வீரபாண்டிய கட்டபொம்மன் 60: தூக்கில் போடாதீர்கள்..!

By செய்திப்பிரிவு

பி.தங்கப்பன்

அசலான கலைஞர்கள் தேசத்தின் கண்ணாடிகள். அவர்கள் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பங்குபெறும் படைப்புகள் வரலாற்றை மட்டுமல்ல; வாழும் காலத்தின் சமூகத்தைப் பிரதிபலிப்பவை. காரணம், தேசப்பற்று அவர்களின் சுவாசம். அப்படிப்பட்ட அரிய தேசியக் கலைஞர்களில் முதன்மையான ஒருவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
வாழ்நாள் முழுவதும், தேசத்தின் மீது, தேசத் தலைவர்களின் மீது, மக்களின் மீது மாறாப் பற்றுகொண்டவராக விளங்கியவர்.

கலை வழியே தனக்குக் கிடைத்த பொருளின் பெரும்பகுதியைத் தேசத்துக்கும் மக்களுக்கும் திரும்பக் கொடுத்த கலைஞர் என்று தயக்கமின்றி அவரை எடுத்துக்காட்டலாம். இதைவிடவும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அது, பல வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களாக நம் கண்முன்னால் இருக்கின்றன. நம் காலத்தில், நாம் பார்த்திராத பல தேசத் தலைவர்களை, விடுதலைப் போராட்ட வீரர்களை, வரலாற்று நாயகர்களைத் தனது நடிப்பின் மூலம் திரையில் உயிருடன் எழுப்பிக் காட்டினார். அவரை ‘நடிகர் திலகம்’ எனக் கலைரீதியாக நாம் போற்றுவதற்கு இதுவே உண்மையான காரணம்.

வால்கா நதிக்கரையில் நடப்பேன்

அப்படிப்பட்ட சிவாஜி, சொந்த தேசத்தை மட்டுமல்ல; நட்பு தேசங்களையும் அதன் கலைஞர்களையும் உச்சி முகர்ந்து கொண்டாடியவர். ரஷ்யாவை ஒருபடி அதிகமாகவே அவர் காதலித்தார். சென்னையில் உள்ள ரஷ்யக் கலாச்சார மையத்துக்கும் அவருக்குமான தொடர்பு அலாதியானது. அங்கே நூலகராகப் பணிபுரிந்து வந்த என் மீது, நட்பு என்பதைத் தாண்டி அவரது குடும்ப உறுப்பினர்போல் அன்பு பாராட்டினார். அடிக்கடி என்னை அழைத்து உரையாடுவார். ஒருமுறை, ‘வால்கா முதல் கங்கைவரை’ புத்தகத்தை வாசித்திருக்கிறாயா என்று என்னிடம் கேட்டுவிட்டு, “இங்கே நமது கங்கை, காவிரியைப் பார்த்தால், அவற்றில் நீராடினால் எத்தனை சிலிர்க்கிறதோ.. வால்கா நதியின் தீரத்தை அந்தப் புத்தகம் வழியே வாசித்தபோதும் அந்தச் சிலிப்பு எனக்கு உருவானது.

ஏனென்றால், நமது நேச நாடான சோவியத் ரஷ்யாவின் மக்களுக்குச் சுவாசம் தருவது வால்கா நதியின் தீரம். அந்த தீரத்தில்தான் உலக வரலாற்றை அசைத்துப்போட்ட, மாபெரும் புரட்சியாளர் லெனின் பிறந்தார், ‘தாய்’ எனும் அற்புதப் போர்க் காவியத்தை எழுதிய உலக எழுத்தாளன் மாக்ஸிம் கார்க்கி பிறந்தார். இன்னும் எத்தனை எத்தனை ஆளுமைகளை பிரசவித்த அந்த நதியின் கரைகளில் நான் காலார நடந்து செல்ல விரும்புகிறேன். விரைவில் ரஷ்யாவுக்குச் செல்வோம். நான் சொல்லும்போது பயண ஏற்பாடுகளைச் செய். அரசின் விருந்தாளியாகச் சென்றால் ரஷ்யா முழுவதும் சுதந்திரமாக சுற்றி வர முடியாது.
நீ... நான்.. அம்மா, ராம், அவனது மனைவி ஐந்து பேர் மட்டும் சுற்றுலாப் பயணிகளாகச் சென்று வருவோம்.” என்றார்.

சோவியத் ரஷ்யாவின் அழைப்பு

ஆனால், சோவியத் ரஷ்யா ஒருங்கிணைந்த ஒன்றியமாக, மிகையில் கர்ப்பாச் சேவ் அதன் தலைவராக பொறுப்பு வகித்தபோதே அரசு விருந்தினராக சிவாஜி அழைக்கப்பட்டார். ஆனால், சிவாஜி ஓய்வில்லாமல் படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. அவரால் அப்போது ரஷ்யா செல்ல முடியவில்லை. சிவாஜியை சோவியத் அரசு விருந்தினராக அழைக்கக் காரணமாக அமைந்த படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. அது கெய்ரோ படவிழாவில் விருதுகளைக் குவித்துத் திரும்பியபின் ரஷ்யமொழி சப்-டைட்டில்களோடு அங்கே வெளியாகி ‘யார் இந்த சிவாஜி கணேசன்?’, என்று ரஷ்ய மக்களைக் கேட்க வைத்தது.

சோவியத் ரஷ்யாவின் மக்கள், நடிகர் ராஜ் கபூரின் படங்களுக்குத் தீவிர ரசிகர்கள். அவரையும் அவரது படங்களையும் இன்றைக்கும் கொண்டாடுகிறவர்கள். அவர்கள்தாம் சிவாஜியின் படங்களையும் அங்கே கொண்டாடினார்கள். அதில் ஒன்றுதான் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. அந்தப் படம் வெளியான நேரத்தில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வப் பத்திரிகையான ‘பிராவதா’ (உண்மை) இதழில் சென்னை அலுவலக ஆசிரியர் மிட்ரோவ்கின் சிவாஜியைப் பேட்டி கண்டு அதில் வெளியிட்டார். ரஷ்யமொழியில் வெளியான பேட்டி, சிவாஜி எத்தனைபெரிய கலைஞர் என்பதை சோவியத் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது.

அதன்பிறகு ‘தில்லானா மோகனாம்பாள்’ தொடங்கி, ‘முதல் மரியாதை’வரை சிவாஜியின் படங்கள் அங்கே ரஷ்யமொழி பெயர்ப்புடன் வெளிவந்தன. சிவாஜியைப் பேட்டி கண்டு எழுதிய மிட்ரோவ்கின், அந்தப் பேட்டி வெளியான 35 ஆண்டுகளுக்குப்பின் தன் மகளுடன் சென்னை வந்தபோது சிவாஜியைச் சந்திக்க விரும்பினார். அப்போது அவர்கள் இருவரையும் அன்னை இல்லத்துக்கு அழைத்துச் சென்றேன். “நீ காண விரும்பிய கிரேட் ஆக்டர் மிஸ்டர் சிவாஜி கணேசன் இவர்தான்” என்று தன் மகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இத்தனை ஆண்டுகள் கழித்து தன்னை மீண்டும் சந்தித்த பத்திரிகையாளரை கைகுலுக்கி, கட்டி அணைத்துக்கொண்டார் செவாலியே சிவாஜி.

தாயே உனக்கா..

அந்தச் சந்திப்புக்குபின் ஒருமுறை ‘இனியாவது ரஷ்யாவுக்குச் சென்றுவிட வேண்டும். விசாவுக்கு ஏற்பாடு செய்’ என்று அவர் எனக்கு அனுமதி கொடுத்திருந்த நாட்களில்தான் அவர் தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார். மக்களுக்கான தலைவர்களும் படைப்புகளில் உச்சம் தொட்ட கலைஞர்களும் நிறைந்திருந்த ரஷ்ய மண்ணில் அவரது பாதம் இறுதிவரை பதியாமல்போனது பேரிழப்புத்தான். ரஷ்ய மண்ணின் கலாச்சாரத்தையும், அதன் ஒப்பற்ற தலைவர்கள், கலைஞர்களை அவர் பெரிதும் மதித்தார்.

சிவாஜி முதன்முதலாக சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் அடிவைத்தது ‘புடோவ்கின்’ எனும் மாபெரும் ரஷ்யத் திரைப்படக் கலைஞனின் பெயரால் தொடங்கப்பட்ட திரைப்படச் சங்கத்தை (புடோவ்கின் பிலிம் கிளப்) தொடங்கி வைக்கத்தான். அதன்பின் அவர் பல விழாக்களுக்கு வந்திருக்கிறார். அவருக்குப் பிரம்மாண்ட பாராட்டு விழாவையும் சென்னையின் ரஷ்யக் கலாச்சார மையம் எடுத்திருக்கிறது. அவர் சோவியத் திரைப்படங்கள் பற்றி ஆவலோடு என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார்.

இந்தியாவுக்கு யுத்தநிதி திரட்டித் தருவதற்காக எடுக்கப்பட்ட ‘தாயே உனக்காக’ திரைப்படத்தில் கேப்டன் சுவாமி கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இந்தப் படம் ‘பாலட் ஆஃப் எ சோல்ஜர்’ (Ballad of a Soldier) என்ற புகழ்பெற்ற சோவியத் படத்தின் பாதிப்பில் உருவாக்கப்பட்டதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. கலைப் பயணமாகத் தமிழகம் வரும் ரஷ்யக் கலைஞர்களை அன்னை இல்லத்துக்கு அழைத்து, அவர்களுடன் அளவளாவி விருந்தளிப்பதைப் பெரும்பேறாகக் கருதினார் சிவாஜி. “கலைஞர்களுக்கு என் வீடு எப்போதும் திறந்தே இருக்கும். எனக்குச் சிரமம் என்று மட்டும் நினைத்துவிடாதே.” என்று கூறிய சிவாஜி, கெய்ரோ படவிழா அனுபவங்களை என்னுடன் மனம் விட்டுப் பகிர்ந்திருக்கிறார்.

“எந்தக் காட்சியில் எல்லாம் நம் சொந்தங்கள் கைதட்டி, கண்ணீர் சிந்தி, வெகுண்டு எழுந்து ரசித்தார்களோ... அங்கேல்லாம் கெய்ரோவின் ரசிகர்களும் அழுதார்கள், சிரித்தார்கள் தங்கப்பா” என்றவர், இன்னொன்றையும் பெருமை பொங்கச் சொன்னார். “சிறந்த நடிகருக்கான விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அந்த அறிவிப்பை, விழா ஏற்பாடுகளுக்கு நடுவில் அங்கும் இங்கும் துறுதுறுவென ஓடிக்கொண்டிருந்த ஒரு இளைஞன் மேடையில் கம்பீரமாக அறிவித்தான்.

அவன்தான்... மன்னிக்கனும்... அவர்தான் பின்னால் எகிப்திய, ஐரோப்பிய சினிமாவில் மாபெரும் நடிகனாக புகழ்பெற்ற ஓமர் ஷெரிஃப்” என்றார். உண்மைதான் ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ தொடங்கி ஓமர் ஷெரிஃப் எத்தனை சிறந்த படங்களில் உச்சம் தொட்டு நின்றார்!

‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாடகம் பற்றி அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து எழுத ஏராளம் இருக்கின்றன. இருப்பினும் முத்தாய்ப்பாக ஒன்று. ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாடகம் மாபெரும் வெற்றிபெற்றிருந்தபோது சென்னை ராஜா, அண்ணாமலை மன்றத்தில் அந்த நாடகத்தைக் காண சிவாஜி அனுப்பிய காரில் வந்து முதல் வரிசையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார் மூதறிஞர் ராஜாஜி.

இறுதிக் காட்சியில் கட்டபொம்மனைத் தூக்கிலிடும்போது “தூக்கில் போடாதீர்கள்.. தூக்கில் போடாதீர்கள்…” என்று தன்னை மறந்து கத்தி விட்டாராம். “ராஜாஜியின் உணர்வு நிலையை மதித்து அந்தக் காட்சியில் கட்டபொம்மனை நாங்கள் தூக்கில் போடவில்லை” என்று என்னிடம் சொன்னார் சிவாஜி. நாடகம் முடிந்ததும் சிவாஜியிடம் “திப்பு சுல்தான் கதைக்கு உன்னால் மட்டும் தான் உயிர்கொடுக்க முடியும்.. முயற்சி செய்” என்று வாழ்த்திவிட்டுச் சென்றார்.

கட்டுரையாளர்,
இந்திய - ரஷ்ய வர்த்தகசபையின்
பொதுச் செயலாளர்.
தொடர்புக்கு:
russianthangappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்