தெருவுக்கொரு திரைப்படப் பள்ளி இயங்கும் காலத்தில் வாழ்கிறோம். பணமும் இடமும் கைவசமான எவரும் ஒரு திரைப்படப் பள்ளியைத் தொடங்கி நடத்த முடியும் என்பது இன்றைய நிலை.
ஆனால் சலனப் படக் காலத்தில், படச்சுருளில் உருவங்களை எப்படிப் பதிவுசெய்வது என்பதைக் கற்றுக்கொள்ள, மதராஸில் வாழ்ந்த நம் திரை முன்னோடிகள் லண்டன் ஸ்டுடியோக்களுக்குச் சென்றார்கள். தமிழ் சலனப் படங்களின் தந்தையான ஆர்.நடராஜ முதலியார், ஒளிப்பதிவை முறையாகக் கற்றுக்கொள்ள, மராட்டியத்தின் புனேவுக்குச் சென்றார்.
தங்களுக்கான சலனப் படங்களை இந்தியர்கள் சுயாதீனமாக உருவாக்குவார்கள் என்பதை வெள்ளையர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆழ்ந்த விருப்பமும் ஈடுபாடும் கொண்டு உருவாக்கிய படங்களை மக்களுக்குத் திரையிட்டுக்காட்ட ஆட்சியாளர்களின் அனுமதிக்காக அவர்கள் கெஞ்சிக்கொண்டு இருக்கவில்லை.
சுதேசிகளின் சலனப்பட முயற்சிகளால் ஆங்கிலேயர்கள் எரிச்சல் அடைய இன்னொரு காரணமும் இருந்தது. குரல் எழுப்பாத சலனப் படங்கள் என்றபோதும், அவற்றில் புராண நாடகங்களே பதிவு செய்யப்பட்டபோதும், இடைச் செருகலாகச் சுதந்திரப் போராட்டக் காட்சிகளை இணைத்தபோது கொதித்துப்போனார்கள்.
கட்டுப்பாடும் கல்வியும்
விளைவாக, சலனப் படங்களைத் திரையிட உரிமம், எடுக்கப்பட்ட சலனப் படங்களுக்குத் தணிக்கைச் சான்று பெறுவது ஆகியவற்றைக் கட்டாயமாக்க முடிவுசெய்தார்கள். முக்கியமாக ஆட்சியை, ஆட்சியாளர்களை விமர்சிக்கும் படங்களைத் தடைசெய்யவும் 1918-ல் ‘சினிமட்டோகிராஃப் ஆக்ட்’ எனும் சட்டத்தை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தினார்கள்.
1916-ல் ‘கீசகவதம்’ என்ற தனது முதல் சலனப் படத்தை இயக்கித் தயாரித்த நடராஜ முதலியார், அதை 1918-ல் தணிக்கை ஏதுமின்றி முதல் வெளியீடு செய்தார். ஆனால், சினிமட்டோகிராஃப் சட்டப்படி படத்தைத் தணிக்கை செய்யும்படி அவர் பணிக்கப்பட்டார். வேறு வழியின்றி, அரசின் கட்டுப்பாட்டுக்குப் பணிந்தார். அவ்வகையில் அவரது ‘கீசகவதம்’ தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட முதல் தமிழ் சலனப்படமாகி மீண்டும் 1919-ல் மறுவெளியீடு கண்டது.
இப்படித் தமிழில் சலனப்படம் தயாரான தொடக்க ஆண்டுகளிலேயே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் ‘சினிமட்டோகிராஃப்’ சட்டம். அதே சட்டத்தின் வாயிலாக 1945-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை மூலம்தான் அன்றைய பிரிட்டிஷ் மதராஸ் மாகாணத்தின் முதல் திரைப்படக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது.
அரசாணை பிறப்பிக்கப்பட்ட 1945-ம் ஆண்டு ஜூலை முதலே, அரசின் தொழில், வணிகத்துறையினால், அன்றைய மதராஸ் மாகாணத்தின் மையமாக வளர்ச்சி பெற்றிருந்த பிராட்வேயில் தென்னிந்தியாவின் முதல் திரைப்படக் கல்வி நிறுவனம் செயல்படத் தொடங்கியது வரலாறு.
‘லைசென்ஸ் இன் சினிமாட்டோகிராபி அண்ட் சவுண்ட் இன்ஜினீயரிங்’ (LC and SE) என்ற பொறியியல் படிப்பாகத் தொடங்கி, அதைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கும் விதிகளை நிர்ணயித்திருந்தது அந்த அரசாணை. அது குறித்து ‘டாக் எ டோன்’ (TALK A TONE) என்ற அந்நாளின் ஆங்கில மாத இதழ் ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
பிரிட்டிஷ் காலனியத்தின் எதிர்பாராத பலன்களில் ஒன்றாகத் தென்னிந்தியாவுக்கு ஒரு திரைப்படக் கல்வி நிறுவனம் கிடைத்தது அதிர்ஷ்டம்தான். காரணம், இன்றைக்கும் அரசால் நடத்தப்படும் மிகத் தரமான திரைப்படக் கல்வி நிறுவனங்கள் மூன்றே மூன்றுதான். அவற்றில் புனேவிலும் கொல்கத்தாவிலும் இயங்கிவரும் திரைப்படக் கல்லூரிகளை மத்திய அரசு நடத்துகிறது என்றால், தனது 75-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடக் காத்திருக்கும் பெருமைக்குரிய சென்னை திரைப்படக் கல்லூரியைத், தமிழக அரசு கண்ணும் கருத்துமாக நடத்திவருவது தனிப்பெரும் சாதனைத் தடம்.
பாதை அமைத்தவர்கள்
காலனியத் தமிழகத்தில் உழைக்கும் மக்களை வெகுவாக ஈர்த்துவந்த பேசும் படங்களை ஏற்றுக்கொள்ள மனமின்றி, மேட்டுக்குடி மக்களாலும் பல தேசியத் தலைவர்களாலும் திரைப்படக் கலை புறக்கணிக்கப்பட்ட காலம் அது. ஆனால், அதன் வலிமையை உணர்ந்தவராக விளங்கினார் காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தி. 1935-ல் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வுபெற்ற அவர், பின்னர் 1937-ல் நடந்த சென்னை மாகாணத்துக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரைக்குத் தலைமை வகித்தபோது, நாடக – சினிமா கலைஞர்களுக்கு இருக்கும் புகழை காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்துக்கு ஆதரவாகப் பயன்படுத்திக்கொண்டார்.
சுதந்திர உணர்ச்சியை வேகமாகத் தூண்ட நாடகம் மாபெரும் ஆயுதம் என்பதை உணர்ந்து, அவரே நாடகக் கலைஞராகவும் மாறினார். பின்னர், நாடகக் கலையின் வீச்சு மிகுந்த குழந்தையாக மட்டுமல்ல; சமூகச் சீர்த்திருத்தத்தையும் விடுதலை உணர்ச்சியையும் விரைவாக எடுத்துச்செல்லும் ஊடகம் எனத் திரைப்படக் கலையைக் கண்டு கொண்டார். அதனால் தமிழ்த் திரைப்படத் துறையை மேலும் வளர்த்தெடுக்க அவர் முயன்றார். அதற்காகத் திரைப்படக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்திய முதல் தமிழ்த் தலைவர் என்ற பெருமையை தீரர் சத்தியமூர்த்தி பெற்றுவிடுகிறார்.
1939-ம் ஆண்டு மதராஸ் பல்கலைக்கழகத்தின் செனட் கூட்டத்தில் பேசிய சத்தியமூர்த்தி, “திரைப்படக் கல்வியை ஒரு பாடப் பிரிவாக ஆக்க வேண்டும்.” என்று வாதிட்டார். அவரது கோரிக்கையை மேட்டுக்குடி கோமான்கள் நிறைந்திருந்த அன்றைய பல்கலைக்கழக செனட் நிராகரித்தது. ஆனால் சத்தியமூர்த்தி அசரவில்லை. “ படித்த பெண்கள் திரைத்துறைக்கு வரவேண்டும். அனைவரும் சேர்ந்து திரைப்படங்களின் தரத்தை உயர்த்த வேண்டும். அதற்கு அக்கலையின் தொழில்நுட்பங்களைத் திறம்படக் கற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகளைத் தொடங்கி வைத்து, திரைப்படக் கலை அருவருக்கத்தக்கது அல்ல என்பதை எடுத்துக்காட்டினார்.
இவை மட்டுமல்ல; தமிழ்த் திரைப்பட உலகம் சுதந்திரப் போராட்டக் களமாகவும் ஒரு பெரும் வணிகக் கேந்திரமாகவும் மாறி நின்றபோது 1938-ல் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை தோற்றுவிக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டபோது தமிழ்த் திரைப்படக் கலை தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்திக்கொண்டது.
அந்த அமைப்பின் சங்க சட்ட வரைவுகளையும் வடித்துக்கொடுத்த சத்தியமூர்த்தி, அதே 1938-ல் பம்பாயில் நடந்த இந்தியத் திரைப்பட காங்கிரஸில் (Indian cinema and motion picture congress) பங்குகொள்ளத் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களை அழைத்துச் சென்றதுடன் அம்மாநாட்டுக்குத் தலைமையும் வகித்தார்.
சத்தியமூர்த்தி திரைப்படத் துறை மீது காட்டிய முக்கியத்துவத்தின் விளைவாக அவரது திரைப்படக் கல்விக் கோரிக்கை தொடக்கத்தில் நிராகரிக்கப்பட்டாலும் 1945-ல் அதன் தேவை உணரப்பட்டு மதராஸின் பிராட்வேயில் முகிழ்ந்ததே தென்னிந்தியாவின் முதல் திரைப்படக் கல்லூரி. அதுதான் சுதந்திரத்துக்குப் பின்னர் 1964-ல் சென்னை அடையாறில் உள்ள தரமணி வளாகத்தில் தொடங்கப்பட்ட மாநில ‘பாலிடெக்னிக்’ கல்லூரிக்கு இடம்பெயர்ந்தது. ‘அடையாறு இண்ஸ்டியூட்’, ‘தரமணி இன்ஸ்டியூட்’ என்று புகழ்பெற்றிருக்கும் அக்கல்லூரியின் வரலாற்றுத் தடங்கள் வழியாக , தமிழ், இந்தியத் திரைவானில் தடம் பதித்த மாபெரும் கலைஞர்களைத் தேடிப் புறப்படுவோம்..
- (தடம் தொடரும்)
ஆர்.சி.ஜெயந்தன், தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago