டிஜிட்டல் மேடை: அந்த 7 நாட்கள்

இளம் பருவத்தினர் ஏராளமான உணர்வுகளால் உலகை அலங்கரிக்கின்றனர். காதல், மோதல், நட்பு, வேடிக்கை, ஏமாற்றம், நகைச்சுவை எனக் கலந்துகட்டிய கலகலப்பான வண்ணங்களால் பின்னப்பட்டிருக்கிறது ‘லவ், ஸ்லீப், ரிபீட்’ என்ற வலைத்தொடர். ஜீ5 தளத்தின் ஒரிஜினல்ஸ் வரிசையில் கடந்த வாரம் வெளியிட்டிருக்கும் இத்தொடர் இளவயதினருக்கானது மட்டுமல்ல; மனத்தில் என்றும் இளமையை உணர்பவர்களும் பார்க்க உகந்தது.

அன்மோல் ராணா எழுதிய ‘தோஸ் 7 டேஸ்’ என்ற இந்திய - ஆங்கில நாவலைத் தழுவி உருவாகியிருக்கிறது இத்தொடர். விஸ்வாஸ் என்ற 23 வயது அப்பாவி அழகன் வாழ்க்கையின் 7 நாட்களை, ஏழு அத்தியாயங்களாக விரிக்கிறது. இளைஞனான பிறகும் அம்மாவின் அரவணைப்பில் வளர்வதை விஸ்வாஸ் வெறுக்கிறான். அம்மாவைப் போலவே தன் மீது ஆதிக்கம் செலுத்தும் பால்யத் தோழி ஷைலஜாவுடன் விஸ்வாஸ் நித்தம் ஒரு சண்டையுடன் அலைக்கழிகிறான். தன்னை ஆளும் இந்த இரு பெண்களிடமிருந்தும் தப்பிக்க அவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. பணி நிமித்தம் 7 நாள் பயணமாக மாநகரமான புனேவுக்குச் செல்கிறான்.

கட்டுப்பெட்டியான வீட்டிலிருந்து விலகி, முதல் முறையாக நகரத்தில் கால் வைக்கும் ஓர் இளைஞனின் அத்தனை தவிப்புகளையும் விஸ்வாஸ் கொண்டிருக்கிறான். நண்பர்கள், பார்ட்டி, கொண்டாட்டம், புதிய அலுவலகம், வெளியிடத்தில் தங்குவது, புதிய சிநேகிதிகள் என அவனது பொன்னுலக எதிர்பார்ப்புகள் அனைத்தும் இனிப்பாகவே தொடங்குகின்றன. ஆனால், அவற்றின் முடிவுகள் அவனைக் கசப்பிலே தள்ளுகின்றன.

தினமொரு பெண் விஸ்வாஸ் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். மாநகரத்து மினுக்கல் பூசிய அந்தப் பெண்களை விஸ்வாஸ் கண்டதும் விரும்பத் தொடங்குவது வினை யாகிறது. ஒவ்வொரு நாளின் இறுதியிலும் அவன் எதிர்கொள்ளும் ஏமாற்றம் விஸ்வாசை வீதியில் கொண்டுபோய் நிறுத்துகிறது. ஒரு நாள் கட்டுக்கடங்கா போதையினால் உறவினர் வீட்டிலிருந்து துரத்தப்படுகிறான். மற்றொரு நாள் போலீஸ் பிடியில் சிக்குகிறான். இன்னொரு நாள் நண்பனே ஏமாற்றுகிறான். நாளொரு பெண்ணும் பொழுதொரு பாடமுமாகப் புடம் போடப்படுகிறான்.

பயணிக்கும் பேருந்தில், வாடகை வீட்டில், பணிபுரியும் அலுவலகத்தில், பார்ட்டியில் என வெவ்வேறு பின்னணிச் சூழல்களில் தினமொரு இளம்பெண் விஸ்வாசைக் குறும்புகளுடன் குறுக்கிடுவது வலைத்தொடருக்கு வண்ணம் சேர்க்கிறது. விஸ்வாசாக வரும் அனுஷ்மான் மல்ஹோத்ரா, இளிப்பும், பிரமிப்புமாக நகரத்து யுவதிகளிடம் வழியும் இளைஞனின் கதாபாத்திரத்தை அனுபவித்துச் செய்திருக்கிறார்.

நாவலை, சில மாற்றங்களுடன் வலைத்தொடராக்கி உள்ளார்கள். அதிலும் நாவலின் முடிவில் வாசகர்கள் உணரும் எதிர்பாராத் திருப்பத்தை, காட்சி மொழியிலும் கடத்தி இருப்பது அருமை.

ரீமா சென், பிரியா பானர்ஜி, டீனா சிங் என 7 பெண்கள் வலைத்தொடருக்கே உரிய பூரண சுதந்திரத்தின் பயனாய் கிறக்கமாய் உலவுகிறார்கள். பாலிவுட் படங்களின் க்ளிஷே காட்சிகள் குறுக்கிட்டாலும், இந்த வலைத்தொடருக்கு அவை பொருந்தவே செய்கின்றன. மராட்டிய மலைக்குன்றுகளும், பசுமை நடுவில் பொழியும் மழையுமாகக் காட்சிகளும் குளுமை கொண்டிருக்கின்றன. அத்தியாயம்தோறும் ததும்பும் இளமையும், நகைச்சுவையில் தோய்ந்த காட்சிகளுமாக நவயுகத்தினரைக் குறிவைத்துத் தொடரை இயக்கி உள்ளார் அபிஷேக் டோக்ரா. கலகலப்புடன் புத்தாயிரத்து இளசுகளுக்குப் பாடமும் சொல்கிறது ‘லவ், ஸ்லீப், ரிபீட்’ வலைத்தொடர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE