தரமணி 5: தடம் பதிக்க போதும்.. ஒரு படம்!

By செய்திப்பிரிவு

ஆர்.சி.ஜெயந்தன்

எண்பதுகளின் இறுதி ஆண்டுகள் அவை. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் பிஸியான நடிகராக வலம் வந்தார் கமல். ‘மூன்று முடிச்சு’, ‘16 வயதினிலே’ போன்ற கதைப் படங்களைத் தாண்டி, கமல் ஏற்ற கமர்ஷியல் நாயகன் வேடங்கள், அவரைக் ‘காதல் இளவரசன்’ ஆக்கியிருந்தன. ரஜினியோ, தமிழ், கன்னடம், தெலுங்குப் படங்களில் பிரபலமாகிக் கொண்டிருந்தார். எதிர்மறை அம்சம் நிழலாடும் கதாபாத்திரங்களில் எகிறி அடித்து முத்திரை பதித்துக்கொண்டிருந்தார்.
1974-ல் அறிமுகமாகி, நடிப்பையும் கிளாமரையும்

நம்பி பயணப்பட்ட ஸ்ரீப்ரியாவை ‘ஆட்டுக்கார அலமேலு’ வசூல் நாயகி ஆக்கியிருந்தது. ரசிகர்கள் கேட்பது இதைத்தான் என்ற தேங்கிப்போன புரிதலோடு கமர்ஷியல் ஜல்லி அடித்துக்கொண்டிருந்த பெரும்பாலான இயக்குநர்கள், இம்மூவரையும் திரும்பத் திரும்ப ‘டைப் காஸ்ட்’ செய்துகொண்டிருந்தார்கள்.

1978, அக்டோபர் 30-ம் தேதி தீபாவளி தினத்தன்று சென்னையில் இரண்டு திரையரங்குகளில் மட்டுமே வெளியாகியிருந்த ‘அவள் அப்படித்தான்’ திரைப்படம், இந்த மூன்று நட்சத்திரங்களையும் சுதந்திரமும் தற்சார்பும் கொண்ட மூன்று கதாபாத்திரங்களாகச் சித்தரித்திருந்தது. பெண்ணியம் குறித்தும் பெண்களின் முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கத் தொடங்கியிருந்த சரியான காலகட்டத்தில் வெளியான படம்தான். ஆனால், அந்தப் படம் முன்வைத்த உண்மையும் நேர்மையுமே அதற்கு எதிர்மறையான விமர்சனங்களை உருவாக்கியது.

அதிர வைத்த மஞ்சு

ஆணாதிக்க சமூகத்தால் அலைக்கழிக்கப்பட்டு, பெண்ணை வெறும் உடலாகக் காணும் ஆண்களுக்கு நடுவே, தன்னம்பிக்கையும் தெளிந்த பார்வையும் அர்த்தமுள்ள வாழ்க்கை ஒன்றுக்கான தேடலும் கொண்ட மஞ்சு, தமிழ் சினிமாவில் ‘பாவனை’கள் எவையுமற்ற முதல் பெண் மையக் கதாபாத்திரமாக ஒளிர்ந்தாள். பெண் எனத் தமிழ் சினிமா அதுவரை கட்டமைத்து வைத்திருந்த பிம்பத்தைக், கட்டுடைப்பவளாக மஞ்சு (ப்ரியா) அறிமுகமானபோது ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள்.

மஞ்சு கதாபாத்திரத்தின் தீவிரத் தன்மையை நிறுவ ‘அவள் அப்படித்தான்’ என்ற படத்தின் டைட்டில் டிசைனில் இருக்கும் எழுத்துகளை மேலிருந்து கீழாக ஒழுங்கற்ற வரிசையில் கலைத்துப்போட்டிருப்பதில் தொடங்கி இயக்குநரின் தீவிரப் படைப்பாளுமையைப் புரிந்துகொள்ள முடியும்.

மஞ்சுவின் வாழ்க்கையில் குறுக்கு நெடுக்காக வந்து செல்லும் ஆண் கதாபாத்திரங்களில், பெண்களின் மனவெளியை ஆவணப்படம் வழியாக வெளிக்கொண்டுவர முயலும் அருண் (கமல்), பெண்ணை வெறும் போகப்பொருளாகப் பார்க்கும் ஆண்களின் பிரதிநிதிபோல் வரும் மஞ்சுவின் முதலாளி தியாகு (ரஜினி) ஆகிய இருவரது உணர்வு நிலைகள், முரண்கள் ஆகியவற்றை அவற்றுக்கே உரிய இயல்புகளுடன் வார்த்திருந்தார் இயக்குநர்.

இந்த மூன்று முக்கிய கதாபாத்திரங்களும் சமூகத்தின் உதிரிகள் அல்ல என்பதை எடுத்துக்காட்ட, அவர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் எதுவொன்றையும் சரி என்றோ, தவறு என்றோ எந்த இடத்திலும் விமர்சனம் செய்து இயக்குநர் பாடம் நடத்தவில்லை. மிக முக்கியமாக தியாகு கதாபாத்திரத்தை வில்லனாகச் சித்தரிக்காத அணுகுமுறை ஒன்றே இப்படத்தின் கதாபாத்திர வடிவமைப்பு எத்தனை நேர்மையானது என்பதைச் சொல்லிவிடும்.

கோட்பாடுகளைத் தகர்த்த கூட்டுழைப்பு

சமகாலத்தைப் பிரதிபலிக்கும் கதை தேர்வு மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு, கதாபாத்திரத்தின் கடந்த காலத்தைத் திணிப்பின்றி வெளிப்படுத்திக்காட்ட பின்நோக்கு உத்தியைச் சரியான இடத்தில் பயன்படுத்திக்கொள்ளும் திரைக்கதை, தங்கள் கருத்தியல் சார்ந்து, அளவாக, ஆனால் தீர்க்கமான கதாபாத்திர உரையாடல், கதாபாத்திரங்களின் வளர்ச்சியையும் வீழ்ச்சியும் தீர்க்கமுற எடுத்துக்காட்டும் காட்சியமைப்பு, காட்சியமைப்பின் சட்டகத்தில் ஒளியையும் நிழலையும் கதாபாத்திர உணர்வு நிலைகளுக்கு திறம்படப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஒளிப்பதிவு, வெட்டித் தாவிச் செல்லும் படத்தொகுப்பு, அதுவரையிலான மரபுகளை மீறி கதாபாத்திரங்களைப் பேசவும் செயல்படவும் விடும் அளவான இசை என எல்லா வகையிலும் ஒரு புதிய அலை சினிமாவாக தனது குழுவின் கூட்டுழைப்பால் ‘அவள் அப்படித்தான்’ படத்தை உருவாக்கியிருந்தார் ருத்ரய்யா.

சேலத்திலிருந்து சென்னைக்கு

சேலம் அருகில் உள்ள ஆத்தூர் என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த ருத்ரய்யாவின் இயற்பெயர் ஆறுமுகம். இவரது தந்தை நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பெயர்போன போலீஸ் கான்ஸ்டபிள். திருச்சி ஜோசப் கல்லூரியில் இளங்கலை படித்துக்கொண்டிருந்த ஆறுமுகத்துக்குக் கல்லூரி நூலகத்தில் கிடைத்த ‘கணையாழி’ சிற்றிதழ், நவீன இலக்கிய வாசிப்பின் பெரும் வாசலைத் திறந்துவிட்டது. அதில் தி.ஜானகி ராமன், என்.எஸ்.ஜெகன்நாதன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, க.நா.சுப்பிரமணியம் ஆகியோரின் படைப்புகளை வாசித்த ஆறுமுகத்தின் சிறுகதை ஒன்று கல்லூரி ஆண்டு மலரில் வெளியானது.

