தஞ்சாவூர்க் கவிராயர்
அன்று என்னைப் பார்த்ததும் பானுமதி வித்தியாசமாகப் புன்னகைத்தார். “இன்னிக்கு உங்கள் ஊருக்குப்போய் வந்ததைச் சொல்லலாம்னு இருக்கேன்!” “எங்கள் ஊரா?” “ஆமாம் சார்! சிதம்பரம், தஞ்சாவூர், ஸ்ரீரங்கம் எல்லாம் உங்கள் ஊர்தானே?”
“அடடே.. எப்போது போனீங்க?”
என் கணவருக்கு ரங்கசுவாமி அய்யங்கார் என்று ஒரு நண்பர் இருந்தார். அவர் சீர்காழியைச் சேர்ந்தவர். பேசிக்கொண்டிருக்கும்போது என்னிடம் கேட்டார்.
“அம்மா சிதம்பரம் போயிருக்கிறீர்களா?”
“போனதில்லையே!”.
அவருக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.
“என்னம்மா, நீங்க இப்படி கிணற்றுத் தவளையா இருக்கீங்க! வீடு, வீட்டை விட்டால் ஸ்டுடியோ என்று போய்கிட்டிருந்தா எப்படி?”
அவர் சொன்னது சரிதான்.
திருப்பதியை விட்டால் எந்தத் திருத்தலங்களுக்கும் நான் போனது கிடையாது. ஏ.வி.எம்மின் ‘அன்னை’ படத்துக்காக ராமேஸ்வரம் வரை போனேன். அவ்வளவுதான்.
‘சரி போகட்டும். நீ சரின்னு சொல்லு... ரங்கசாமியிடம் சொல்லி தென்னிந்தியாவில் உள்ள கோயில்களைப் பார்த்துவர ஒரு டூர் அரேஞ்ச் பண்ணிடலாம்’ என்று என் கணவரும் சொன்னார்.
அதன்படி நாங்கள் போக வேண்டிய புனித ஸ்தலங்களுக்கான புரோகிராம் தயாரித்தோம். சிதம்பரம் நடராஜர் கோவில், வேளாங்கண்ணி மேரிமாதா, நாகூர் தர்கா, தஞ்சாவூர், திருவையாறு இப்படிப் போயிற்று எங்கள் பட்டியல்.
காவேரிக் கரையில் அமர்ந்து..
திருவையாறு ஸ்ரீதியாகராஜ சுவாமி சமாதியில் காவேரிக் கரையோரம் உட்கார்ந்தபடி ‘பலுகவேமி தெய்வமா, பருவநவ்வேதி நியாயமா?’ என்ற அவரது (வரவிக்ரேயம் படத்தில் நான் பாடிய பாடல்) கீர்த்தனையைப் பாடினேன். சூரியன் அஸ்தமன நேரம். காவேரி தங்கம்போல மின்னியது. தலைக்குமேல் நாரைகள் பறந்துபோயின. காற்று காவிரியில் குளித்துவந்து என்மீது மோதியது.
காவேரிக்கும் இசைக்கும் வேறுபாடே கிடையாது. பிரம்மாண்டமான இசையின் பிரவாகமாய் ஓடுகிறாள் காவேரி. காவிரியில் நானும் மூழ்கி மிதப்பதுபோல் ஓர் உணர்வு. என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். இந்த உடலைவிட்டு வெளியேறி நானே காவேரியாய் நகர்கிறேன். நானே மேகமாய், அந்திவேளையின் ரகசியமாய், குயிலாய், பிரபஞ்சத்தின் கானமாய்ப் பாடிக்கொண்டிருக்கிறேன்.
‘ராணி! ராணி! இருட்டிவிட்டதே போகலாமா?’ என்றக் கணவரின் குரல் கேட்டது. கரையோரப் பரிசலில் இருந்துஇறங்கிய ஓடக்காரன்தான் எத்தனை அழகு. இவன்யார்? தியாகையர் போலவே... உடம்பெல்லாம் காவிரியாய் சொட்டச் சொட்ட நடந்துவரும் இவன் கையில் தம்பூராவா? இல்லை! இல்லை! மீன்வலை!
“இங்கேயே இருந்திடலாம்னு தோணுது” “சரியாப் போச்சு. கிளம்பு சீக்கிரம்”.
பானுமதி பெருமூச்சு விட்டு நிறுத்தினார்.
“உங்க சொந்த ஊர் எது சார்?” பானுமதி கேட்டார்.
நான் ‘திருவிடைமருதூர்’ என்றேன்.
“ஆ..!அங்கேகூட போயிருந்தோம்! மகாலிங்க ஸ்வாமிதானே? அப்பப்பா..! எவ்வளவு அகலமான தெருக்கள்!” “உங்கள் ஞாபகசக்தி ஆச்சர்யமாக இருக்கிறது” என்றேன்.
சினிமாவுக்கு உடல்நலக் குறைவு
தஞ்சைப் பெரியகோயில், சரஸ்வதி மஹால் நூலகம் எல்லாம் போனோமே! உங்க கிராமங்களின் விவசாயியும் எங்கள் ஊர் விவசாயி போலவே இருக்கார்! அதாவது பரமஏழை! ஒரு வகையில் பார்த்தா அதுவே நல்லாதான்இருக்கு... கணவனும் மனைவியும் வாத்துக்களை மேய்ச்சுகிட்டு போனாங்க. அவங்க முகத்தில் என்ன ஆனந்தம்!
பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் காரில் போகும்போது குளத்தோரம் உட்கார்ந்து மீன் பிடிக்கிற ஏழை மீனவனைப் பார்த்துப் பொறாமைப் பட்டாராம் – அப்படி இருந்தது என் நிலைமையும்” என்றார். சிரித்தேன்.
“சரி என்கதைக்கு திரும்பறேன்... ‘அன்னை’ படத்துக்குப் பிறகு ‘பத்து மாத பந்தம்’ படத்தில் நடித்தேன். இந்தப் படத்தில் ஆங்கிலத்திலும் கர்னாடக இசையிலும் பாட்டுக்கள் பாடியிருப்பேன். குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய படம். தெலுங்கில் ‘மாங்கல்ய பலம்’ என்றபெயரில் எடுத்தார்கள். அது சரியாகப் போகவில்லை. பிறகு ‘ஸ்வாதி நட்சத்திரம்’ போன்ற சில தமிழ்ப் படங்களில் நடித்தேன்.
இந்த சமயத்தில் சர்வதேச மகளிர் தினத்தில் என் எழுத்தாற்றலையும், நடிப்பாற்றலையும் பாராட்டி ஆந்திரப் பல்கலைக்கழகம் எனக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 1975 வாக்கில் மனசுக்கு கஷ்டமான சம்பவங்கள் நடந்தன. அப்போது ஸ்டுடியோ உரிமையாளர்கள் பலருக்கும் அவற்றை வைத்து நிர்வகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. சிலர் தங்களின் ஸ்டுடியோக்களை கோடவுன்களாக மாற்றி வாடகைக்கு விட்டனர். நாகிரெட்டியார் ஸ்டுடியோவின் சில தளங்களை இடித்துவிட்டு அங்கு விஜயா மருத்துவமனையைக் கட்டினார்.
ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பணியாளர்கள் வேலைநிறுத்தம். எங்கள் ஸ்டுடியோவும் லேஆஃப் அறிவிக்கவேண்டிவந்தது. ஏவி.எம். குடும்பத்தார் தங்கள் பங்களாவை விற்று விட்டு எட்வர்ட் எலியட்ஸ் சாலைக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.
அவர்கள் எங்களது நெருங்கிய நண்பர்கள். ஒவ்வொரு வருஷமும் நவராத்திரி தினத்தில் எங்கள் வீட்டில் விமரிசையாக கொலு வைப்போம்.
வீடே கொண்டாட்டமாக இருக்கும். அவர்கள் போனதில் எங்களுக்கு ரொம்பவே மனசு கஷ்டப்பட்டது. மாம்பலம் வீட்டுக்குப் போய்விடலாமா என்று என் கணவர் கேட்டார். “அதன்பிறகு வைத்திராமன் தெருவில் இருந்த எங்கள் மாம்பலம் வீட்டுக்கு வந்துவிட்டோம்” என்று கூறி முடித்தார் பானுமதி.
அன்பின் அடையாளம்
மாம்பலம் வீட்டிலும் பானுமதி அம்மையார் கொலு வைத்து நண்பர்களை அழைப்பார். அவரே பொம்மைகளைத் துடைத்து கொலுப்படிகளில் வைத்து அழகு பார்ப்பார். குழந்தை மாதிரி குதூகலிப்பார். “ஒருமுறை உங்கள் மனைவியையும் குழந்தைகளையும் அழைத்து என் கண்களில் காட்டக் கூடாதா?. நவராத்திரி வைபவத்துக்கு அவர்களை அழைத்து வாருங்கள் ப்ளீஸ்” என்றார்.
எத்தனை பெரிய ஆளுமை! தனது கீரிடத்தைக் கழற்றி வைத்துவிட்டு, என்னிடம் அன்போடு கெஞ்சுகிறார். உடனே சம்மதித்தேன். ஆனால் என் மனைவியால் வரமுடியாமல் போய்விட்டது. அதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் “எப்போது அவருக்கு நேரம் அமைகிறதோ அப்போது அழைத்துவருங்கள்” என்றவர், என் மனைவிக்கு ஒரு பரிசுப் பொட்டலத்தைக் கொடுத்தார்.
“நான் கொடுத்தாக உங்க மனைவிக்கு கொடுங்கள்” என்றார்.
நானும் என் மனைவியும் பரிசுப் பொட்டலத்தைப் பிரித்தோம்.
ஓர் அழகான, புத்தம்புது சுங்கடி புடவை. பொடிக் கட்டங்களில் காபிப் பொடி கலரில் அழகாக மடிக்கப்பட்டு காட்சி தந்தது!
(அடுத்த வாரம் நிறைவடையும்)
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
படங்கள் உதவி:ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago