அம்ஷன் குமார்
சிறந்த தமிழ்ப் படம் பாரம்
இந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது ‘பாரம்’ படத்துக்குக் கிடைத்துள்ளது. ஏற்கெனவே இந்தப் படம் இந்தியன் பனோரமாவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திரையிடப்பட்டது கவனத்திற்குரியது. பல நன்கறியப்பட்ட தமிழ்ப் படங்களிலிருந்து ஒரு படம் சிறந்த பட விருதுக்குத் தேர்வாகாமல், முற்றிலும் அறியப்படாத ‘பாரம்’ படத்துக்கு விருதளிக்கப்பட்டிருப்பது குறித்துப் பலவிதமான எதிர்வினைகள் எழுந்த வண்ணமுள்ளன. தாம் பார்த்து ரசித்துப் பாராட்டிய படமொன்றுக்கு விருது தரப்படவில்லை என்ற ஆதங்கம் தேசிய விருதின் வழமைகளைப் பகடி செய்யும் மனப்பான்மையாக உருவெடுப்பது ஏற்கத்தக்கதல்ல.
இந்த மனோபாவம் நம்மிடையே ஏற்கெனவே குடிகொண்டுள்ள ஒன்று. 1977-ம் வருடம் ஜான் ஆப்ரஹாமின் ‘அக்ரஹாரத்தில் கழுதை’ படம் தயாரானது. அந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப்படத்துக்கான தேசிய விருதை அப்படம் பெற்றபோது, அன்றைய தமிழக அமைச்சர் ஒருவரே அதைப் பலமாக எதிர்த்தார். அவர் கூறிய காரணம் திரையிடப்படாத படம் ஒன்றுக்கு விருது தரப்படக் கூடாது என்பதுதான். ஆனால், தேசிய விருது பெற்ற பிறகே அந்தப் படம் வெளிச்சத்துக்கு வந்தது. இன்று ‘அக்ரஹாரத்தில் கழுதை’ தமிழின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தேசிய விருதுகள் தொடங்கப்பட்டபோது அவற்றுக்குச் சில விதிமுறைகள் வழிகாட்டின. வணிகரீதியாக ஏற்கெனவே மக்களிடையே செல்வாக்கைப் பெறாத, மக்களுக்குத் தேவையான கருத்துகளைக் கலைநயத்துடன் தரும் படங்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்பது அவற்றில் முக்கியமானது. அது பலகாலம் நடை முறைப்படுத்தப்பட்டும் வந்தது .
சத்யஜித் ராய், மிருணாள் சென், அடூர் கோபாலகிரிஷ்ணன், அரவிந்தன், ஷ்யாம் பெனகல் போன்ற கலைப்பட இயக்குநர்களின் படங்களுக்குத் தேசிய விருதுகள் அவ்வாறுதான் கிடைத்தன. அந்த நடைமுறை பின்பற்றப்பட்டிருக்காவிடின் அக்காலத்தில் பிரபலமாயிருந்த ராஜ்கபூர், மன்மோகன் தேசாய் போன்ற பிரபலங்களின் படங்களுக்குத் தேசிய விருதுகள் அனைத்தும் முற்றாகவே சென்றிருக்கும்.
இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சிவாஜி கணேசனுக்கும் தேசிய விருதுகள் குவியாதற்கு இந்த நடைமுறையும் ஒரு காரணம். அவரது வாழ்நாள் சாதனைக்காக தாதாசாகேப் விருது பின்னர் தரப்பட்டது என்பது வேறு விஷயம். இத்தகைய நடைமுறையைத் தோற்றுவித்தவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு. சாகித்திய அகாடெமி அவருக்குச் சிறந்த எழுத்தாளருக்கான விருதைத்தர முன்வந்தபோது அதை அவர் ஏற்க மறுத்தார்.
சிறந்த கல்விமானும் எழுத்தாளருமான அவர், அந்த விருதைப்பெற எல்லாவிதத் தகுதியையும் உடையவர். ஆனால், அதிகம் கவனத்துக்கு உட்படாத பிற எழுத்தாளர்களுக்கு அந்த விருது தரப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டார் அவர். தேசியத் திரைப்பட விருதுகள் மட்டுமின்றி, சாகித்திய அகாதெமி, தேசிய திரைப்பட ஆவணம், சங்கீத நாடக அகாடெமி, லலித் கலா அகாடெமி போன்ற பல கலை வளர்ப்பு நிறுவனங்களைத் தொடங்கிவைத்தவரும் அவர்தான்.
தேசிய விருதுகள் சமீப காலங்களில் கலைப்படங்களுக்கு மட்டுமின்றி பெரு வழக்குப் படங்களுக்கும் தரப்படுகின்றன. இந்த வருடம் பல மொழிகளிலும் விருதுகள் பெற்ற படங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது கலைப் படங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதும் தெரிகிறது. வழமையாகவே தமிழ்ப் படங்கள் சரிவரத் தேசிய அளவில் கவனிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டில் பெருத்த நியாயம் உண்டு. எல்லாவற்றிலுமுள்ள அரசியல், தேசிய விருதுகளை மட்டும் விட்டு வைக்குமா என்ன? ஆனால், அதற்காக வேறு எவ்வகையிலும் கவனம் பெற வழியில்லாத, மாறுபட்ட தமிழ்ப் படங்கள் விருதுகளின் வாயிலாக நம்மை வந்தடையும்போது அவற்றைப் பார்க்கு முன்னரே கேலி செய்து புறந்தள்ளுவது நமக்குநாமே இழைத்துக் கொள்ளும் அநீதியாகும்.
சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை வென்றிருக்கும் ‘பாரம்’ படத்தை, பிரியா கிருஷ்ணசாமி இயக்கியுள்ளார். அவர் ஏற்கெனவே பல படங்களை இயக்கியவர். தேசிய விருதுகள் பெற்றவர். இது அவரது முதல் தமிழ்ப்படம். தமிழகக் கிராமங்களில் இன்றளவும் நிலவுகிற தலைக்கூத்தல் என்ற கொடிய வழக்கத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘பாரம்’.
முதியவர்களைப் பாரமாக நினைக்கும் சமூகத்தின் கருணையற்ற முகம் இதில் வெளிப்படுகிறது. அருகி வரும் மனித நேயம், முதியவர்களை எவ்வாறு பலி வாங்குகிறது என்பதைச் சமகாலத்திய நிகழ்வாக இப்படம் சித்தரிக்கிறது. இதில் புதுவை பல்கலைக்கழகத்தின் நிகழ்கலை வகுப்பு மாணவர்கள் நடித்துள்ளனர். முன்னாள் புதுவை நாடகப் பேராசிரியர் ஆர்.ராஜு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாரம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அதை வரவேற்க நாம் தயாராவோம்.
கட்டுரையாளர், எழுத்தாளர்,
இயக்குநர், செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: amshankumar@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago