தினம்தோறும் சூரியன் அஸ்தமிக்கிறது. மறுநாள் உதிக்கிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பழகிப்போன விஷயம் தான். ஆனால், ஒரே ஒரு நாளில் மட்டும் இந்தச் சாதாரண நிகழ்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறிவிடுகிறது. அதுதான் டிசம்பர் 31 இரவுக்குப் பிறகு ஜனவரி முதல் தேதியில் விடிகிறதே - அன்றுதான்.
புதிய ஆண்டு ஒன்றின் தொடக்க நாள் அல்லவா? புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வதும், புதிய உறுதிமொழிகளை மேற்கொள்வதுமாக வாழ்க்கை எத்தனை உற்சாகமாகத் தொடங்குகிறது! ஏன் இப்படி?
நம்பிக்கை...
கடலில் தத்தளிப்பவனுக்கு ‘லைஃப் ஜாக்கெட்’ போல தோல்விகளிலும் துன்பங்களிலும் உழன்றுவரும் மனிதருக்குப் புத்தாண்டு தினத்தில் தொடங்கி, அடுத்து வரும் அனைத்து நாட்களும் கண்டிப்பாக நல்லவற்றையே கொண்டுவரும் என்ற நம்பிக்கையை இந்த விடியல் ஏற்படுத்துகிறதல்லவா? அதனால்தான் இத்தனை கொண்டாட்டங்கள், கேளிக்கைகள், சிறப்பு வழிபாடுகள் எல்லாமே. புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முன்னிறுத்தி திரைப்படங்களும் பாடல் காட்சிகளை அமைத்திருக்கின்றன.
அவற்றில் முதலிடத்தில் நிற்கிறது ஒரு பாடல். 1971-ல் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘நூற்றுக்கு நூறு’ படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ‘மெல்லிசை மாமணி’ வி.குமார். இசையரசி பி. சுசீலாவின் தேனினுமினிய குளுமைக் குரலில் 'நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வரவேண்டும்’ என்று பாடிய என்றும் புதிதாய்ப் பிறந்துகொண்டே இருக்கும் பாடல்தான் அது.
கவிஞர் வாலிதான் எத்தனை அருமையாக வார்த்தைகளைக் கோத்துக் காட்சி அமைப்பைத் தனது வரிகளால் மெருகேற்றி இருக்கிறார்! முழுக்க முழுக்க மேற்கத்திய சங்கீதத்தின் ஆளுமையில், அதேநேரம் கீரவாணி ராகத்தின் அடிப்படையில், எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத வகையில் வி. குமார் அவர்கள் பாடலை அமைத்திருக்கிறார். அதனாலோ என்னவோ கே. பாலசந்தரும் 'பிளாஷ் பாக்' உத்தியைக் கையாண்டு இந்தப் பாடல் திரும்பத் திரும்ப மூன்று முறை இடம்பெறும் வகையில் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
கதைப்படி புத்தாண்டு இரவில் தனது மனம் கவர்ந்தவனின் வருகையை எதிர்பார்த்து ஒரு பெண் பாடுவதாகக் காட்சி அமைப்பு. மேலோட்டமாகப் பார்த்தால் புத்தாண்டை வரவேற்பது போலவே பாடல் இருக்கும்.
'பன்னிரண்டு மணியளவில்
குளிர் பனிவிழும் நள்ளிரவில்
கண்ணிரண்டில் மலர்ந்திடவே
இன்பக் கனவுகள் வர வேண்டும்'
தொடர்ந்து 'ஹாப்பி.. ஹாப்பி.. நியூ இயர்...'
என்ற மேற்கத்திய 'ஸோப்ரானோ' வகையைச் சேர்ந்த கோரஸ் - பெண்களின் குரலில்...
இப்போது புதுவருடத்தை வரவேற்கிறாள் அந்தப் பெண்.
'நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
நீ வர வேண்டும்.
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும்.
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்துவரும் புதுவருடம் புதிய பாட்டிலே'
அடுத்த சரணத்தில் அவனுக்கும் செய்தி சொல்கிறாள் அவள்..
‘மாதா கோவில் மணியோசை நம்மைப் போற்றும் அருளாசை
தேவா நீயும் வா.
உருகும் மெழுகில் ஒளி உண்டு ஒளியின் நிழலில் உறவுண்டு
உயிரே நெருங்கி வா.
வருங்காலம் பொன்னாக வாழ்நாளில் ஒன்றாக
எதிர்பார்க்கும் நேரத்தில் எனைத்தேடி வாராயோ..
நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம்’
- இந்தச் சரணத்தின், கடைசி இரு வரிகளில்தான் எத்தனை ஆழம்! வருகிற காலம் பொன்னான காலமாக என் வாழ்நாளில் வர வேண்டும் எப்போது? எப்போது வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறேனோ அப்போதே வர வேண்டும்! தாமதமாக வந்து பயனில்லை. நல்லதே நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்காத நாள் என்று ஏதாவது ஒன்று உண்டா என்ன? எல்லா நாளிலுமே அதைத்தானே எதிர்பார்ப்போம்!
ஆகவே, வருடம் முழுவதும் பொன்னான காலமாகவே அமைய வேண்டும் என்று வேண்டுகிறாள் அந்தப் பெண். தொடரும் கடைசி வரியில் எத்தனை அழகாக - இலைமறை காயாகக் காதலனுக்குச் சேதி சொல்கிறாள் அவள். இப்படி சிலேடை அணி நயம் பொங்கும் வார்த்தைகளை லாவகமாகக் கையாளுவது வாலியின் தனித் திறமை.
அப்படி எதிர்பார்க்கும் நேரத்தில் தன்னைத் தேடி வந்தால் .. அவள் அதற்குக் காணிக்கையாக என்ன கொடுப்பாள்? அதை அடுத்த சரணத்தில் பளிச்சென்று முதல் வரியிலேயே சொல்லிவிடுகிறார் கவிஞர் வாலி.
‘இதயம் எனது காணிக்கை - இணைவோம் என்ற நம்பிக்கை
அழைத்தேன் ஓடி வா
ஓடும் காலம் ஓடட்டும் - இளமை நின்று வாழட்டும்
அழகைத் தேடி வா,
உனக்காகப் பெண்ணுண்டு உறங்காத கண்ணுண்டு
தனக்காக வாழாமல் தவிக்கின்ற நெஞ்சுண்டு,
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில் ….நான்
உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வரவேண்டும்’
-என்று முடிக்கிறார் கவிஞர் வாலி.
இந்தச் சரணத்தின் இறுதியில் ஆசையாகிய ஊஞ்சல் என்று உருவகப்படுத்தி இருக்கும் அழகு - வாலிக்கே கைவந்த கலை. இந்த உருவக அணியைத் தனது பாடல்களில் அழகாகக் கையாள்வது அவரது தனித்தன்மை என்றே சொல்லலாம். அது மட்டுமல்ல; கத்தோலிக்க கிறிஸ்வத மதத்தின் மரபு, வழிபாடு, நம்பிக்கை சார்ந்த சொற்களை அந்த மதத்தில் ஊறித் திளைத்தவர்போல கையாண்டிருக்கிறார். பாரம்பரியமும் பழமையும் மிக்க சாந்தோம் தேவாலயத்தை ஒட்டி அவர் வாழ்ந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் அல்லவா!
அந்த வகையில் - வி. குமார் - கவிஞர் வாலி - பி. சுசீலா ஆகிய அற்புத மூவர் அணியில் உருவான இந்தப் பாடல் இன்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான பாடல்களில் முதலிடம் பிடித்த முத்தான பாடலாகக் காற்றலைகளில் வியாபித்திருப்பதில் ஆச்சரியமில்லையே!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago