எஸ்.எஸ்.லெனின்
இன்றைய பாலிவுட்டை ஆமிர், சல்மான், ஷாருக் ஆகிய மூன்று கான்கள் ஆட்சி செய்கிறார்கள். இவர்கள் பிறப்பதற்கு பத்து வருடங்களுக்கு முன்பே, இந்திய சினிமாவில் தனது வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டார் ஒரு கான். அந்த மூத்த ‘கான்’, முகமது யூசுப் கான் என்ற இயற்பெயர் கொண்ட முதுபெரும் நடிகர் திலிப்குமார்.
பெஷாவரில் பிறந்த யூசுப் கானின் பால்ய நண்பர்களில் ராஜ் கபூரும் ஒருவர். பிழைப்புக்காக இருவருடைய குடும்பங்களும் மராட்டிய மண்ணுக்கு வந்த பின்னரும், குடும்ப நட்பு தொடர்ந்தது.
ராஜ் கபூரின் தந்தையான பிரித்விராஜ் கபூர் சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோது, அவருக்கு யூசுப் கானின் குடும்பத்தினர் உரிமையுடன் அறிவுரை சொன்னார்களாம். அந்த அளவுக்கு சினிமாவை வெறுக்கும் கட்டுப்பெட்டியான குடும்ப வளர்ப்பை விரும்பாத யூசுப் கான், தந்தையிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார்.
இந்தி, வங்காளம், உருது, குஜராத்தி, போஜ்புரி மொழிகளுடன் அவரது நுனி நாக்கு ஆங்கிலமும் பல வேலை வாய்ப்புகளைத் தேடித் தந்தன. பாம்பே டாக்கீஸ் அதிபரும் நடிகையுமான தேவிகா ராணியைச் சந்தித்தார் இளைஞர் யூசுப். அந்தச் சந்திப்பு அவரது வாழ்க்கையை மாற்றியது.
யூசுப்பின் களையான தோற்றம், ஈர்க்கும் பேச்சு ஆகியவற்றைக் கணித்த தேவிகா ராணி, யூசுப் எதிர்பார்த்த வருடாந்திர ஊதியத்தை மாதாந்திரம் தருவதாக ஒப்பந்தமிட்டு பாம்பே டாக்கீஸின் நடிகராக்கினார். முதல் படம் வெளியாகும்வரை அப்பாவின் கவனத்துக்கு விஷயம் தெரியக் கூடாதே என யூசுப்கான் தயங்க, திலிப்குமார் என்ற திரைப் பெயரிட்டு அவரை தேவிகா ராணி அமைதிப்படுத்தினார்.
திலிப்குமாரின் தனித்துவம்
திலிப்குமார் அறிமுகமான ‘ஜுவார் பாட்டா’ (1944) திரைப்படம் பாராமுகமானது. ஆனால், அவரைப் பார்த்தவர்களுக்கெல்லாம் பிடித்துப்போக, பட வாய்ப்புகளுக்குக் குறைவில்லாமல் போனது. தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு சுமார் ,தோல்வி திரைப்படங்களையே கொடுத்தார். மெஹபூப் கான் இயக்கிய ‘அந்தாஸ்’ (1949) திரைப்படமும், உடன் வெளியான ‘ஷப்ன’மும் திலிப்குமாருக்குத் திருப்பு முனைகளாயின.
பாம்பே டாக்கீஸின் ஆஸ்தான நடிகரான அசோக்குமார் வாயிலாக, இயல்பாக நடிக்கும் கலை குறித்து அறிந்துகொண்டு, தனது நடிப்பில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார். இப்படி நடிப்பில் மெருகேற்றிக்கொண்ட திலிப்குமார், தனது படங்களின் வெற்றிகளைத் தீர்மானிக்கும் சூத்திரங்களைக் கற்றுக்கொண்டார். ‘மெத்தட் ஆக்டிங்’ என்ற ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே மாறிவிடும் நடிப்புக் கலையை இந்தியத் துணைக்கண்டத்தில் தொடங்கிவைத்த பெருமை திலிப்குமாருக்கே உரியது.
பிராண்டோவுக்கு இணையாக..
‘அல்டிமேட் ஆக்டர் இன் மெத்தட் ஆக்டிங்’ என்று திலிப்குமாரைப் புகழ்ந்தார் இயக்குநர் சத்யஜித் ரே. ஒரு படி மேலே சென்ற கவிஞர் ஜாவேத் அக்தர், ‘திரையில் மிளிர்ந்த உலகின் முதல் மெத்தட் ஆக்டர்’ என்றார். அன்பின் மிகுதியிலான பாராட்டு என்று அதைச் சுருக்கிவிட முடியாது.
ரஷ்ய நாடக நடிகரும் இயக்குநருமான கான்ஸ்டாண்டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி (Konstantin Stanislavski) நாடகங்களின் வழியே அறிமுகப்படுத்திய மெத்தட் நடிப்பு முறை, ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோவால் திரையில் எடுத்தாளப்பட்ட அதே 50-களின் காலகட்டத்தில், திலிப்குமார் அதை இந்தித் திரையில் சாத்தியமாக்கிக் காட்டியிருந்தார். இதைத் துல்லியமாக அவதானித்த கலை விமர்சகர்கள், அவரை மெத்தட் ஆக்டிங் பிரிவில் சேர்த்துக்கொண்டனர்.
கதாபாத்திரங்களில் கரைத்துக் கொண்டவர்
திலிப்குமாரின் தொடக்க காலத் திரைப்படங்கள் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தன. சோகமும் அழுகையுமான அவை ரசிகர்களை உருக வைத்தன. இதனால் ‘சோக மன்னன்’ என்ற அடையாளமும் அவருக்குச் சேர்ந்தது. ஆனால், இந்தச் சோகத்தைத் தனது பாணியில் காட்சிக்குள் கொண்டு வருவதற்காக, தன்னைத்தானே திலிப்குமார் ஏகமாய் வருத்திக்கொள்வார் என்பது பலரும் அறியாததாக இருந்தது. படப்பிடிப்புத் தளத்தில் மட்டுமன்றி, வீட்டிலும் பொது இடத்திலும் எவருடனும் பேசாது இறுக்கமாகவே இருப்பார்.
இந்த இறுக்கமும் மெத்தட் ஆக்டிங் முனைப்பும் அவரது உடலைப் பாதிக்கும் அளவுக்குச் சென்றன. ‘அந்தாஸ்’, ‘தேவதாஸ்’ போன்ற சோகத் திரைப்படங்களின் கதாபாத்திரங்களைத் தனது ஆழ்மனத்துடன் சதா உழலவைத்த திலிப்குமார் கடும் மன அழுத்தத்துக்கு ஆளானார். மனநல மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அதன் பிறகு சோகப் படங்களைக் குறைக்க வேண்டியதாயிற்று. ‘ஆஸாத்’, ‘கோஹினூர்’, ‘ராம் அவுர் ஷியாம்’ எனக் கலவையான படங்களுக்குத் தாவி, அவற்றையும் வெற்றிப் படங்களாகத் தந்தார்.
திலிப்குமாரின் விழுதுகள்
ஹாலிவுட்டில் மார்லன் பிராண்டோக்கு, ராபர்ட் டி நீரோ, அல் பசினோ எனப் பின்தொடர்வோர் உருவாயினர். அதைப் போல, திலிப்குமாரின் மெத்தட் ஆக்டிங் கலையை நசீருதீன் ஷா முதல் நவாஸுத்தின் சித்திக்கி வரை பலரும் விரும்பிப் பின்தொடர்கின்றனர். இத்துடன் திலிப்குமாரின் தனித்துவ ஸ்டைல் உத்திகளைக் கலந்துகட்டியே தர்மேந்திரா, அமிதாப்பச்சன், ஷாருக் கான் போன்ற சூப்பர் ஸ்டார்கள் தங்களது ராஜபாட்டைகளை அமைத்துக்கொண்டனர். இதைப் பல்வேறு பேட்டிகளில் அவர்களே பெருமையுடன் ஒப்புக்கொண்டுள்ளனர். இளமையான திலிப்குமாரின் ‘ஜோகன்’ (1950) திரைப்படத்தை ஷாருக் ரசிகர்கள் இன்றும் கொண்டாடுவதன் காரணமும் இதுதான்.
50-களின் நடிப்பு முன்னோடி
‘தீதார்’ (1951) படத்துக்காகப் பார்வையற்ற பாடகனாக திலிப்குமார் தோன்றியபோது, பார்வையற்றோர் தொடர்பான நடிப்பின் பார்வையை முழுவதுமாக மாற்றியமைத்தார். ‘சங்தில்’ (1952) படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்ததில், மதுபாலாவிடம் திரைக்கு வெளியேயும் நெருக்கமானார்.
மிகப் பெரும் பொருட்செலவில் மெஹபூப்கான் உருவாக்கிய ‘ஆன்’ (1952), திலிப்குமாரை சூப்பர் ஸ்டாராக்கியது. டெக்னிகலரில் உருவான முதல் இந்தியத் திரைப்படமான இதை, இங்கிலாந்தில் ‘தி சாவேஜ் பிரின்சஸ்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர். ராஜ் கபூர், தேவ் ஆனந்த் என சமகாலத்தின் நாயகர்களுடன் திலிப்குமாரும் இணைந்ததில் மூவரும் 50-களின் பம்பாய் திரையுலக மும்மூர்த்திகளானார்கள்.
ராஜ்கபூர் சாப்ளினையும், தேவ் ஆனந்த ஹாலிவுட் காதல் கதாநாயகர்களையும் பின்பற்றியதில், திலிப்குமாரின் சுயமான நடிப்பு தனியாகத் தெரிந்தது. திலிப்குமாரின் ‘தேவதாஸ்’ (1955), ‘முகல் ஏ ஆசம்’ (1960) திரைப்படங்கள் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் வரவேற்பு குறையாதிருக்கின்றன. ‘முகல் ஏ அசம்’ திரைப்படத்தின் வசூல் சாதனை அடுத்த 15 ஆண்டுகளுக்கு முறியடிக்கப்படாதிருந்தது. ஒரு சீக்குவென்ஸ் மட்டும் வண்ணத்தில் படமாகி வெளியான இத்திரைப்படம், 2004-ல் டிஜிட்டல் முறையில் முழுவதும் வண்ணப்படமாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
ஹாலிவுட்டைத் தவிர்த்தார்
திலிப்குமாரின் தோற்றம், நடிப்புத்திறன், ஆங்கிலப் புலமை ஆகியவற்றால் ஆங்கிலப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரைத் தேடி தந்தன. ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’, கைவிடப்பட்ட எலிசபெத் டெய்லருக்கு ஜோடியாகும் படம் போன்றவற்றை, ‘விருப்பமில்லை’ என்று திலிப்குமார் தவிர்த்திருக்கிறார். ‘நயா தர்’ திரைப்படத்தில் நடித்தபோது மதுபாலாவின் தந்தைக்கும் இயக்குநர் சோப்ராவுக்கும் இடையிலான நீதிமன்ற வழக்கில், திலிப்குமார், இயக்குநர் பக்கம் நின்றார். அதனால் மதுபாலாவுடனான உறவை இழந்தார். இந்தப் பிரிவும் முந்தைய நெருக்கமும் விசித்திரமான கலவையாகி, ‘முகல் ஏ ஆசம்’ திரைப்படத்தில் இருவரின் தவிப்புகளுடன் காட்சிகள் பதிவாயின. பின்னாளில் தன்வயதில் பாதியான நடிகை சாய்ரா பானுவை திலிப்குமார் மணந்தார்.
திரையில் செய்த பங்களிப் புகளுக்காக பால்கே, பத்ம விருதுகளுடன், பாகிஸ்தானின் உயரிய விருதான ‘நிஷான் இ இம்தியாஸ்’ விருதும் திலிப்குமாரை வந்து சேர்ந்திருக்கின்றன. கார்கில் போரின்போது பாகிஸ்தான் விருதைத் திருப்பியளிக்குமாறு சிவசேனா அழுத்தம் தர, வாஜ்பேயுடன் பேசிய திலிப்குமார் “இந்த விருது இரு நாடுகளின் கலைப்பாலம்” என்று தீர்மானமாக மறுத்துவிட்டார்.
எழுபதுகளின் இறுதியில் தனது திரை வாழ்வுக்கு 5 வருட இடைவெளி விட்டவர், மீண்டும் குணச்சித்திர வேடங்களில் தோன்றி புத்தாயிரத்துக்குச் சற்று முன்பு வரை முக்கியத் திரைப்படங்களில் முத்திரை பதித்தார். கடந்த பத்தாண்டுகளாக உடல்நிலை காரணமாகத் திரைப் படங்களைத் தவிர்த்திருக்கும் திலிப்குமார், அடுத்த மாதம் (டிசம்பர் 11) தனது 97-ம் வயதில் அடியெடுத்து வைக்கிறார். பாலிவுட் வரலாற்றின் பெரும் பங்களிப்பும் சாட்சியமுமாக நம் மத்தியில் இருக்கிறார் திலிப்குமார்.
கடந்த சில வருடங்களாக உடல் நிலை குன்றியிருக்கும் திலிப்குமாரை அடிக்கடி நேரில் சந்தித்து அவருக்காக துவா (பிரார்த்தனை) செய்யும் ஷாருக் கான் மீது திலிப்குமாரின் மனைவி சாய்ரா பானுவுக்குக் கொள்ளைப் பிரியம். ‘நெற்றியில் புரளும் ஷாருக்கின் கேசம் அப்படியே இளமைக்கால திலிப்குமாரை நினைவுபடுத்துகிறது. எங்களுக்கு ஒரு மகன் இருந்தால் அவன் ஷாருக் போலவே இருப்பான்’ என்பார் சாய்ரா பானு ஏக்கப் பெருமிதத்துடன்.
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
படங்கள்: ‘தி இந்து’
ஆவணக் காப்பகம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago