படத்திற்கான இந்தி பாடல். பாடலை எழுதியதோடு, இப்படத்தின் தயாரிப்பாளராக இருந்து மூன்று வருடங்களுக்கு மேல் கஷ்டப்பட்டுத் தன் ஒளி மயமான எதிர்காலத்தையும் எழுதிக்கொண்ட இப்பாடலின் ஆசிரியர் ஷைலேந்திரா, இந்தி பட உலகின் அதிசயமான மனிதர்.
ராஜ்கபூரின் திரைக்குரலாக விளங்கிய முகேஷ் பாடிய பல அமரத்துவப் பாடல்களை எழுதியுள்ள இவரின் இந்தப் பாடல்:
சஜனரே ஜூட் ம போலோ
குதா கே பாஸ் ஜானா ஹை
ந ஹாத்தி ஹை ந கோடா ஹை
வஹீன் பைதல் ஹீ ஜானா ஹை
துமாரே மஹல் சௌபாரே
யஹீன் ரஹ ஜாயேங்கே சாரே
அக்கடக் கிஸ் பா கி பியாரே
யே சிர் ஃபிர் பி ஜுக்கானா ஹை
சஜனரே ஜூட் ம போலோ
இதன் பொருள்:
நண்பா பொய் சொல்லாதே
இறைவனிடம் போக (வேண்டி) வரும்
யானையும் இல்லை குதிரையும் இல்லை
அங்கு நடந்தே செல்ல வேண்டியிருக்கும்
உன்னுடைய நான்கு சாளரங்களுடன் கூடிய மாளிகை
எல்லாம் இங்கேயேதான் இருந்திடும் (உன் கூட வராமல்)
எதன் பொருட்டு வீண் சச்சரவு
இந்தச் சிரம் மீண்டும் தாழ்ந்துதானே ஆக வேண்டும்
நண்பா பொய் சொல்லாதே...
நன்மைக்கு நன்மையே கிட்டும்
தீமைக்குத் தீமையே கிட்டும் (என)
அதையே எழுதி எழுதி என்னவாகப் போகிறது
இங்கேயே அவை எல்லாம் தீர்க்கப்பட வேண்டும்
நண்பா பொய் சொல்லாதே...
பிள்ளைப் பருவம் விளயாட்டில் கழிந்தது
இளமை உறங்கியே தொலைந்தது. (அதனால்)
முதுமையைக் கண்டு அழுதாய்
அதுவே வெகு நாள் கதை (இங்கு)
நண்பா பொய் சொல்லாதே
இறைவனிடம் போக வேண்டி வரும்.
இதுபோலவே, வாழ்க்கைக்கு நெருக்கமான யதார்த்த உண்மையை அனைவரும் உணர்ந்துகொள்ளும் விதமாக ஆழமான கருத்துகளுடன் கூறுவது கவிஞர் வாலியின் பாடல். பாடியவர்: டி. எம் சௌந்தர்ராஜன். படம்: அன்புக்கரங்கள். இசை: ஆர். சுதர்சனம்.
பாடல்:
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தப் பாருங்க
காக்கா கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்து கொடுத்தது யாருங்க?
காக்கா கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்து கொடுத்தது யாருங்க?
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் - அந்த நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா?
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? - அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?
(ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்)
தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே அந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப் போல மனம் படைத்தால்
செல்வம் வேறில்லை
இதைப் புரிந்துகொண்ட ஒருவனைப் போல்
மனிதன் வேறில்லை
(ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்)
கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் - நாம்
நேர் வழியில் நடந்து சென்றால் நன்மையடையலாம்
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்து கொடுத்தது யாருங்க?
(ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்)
என்ற வரிகள் மிகவும் புகழ் பெற்று உவமையாகப் பல மேடைகளில் அக்காலங்களில் பேசப்பட்டது.
இது போலவே இந்திப் பேச்சு வழக்கிலும் சாதாரண மக்களின் உரையாடல்களிலும்
சஜனரே ஜூட் ம போலோ
குதா கே பாஸ் ஜானா ஹை
ந ஹாத்தி ஹை ந கோடா ஹை
வஹீன் பைதல் ஹீ ஜானா ஹை
என்பது அதிகமாகப் புழங்கியது.
படம் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago