திரை பாரதி
பொழுதுபோக்கு, புனைவை மையப்படுத்திய திரைப்படங்களில் நிகழும் சம்பவங்கள் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால், திரையரங்கை விட்டு வெளியேறும்போது நீங்கள் பெற்ற அதிர்ச்சியால் உங்களிடம் பெரிய மாற்றம் எதுவும் உடனடியாக நிகழப்போவதில்லை. ஆனால், மாற்றுத் திரைப்படங்களாக இருக்கக் கூடிய ஆவணப்படங்கள் தரும் அதிர்ச்சி, உங்களை உடனடியாக மேம்படுத்தக் கூடியது.
தன்னளவில் உங்களை ஒரு செயற் பாட்டாளர் ஆக்கும் ஆற்றல் அவற்றுக்கு உண்டு. ஏனென்றால் ஆவணப்படங்களில் புனைவோ பொய்மையோ இல்லை. அவை நிகழ்காலத்தின் நேரடி சாட்சியம். சமூகத்தின் நடப்புகளை, போக்கினை, ஆளுமைகளை உள்ளது உள்ளபடி பிரதிபலிக்கும் கண்ணாடிகள். அப்படிப்பட்ட ஆவணப்படங்களை, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தனது நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு உருவாக்கும் இயக்குநர்களைக் காலத்தின் தேவ தூதர்கள் எனலாம். தமிழில் இன்று குறிப்பிடத்தக்க ஆவணப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.
தற்காலத் தமிழ் ஆவணப்பட உலகில் தீவிரமான தொடர்ந்து இயங்கிவரும் இயக்குநர்களில் முக்கியமானவர் ஆர்.பி.அமுதன். இவரது ஆவணப்படங்கள் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் கவனம் ஈர்த்து வருகின்றன.
நண்பர்களுடன் இணைந்து இவர் தொடங்கிய மறுபக்கம் திரைப்பட இயக்கமும் அருளானந்தர் கல்லூரி உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள், பண்பாட்டுக் குழுக்கள், திரைப்பட சங்கங்கள் இணைந்து நடந்தும் 21-ம் மதுரை சர்வதேச ஆவணப்பட - குறும்பட விழா மதுரையில் இன்று தொடங்குகிறது. சர்வதேசத் திரைப்பட விழா என்றாலே சென்னைதான் என்ற நிலையில் மாற்றுத் திரைப்படங்களுக்கான கலை நகரமாக மதுரையின் மீது வெளிச்சம் பாய்ச்சி வருகிறது அமுதன் தலைமையிலான மாற்றுப் படைப்பாளிகள் குழு.
8 இடங்கள் 80 படங்கள்
டிசம்பர் 6 முதல் 10-ம் தேதிவரை ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாவில் சர்வதேச அளவில் முக்கியத்துவமும் பாராட்டுகளும் பெற்ற 80 ஆவணப்படங்கள், குறும்படங்கள், அனிமேஷன் குறும்படங்கள் மதுரையில் 8 இடங்களில் திரையிடப்படுகின்றன. இதுபற்றி ஆர்.பி.அமுதனிடம் பேசியபோது “1998-ல் நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் தொடங்கிய ஆவணப்பட விழா, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று விரிவும் ஆழமும் கூடிய சர்வதேச ஆவணப்பட, குறும்பட விழாவாக மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது; முக்கியத்துவம் மிக்கதாகவும் மாறியிருக்கிறது.
தேசிய அளவில் தொடங்கி, சர்வதேச அளவிலிருந்தும் இயக்குநர்கள் தங்களது படைப்புகளுடன் பங்கேற்று வருகிறார்கள். இப்பட விழாவுக்கான அறிவிப்பைக் கடந்த ஆகஸ்ட்டில் வெளியிட்டோம். உலகம் முழுவதும் இருந்து வந்து குவிந்த 140 ஆவணப்படங்கள், குறும்படங்கள் வந்து குவிந்தன.
சமீபத்தில் மறைந்த திரைப்பட இயக்குநர் அருண்மொழி தலைமையிலான தேர்வுக் குழுவினர் இரவு பகலாகப் படங்களைப் பார்த்து 80 படங்களைத் திரையிடக்குத் தேர்வு செய்தனர். திரைப்பட விழாவின் ஒவ்வொரு நாளிலும் ஆவணப்படத் துறையிலும் சுயசார்பு திரைப்பட உருவாக்கத்திலும் தீவிரமாக இயங்கும் இயக்குநர்கள் பங்கேற்றுச் சிறப்பு செய்ய இருக்கிறார்கள். கவிஞர், ஆவணப்பட இயக்குநர் ரவிசுப்ரமணியன், திவ்ய பாரதி, ஆர்.ஆர்.சீனிவாசன், எஸ்.பி.பி.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் சிறப்பு வருகையாளர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்” என்கிறார்.
பயிற்சிப் பட்டறையும் உண்டு
மதுரை படவிழாவில் அனைத்து படங்களும் ஆங்கில சப்-டைட்டிலுடன் திரையிடப்படுகின்றன. திரையிடலுடன் நின்றுவிடாமல், தேசிய அளவில் கவனம் பெற்ற மும்பை வாழ் ஆவணப்பட இயக்குநர் சண்டிதா முகர்ஜி கலந்துகொண்டு ‘ஆவணப்பட உருவாக்கம்’ குறித்த தேசியப் பயிலரங்கத்தை டிசம்பர் 10 அன்று நடத்துகிறார்.
அந்தப் பயிலரங்கில் அவரது முக்கிய ஆவணப்படங்கள் சிலவும் திரையிடப்படுகின்றன. அவரைப் போலவே கேரளத்தின் முக்கிய ஆவணப்பட இயக்குநரான கே.ஆர்.மனோஜ் தனது படைப்புகளைத் திரையிட்டு, பார்வையாளர்களுடன் கலந்துரையாடி பயிலரங்கம் நடத்துகிறார்.
பட விழா, பயிலரங்கம் அனைத்துமே இலவசமாக நடத்தப்படுகின்றன. தமிழ் சினிமா படைப்பாளிகள், ஆவணப்படம், குறும்படத்துறையில் இயங்குகிறவர்கள், டிஜிட்டல் பிளாட் ஃபார்ம், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பில் பங்குபெறுபவர்கள், பத்திரிகையாளர்கள், தன்னார்வலர்கள், அரசு சாராத தொண்டு நிறுவனத்தினர் எனப் பல தரப்பினரும் தவறவிடக் கூடாத அரிய படவிழா இது. 21-ம் மதுரை சர்வதேச ஆவணப்பட குறும்பட விழாவின் திரையிடல், நிகழ்வுகள் குறித்த முழுமையான தகவல்களை http://maduraifilmfest.blogspot.com/ என்ற இணையதளத்தில் வழியாகத் தெரிந்துகொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago