எஸ்.எஸ்.லெனின்
“எல்லோரும் கிருஷ்ணா ராமா என்று பாடினால் இவன் சைகல் பாடல்களைப் பாடினான். கேட்போர் மனத்தை அவை எங்கெங்கோ அழைத்துச் சென்றன. அதிலும் ‘பாபுல் மோரா’ என்ற பாட்டைப் பாடும்போது மனம் அன்று வரை அறியாத எல்லைகளுக்கு இழுத்துச் செல்லப்படும்.
என் மூடிய கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது. வேறு பலரும் அவர்களையறியாது கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தார்கள்” அசோகமித்திரன் சிறுகதை ஒன்றில் இவ்வாறு சிலாகிக்கப்படும் சைகல் என்பவரே, இந்தியத் திரைப்படங்களின் முதல் சூப்பர் ஸ்டாராக அறியப்படுகிறார்.
இந்தி சினிமா உலகில் நாற்பதுகளின் உச்ச நட்சத்திரமான கே.எல்.சைகலுக்குத் திருப்புமுனை தந்தது ‘தேவதாஸ்’ திரைப்படம். படத்தை இயக்கியவர் இந்திய சினிமாவில் முத்திரை பதித்த பி.சந்திர பரூவா. ‘தேவதா’ஸால் வெளிச்சம் பெற்ற இந்த இருவரின் வாழ்க்கையும், ‘தேவதாஸ்’ பாணியிலேயே இறுதி காலத்தைத் தேடிக்கொண்டது, திரையில் இடம்பெறாத தனி சோகக் கதை.
கல்கத்தாவில் களம் கண்ட பரூவா
சலனப் படங்களின் காலத்தில் பம்பாய்க்கு நிகராக கல்கத்தாவும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. பின்னாளில் சத்யஜித் ரே, மிருனாள் சென், ரித்விக் கட்டக் போன்றோரால் இந்திய சினிமா சர்வதேசக் கவனம் பெறுவதற்கு வங்காளிகளின் இந்த ஆரம்பக் கால ஆர்வமும் ஒரு காரணம். தொழில்நுட்பத்திலும், கதையாடலிலும் இந்திய சினிமாவின் முன்னோடி மாற்றங்களை உருவாக்கிய பி.சந்திர பரூவா இங்கிருந்துதான் ‘தேவதாஸ்’ திரைப்படத்தை உருவாக்கினார். அஸ்ஸாமில் பிறந்து, படிப்புக்காக கல்கத்தா வந்தவர் பரூவா. சாந்தி நிகேதனில் பல ஆண்டுகள் தங்கியிருந்து தாகூருடன் நெருக்கமானதில் பரூவாவும் கவி மனம் கொண்டார்.
அவரது எழுத்தாற்றல் சலனப் படங்களுக்குக் கதை அமைக்கச் செய்தது. அப்படியே பல படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தபோது, பெரும் ஜமீன்தாரான தந்தையின் எதிர்ப்பையும் மீறி பரூவாவை சினிமா ஆர்வம் பற்றிக்கொண்டது. அறுவை சிகிச்சை ஒன்றைக் காரணமாக்கிப் பெரும் தொகையுடன் ஐரோப்பிய நாடுகளில் வலம் வந்து சினிமா அடிப்படைகளைக் கற்றார். தாகூரின் பரிந்துரைக் கடிதம் மூலம் பாரிஸில் எம்.ரோஜர்ஸ் என்பவரிடம் ஒளிப்பதிவுக்கான பயிற்சிகளைப் பெற்றார். லண்டனில் ஒளிப்படக் கருவிகளை வாங்கிக்கொண்டு கல்கத்தா திரும்பியவர், தனது பெயரில் சினிமா நிறுவனத்தை நிர்மாணித்தார்.
பரூவா பரிசோதனைகள்
பரூவா தயாரித்து நடித்த ‘அப்ராதி’ திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமானது. அதுவரை சூரிய ஒளியைப் பிரதிபலிக்கச் செய்தும், வெறுமனே விளக்குகளை எரியூட்டியும், ஒளி – நிழல் விகிதங்கள் குறித்த புரிதல்கள் இல்லாமலே படமெடுப்பார்கள். முதன்முறையாக ஒளிப்பதிவின் அடிப்படையிலான செயற்கை மின்னொளியில் முழுமையாகத் தயாரான திரைப்படமானது ‘அப்ராதி’. அதற்கான பரிசோதனை முயற்சிகளில் சுமார் 50 ஆயிரம் அடி நெகட்டிவ் படச்சுருளை அப்போதே பரூவா பாழாக்கினார். ஆனால், இந்திய சினிமாவுக்கு பரூவாவின் முயற்சிகள் பாடமாயின.
தேவதாசும் பரூவாவும் உருவானார்கள்
நியூ தியேட்டர்ஸின் முதல் வெளியீடான ‘ரூப்லேகா’வில் முதன்முறையாக ‘ஃபிளாஷ்பேக்’ உத்தியை பரூவா அறிமுகம் செய்தார். அது ஒன்றே படத்தைப் பேச வைத்தது. அந்த வரிசையில் குளோசப், மாண்டேஜ் எனத் தொடங்கிய பல உத்திகளால் அடுத்த படத்தை அவர் மெருகேற்றினார். பிரபல வங்க எழுத்தாளர் சரத் சந்திர சதோபாத்யாய் எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்ட ‘தேவதாஸ்’ (1935) என்ற அந்தப் படம் வங்காளத்தில் உருவானபோது.
அதில் தான் தேவதாஸ் வேடமேற்றதுடன் அப்போதுதான் மணம் முடித்திருந்த மூன்றாம் மனைவியான நடிகை ஜமுனாவை பார்வதியாக்கினார். ஆழமான கதை, அதைத் திரைமொழியாக்கியதில் காட்டிய புதுமைகள் காரணமாக தேவதாஸை வங்காளிகள் கொண்டாடினார்கள். உடனே சுடச்சுட இந்தியிலும் தேவதாஸை பரூவா உருவாக்கினார். வங்காள தேவதாஸில் சிறுவேடத்தில் பங்கேற்ற கே.எல்.சைகல் என்ற இளைஞரின் குரல் வளத்தைக் கண்டுகொண்ட பரூவா, அவரை இந்தி தேவதாஸ் ஆக்கினார்.
குரலால் கவர்ந்த சைகல்
குந்தன் லால் சைகலுக்கு பூர்விகம் ஜம்மு. பால்யத்தில் தனது அம்மாவுடன் சேர்ந்து பஜனைக்கூடங்களில் பெரும்பாலான நேரத்தைக் கழித்ததில் அவருக்குக் கேள்வி ஞானமாகவே இசை ஊறியிருந்தது. எப்போதும் எதையேனும் பாடிக்கொண்டே இருப்பார். அதற்காகவே ரயில்வே பணியைத் துறந்து விற்பனைப் பிரதிநிதியானார். லாகூருக்கும் கல்கத்தாவுக்கும் இடையிலான நீண்ட பயணங்கள், பல கலாச்சாரங்கள், கதைகளை உள்ளடங்கிய பாடல்களை அறிந்துகொள்ள உதவியது. கல்கத்தா சினிமாவில் தலைகாட்டும் முன்பே அவரது பாடல்கள் பேசப்பட்டன.
முதல் சூப்பர் ஸ்டார்
சோகம் தோய்ந்த குரலும் நெற்றியில் புரளும் கேசமுமாக சைகலை தேவதாஸாகவே ரசிகர்கள் தரிசித்தார்கள். நடிப்புக்கு அப்பால் இந்திய விடுதலைக்குப் பின்னர் உருவாகிய முதல் தலைமுறைப் பின்னணிப் பாடகர்களுக்கு குருவாகவும் சைகல் உருவானார். முகமது ரஃபி, லதா மங்கேஷ்கர், கிஷோர் குமார், முகேஷ் என சைகலின் பாதிப்புடனே பலரும் தங்களது பாடல் கணக்குகளைத் தொடங்கி, பின்னாளில் தங்களுக்கான தனித்துவத்தை உருவாக்கிக் கொண்டார்கள்.
