கடந்த சில அத்தியாயங்களில் சில ஹாலிவுட் இயக்குநர்கள் பற்றிக் கவனித்தோம். உலக அளவில் இருக்கும் அருமையான திரைப் படங்களை ஒப்பிடும்போது இவர்களின் பங்களிப்பு என்பது கமர்ஷியல் சினிமா வுடன் முடிந்துவிடுகிறது. ‘கமர்ஷியல்' என்றால், ரசிகர்களுக்குத் தேவைப்படும் என்று ஸ்டுடியோக்கள் தாமாகவே கற்பனை செய்துகொள்ளும் சில அம்சங்கள் உள்ளடக்கிய சினிமா என்று எடுத்துக் கொள்ளலாம் (வேகமான திரைக்கதை, சஸ்பென்ஸ், விறுவிறுப்பு, திகில், சுவாரஸ்யமான தொடக்கம் முதலியன). உலகம் முழுக்கவே எல்லா மொழிகளிலும் இப்படிப்பட்ட கமர்ஷியல் திரைப்படங்கள் இருக்கின்றன. என்றாலும் அவற்றுக்குச் சமமாக அந்த மொழிகளில் தரமான திரைப்படங்களும் இருக்கவே செய் கின்றன. பல நாடுகளில், இத்தகைய திரைப்படங்களே கமர்ஷியல் படங்களை விடப் பிரபலமாகவும் இருக்கின்றன.
உதாரணமாக ஈரானை எடுத்துக் கொண்டால், அங்கு இருக்கும் மிகச் சிறந்த இயக்குநர்களான அப்பாஸ் கியோரஸ்தாமி, மஜீத் மஜிதி, மொஹ்ஸான் மக்ஹ்மல்பஃப், அவரது மகள் சமீரா மக்ஹ்மல்பஃப், ஜாஃபர் பனாஹி, மர்ஜான் சத்ரபி, அஸ்கர் ஃபர்ஹதி போன்றவர்கள்தான் இன்றும் உலகம் முழுக்கப் பிரபலம். ஈரானிலும் வணிக சினிமா இருக்கிறது என்றாலும் ஈரானுக்கு உள்ளே மட்டும்தான் அது இருந்துவருகிறது.
இப்படிப்பட்ட ஒரு மிகத் தரமான இயக்குநர்தான் தகேஷி கிடானோ (Takeshi Kitano). ஜப்பானிய இயக்குநர். இன்று வரை உலகில் தனது திரைப்படங்கள் மூலம் பல அதிர்வுகளை ஏற்படுத்தியவர் இவர். இவரது ‘த வயலன்ட் காப்’ (The Violent Cop), ‘சொனாட்டைன்’ (Sonatine), ‘ஹனாபி’ (Hana-bi), ‘கிகுஜிரோ’ (kikujiro), ‘பிரதர்’ (Brother) போன்ற படங்கள் பலராலும் மறக்க முடியாதவை (‘கிகுஜிரோ’ படத்தின் பெயரைக் கேட்டதும் இதைப் படிப்பவர்களுக்கு ‘நந்தலாலா’ நினைவு வரலாம்). தகேஷி கிடானோவின் படைப் புலகம் கண்டு மிரண்டுபோனது மிஷ்கின் மட்மல்ல; உலகசினிமா ரசிகர்களும்தான்.
ஜப்பானுக்குச் சென்று தகேஷி கிடானோ யார் என்று கேட்டால் பலரும் ‘அவர் ஒரு காமெடியன்' என்று சொல்லக்கூடும். தனது இளமையில் ‘டூ பீட்’ (Two Beat) என்ற பெயரில் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி மூலமாக ஜப்பானில் மிகவும் பிரபலம் ஆனார் கிடானோ. இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரைச் சுற்றிலும் உள்ள அனைத்தையும் பகடியின் எல்லைக்கே சென்று கிண்டல் அடித்தார். சமூகத்தில் நிலவும் போலியான பிம்பங்களை இந்த நிகழ்ச்சியில் சர்வசாதாரணமாக உடைக்க, சில மாதங்களில் இதைப் பொறுக்க முடியாத மக்களின் புகார்கள் இந்த நிகழ்ச்சிக்கு வர ஆரம்பித்தன. இருந்தாலும் இந்த நிகழ்ச்சியே கிடானோவை எல்லாரிடமும் கொண்டுசேர்த்தது.
இதன் பின் முதன்முறையாக ‘த வயலன்ட் காப்’ (1989) படத்தைத் தற்செயலாக இயக்குகிறார் கிடானோ. படத்தில் நடித்துக்கொண்டிருந்த கிடானோவுக்கு, இயக்குநர் கிஞி ஃபுகாசகுவுடன் (Kinji Fukasaku) கருத்துரீதியான மோதல். அவர் வெளியேறிவிட, கிடானோவுக்கே இயக்குநர் வாய்ப்பு.
சில படங்களை இயக்கிய பின்னர், 1993-ல் ‘சொனாட்டைன்’ என்ற படம் கிடானோவின் இயக்கத்தில் வெளியாகிறது. இது, கிடானோவின் முக்கியமான படங்களில் ஒன்று. கான் திரைப்பட விழாவில் ஆரம்பித்து உலகத்தின் பிரதான திரைவிழாக்கள் அத்தனையிலும் பங்குபெற்றது. ஜப்பானின் புகழ்பெற்ற ‘யாகுஸா' என்ற நிழல் உலகத்தைப் பற்றிய படம். கிடானோ மிகவும் பிரபலம் அடைகிறார். இந்தச் சமயத்தில்தான் ஒரு மோசமான பைக் விபத்தில் சிக்கிப் பல மாதங்கள் மருத்துவமனையில் இருக்க நேர்கிறது.
இதற்குப் பல வருடங்கள் முன்னரே ஓவியங்களும் வரையப் பழகியிருந்தார் கிடானோ. எனவே, முகத்தின் வலது பக்கம் சிதைந்த நிலையில், இந்த விபத்தின் தீவிரத்தைப் பற்றியும், ஒரு எலும்பை அகற்றியாக வேண்டிய நிலையையும், அப்படி இல்லையெனில் வலியில் பைத்தியமே பிடிக்கலாம் என்றும் மருத்துவர்கள் விளக்கும்போது, ‘நல்லது. இனி நான் வான்காவைப் போலவோ பிகாஸோவைப்போலவோ பித்த நிலையில் படைப்புகளை உருவாக்கும் ஓவியனாக ஆக இது நல்ல தருணம்' என்றே யோசித்திருக்கிறார்.
இதுதான் கிடானோ. எதையுமே - தன்னையுமே பகடிக்குள்ளாக்கும் மனநிலை படைத்தவர். ‘தகேஷிஸ்' (Takeshis) என்ற படத்தை 2005-ல் இயக்கி வெளியிடுகிறார் கிடானோ. அந்தப் படத்தைப் பற்றிச் சொல்லும்போது, “கான் பட விழாவில் பார்க்கும்போது, ‘தகேஷிஸ்’ படம் என்னை மிகுந்த வெறுப்புக்குள்ளாக்கியது. இதைப் பார்க்கும் பார்வையாளர்கள், இந்த மொக்கைப் படத்துக்கான டிக்கட் பணத்தில் குறைந்தபட்சம் பாதியையாவது திரும்பப் பெற்றுக்கொள்வதற்காகச் சண்டைபோட வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். தன் படத்தைத் தானே நக்கல் அடிக்கும் இப்படிப் பட்ட பகடிதான் கிடானோவின் இயல்பு.
இவரது படைப்புகளில் அடிக்கடி இடம்பெறும் அம்சம் வன்முறை. கூடவே கதா பாத்திரங்கள் மரணமடைவது, தற்கொலை செய்துகொள்வது, அல்லது மரணத்தையும் தற்கொலையையும் பற்றிச் சிந்திப்பது போன்றவை இடம்பெறும். இதைப் போலவே சமூகத்திலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட கதா பாத்திரங்கள் இவரது படங்களில் அடிக்கடி இடம்பெறுவார்கள். ஆனால் இவற்றைப் பற்றிய எண்ணங்களும் செயல்களும் கிடானோவின் படங்களில் பகடியாகவும் கருப்பு நகைச்சுவையாகவுமே வெளிப்படும். எங்குமே பார்வையாளர்களைப் பிழியப் பிழிய அழவைக்கும் காட்சிகள் இருக்காது.
உலக வாழ்க்கையைப் பற்றிய தனது சிந்தனைகளைத் திரைப்படங்களில் வெளிப்படுத்துவது சிறந்த இயக்குநர்களின் வழக்கம் (Auteur Theory. இதை இன்னொரு அத்தியாயத்தில் விரிவாகக் கவனிக்கலாம்). இவர்கள் இத்தனை காலம் வாழ்ந்ததில் சமுதாயத்தைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் பெற்றிருக்கும் புரிதல் என்ன என்பதை இவர்களின் படங்களைப் பார்த்தாலே போதும். தகேஷி கிடானோவின் படங்கள் அத்தகையவையே. கிடானோ சிறு வயதிலிருந்து பெற்ற பல அனுபவங்கள் அவரது மனதில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பவையே அவரது படங்களின் காட்சிகள்.
கிடானோவின் திரைமொழியும், திரைமொழிக்கான இலக்கணங்களைப் பின்பற்றாது. உதாரணமாக, தேர்ந்த ஷாட்கள் இவர் படங்களில் இருக்காது. எங்கெல்லாம் ஷாட்கள் கட் செய்யப்பட வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அங்கெல்லாம் கட்கள் இருக்காது. அதன் பின்னும் சில நொடிகள் அப்படியே இருக்கும். இதை மிஷ்கின் படங்களில் கவனிக்கலாம். மிஷ்கினைப் பெரிதும் பாதித்திருப்பவர் கிடானோ என்பதைக் கிடானோ படங்களைப் பார்த்துவிட்டு மிஷ்கினின் படங்களைப் பார்த்தாலே தெரிந்துகொண்டுவிட முடியும். ஆனால், கிடானோவின் படங்களில் இதையெல்லாம் தாண்டி எதிர்பார்க்காத சில அபத்தங்களும் இடம்பெறும். அதெல்லாம் அவராகக் கற்றுக் கொண்டு பயன்படுத்தும் நுட்பங்களே.
இயக்குநர் என்பதைத் தாண்டி, நடிகர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்துபவர், ஓவியர் என்றெல்லாம் கிடானோவுக்குப் பல முகங்கள் உண்டு. இந்த ஒவ்வொரு முகத்திலும் அவரது தனித்துவம் பளிச்சென்று தெரியும். இவையெல்லாமே திட்டமிட்டு நிகழாமல் வாழ்க்கையின் போக்கில் தானாகவே அவருக்கு நிகழ்ந்தவை. இருப்பினும், இத்தனை புகழுக்கும் வெற்றிகளுக்கும் பின்னாலும் அவருடனேயே பிறந்த நகைச்சு வை உணர்வும் பகடியும் அவரை விட்டு இன்னும் போகவில்லை. கிடானோவின் பேட்டிகளைப் படித்தால் இது தெரியும்.
தகேஷி கிடானோவைப் பற்றிய கணக்கில் அடங்காத விஷயங்களில் இந்தக் கட்டுரை ஒரே ஒரு துளியைக்கூடச் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். கிடானோவைப் பற்றித் தெரிந்துகொள்ள அவரது படங்களைப் பார்க்கலாம். அவரது பேட்டிகளைப் படிக்கலாம். அவரைப் பற்றிய ஆவணப்படங்களைப் பார்க்கலாம். உலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான கிடானோவைப் பற்றிச் சுருக்கமாக அவரது வாய்மொழியாகவே சொல்ல வேண்டும் என்றால், இதோ:
“எல்லோரும் என்னை ஒரு ‘கலைஞன்’ என்று சொல்வார்கள் என்றால் ‘என்னது!?’ என்றுதான் நான் அதிர்ந்துபோவேன். அந்த எண்ணத்தைத் தீவிரமாக எடுத்துக் கொள்வது என்னால் முடியாது. வாழ்க்கையிடமிருந்து நான் உண்மையில் அதிகம் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, திரைப்பட விழாக்களில் எனது படங்கள் திரையிடப்படுகின்றன என்பதைக் கேள்விப்படும்போது நான் நிச்சயமாக மகிழ்ச்சியடைவேன். ஆனாலும் அது ஒரு அதிர்ஷ்டவசமான தற்செயல் என்றே கருதுவேன். ஒரு இயக்குநராக எனது திரை வாழ்க்கை என்பது திரும்பத் திரும்ப நிகழும் தோல்விகளின் தொடர்ச்சியன்றி வேறல்ல!”
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago