எஸ்.எஸ்.லெனின்
“பள்ளியில் படிக்கும் வயதில் அந்த இந்திப் படத்தைப் பார்த்தேன். மொழி வேறாக இருந்தபோதும், படத்தின் கிராமியப் பின்னணி, அதன் மனிதர்கள், அவர்களின் பிரச்சினைகளுமாக நானறிந்த உலகத்தை நெருக்கமாகத் தரிசித்தேன். படத்தின் தாக்கம் பல நாட்களுக்கு என்னைத் தூங்க விடாது அடித்தது. பின்னாளில் எனது திரைப்படங்களின் கிராமங்களிலும் அந்தப் படத்தின் பாதிப்பு நீடித்தது”என்று சொன்னவர் பாரதிராஜா. அவர் வியந்த அந்த இந்தித் திரைப்படம் ‘மதர் இந்தியா!’.
ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம். ‘மதர் இந்தியா’விலிருந்தே அதன் பிறகான எல்லா இந்திப் படங்களும் உருவாகின்றன’ என்பார் கவிஞரும் எழுத்தாளருமான ஜாவேத் அக்தர். அந்த அளவுக்கு அப்படத்தின் ஏதோவொரு பாதிப்பில் அடுத்த முப்பதாண்டு கால இந்தித் திரைப்படங்கள் அமைந்திருந்தன. இந்த ‘மதர் இந்தியா’ உருவானதும் வளர்ந்ததுமான கதையை இன்னொரு திரைப்படமாகவே எடுக்கலாம்.
புத்தகம் விதைத்த திரைப்படம்
இந்தியாவின் விடுதலைப் போராட்டக் காலத்தில் அமெரிக்க வரலாற்றாசிரியரில் ஒருவரான ‘கேதரின் மேயோ’ என்ற பெண்மணி வருகை தந்திருந்தார். அமெரிக்காவின் இனவாத நெருப்பில், தனது எழுத்துக்களால் எண்ணெய் ஊற்றிய பின்னணியுடையவர் இந்த அம்மணி. தனது இந்தியச் சுற்றுப்பயணத்தின் நிறைவாக ‘மதர் இந்தியா’ என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார். ‘இந்தியா ஓர் அழுகிய நாகரிகத்தின் அமைவிடம்’ எனத் தொடங்கி, ‘நாட்டின் கலாச்சாரம், மத நம்பிக்கை, பெருவாரியான மக்களின் விளிம்பு நிலைக்கான காரணம், விடுதலைப் போராட்டத் தலைவர்களின் சிறுமை, நாடெங்கும் பரவி கிடக்கும் நோய், அழுக்கு, புழுதி.’ எனச் சகட்டுமேனிக்கு எழுத்தில் விளாசியிருந்தார்.
சுற்றி வளைத்து ‘சுயராஜ்ஜியத்துக்கு இந்தியர்கள் அருகதையற்றவர்கள்; காலனியாதிக்கம் தொடர்வதே நல்லது’ என்ற வெள்ளையர்களின் குரலை ‘மதர் இந்தியா’ வழிமொழிந்திருந்தது. ‘ஒரு சாக்கடை ஆய்வாளரின் அறிக்கை’ (report of a drain inspector) என மகாத்மா காந்தியே சீறும் அளவுக்கு அந்தப் புத்தகம் அவதூறுகளைக் கொண்டிருந்தது. நாடெங்கும் இப்புத்தகத்தைப் படித்த இந்தியர்கள் கொந்தளித்தனர்.
‘மதர் இந்தியா’வின் அசட்டுப் பிழைகளைச் சுட்டிக்காட்டியும், மேலைநாட்டு அறிவுத்தளத்தினருக்குத் தர்க்க விளக்கமளித்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் கிளம்பின. அந்த ஆற்றாமை, தேசம் சுதந்திரமடைந்த பிறகும் தொடர்ந்தது. அப்படித்தான் முன்னணி இயக்குநரான மெஹ்பூப்கான் தான் சார்ந்த கலையின் மொழியில் ‘மதர் இந்தியா’வுக்குப் பதிலடி கொடுக்க முடிவு செய்தார். முதல் கட்டமாகத் தனது திரைப்படத்துக்கும் ‘மதர் இந்தியா’ என்று அதே பெயரைத் தலைப்பாகச் சூட்டினார்.
புதிய வசந்தம் பூத்தது
இந்தியாவின் கலாச்சாரச் சிறப்புகளைப் பதிவுசெய்யும் கதையைத் தேடியவர், தனது ‘அவ்ரத்’ (1940) திரைப்படத்தையே மறுஆக்கம் செய்ய முடிவுக்கு வந்தார். பெண்ணின் பெருமை பேசும் அப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் மெஹ்பூப்கானுக்குப் பின்னர் மனைவியாக ஆன சர்தார் அக்தர் நடித்திருப்பார். கனமான அந்தக் கதாபாத்திரத்துக்கு இம்முறை பம்பாய் படவுலகின் உச்சத்தில் உலவிக் கொண்டிருந்த நர்கிஸை நடிக்க வைக்க முடிவு செய்தார்.
‘தக்தீர்’ திரைப்படம் வாயிலாகத் தனக்குத் திரை வாழ்க்கை தந்தவர் என்பதால் மெஹ்பூப்கானின் அழைப்புக்கு நர்கிஸ் அரை மனத்துடன் சம்மதித்தார். நர்கிஸ் மட்டுமல்ல மெஹ்பூப்கானுக்கே உள்ளூர உதறல் இருந்தது. ‘ராஜ்கபூர், திலீப்குமார் ஆகிய நடிகர்களின் ஜோடியாக வலம்வரும் 28 வயது நர்கிஸை மூதாட்டி வேடத்தில் ரசிகர்கள் ஏற்பார்களா?’ என்பதுதான் அந்த உதறலுக்குக் காரணம்.
படம் வளரத் தொடங்கியதும் கதையின் ஆழமும் அதன் முழுப் பரிமாணமும் நர்கிஸுக்குப் புரியத் தொடங்கின. கணவராக ராஜ்குமார், மகன்களாக ராஜேந்திர குமார் , சுனில்தத் ஆகியோர் தோன்றினாலும், மொத்தப் படமும் நர்கிஸ் தோள்களிலே நின்றது. ராஜ்கபூர் உடனான காதல் கசப்பில் ஒட்டுமொத்த திரை வாழ்வுக்கும் முழுக்குப் போடும் முடிவில் அப்போது நர்கிஸ் இருந்தார்.
விடைபெறும் திரைப்படம் முத்தாய்ப்பாக அமையவும், அது ஏதோவொரு வகையில் ராஜ் கபூருக்குப் பதில் சொல்வதாகவும், கூடவே தனக்குத் திருப்தி அளிப்பதாக அமையவும் நர்கிஸ் விரும்பினார். அவர் எதிர்பார்த்தவாறே ராஜ்கபூர் ராஜ்ஜியத்துக்கு வெளியே ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் நர்கிஸ் நடித்தார். அது இமாலய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியின் தாக்கத்தில் இயல்பான வாய்ப்புகள் கூடிவந்தன. வறண்டிருந்த நர்கீஸ் வாழ்க்கையில், மீண்டும் வசந்தமாய் புதிய காதல் பூத்தது.
‘மதர் இந்தியா’வுக்காக சூரத் அருகே தீ விபத்து தொடர்பான காட்சியைப் படமாக்குவதில் மெஹ்பூப்கான் குழுவினர் மும்முரமாக இருந்தனர். அவர்களின் கணிப்பை மீறி காற்று திசை மாறியதில், நர்கிஸ் நிஜமாகவே தீக்குள் சிக்கிக்கொண்டார். பாய்ந்து வந்த சுனில்தத் தீப்பிழம்புகள் தன்னைத் தீண்டியபோதும் கவனமாக நர்கிஸைக் காப்பாற்றினார். பதிலுக்கு சுனில்தத் குணமாகும் வரை நர்கிஸ் அணுக்கமாக இருந்தார். சுனிலின் உடலும், நர்கிஸின் மனதும் கண்டிருந்த காயங்கள் குணமாக பரஸ்பரம் மருந்தானார்கள்.
சுழன்றடித்த ‘நர்கிஸ் புயல்’
1957, சுதந்திர தினத்தன்று வெளியிடத் திட்டமிட்டவர்கள் படத்தின் தலைப்பு கிளப்பிய சர்ச்சையால் இழுபறியாகி தீபாவளியன்று வெளியிட்டனர். குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு, அவருடைய மகள் இந்திரா ஆகியோர் புடைசூழச் சிறப்புக் காட்சியைத் திரையிட்டார்கள். பம்பாய் ராஜதானி சார்பில் திரைப்படத்துக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டது. மெஹ்பூப்கான் கணிப்பின்படியே இந்தியாவில் பெரும் தாக்கம் தந்த ‘நர்கிஸ் புயல்’, மேற்குலகு நோக்கி நகர்ந்தது.
நேருவின் நேசர்கள் உலகமெங்கும் ‘மதர் இந்தியா’வைக் கொண்டாடினார்கள். தனது கனவுத் திரைப்படம் என்பதால் மதர் இந்தியா உருவாக்கம் நெடுக மெஹ்பூப்கான் உணர்ச்சிப் பெருக்கில் இருந்தார். தாய்மை, தாய் மண், தாய் நாடு என்ற அளவிலேயே அவரது கவனக் குவிப்பு இருந்தது.
ஆனால், முழுமையான அர்ப்பணிப்பு, படைப்பூக்கத்துடன் உருவாகும் படைப்பு, தனக்குள் சரஞ்சரமாய் விந்தைகளைப் பொதித்து வைத்திருக்கும் என்பதற்கு ‘மதர் இந்தியா’ சாட்சியானது. மெஹ்பூப்கானே அறிந்திராத வண்ணம் அவரது திரை ஆக்கத்தில் ஒளிந்திருக்கும் குறியீடுகள், படிமங்கள், அடுக்குகளை, மேற்குலக விமர்சகர்கள் இன்றுவரை விவாதித்து வருகின்றனர்.
இதிகாச நாயகிகள், பெண் கடவுளர்கள் என நர்கிஸ் ஏற்றிருந்த ராதா கதாபாத்திரத்தில் கண்டுபிடித்தனர். இவற்றுடன் இந்திய மண்ணில் பிரபலமான தியாகம், பதி பக்தி, பாசம், நம்பிக்கை, சில பல அற உணர்வுகளுடன், மேற்குலகின் பரிச்சயம் குறைவாக இருந்த ‘அம்மா..’ என்ற ஜீவனுக்கான மண் சார்ந்த அர்ப்பணிப்புகளையும் பட்டியலிட்டார்கள். தொடர்ந்து இந்தித் திரைப்படங்களில் ‘அம்மா’ சகாப்தம் இனிதே தொடங்கவும் ‘மதர் இந்தியா’ காரணமானது.
ஆஸ்கரில் மோதிய ‘அம்மா’!
இந்தியா சார்பில், சிறந்த அயல் நாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுப் பிரிவில் ‘மதர் இந்தியா’ பரிந்துரைக்கப்பட்டது. ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் ‘நைட்ஸ் ஆஃப் கபிரியா’ படத்திடம் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், ‘மதர் இந்தியா’வின் பாய்ச்சல் நிற்கவில்லை. மொழி மாற்றம் செய்யப்பட்டும் சப் டைட்டில் உடனும் பல்வேறு நாடுகளில் வலம் வந்தது.
‘கேத்ரின் மேயோ’ புரட்டுகளுக்குப் பதிலடி தந்த இறுமாப்பில் மெஹ்பூப்கான், ‘சன் ஆஃப் இந்தியா’ என்றெல்லாம் தேசபக்திப் படங்களை எடுக்கத் தொடங்கினார். அதுவரை தத்தளித்த சுனில் தத்தின் திரை வாழ்க்கை அதன் பிறகு புது வேகத்துடன் பல சுற்றுகள் வலம் வந்தது. காங்கிரஸ் சார்பில் எம்பி, மத்திய அமைச்சர் என அரசியலிலும் அவர் வலம் வந்தார். அவரை அடியொற்றி மகள் பிரியா தத்தும் அரசியல் பவனியில் இருக்கிறார்.
குடும்ப சினிமா நிறுவனத்தைக் கவனித்து வந்த நர்கிஸ் தத், தன் வழியில் மகன் சஞ்சய் தத்தையும் திரை நட்சத்திரமாக்க ஆசைப்பட்டார். துரதிருஷ்டமாய், சஞ்சய் தத்தின் அரங்கேற்றத் திரைப்படமான ‘ராக்கி’ வெளியாவதற்குச் சில தினங்களுக்கு முன்பாக, கணையப் புற்றுநோயின் தீவிரத்தால் காலமானார்.
தாயின் இழப்பே மகன் சஞ்சயைப் போதையின் பாதைக்கு இழுத்துவிடத் தொடக்கமானது. ‘மதர் இந்தியா’ மூலம் புரட்சிகரமான தாயாக தேசத்தின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றியவர், தனது சொந்த மகனை அரவணைக்கும் பாக்கியமின்றி தொலைவானில் நட்சத்திரமானார்.
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago