கலை வாழ்வில் கமல் 60: கமலுக்குக் கைவந்த கலை வணிகம்

By செய்திப்பிரிவு

சுதந்திர தினத்தை ஒட்டி, 1982, ஆகஸ்ட் 14 அன்று வெளியானது ஒரு தமிழ்ப் படம். அது, அதற்குப் பிறகான தமிழ்ப் படங்களின் பாதையில் பெருத்த மாறுதலை ஏற்படுத்தியது. ‘கலைக் கடவுள்’ என்றும் ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவர்’ என்றும் தன் ரசிகர்களால் பிரியத்துடன் அழைக்கப்படும் அப்போதைய காதல் இளவரசன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த ‘சகலகலா வல்லவன்’ திரைப்படம்தான் அது.

பத்தாண்டுகள் கழித்து 1992-ல் ‘ஓ ரங்கா லங்கா கொப்பரத் தேங்கா’ பாடிய ‘சிங்கார வேல’னையும் தந்தவர் அவர். இத்தகைய படங்களைக் கமல் தனது திருப்திக்காக உருவாக்கிக்கொள்ளவில்லை; ரசிகர்களின் திருப்திக்காக என்பதில்தான், அவர் ரசிகர்கள்மீது கொண்டிருக்கும் மாறா அன்பும் தீராப் பிரியமும் வெளிப்படுகின்றன.

எவ்வளவு கலை மேதைமையுடன் ஒரு படத்தைப் படைத்தாலும் அதைத் திரையரங்குகளுக்கு அனுப்பும்போது அது வணிகப் பொருள்தான் எனும் புரிதல் கமலுக்கு இருந்ததால்தான் ஒரே ஆண்டில் அவரால் ‘மூன்றாம் பிறை’ போன்ற ஒரு படத்தையும் ‘சகலகலா வல்லவ’னையும் தரமுடிந்திருந்தது. ‘நேத்து ராத்திரி யம்மா’, ‘நிலா காயுது’ போன்ற பாடல்கள் வழியேயும் தன் ரசிகர்களை மகிழ்வித்து; படத்தை வசூல் வெற்றியடையச் செய்தார். பிறிதொரு நடிகர் என்றால் இப்படியான பாடல்களை மறுத்திருக்கக்கூடும். ஆனால், கமல்ஹாசன் அப்படியான வேலைகளில் இறங்கவில்லை. ‘சகலகலா வல்லவ’னுக்கு எது தேவையோ அதைத் தர வேண்டும் என்ற உறுதி இருந்ததால்தான் அவர் சகலகலாவல்லவன்.

கரவொலியின் காதலன்

அடிப்படைச் சாயலில் கிட்டத்தட்ட சார்லி சாப்ளினின் ‘சிட்டி லைட்ஸ்’ தன்மை கொண்ட, இயக்குநர் பாலுமகேந்திராவின் ‘மூன்றாம் பிறை’யில் சிறப்பாக நடித்து தேசிய விருது பெற்ற அதே வேளையில், ‘பொன்மேனி உருகுதே’ என சில்க் ஸ்மிதாவுடன் ஆட்டம் போடவும் முடிந்த துணிச்சலின் மறுபெயர்தான் கமல்ஹாசன். கலை மட்டுமே பிரதானம், வணிகம் அவசியமில்லை எனக் கருதும் கிணற்றுத் தவளை அல்ல கமல். சாதாரண நடிகர் ஒருவர் ‘மூன்றாம் பிறை’யில் நடித்திருந்தால் பொன்மேனி உருகியிருக்க வாய்ப்பில்லை; படமும் பெரிய வெற்றியைப் பெறாமல்கூடப் போயிருக்கக்கூடும்.

கமலைப் பொறுத்தவரை ஒரு திரைப்படத்தின் எல்லாக் காட்சிகளையும் முழு ஈடுபாட்டுடன் தர வேண்டும் என்பதில் அலாதிப் பிரியம் கொண்டவர். அந்தக் கலை அர்ப்பணிப்புதான் ‘நாயக’னில் வேலு நாயக்கரிடமிருந்து உலக அழுகையை வெளிப்படுத்தியது; ‘புன்னகை மன்ன’னில் இறப்பதற்கு முன்பு ரேகாவின் உதட்டில் சர்வதேச நடிப்பின் முத்திரையைப் பதிக்கவைத்தது. எந்தக் காட்சியில் தான் நடிக்கிறோமோ அந்தக் காட்சியில் தன்னைத் தவிர பிறர் நடித்திருக்க முடியாது; நடித்திருந்தாலும் தன்னைப் போன்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்க இயலாது என்பதை ரசிகர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற தன் முனைப்புதான் அவரை இயக்கியது. இதயத் துடிப்பு நின்றுபோவதைவிடக் கொடுமையானது ரசிகர்களின் கைதட்டல் நின்றுபோவது என்பதில் அதிக நம்பிக்கை கொண்ட கலைஞர் அவர்.

பதறிய கலைஞன்

அதனால் தான் அவர், தனது படங்களைக் கலையும் வணிகமும் சந்திக்கும் புள்ளியில் இருந்து உருவாக்கினார். அவரைப் பொறுத்தவரை கலை ஒரு கண் என்றால், வணிகம் மற்றொரு கண். கலைப் படம் உயர்ந்தது வணிகப்படம் தாழ்ந்தது என்னும் பிற்போக்குத்தனமான எண்ணமற்றவர் கமல்ஹாசன். கலையும் வணிகமும் இணைந்து பூட்டப்பட்ட புராதன கட்ட வண்டியில் விஸ்வரூபம் எடுத்தவர் கமல் ஹாசன்.

‘குணா’ திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் ஓர் இதழில் ‘குணா ஒரு ஆர்ட் ஃபிலிம்’ என்று எழுதிவிட்டார்கள். உடனே கமல் ஹாசன் வெகுண்டுவிட்டார். ‘ஆர்ட் ஃபிலிம் என்பது எனது விநியோகஸ்தர்களின் வயிற்றைக் கலக்கும் கெட்ட வார்த்தை’ என்னும் ரீதியில் மறுவாரமே மறுப்புத் தெரிவித்தார். ஏனெனில், ‘குணா’ கலைப்படம் என்று கூறி அதைக் காலிசெய்துவிடுவார்களோ என்ற அச்சம் அவரிடம் சட்டென்று வெளிப்பட்டது. அத்தகைய விழிப்புணர்வுதான் கமல்ஹாசன் என்னும் நடிகரை ஆஸ்கர் நாயகனாகத் தொடர்ந்து வெளிச்சத்திலேயே வைத்திருக்கிறது. ‘குணா’வில் கலைத்தன்மை நன்கு வெளிப்பட்டாலும் அதன் வணிகம் அதைப் போன்ற நல்ல படங்களை உருவாக்க எவ்வளவு முக்கியம் என்பதில் அவருக்கு இருந்த தெளிவாலேயே அவர் அவ்வளவு பதறினார்.

தான் மாறுபட்ட படங்களில் மட்டுமே நடிக்கக்கூடிய நடிகர் என்னும் பிம்பத்தை அவரே முடிந்தவரை தகர்த்துக்கொண்டே இருந்தார். தொடக்க காலம் முதலே தனது படங்கள் மாறுபட்டவையாக இருக்க வேண்டும் என்னும் தவிப்பும் அதில் கொண்டிருந்த உறுதியும் மட்டுமே அவரிடம் வெளிப்பட்டவண்ணம் இருந்தன. அவரது திரை வாழ்வில் முக்கியத் திருப்பப் படமான ‘நாயகன்’கூட வணிகப் படமே. அதிலும் கலைத் தன்மையைக் கலந்திருந்தாரே தவிர, அதை முழு மாற்றுப்படம் என்றோ கலைப் படம் என்றோ முத்திரை குத்திவிட முடியாது. ‘நிலா அது வானத்து மேல’ பாடல், ‘நான் அடிச்சா நீ செத்துருவ’ எனும் பஞ்ச் டயலாக் போன்றவற்றை ஒரு கலைப் படத்தில் நினைத்தே பார்க்க முடியாது. ஆனால், அவற்றையும் சேர்த்துதான் வெள்ளிவிழா கண்ட ‘நாயகன்’ என்பதையும் மறந்துவிடலாகாது.

கலைரீதியான படைப்புகளை மட்டுமே தான் தர வேண்டும் என்று விடாப்பிடியாக கமல்ஹாசன் செயல்பட்டிருந்தால் அவர் காணாமல் போயிருக்கக்கூடும். அதனால் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பொழுதுபோக்குப் படங்களில் நடித்துத் தான் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் வருவாய் பெற்றுத் தரும் சந்தைமதிப்பு மிகு நடிகர் என்பதையும் அவர் நிரூபிக்க வேண்டியதிருந்தது. அடிக்கடி கமல் சொல்வதைப் போல், Comedy is a serious business. வணிகரீதியான வெற்றிபெற்ற படைப்புகளில் கமல்ஹாசன் நடிக்காமல் போயிருந்தால் கமலின் கலைப் படைப்புகளை நாம் பெறாமல் போயிருப்போம். கலைரீதியான கமலின் முயற்சிகளுக்குப் பின்னணி ஆதாரமாக இருந்தவை அவரது வணிகரீதியான முயற்சிகள். நல்ல வியாபாரம் வெல்லும் என்பதில் கமலுக்கு இருந்த அபாரமான நம்பிக்கைதான் ‘சிகப்பு ரோஜாக்கள்’ காலத்திலிருந்து ‘தூங்கா வனம்’ காலம் வரை அவரைத் திரைத்துறையின் சிறந்த கலைஞராக முன்னணியில் வைத்திருக்கிறது.

தொடர்புக்கு: chellappa.n@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

மேலும்