இது குறும்படங்களின் காலம். டிஜிட்டல் தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாக 4கே தரத்தில் காட்சிகளைப் படம் பிடிக்கும் ஒரு கேமரா 50 ஆயிரம் விலைக்குக் கிடைக்கிறது. இன்று யாரும் எளிதில் குறும்பட இயக்குநர் ஆகிவிடலாம். கேமராவே இல்லாவிட்டாலும் சற்று விலையுயர்ந்த ஸ்மார்ட் போன்களைக் கொண்டே காட்சிகளைப் படம்பிடித்து, அதிலேயே எடிட் செய்து முழுப் படத்தையும் தயார் செய்துவிடும் கில்லிகள்கூட நம் மத்தியில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். நின்றால், நடந்தால், விழுந்தால்கூட ஒரு குறும்படம் உங்களுக்குப் பரிமாறப்படும் சூழல் தமிழகத்தில் தற்போது நிலவுகிறது
“கடந்த பல வருடங்களாக ஆண்டுக்கு 450 தமிழ்க் குறும்படங்கள் தமிழகத்தில் தயாராகின்றன” என்கிறார் குறும்பட ஆர்வலர்களை ஒருங்கிணைத்துவரும் தமிழ்ஸ்டூடியோ அமைப்பின் நிறுவனர் அருண். ஆனால், இந்தப் படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெறும் படங்களாக இருப்பதில்லை. அவற்றில் தனித்துவமோ புதுமையோ, உள்ளார்ந்த மாற்றுப் பார்வையோ, அழுத்தமான காட்சிமொழியோ இருப்பதில்லை. ஆனால் தமிழகத்துக்கு வெளியே கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் தயாராகும் குறும்படங்கள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாகியிருக்கிறது வங்க மொழிக் குறும்படமான ‘ அகல்யா’.
நவீன அகல்யா
பதினான்கு நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர், வித்யா பாலன் நடிப்பில் ‘கஹானி’ என்ற த்ரில்லர் படத்தை இயக்கிக் கவனம்பெற்ற சுஜாய் கோஷ். கடந்த 20-ம் தேதி யூட்யூப் இணையத்தில் வெளியாகி வரலாறு காணாத வரவேற்பைப் பெற்ற இந்தியக் குறும்படமாகக் கவனிக்க வைத்திருக்கிறது.
கவுதம மாமுனிவரின் மனைவியான அகலிகையின் அழகில் மயங்குகிறான் இந்திரன். கவுதமரைப் போலவே உரு எடுத்துவந்து அவளை ஏமாற்றி அடைகிறான். தவறிழைத்தது இந்திரனாக இருந்தாலும் மனைவி அகலிகையைக் கல்லாகச் சபித்துவிடுகிறார் கவுதமர். பிறகு ராமனின் பாதம் பட்டு அகலிகை சாபவிமோசனம் பெற்றாள் என்பது ராமாயண காவியம் சுட்டும் கதை.
ஆனால் சுஜாய் இயக்கியிருக்கும் ‘அகல்யா’, புராணக் கதை மரபின் தொடர்ச்சியை விட்டுவிடாமல் அதேநேரம் தவறு செய்த இந்திரன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற மறுபார்வையை முன்வைக்கிறது. நவீன காலத்தின் அகல்யாவும் கவுதமரும் தவறிழைத்தவர்களையே தண்டிப்பார்கள் என்ற திருப்பத்தை தொன்மத்தின் துணையோடு நிறுவிப் பார்வையாளரை அலற வைக்கிறது இந்தக் குறும்படம்.
அகல்யா வங்காளக் குறும்படத்தின் நவீன மீள்பார்வையும் அதன் வசனங்களும் பார்வையாளர்களை ஈர்த்துக்கொண்டதில் ஆச்சரியமில்லை. ஆனால், தமிழில் இதுபோன்ற அசலான குறுப்பட முயற்சிகள் இல்லாமல் போனது ஏன் என்ற கேள்வியை அகல்யா குறும்படத்தை முன்வைத்து பலரிடம் உரையாடியபோது தமிழ்க் குறும்படங்களின் உண்மையான முகம் புலப்பட்டது.
நம்மிடம் இல்லாத தொடர்ச்சி
‘நஞ்சுபுரம்’, ‘அழகு குட்டிச் செல்லம்’ படங்களின் இயக்குநரும் திரை ரசனையைத் தனது வலைப்பூ எழுத்துகளின் மூலம் மேம்படுத்திவருபவருமான சார்லஸ் இதுபற்றி பகிர்ந்துகொள்ளும்போது, “நம் நாளைய இயக்குநர்களின் குறும்படங்களில் இருக்கும் முக்கியமான குறைபாடே அவர்களிடம் எந்த மரபுத் தொடர்ச்சியும் இருப்பதில்லை என்பதுதான். நம் புராணங்களை, காவியங்களை அவர்கள் தெரிந்துவைத்திருப்பதில்லை. நமக்கொரு நீண்ட கதை மரபு இருக்கிறது. அது தெரியாவிட்டால் மாய யதார்த்தம் (மேஜிக் ரியலிசம்) போன்ற எந்தப் புது முயற்சியையும் திரையில் எளிய காட்சிப் படிமங்களாகக் காட்சிப்படுத்த முடியாது.
சுஜாய் கோஷ் இயக்கிய இந்தக் குறும்படத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால்கூட, ராமாயணம் தெரிந்திருக்க வேண்டும். ஒரு புராணத்தை உடைத்து மீண்டும் மறு உருவாக்கம் செய்ய வேண்டுமானால் நிச்சயம் அதை ஆழமாகப் புரிந்துவைத்திருக்க வேண்டும். அந்த போலீஸ் அதிகாரியின் பெயர் இந்திரன், கணவரின் பெயர் கவுதம் சாது, அழகிய மனைவி அகல்யா. அதே புராணப் பெயர்கள்தான், ஆனால் கதை தலைகீழாக்கப்பட்டுள்ளது. இங்கே இந்திரன் ஒரு அப்பாவி. ஒரு கணம் சபலப்படும் அவன் சிறைப்படுகிறான்.
அந்த ஒரு நிமிடச் சபலத்தின் நவீன காலத் தண்டனையிலிருந்து அவனால் தப்ப முடியவில்லை. குறும்படமெடுக்கும் இளைஞர்கள் இதுபோன்ற பிறமொழிப் படங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் படம் கிளாஸிக் தன்மையுடன் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால், உங்களுக்கு கிளாஸிக்குகள் தெரிந்திருப்பது அவசியம். மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக நம் கதை மரபைத் தெரிந்துகொண்டு அதன் தொடர்ச்சியாகக் கதைகளை உருவாக்கும்போதுதான் தமிழ்க் குறும்படங்கள் ஆழமாகவும் அழுத்தமாகவும் அழகாகவும் அமையும்” என்று கூறுகிறார்.
குறும்படம் ஒரு நுழைவுச் சீட்டு
சௌமித்ர சட்டர்ஜி, ராதிகா ஆப்தே போல இங்கே எடுக்கப்படும் தரமான குறும்பட முயற்சிகளில் பிரபலமான நட்சத்திரங்கள் நடிக்கத் தயாராக இருப்பதில்லை என்பது ஒருபுறம் இருக்க, எடுத்துக் குவிக்கப்படும் தமிழ்க் குறும்படங்கள் ஏன் மாற்று முயற்சிகளாக இருப்பதில்லை என்றபோது காரணத்தையும் களநிலவரத்தையும் விளக்கினார் தமிழ் ஸ்டூடியோ அருண்.
“தமிழ் சினிமாவில் கூட சில புதிய முயற்சிகளைப் பார்க்க முடிகிறது. ஆனால் தமிழ்க் குறும்பட உலகம் என்பது உள்ளடக்கம், வடிவம் இரண்டிலுமே மிகவும் பலகீனமாக ஊடகமாக இருக்கிறது. ஒரு குறும்படம் எடுத்தால் அதை ஒரு தயாரிப்பாளரிடம் காட்டி சினிமா இயக்க வாய்ப்பு பெறும் ஒரு நுழைவுச்சீட்டாகவே அதைப் பார்க்கிறார்கள்.
அதனால் தமிழ் வணிக சினிமாவில் அழுக்குகளைப் பிரதியெடுப்பவையாகவே இங்கே தயாராகும் குறும்படங்கள் இருக்கின்றன. அதேநேரம் தமிழில் அபூர்வமான சில குறும்பட முயற்சிகளும் இல்லாமல் இல்லை. ஆனால், அதுபோன்ற முயற்சிகள் இங்கே போதிய கவனம் பெறுவதில்லை. தரத்துடன், புதிய முயற்சிகளாகவும் அமையும் குறும்படங்களால் உலக அளவில் சுமார் 520 போட்டிகளில் கலந்துகொண்டு பத்து லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும். ஆனால், தற்போது குப்பையாக மலிந்து கிடக்கும் தமிழ்க் குறும்படங்களில் சல்லடைபோட்டு சலித்து எடுத்தால் அவற்றில் சில குறும்படங்களே தேறலாம்” என்கிறார்.
தமிழ்க் குறும்படங்கள் இத்தனை மோசமான தரத்துடன் உருவாவது ஏன் என்றால், “இங்கே வாசிப்பு என்பதே இல்லை. தொழில்நுட்பத்தின் மீது காட்டும் ஆர்வம் வாசிப்பின் மீது இல்லை. அதேபோல், கதாபாத்திரங்களை வலுவாக வடிவமைக்க சக மனிதர்களைக் கூட இவர்கள் கூர்ந்து கவனிப்பது இல்லை” என்கிறார் அருண்.
இன்று தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளைச் செய்பவர்கள் குறும்படம் வழியாக வந்தவர்களாக இருக்கிறார்களே என்று கேட்டால் “அவர்கள் இரண்டு படங்களோடு பின்தங்கிவிடும் நிலை இங்கே இருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் ‘மாரி’ என்ற மோசமான படத்தை இயக்கிய பாலாஜி மோகன். குறும்படம் வழியே சினிமாவுக்கு வருவது தவறில்லை. ஆனால், ஆழமான அடித்தளத்துடன் வருபவர்களால்தான் புதிய, தரமான முயற்சிகளைத் தர முடியும்” என்கிறார் அருண்.
விசுவாசம்
சமீபத்தில் தமிழில் வெளியான ஒரு குறும்படம் ‘விசுவாசம்’. நவீன இலக்கியச் சூழலில் கொங்கு மண்டல வாழ்க்கையைத் தொடர்ந்து சிறுகதைகளாக எழுதிவரும் என். ராமின் சிறுகதையைக் குறும்படமாக இயக்கியிருக்கிறார் மணிபாரதி துறையூர். சிறுகதையின் ஆன்மா கெட்டுவிடாமல் அதேநேரம் காட்சிமொழியில் அந்தக் கதையை இடம்பெயர்த்த நேர்த்தியைச் சிறுகதையாசிரியர் என். ராமே பாராட்டுகிறார். தமிழ்க் குறும்பட உலகுக்கு குறைந்தபட்சம் இதுபோன்ற முயற்சிகளாவது உடனடித் தேவை.
காண: அகல்யா குறும்பட இணைப்பு கீழே
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago