மாறுவேடத்தில் சுற்றித் திரிந்த இயக்குநர்: அருண் கிருஷ்ணசாமி நேர்காணல்

By ஆர்.சி.ஜெயந்தன்

பரத், சாந்தினி, கதிர், சஞ்சிதா ஆகிய இரண்டு ஜோடிகளோடு ‘என்னோடு விளையாடு’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண் கிருஷ்ணசாமி. படத்தின் திரைக்கதையை எழுதும் முன் மாறுவேடத்தில் அலைந்து திரிந்து தகவல்கள் திரட்டினார் என்ற சுவாரஸ்ய செய்தி கிடைக்க அவரைச் சந்தித்துப் பேசினோம்...



சினிமா இயக்க வந்த பின்னணியைக் கூறுங்கள்…

சாதனைகள் படைத்த ஒளிப்பதிவாளர் கிச்சாஸ். அவரிடம் ஒளிப்பதிவு உதவியாளராகப் பல படங்களில் பணியாற்றி சினிமாவைக் கற்றுக்கொண்டேன். அவர்தான் எனது குரு. எனக்குச் சொந்த ஊர் சிவகாசி அருகில் உள்ள வடமலாபுரம். பி.எஸ்.சி படித்து முடித்துவிட்டு வேலை தேடாமல் கோடம்பாக்கத்தில் வந்து இறங்கினேன். இயக்குநர் பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குநராக முதல் வாய்ப்பு கிடைத்தது. அழுத்தமான வசனங்கள் எழுதுவது எப்படி என்பதை அவரிடம் கற்றுக்கொண்டேன். பிறகு கிச்சாஸ். கடைசியாக சிம்பு நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ படத்தில் வேலை செய்தேன்.

மொத்த திறமையையும் முதல் படத்தில் போட்டிருக்கிறோம் என்பார்கள். நீங்கள் எப்படி?

இது இயக்குநரின் படமாக இருக்கும். அதேநேரம் தரமான பொழுதுபோக்குப் படம் என்று ரசிகர்கள் சொல்லும் விதமாகவும் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். விக்ரம் கதாபாத்திரத்தில் பரத்தும்,  தர் என்ற கதாபாத்திரத்தில் ‘மதயானைக் கூட்டம்’ கதிரும் நடித்திருக்கிறார்கள். பரத்தின் காதலி ’மினி’யாக ’சித்து ப்ளஸ்’ படத்தில் அறிமுகமான சாந்தினி நடித்திருக்கிறார். கதிரின் காதலி ‘இன்பா’வாக ‘சூது கவ்வும்’ நாயகி சஞ்சிதா நடித்திருக்கிறார். இந்த நான்கு கதாபாத்திரங்களோடு இரண்டு எதிர்மறை கதாபாத்திரங்களும் கதையில் உண்டு. கூடவே, ஒரு குதிரையும் எலியும் கதையை நகர்த்திச் செல்கின்றன.

என்ன கதை?

இரண்டு காதல் கதைகள். அந்தக் காதலர்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும் வெறித்தனமான ஒரு விளையாட்டு. அது பலரது வாழ்க்கையில் எப்படி விளையாடுகிறது என்பதுதான் கதைக் கரு. திருச்சியிலிருந்து சென்னை வரும் ஒரு இளைஞன் தற்காலிகமாக ஒரு அறையில் தங்கச் செல்கிறான். ஆனால் அவன் அறையை விட்டு வெளியே வர முடியாதபடி ஒரு சம்பவம் நடக்கிறது. அதற்குக் காரணமாக ஒரு எலி இருக்கிறது. அந்த இளைஞன் கதிர்.

சென்னையில் வசிக்கும் பரத் ஒரு நிறுவனத்தில் அக்கவுண்ட் ஆபீஸராக வேலை செய்பவர். இன்னொரு பக்கம் சாகச மனநிலை கொண்டவர். பந்தயக் குதிரைகளில் சவாரி செய்வதில் அபாரமான திறமைசாலி. சிறு வயதுமுதல் குதிரைகளின் உலகத்தில் சஞ்சரிப்பவர். சென்னையில் நடக்கப்போகும் ஒரு போட்டிக்காக ஒரு புள்ளியில் இந்தக் கதாபாத்திரங்கள் சந்திக்கின்றன. அதன் பிறகு நடக்கும் அதிரடியான சம்பவங்கள்தான் கதை. இதை ஒரு லவ் த்ரில்லர் படம் என்று சொல்லலாம்.

நீங்கள் சொல்ல வருவது குதிரைப் பந்தயமா?

குதிரைப் பந்தயத்தை மையப்படுத்திய கதைதான். ஆனால் அதுவே பிரதானமல்ல. குதிரைப் பந்தய மைதானத்துக்கு வெளியேதான் கேமரா வெறித்தனமாக ஓடிக்கொண்டிருக்கும். குதிரைப் பந்தயம் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வேறோடு பிடுங்கிப் போட்டிருக்கிறது. குதிரைப் பந்தயம் ஒரு சூதாட்டமாக எப்படி இயங்குகிறது, பந்தயத்தை நடத்துகிறவர்கள் செய்யும் நிழல் வேலைகள் என்ன, பந்தயத்தில் பங்கேற்கும் குதிரைகளை எப்படித் தயார்படுத்துகிறார்கள், குதிரைப் பந்தயத்தோடு சம்பந்தப்படாதவர் களையும் இது எப்படி பாதிக்கிறது என்கிற விஷயங்கள் எல்லாமே கதையின் போக்கில் வரும் எதையும் திணிக்காமல் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் இயல்பாகப் காட்சிகளாக்கியிருக்கிறோம்.

குதிரைப் பந்தயத்தின் முழுமையான பின்னணியை அறிந்துகொள்வதற்காக இந்தியாவில் எங்கெல்லாம் குதிரைப் பந்தயங்கள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் சென்று தகவல்களைத் திரட்டி, திரைக்கதைக்குப் பயன்படுத்திக்கொண்டேன். சில இடங்களில் இதற்காக மாறுவேடத்திலும் சுற்றித் திரிந்திருக்கிறேன். அது தனிக் கதை.

உங்களின் தொழில்நுட்பக் குழு?

முதலில் பரத் பற்றி சொல்லியாக வேண்டும். 8 மாதங்களாக படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாத பரத், இந்தக் கதையைக் கேட்டதும் ஒப்புக்கொண்டார். பரத் பற்றிய ரசிகர்களின் எண்ணத்தை இந்தப் படம் மாற்றும். இதில் பரத் தனது நடிப்பை மட்டுமல்ல மற்றொரு திறமையையும் திறம்பட நிரூபித்திருக்கிறார்.

‘மதயானைக் கூட்டம்’ கதிர் படத்தின் அவுட்லைன் கதையைக் கேட்டதுமே ஒப்புக்கொண்டார். நடிப்பில் அவரும் வெளுத்து வாங்கியிருக்கிறார். சாந்தினி ஒரு கிடாரிஸ்டாகக் கலக்கியிருக்கிறார். சஞ்சிதாவுக்கும் நடிப்புக்கு நல்ல தீனி கொடுத்திருக்கிறோம்.

பர்மா படத்தின் ஒளிப் பதிவாளர் யுவராஜ்தான் எனது ஒளிப்பதிவாளர். இன்னும் பத்துப் படங்களுக்கு இணைந்து வேலை செய்வோம். அந்த அளவுக்கு நெருங்கிவிட்டோம். மிகவும் திறமைசாலி. மோசஸ் என்பவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறோம். ஜிப்ரான், சத்யா வரிசையில் மோசஸ் வருவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்