டிஜிட்டல் மேடை: நிழலுலக விளையாட்டு

By செய்திப்பிரிவு

எஸ்.எஸ். லெனின்

நெட்ஃபிளிக்ஸின் முதல் இந்திய வலைத்தொடராகக் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது 'சேக்ரெட் கேம்ஸ்’ தொடர். இதன் இரண்டாம் சீஸன் கடந்த வாரம் சுதந்திர தினத்தன்று வெளியானது. 2006-ல் விக்ரம் சந்த்ரா எழுதிய ‘சேக்ரெட் கேம்ஸ்’ என்ற புதினத்தைத் தழுவி அதே பெயரிலான வலைத்தொடரின் முதல் பாகம் 2018 ஜூலையில் வெளியானது. சொந்த வாழ்விலும், பணிச் சூழலிலும் மோசமான அனுபவங்களைச் சந்திக்கும் போலீஸ் அதிகாரி சயீஃப் அலிகான்.

அவருக்கு அலைபேசியில் ஓர் அனாமதேய அழைப்பு வருகிறது. ‘சார், ஒரு கதை சொல்லட்டா..’ பாணியில் அந்தக் குரல் பழைய கதைகள் பலவற்றைப் பேசுகிறது. பேச்சின் மையமாய் அடுத்த 25 தினங்களில் மும்பை மாநகரம் நிர்மூலமாகப் போவதாக எச்சரிக்கிறது. குரலுக்கு உரியவரான மும்பையின் முன்னாள் தாதா நவாஸுத்தின் சித்திக்கை, சயீஃப் அலி நெருங்கும்போது அந்த தாதா தற்கொலை செய்துகொள்கிறார்.

‘ரா’ அதிகாரியான ராதிகா ஆப்தேவுடன் இணைந்து மும்பைக்குக் காத்திருக்கும் 25 நாள் காலக்கெடுவின் ஆபத்தையும் நவாஸுதினின் பின்னணியையும் சயீஃப் அலிகான் புலனாய்வு செய்யக் கிளம்புகிறார். இன்னொரு தளத்தில் நவாஸுதினின் பால்யம் தொட்டு அவர் மும்பையை உலுக்கும் தாதாவானது வரையிலான கதை பிரம்மாண்டமாகச் சொல்லப்படுகிறது. இரண்டு கதைகளும் நான்–லீனியர் வரிசையில் பயணித்தாலும் அவ்வப்போது சில புள்ளிகளில் ஒன்றோடொன்று தொட்டுச் செல்கின்றன. இவற்றில் ஏராளமான முடிச்சுகள் அடுத்தடுத்து இறுக, எட்டு அத்தியாயங்கள் அடங்கிய ‘சேக்ரெட் கேம்’ஸின் முதல் பாகம் விறுவிறுப்பாகச் சென்றது.

சயீஃப் அலிகான் தொடர்பான காட்சிகளை விக்கிரமாதித்ய மோத்வானேவும், நவாஸுதின் பகுதியை அனுராக் காஷ்யப்பும் பிரித்துக்கொண்டு இயக்கியதில் ரசிகர்களுக்குப் பல்சுவையான விருந்து கிடைத்தது. குறிப்பாக, ஆச்சாரக் குடும்பத்தில் பிறந்த இளைஞனின் நிழலுலகை நோக்கிய நகர்வுகளும் மாநகரை உலுக்கும் தாதாவாக அவன் உருப்பெரும் காட்சிகளுமாக நவாஸுதின் பிரமாதப்படுத்தி இருப்பார்.

அவருக்கு நிகராக உள்ளூர வெடிப்பை அடக்கியவாறு இறுக்கமான முகத்துடன் சயீஃப் அலிகான் வளைய வருவார். தனக்குக் கிடைத்த மூன்று தந்தையர்களில் இருவர் குறித்து நவாஸுதின் விவரிப்பதுடன் முதல் சீஸன் முடிந்திருக்கும். மும்பை அழிவுக்கான அவகாசமும் பாதியாகக் குறைந்திருக்கும்.

சீஸன் 1-ல் முடிந்த இடத்திலிருந்து இரண்டாம் சீஸனின் கதை தொடங்குகிறது. முதல் காட்சியில் நடுக்கடலில் அல்லாடும் நவாஸுதின் போலவே, அவரது கென்யா தேசத்து கதை உலாவலும் காட்சிகளும் தடுமாறுகின்றன. ஆனால், நவாஸுதினின் மூன்றாம் தந்தையைக் கதை கண்டுகொள்ளும்போது பழைய விறுவிறுப்பு பற்றிக்கொள்கிறது. மறுபக்கம் சயீஃப் அலிகானின் புலனாய்வும் சூடுபிடிக்கிறது. இரண்டாம் சீஸனில் சயீஃப் காட்சிகளுக்கு நீரஜ் கெய்வான் பொறுப்பேற்று இயக்க, நவாஸுதின் பகுதிகளுக்கு அனுராக் தொடர்ந்திருக்கிறார். ‘கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ படத்தில் பழகிய கதாபாத்திரம் என்பதால் அனுராக் இயக்கத்தில் நவாஸுதின் விளையாடியிருக்கிறார்.

முதல் சீஸனின் முடிச்சுகளுடன், இரண்டாம் சீஸனின் புதிய புதிர்களும் சேர்ந்துகொள்ள, கடைசி மூன்று அத்தியாயங்களில் ஒவ்வொன்றாக விடுவிக்கிறார்கள். முந்தைய சீஸனைவிட வேகம் குறைவு என்றாலும் ஆழமான கதையின் நிதானத்துக்கு அவை நியாயம் செய்கின்றன. ஆன்மிகப் பெரும்புள்ளிகளுக்கும் நிழலுலகத்துக்குமான தொடர்புகள், அவர்களின் அரசியல் அதிகார மட்டத் தொடர்புகள் ஆகியவற்றுடன் பொதுவெளியில் விதைக்கப்படும் மத துவேஷங்கள், அதன் பலனை அறுவடை செய்வோர் என நிகழ்கால நிதர்சனங்களையும் தோலுரிக்கிறார்கள். அத்தியாயங்களின் தலைப்பு முதல் கதையின் மையம்வரை மத இதிகாச உள்ளடக்கங்களைப் பயன்படுத்தி இருப்பது ரசிக்க வைக்கிறது.

ஓஷோ ரஜனீஷைப் பிரதியெடுத்த சாமியாராக வரும் பங்கஜ் திரிபாதியின் மர்மப் பின்னணியும் யுக மாற்றத்துக்காக ‘தியாகத்தை’ வலியுறுத்தும் வசியக் குரலும் சாலப் பொருந்துகின்றன. அவருக்கு அனைத்துமானவராக வரும் கல்கி கேக்லனின் கதாபாத்திரம் அடுத்த சீஸனுக்கு அடிபோட்டிருக்கிறது. நவாஸுதின் கதாபாத்திரம், அருண் காவ்லியைச் சிறப்பாகச் சித்தரித்தாலும் தாவூத் இப்ராகிமைச் சுட்டும் இஸா கதாபாத்திரத்தில் தெளிவில்லை. தொடர் நெடுகப் பின்னணியில் கதை சொல்லும் நவாஸுத்தினின் குரலுக்குப் போட்டியாகச் சாமியாரின் குரலும் கதையும் முளைக்கும் காட்சிகள் துறுத்தலாக நிற்கின்றன.

காலவெளியில் முன்னும் பின்னுமாக அலையும் கதையின் போக்கு இரண்டாம் சீஸனில் சில இடங்களில் தடுமாறவும் செய்கிறது. நிறைவு அத்தியாயத்தின் இறுதியாக வரும் புதிரைத் திறக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் அதிகம் பகடி செய்யப்படுகின்றன.
’ஸ்பாய்லர்களுக்கு’ ஆளாகாது, ’சேக்ரெட் கேம்ஸ்’ வலைத்தொடரைப் பார்ப்பது சுவாரசியமான திரில்லர் வலைத்தொடருக்கான அனுபவத்தைத் தரும்.

இணையச் சுட்டி:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்