ரசிக மனோபாவம், வெளிப்பாட்டுத் திறன் ஆகிய இரு அம்சங்களை மையமாகக் கொண்டு நடிகர்களை இரண்டாக வகைப்படுத்தலாம். மக்கள் மனங்களில் உச்ச நட்சத்திரங்களாக உயர்ந்தபின், எதிரெதிர் பிம்பங்களாகக் கட்டமைப்பட்ட எம்.ஜி.ஆர் – சிவாஜி ஒருவகை.
எம்.ஜி.ஆர். தன் படங்கள் வழியாகப் பொழுதுபோக்கு அம்சங்களில் ரசிகர்களைக் கொண்டாட வைப்பவராக வலம் வந்தார்.சிவாஜியோ தனக்குள் இருக்கும் நடிப்புத் திறனைக் கடைக்கோடி ரசிகனும் வியக்கும் வண்ணம் வெளிப்படுத்தினார். அதற்கடுத்து வந்த ரஜினி, எம்ஜிஆரின் அடியொற்றி ரசிகர்களிடம் இடம் பிடித்தார்.கமலோ நடிப்பு ராட்சசனாக விளங்குகிறார். இன்றைய தலைமுறை நடிகர்களில் பொழுதுபோக்குப் படங்களில் நடித்துவரும் விஜய் - அஜித் இருவருக்கும் இவ்வகை வித்தியாசங்களைப் பொருத்த முடியாது.
ஆனால், விஜய் சேதுபதியை எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி- கமல் அலைவரிசையில் வைத்துப் பார்க்கும்போது அவர் இரண்டும் சேர்ந்த கலவையாக, வசீகரிக்கும் யதார்த்தமான நடிப்பு ஆளுமையின் முகமாக இருப்பதைப் பார்க்கலாம். அப்படிப்பட்ட நடிப்புக் கலைஞனை கௌரவம் செய்ததன் மூலம் பெருமை பெற்றிருக்கிறது சிறந்த நடிகருக்கான ‘ஐ.எஃப்.எஃப்.எம்’ (IFFM - Indian Film Festival Of Melbourne) விருது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்திருக்கும் மெல்போர்ன் திரைப்பட விழாவில் மற்ற இந்திய மொழித் திரைப் படங்களுடன் மோதியது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்'. அதில் ஷில்பா எனும் திருநங்கையின் வலிகளை, நம்பகமும் யதார்த்தமும் நிறைந்த நடிப்புத்திறன் கொண்டு ரசிகர்களுக்குக் கடத்தியதற்காக இந்தச் சர்வதேச விருதை வென்றிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த அரிய தருணத்தில் அவர் கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம்.
மாற்றமும் ஏற்றமும்
குறும்படங்களில் நடித்துக்கொண்டி ருந்த விஜய் சேதுபதி, இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு துணை நடிகராக கிடைக்கிற சந்துபொந்துகளில் எல்லாம் வந்து போனார். ‘வெண்ணிலா கபடிகுழு'வில் வலிப்பு வந்து சுருண்டு விழும் கபடி வீரர் , ‘நான் மகான் அல்ல' படத்தில் கார்த்தியின் நண்பர், ‘பலே பாண்டியா ' படத்தில் விஷ்ணு விஷாலை நாடி ஜோசியம் பார்க்க அழைத்துச் செல்லும் அண்ணன், என ஒரு ஓரமாய் வந்துபோன சேதுபதி ,‘லீ ', ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டினார்.
‘புதுப்பேட்டை' யில் ஒரு முக்கியக் காட்சியில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். பாலாசிங்கின் ஆட்களுடன் ரத்தக் காயத்துடன் அடிபட்ட தனுஷுக்கு டாக்டர் முதலுதவி செய்வார். அப்போது யார் இவன் என்று பாலாசிங் கேட்பார். “நே போலீஸ் கூட்டிப்போச்சுல்ல , இவனும் மிஸ்டேக்கா மாட்டிக்கிட்டான்.போலீஸ் மொத்தி எடுத்துச்சு. சரியான தமாஷு'' என்பார் விஜய் சேதுபதி. அதே தனுஷ்தான் பின்னாளில் ‘நானும் ரவுடிதான்’ தயாரிப்பாளராகி விஜய் சேதுபதியை கமர்ஷியல் நாயகன் அந்தஸ்துக்கு உயர்த்தினார்.
சீனு ராமசாமியின் ‘தென்மேற்குப் பருவக்காற்று' படத்தின் மூலம் விஜய் சேதுபதி நாயகன் ஆனார்.சினிமாவில் அவர் நாயகனாக ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டன. அத்தகைய தருணத்துக்காகக் காத்திருந்தார். வெள்ளந்தியான கிராமத்து இளைஞனின் பாசாங்கற்ற அன்பை, கூச்ச சுபாவத்தை, கரிசல் மண்ணின் அசலான முகத்தை அப்படியே பிரதிபலித்தார். படத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. அதனால் படத்துக்குக் கிடைத்த வெளிச்சக் கீற்று விஜய் சேதுபதியை எட்டவில்லை. ‘நடிச்சா ஹீரோதான்’ என்று அடம்பிடிக்கவும் இல்லை. ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க, எதிர் நாயகனாக விஜய் சேதுபதி நடித்தார். தன்னைத் தொடர்ந்து பட்டை தீட்டிக்கொண்டே வந்தார். நடிப்பின் நுணுக்கங்களைக் கற்றார்.
ஒரு பாணி உருவாகிறது!
குறும்பட இயக்குநர்களின் அலையில் தன்னை முழுமையாக ஒப்படைத்தார். கார்த்திக் சுப்பராஜின் ‘பீட்சா'வில் கவன ஈர்ப்பை ஏற்படுத்தினார். ஒற்றை டார்ச் லைட்டுடன் ஆள் அரவமற்ற பங்களாவில் 20 நிமிடங்கள் பதறி , பயந்து, அலறி, ஓடி ‘நான் நடிகன்டா’ என்று நிரூபித்தார்.ரசிகர்கள் புதுவிதமான பேய்ப்படம் என்று கொண்டாடினார்கள். விஜய் சேதுபதி கமர்ஷியல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் முதல் வெற்றியைச் சுவைத்தார்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை வேறு யார் நடித்திருந்தாலும் இப்படி விழுந்து விழுந்து சிரித்து ரசித்திருக்க முடியுமா என்று தெரியாது. ‘என்னாச்சு? ப்ப்பா..!?’ மெடுலா ஆப்லங்கேட்டா என்ற சொல்லைக் கேட்டாலே ரசிகர்கள் திரும்பத் திரும்ப விரும்பி விரும்பி ரசித்தார்கள்; சிரித்தார் கள். விஜய் சேதுபதியின் மாடுலேஷன் பாணி மதிப்புக்குரியதாக மாறியது.
அந்தச் சூழலில் விஜய் சேதுபதியின் ஆளுமையை அப்படியே சுவீகரித்துக் கொண்ட படம் ‘சூதுகவ்வும்’. 40 வயதுக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியைப் பொருத்திப் பார்க்க முடியவில்லை என்று நலன் குமாரசாமி கூற, ஒரே மாதத்தில் நரை முடி, தாடியுடன் இயக்குநர் முன் நின்றார்.விஜய் சேதுபதியின் தோற்றத்தில் திருப்தி அடைந்த பிறகே, நலன் நம்பிக்கையுடன் களத்தில் இறங்கினார். வங்கி மேலாளரின் மகளைக் கடத்திவிட்டு, “40 ஆயிரம் பணத்தால் உங்கள் பட்ஜெட்டுக்குப் பாதகமில்லையே. சமாளிச்சுடுவீங்கல்ல?'' என்று கேட்டு அவரை ரிலாக்ஸ் செய்வார். நேராகப் போய்ப் பணத்தை வாங்கிவிட்டு கூலர்ஸ் அணிந்து கெத்தாக நடந்து வருவார். அதுதான் விஜய் சேதுபதியின் முதல் மாஸ் சீன்.
தாதாக்களின் மாதிரிகள்
தமிழ் சினிமாவில் நான்காம் படத்திலேயே நரை முடியுடன் நாற்பது வயதுக் கதாபாத்திரத்தில் நடித்தது விஜய் சேதுபதியாகத்தான் இருக்க முடியும். பின்னர், ‘ரம்மி', ‘வன்மம்' என்று நட்புக்காக விஜய் சேதுபதி நடித்த படங்கள் ரசிகர்களுக்குச் சோதனைக் காலமாகவே அமைந்தன. ரம்மியில் ‘கூடை மேல கூடை வெச்சு’ பாடல் மட்டும் விஜய் சேதுபதியைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. முதிய தம்பதியின் பேரன்பையும் பெருங்காதலையும் கார் மீதான பாசத்தையும் ‘பண்ணையாரும் பத்மினியும்' படத்தில் பதிவு செய்ய ரசிகர்கள் போதுமான வரவேற்பை அளிக்கவில்லை.
அதே இயக்குநருடன் மீண்டும் கைகோத்தார். ‘சேதுபதி' என்று கமர்ஷியல் ஹிட் கொடுத்தார். ரசிகர்கள் கொண்டாடினார்கள். நல்ல படத்தை ஓடவைக்காத ரசிகர்கள் மீதான செல்லப் பழிவாங்கல்தான் ‘சேதுபதி’ என்ற பேச்சும் உண்டு. சென்னை பாஷையில் பிரித்து மேய்ந்து ‘நான் அசால்ட்டா நடிப்பேன்’ என்று ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் எடுத்துக்காட்டி அதகளம் செய்தார்.
‘ஆரஞ்சு மிட்டா’யில் அறுபது வயதைத் தொடும் முதியவராக நடித்த விஜய் சேதுபதி, அடுத்த படத்தில் நயன்தாராவைக் காதலிக்கும் 27 வயது இளைஞனாக மாறிப் போனார்.ரசிகர்கள் அதிக வரவேற்பைத் தந்தனர். அடிக்கத் தெரியாத ரவுடியாக ‘காதலும் கடந்து போகும்', போலி ரவுடியாக ‘நானும் ரவுடிதான்', மொக்கையான தாதாவாக ‘ஜுங்கா' என்று அடுத்தடுத்து களம் இறங்கினார். இதனிடையே ஒரு வடையை மட்டும் எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து ,‘விக்ரம் வேதா' இன்ட்ரோவில் அசர வைத்தார். ‘ஒரு கதை சொல்லட்டா சார்’ என்று மெர்சல் செய்தார். விஜய் சேதுபதியை ‘மாஸ் ஹீரோ’ என்று நம்பவைத்தது ‘விக்ரம் வேதா'. மாஸ் வரிசையில் ‘றெக்க’ ரசனையுடன் சிறகடித்தது. இப்படங்கள் விஜய் சேதுபதிக்கு கமர்ஷியல் மாஸ் படங்களும் தேவைப்படும் என்பதைத் தெளிபடுத்தின.
‘தர்மதுரை', ‘கவண்', ‘ஆண்டவன் கட்டளை', ‘கருப்பன்' ஆகிய படங்கள் கிராமத்து மக்களிடம் விஜய் சேதுபதியைக் கொண்டு சேர்த்தன. ‘இறைவி', ‘செக்கச்சிவந்த வானம்' என இரண்டு மல்டி ஸ்டாரர் படங்களில் தனித்து ஜொலித்தார். சேதுபதியின் இமேஜைப் புரிந்துகொண்ட மணிரத்னமும் அவரின் கதாபாத்திரத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. வழக்கமான பாவனைகளுடன் ரசூலாக சேது அப்ளாஸ் அள்ளினார்.‘96' படத்தின் மூலம் திருமணம் ஆகாத காதலனின் அவஸ்தையை, அன்பை, தனிமையை அப்படியே நகல் எடுத்துக் கடத்தினார்.
சோதனை முயற்சி
‘சீதக்காதி' விஜய் சேதுபதிக்கு 25- ம் படம். எந்த நடிகரும் காட்சிக்குக் காட்சி, ஃபிரேமுக்கு ஃபிரேம் தான் படத்தில் இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பர். 25- ம் படம் கூடுதல் சிறப்பு என்பதால் அதை கமர்ஷியலாக எடுக்கவே துணிவர். ஆனால் , விஜய் சேதுபதி இதிலும் விதிவிலக்குதான்.சுமார் முக்கால் மணி நேரம் மட்டுமே படத்தில் இருக்கும்படியான நாடகக் கலைஞர் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தார். கலைப் படைப்புக்காக 25- ம் படத்தைப் பரிசோதனை முயற்சியாக மேற்கொண்டார். அப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் முயற்சியை அவர் நிறுத்திக்கொள்ளவில்லை.
மாஸ் நாயகன் ஆனபின் ‘பேட்ட' படத்தில் மீண்டும் எதிர் நாயகனாக வந்து இறந்துபோகிற துணிச்சல் காட்டினார். இயக்குநர்களின் நடிகராக, நண்பராக இருப்பதையே பெரிதும் விரும்பும் இவர், 30 படங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் இமேஜ் பார்க்காமல் ‘சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக நடித்தார்.அவர்களின் அவஸ்தையை, வலிகளை அப்படியே பதிவுசெய்தார்.
தமிழ் சினிமாவில் யதார்த்தத்தின் வார்ப்பை , அசல் கலைஞனின் பாவனைகளை அப்படியே பிரதியெடுத்துத் தரும் ஆற்றல் படைத்த கலைஞர். நடிப்பு என்பது அதை மறக்கடிக்கச் செய்வதே என்பதைக் கதாபாத்திரங்களின் மூலம் நிறுவுபவர். அதனால்தான் ஒரே ஆண்டில் ஏழெட்டுப் படங்கள் என்றாலும் சலிக்காமல் அவரால் நடிக்க முடிகிறது. கமர்ஷியல் சினிமா, கான்செப்ட் சினிமா , பரிசோதனை சினிமா என்று ஈடுபட முடிகிறது.பொருத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்துவிட்டால் நடிகர்கள் விஸ்வரூபம் எடுத்துவிடுவார்கள் என்பதற்கான நிகழ்கால சாட்சி, யாதார்த்தக் கலைஞர் விஜய் சேதுபதி.
தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago