பாம்பே வெல்வெட் 05: பொற்காலத்தைத் தொடங்கிவைத்த தங்க மகன்

By செய்திப்பிரிவு

எஸ்.எஸ்.லெனின்

அன்றைய தினசரிகளின் முதல் பக்கத்தை அலங்கரித்திருந்த சினிமா விளம்பரத்தைப் பார்த்ததும் ஜெமினி ஊழியர்கள் மிரண்டு போனார்கள். ஜெமினி ஸ்டுடியோ கதை இலாகாவினர் பல மாதங்களாக உருட்டி வந்த, கதை உருவாக்கத்தில் இன்னமும் கரை சேராத ஒரு திரைப்படத்துக்கான விளம்பரம்தான் அது.

தனக்கே உரிய அலாதியான பாணியில், கதை முடிவாகும் முன்னரே படம் குறித்த விளம்பரத்தை வெளியிட்டிருந்தார் ஜெமினி ஸ்டுடியோ அதிபரான எஸ்.எஸ்.வாசன். ‘சந்திரலேகா’ என்ற பெயரிலான அந்தப் படம் தமிழ் சினிமாவில் புதிய தடம் பதிக்கும் என ஆழமாக நம்பினார். அதற்கும் அப்பால் இந்திய சினிமாவையே சந்திரலேகா புரட்டிப்போட்டது வரலாறானது.

விளம்பரத்தில் தொடங்கினார்

எஸ்.எஸ்.வாசனின் வாழ்க்கை விளம்பர உலகில்தான் தொடங்கியது. திருத்துறைப்பூண்டியில் பிறந்த சுப்ரமணியம் சீனிவாசன், படிப்பதற்காக சென்னை வந்தார். படிப்புடனே ‘குடியரசு’, ‘ஊழியன்’ போன்ற பத்திரிகைகளுக்கு விளம்பர முகவராக உழைக்கத் தொடங்கினார். சைனா பஜாரில் விற்கப்படும் பொருட்களை ‘மெயில் ஆர்டர்’ முறையில் நுகர்வோரிடம் சேர்க்கும் புதுமையான வர்த்தக உத்தியை உருவாக்கியவர், அதற்கான கவர்ச்சிகர விளம்பரங்களையும் பத்திரிகைகளில் வெளியிட்டு வந்தார். அப்படியான விளம்பரம் வெளியிட்டு வந்த பத்திரிகைகளில் ஒன்று திடீரென வெளிவராமல் போக, அதுகுறித்து விசாரிப்பதற்காக நேரில் சென்றார். அந்தச் சந்திப்பு பூதூர் வைத்தியநாத ஐயர் வசமிருந்த ‘ஆனந்த விகடனை’, வாசன் விலைக்கு வாங்கக் காரணமானது.

‘ஜெமினி’ உருவானது

பத்திரிகையின் உள்ளடக்கத்தை முழுவதுமாக மாற்ற விரும்பிய வாசன், ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி போன்ற ஜாம்பவான்களை இணைத்துக்கொண்டதுடன் தானும் எழுதத் தொடங்கினார். அவ்வாறு வாசன் எழுதிய ‘சதி லீலாவதி’ யை மருதாச்சலம் செட்டியார் திரைப்படமாக்கினார். கல்கியின் ‘தியாக பூமி’ ஆனந்த விகடனில் தொடராகவும் படப்பிடிப்பில் திரைப்படமாகவும் ஒருசேர வளர்ந்தது. ‘தியாகபூமி’ சினிமா ஸ்டில்கள் பத்திரிகையின் தொடரை அலங்கரித்து அக்காலத்தில் வரவேற்பைப் பெற்றன.

‘தியாக பூமி’ திரைப்படம் வெளியானபோது அதன் விநியோக உரிமையைப் பெற்று திரைப்பட வர்த்தகத்தில் கால்பதித்தார் வாசன். ‘தியாகபூமி’யைத் தயாரித்து இயக்கிய கே.சுப்பிரமணியம், தனது பட நிறுவனம் தீக்கிரையானபோது நொடித்துப்போனார். ஏலத்துக்கு வந்த நிறுவனத்தை கைக்கொள்ளுமாறு வாசனிடம் கோரினார். இவ்வாறு வாசன் வசமான திரைப்பட நிறுவனம் ‘ஜெமினி ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் அடுத்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தது.

‘சந்திரலேகா’ கருவானது

‘மதனகாமராஜன்’, ‘நந்தனார்’ படங்களைத் தொடர்ந்து வாசன் தயாரித்த ‘பாலநாகம்மா’ (தெலுங்கு), ‘மங்கம்மா சபதம்’ (தமிழ்) ஆகிய இரு திரைப்படங்களும் எதிர்பார்த்ததை விட வசூலை வாரிக்குவித்தன. தேச விடுதலைக்கான சுதந்திரத் தழலின் ஊடே பெண் விடுதலைக்கான தணப்பும் அதிகரித்து வந்த காலத்தில், பெண்
மையக் கதைகள் வெற்றியடைவதன் பின்னணியை வாசன் வசமாகப் பிடித்துக்கொண்டார்.

அதே வரிசையில் அடுத்த திரைப்படத்தைப் பிரம்மாண்டமாக எடுக்கத் திட்டமிட்டதுடன், அதனைத் தனது கனவு சினிமாவாகவும் வரிந்துகொண்டார். இதற்காக கொத்தமங்கலம் சுப்பு, கி.ரா.சங்கு சுப்பிரமணியம், வேப்பத்தூர் கிட்டு உள்ளிட்ட ஜெமினி கதை இலாகாவினர் எத்தனையோ கதைகளைச் சமர்ப்பித்தும் அவை வாசனின் கற்பனையில் உறைந்திருந்த பெண் சித்திரத்துக்கு உயிர் கொடுக்கவில்லை.

கனவுத் திரைப்படம் பிறந்தது

இறுதியாக அரும்பாடுபட்டு ஒரு கதையை வடித்ததுடன் அதனைப் பெரும் எதிர்பார்ப்புடன் வாசனிடம் கொண்டு போனார்கள். வழக்கம்போல் கதையை நிராகரித்த வாசன், அதிலிருந்த ‘சந்திரலேகா’ என்ற நாயகியின் பெயரை மட்டும் உருவி ‘இதுதான் படத்தின் பெயர்’ என்று அறிவித்தார். அப்படித்தான் அடுத்த நாளே ‘சந்திரலேகா’ பட விளம்பரம் தினசரிகளை அலங்கரித்தது.

அடுத்து வந்த நாட்களில் ஜி.எம்.ரெனால்ட்ஸ் எழுதிய நாவலொன்றின் வாசிப்பு வாசனை மசிய வைத்தது. ‘இந்த இடத்திலிருந்து கதையைப் பின்னுங்கள்..’ என்று நாவலின் பக்கமொன்றைச் சுட்டிக்காட்டி உத்தரவிட்டார். அதன் பின்னர் அனுபவமிக்க ஜெமினி கதை இலாகாவினர் ஒரே வாரத்தில் சந்திரலேகாவின் கதையை நெய்தார்கள். வாசனின் கற்பனையிலிருந்த ‘சந்திரலேகா’ எழுந்து வந்து படச்சுருளுக்குள் பதியத் தொடங்கினாள்.

பிரம்மாண்டத்தின் மறுபெயர்

தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னியான டி.ஆர்.ராஜகுமாரியுடன் எம்.கே.ராதா, ரஞ்சன் உள்ளிட்ட அப்போதைய பிரபல நடிகர்கள் பலரும் படத்தில் பங்கேற்றனர். படப்பிடிப்பு பாதி வளர்ந்த நிலையில் இயக்குநர் பொறுப்பிலிருந்து டி.ஜி.ராகவாச்சாரி வெளியேற, வாசன் தோளில் கூடுதல் சுமை சேர்ந்தது. கலையை நேசிக்கும் வாசன் அந்த நெருக்கடியைச் சவாலாகவே எதிர்கொண்டார்.

திரைக்கதையில் சிலபல மாற்றங்களைச் செய்ததுடன், பல காட்சிகளைப் புதிதாகவும் படமாக்கினார். ‘சந்திரலேகா’ வளர்ந்த காலத்தில் ஜெமினி ஸ்டுடியோ 24 மணி நேரமும் இயங்கியது. நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு மாதக் கணக்கில் நடனப் பயிற்சியும், சண்டைப் பயிற்சியும் தொடர்ந்தன. வனவிலங்குகள் அடங்கிய இரண்டு நிஜ சர்க்கஸ் நிறுவனங்கள் வருடக்கணக்கில் பராமரிக்கப்பட்டன. யானைகள் போதவில்லையென இலங்கையிலிருந்தும் தருவிக்கப்பட்டன.

தமிழில் இருந்து இந்திக்கு

‘சந்திரலேகா’வுக்காகப் பணம் தண்ணீராகச் செலவானது. வாசன் தனது சொத்துக்களை விற்றும் அடமானம் வைத்தும் சமாளித்தார். தமிழில் ‘சந்திரலேகா’ (1948) வெளியாகி வெற்றி பெற்றாலும் முதலுக்கேற்ற வசூல் திரளவில்லை. பெரும் முதலீட்டினை விழுங்கிய திரைப்படத்தைத் தமிழ் திரைச்சந்தை மட்டுமே ஈடுசெய்யுமா என்ற சந்தேகம் வாசனுக்கு வந்தது. உடனடியாக இந்தி ‘சந்திரலேகா’வுக்கான பணிகளைத் தொடங்கினார். படத்தின் நீளத்தில் கைவைத்ததுடன், இந்தி ரசனைக்கு தோதான சில மாற்றங்களையும் திரைக்கதையில் உருவாக்கினார்.

அதற்கு முன்பேயும் தென்னகத்தில் உருவான இந்திப் படங்கள் வடக்கே வெளியாகியிருந்தன என்றபோதும், இந்தி ‘சந்திரலேகா’ புதிய சரித்திரத்தைப் படைத்தது. வாசனும் தனது திறமை - உழைப்பை மட்டுமே நம்பியிராது, ரசிகர்களைச் சென்று சேர்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். விளம்பர உத்திகளில் வித்தகரான வாசனின் வியூகங்களுக்கு வடக்கே வாய் பிளந்தனர். அப்போதைய முழுத் திரைப்படத்துக்கு ஆகும் இரண்டு சினிமாக்களின் செலவில், சந்திரலேகாவின் விளம்பரங்கள் மக்களைச் சென்று சேர்ந்தன.

வாரிக் குவிந்த வசூல்

வாசனின் நம்பிக்கை பொய்க்கவில்லை. தேச விடுதலை தந்த நிறைவில் இறுமாந்திருந்த நாட்டு மக்களின் மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, நம்பிக்கை ஆகிய அனைத்தும் தோய்ந்த கூட்டு மனநிலைக்கு, ஒரு கொண்டாட்டம் தேவைப்பட்டது. அந்த தேவையை, ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக ‘சந்திரலேகா’ நிறைவேற்றியது. பெரும் முரசுகளில் நடனமாதுகள் துள்ளியாடும் காட்சிகள், உக்கிரமாய் நீளும் வாள் சண்டைகள், மேற்கின் பாதிப்பிலான புதிய இசை பாணி எனத் திரைப்படத்தின் ஒவ்வொரு அம்சமும் ரசிகர்களைக் கட்டிப்போட்டன.

போட்ட முதல் பல மடங்குகளில் திரும்பியது. வசூல் மழைக்கு அப்பால் பெரும் புகழையும் ஈட்டியது. இந்தியாவுக்கு வெளியே அமெரிக்கா, ஜப்பானில் மட்டுமன்றி ஸ்காண்டிநேவிய நாடுகளிலும் நீளம் குறைக்கப்பட்ட ‘சந்திரலேகா’ மொழிமாற்றத்துடன் வெளியானது. சர்வதேசத் திரை விழாக்கள் பலவற்றிலும் பங்கேற்றது.
எஸ்.எஸ்.வாசன் படைத்த இந்த இந்தி ‘சந்திரலேகா’வின் பெரும் வெற்றியே, பாலிவுட் திரையுலகின் பொற்காலம் ஐம்பதுகளில் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டியது.

சினிமா பாலம்

‘சந்திரலேகா’ வெற்றிக்குப் பின்னர் தமிழிலும், இந்தியிலுமாக வாசனின் திரைப்படங்கள் அதிகம் வெளியாகத் தொடங்கின. அப்போது முன்னணியில் இருந்த திலீப்குமார், தேவ் ஆனந்தை இணைத்து ‘இன்சனியத்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கினார் வாசன். வைஜெயந்திமாலா - பத்மினி நடனப் புயல்களை மோதவிட்டு இந்தியில் ‘ராஜ்திலக்’ எடுத்தவர், அதையே தமிழில் ’வஞ்சிக்கோட்டை வாலிபனா’க்கினார். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தைத் தமிழ், தெலுங்கில் தயாரித்ததுடன் ‘நிஷான்’ ஆக அதை இந்தியில் இயக்கவும் செய்தார். தொடர்ந்து ‘மிஸ்.மாலினி’- ‘மிஸ்டர் சம்பத்’, ‘சம்சாரம்’- ‘சன்சார்’, ‘பாயிகம்’- ‘இரும்புத்திரை’ என தெற்கு - வடக்கு இடையே சினிமாவால் பாலம் கட்டினார்.

(வெல்வெட் வாழ்க்கை வளரும்)
படங்கள் உதவி: விகடன் குழுமம்
தொடர்புக்கு: leninsuman4k@gmail.comஎஸ்.எஸ்.வாசன்‘சந்திரலேகா’ படப்பிடிப்பில்...புகழ்பெற்ற முரசு நடனக் காட்சி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்