சிறுகதையைப் படித்த பேராசிரியர், அவரை அரசுத் திரைப்படக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும்படி கூற, அப்பாவின் அனுமதியுடன் சென்னைக்கு வந்தார். திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் அருகில் இருந்த எஸ்.பி.குவாட்டர்ஸ் காலணியில் 25-ம் எண் அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு 1972-ம் வருடம், அரசு திரைப்படக் கல்லூரியில் ‘திரைக்கதை எழுதுதல் – இயக்கம்’ பிரிவில் சேர்ந்து பயின்றார். அவரது பாடப்பிரிவில் சக மாணவர்களாகப் பயின்றவர்களில் பின்னாளில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற கே.ராஜேஷ்வர், ராபர்ட் – ராஜசேகரன் உள்ளிட்ட பலர் உண்டு.

இலக்கியப் பரிச்சயமும், கோடார்ட், ராபர்ட் பிரெஸ்ஸான், ரோமன் போலான்ஸ்கி உள்ளிட்ட பல சர்வதேச இயக்குநர்களின் படங்களைத் திரைப்படக் கல்லூரியில் பார்த்துப் பெற்ற தாக்கமும் ருத்ரய்யா எனும் சிறந்த படைப்பாளியை உருவாகக் காரணமாக அமைந்தன. 1975-ல் திரைப்படக் கல்லூரியில் படிப்பு முடிந்து வெளியே வந்த ருத்ரைய்யாவை பாலசந்தரின் உதவியாளரான அனந்து, தனது நண்பனான கமலுக்கு அறிமுகம் செய்து வைத்தார். முதலில் தன்னை மிகவும் பாதித்த தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார் ருத்ரய்யா.

இதற்காக ஜானகி ராமனிடம் முறையாக முன்பணம் கொடுத்து அனுமதி பெற்ற ருத்ரைய்யா, தனது அறை நண்பராக வரித்துக்கொண்ட எழுத்தாளர் வண்ணநிலவனை அந்த நாவலுக்குத் திரைக்கதை, வசனம் எழுத வைத்தார். ‘அம்மா வந்தாள்’ படத்தில் அப்புவாக நடிக்க கமலும் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படம் தொடங்கப்படாமல் போக, குறுகிய காலப் படைப்பாக 3 லட்சம் ரூபாயில் ருத்ரய்யா இயக்கிமுடித்த படம்தான் ‘அவள் அப்படித்தான்’.

ருத்ரய்யாவின் கதைக்கு, அனந்து, கே.ராஜேஷ்வர், வண்ணநிலவன் ஆகிய மூவரும் இணைந்து திரைக்கதை உரையாடல் எழுத, கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா உட்பட மூன்று முன்னணி நட்சத்திரங்களும் ஊதியம் வாங்கிக்கொள்ளாமலேயே நடித்துக் கொடுத்தனர். தன்னுடன் திரைப்படக் கல்லூரியில் படித்த நல்லுசாமி, ஞானசேகரன் போன்ற நண்பர்களையே படக்குழுவில் இணைத்துக்கொண்ட ருத்ரய்யா கூட்டுழைப்பு வழியாகவே ஒரு சிறந்த திரைப்படம் உருவாகமுடியும் என்று நம்பியவர்.

‘இது வெறும் ரஷ் பிரிண்ட்தான் முழுப் படம் இல்ல’ என்று அருண் கதாபாத்திரம் வழியே தனது குரலைப் பதிந்திருப்பார் இயக்குநர் ருத்ரய்யா. தமிழ் புதிய அலை சினிமாவுக்கு ‘அவள் அப்படித்தான்’ ஒரு சிறு தொடக்கம்தான் என்று தன்னடக்கத்துடன் சொன்னவரின் முதல் படைப்பைக் கொண்டாடியிருந்தால் தமிழின் மிகச் சிறந்த ஒரு இயக்குநரின் அடுத்தடுத்த படைப்புகள் கிடைத்திருக்கும். ஆனால் அந்த அதிர்ஷ்டம் தமிழ் சினிமாவுக்கும் அதன் ரசிகர்களுக்கும் இல்லாமல் போய்விட்டது.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்