தொடர்ந்து பாடலின் மூலமே பல படங்களில் பிரபலமாகி இந்தி சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராகக் கவுரவம் பெற்ற சைகல், பாட்டுக்காகச் சகல மெனக்கிடல்களையும் செய்வதுண்டு. அப்படித்தான் ‘ஸ்ட்ரீட் சிங்கர்’ படத்தில் கேமரா சட்டகத்துக்கு அப்பால் இசைக்குழுவினர் பின்தொடர, நடந்தபடியே பாடி ‘லைவ்’வாகப் பதிவானதுதான், முதல் பத்தியில் அசோகமித்திரன் எழுத்துக்களில் இடம்பிடித்த ‘பாபுல் மோரா’ பாடல்.
தேவதாஸாகவே கரைந்த படைப்பாளிகள்
சைகலும் பரூவாவும் ஒரே வயதினர். தேவதாஸ் பாதிப்பில் சைகலும் குடிக்கு அடிமையானார். மது அருந்தாது குரல் எழும்பாது என்ற நிலையிலும் பட வெற்றிப் படங்களை சைகல் கொடுத்து வந்தார். இதனால் 42 வயதிலேயே அவரைக் குடி பலிவாங்கியது. வங்காள தேவதாஸாக நடித்தவரும், இந்தி தேவதாஸை உருவாக்கியவருமான பரூவாவும், சைகலைப் போன்றே மதுவில் விழுந்ததில் 48 வயதிலேயே இறந்தார்.
தொடரும் தேவதாஸ்கள்
‘தேவதாஸ்’ கதை தலைமுறைகள் தாண்டியும், பல வடிவங்களில் படமாவது தொடர்கிறது. பரூவாவுக்கு முன்னரே சலனப் படங்களின் வரிசையில் 1928-ல் முதல் ‘தேவதாஸ்’ திரைப்படமானது. தனது வங்க, இந்திப் பதிப்புகளைத் தொடர்ந்து அஸ்ஸாமி மொழியிலும் தேவதாஸை பரூவா உருவாக்கினார்.
தொடர்ந்து பிமல்ராய் இயக்கத்தில் திலீப்குமார் தேவதாஸாகத் தோன்றும் திரைப்படம் 1955-ல் வெளியானது. சஞ்சய்லீலா பன்சாலியின் காவிய முயற்சியில், ஷாருக் கான், ஐஸ்வர்யாராய், மாதுரிதீட்ஷித் நடிப்பிலான ‘தேவதாஸ்’ 2002–ல் உருவானது. முன்னதாக தர்மேந்திரா நடிப்பில் குல்ஸார் மேற்கொண்ட 1970-ன் ‘தேவதாஸ்’ பாதியிலே முடங்கிப் போனது.
முந்தைய ‘தேவதாஸ்’கள் பாதிப்பின்றி, நேரிடையாக சரத் சந்திரரின் கதை மாந்தர்களை நவீன நடப்புலகில் உலவவிட்ட காதலும் காமெடியும் கலந்த, அனுராக்காஷ்யபின் ‘தேவ்-டி’(2009) ரசிகர்களால் பெரும் வரவேற்பு பெற்றது.
பாலிவுட்டுக்கு அப்பால் தமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் ‘தேவதாஸ்’ உருவானது. வங்காள சினிமா பலமுறை பதிப்பித்ததுடன், ஆண் -பெண் கதாபாத்திரங்களை இடம் மாற்றியும் வேறு பல கோணங்களிலும் ‘தேவதா’ஸை படமாக்கி பெருமிதம் கொண்டிருக்கிறார்கள். பங்காளி தேசங்களான பாகிஸ்தான் (1965, 2010), பங்களாதேஷிலும் (1982, 2013) தலா இருமுறை படமான பெருமை ‘தேவதா’ஸுக்கு உண்டு. இவை தவிர, தேவதாஸ் பாதிப்பில் வேறுபல முலாம்களுடன் உருவான ‘அர்ஜுன் ரெட்டி’ போன்ற திரைப்படங்களும் தொடர்ந்து வெளியாகின்றன.
(வெல்வெட் வாழ்க்கை வளரும்)
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
29 mins ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago