தஞ்சாவூர்க் கவிராயர்
அன்றைக்கு பானுமதி அம்மையார் வீட்டுக்குச் சீக்கிரமே சென்று விட்டேன். கூர்க்கா ஒரு புன்சிரிப்புடன் கேட்டைத் திறந்துவிட்டார். ஓட்டுநர் கோவிந்து காரைத் துடைத்துக்கொண்டிருந்தார். நாய்களின் குரைப்புகூட இல்லை. மெல்லப் படியேறினேன். மாடியில் வலப்பக்க அறையில் அலுவலக வேலையில் அண்ணாசாமி மூழ்கியிருந்தார். ஜன்னல் கம்பிகளைத் துடைத்துக்கொண்டிருந்த சிறுவயதுப் பெண் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். கூடத்தில் இருந்த சோபாவில் உட்கார்ந்தேன். மின் விசிறிகூட ஓசைப்படமல் சுழன்றது. எங்கும் மெளனம்… மெளனம்.
சாளரத்தின் வழியே வாதாம் மரக் கிளையில் உட்கார்ந்து ஒரு அணில் என்னையே பார்த்தது. அதுவும் மெளன விரதம் பூண்டுவிட்டது. திடீரென்று ஊதுவத்தி வாசனை. மணி ஓசை ஒலிக்க… பூஜை அறையிலிருந்து வெளிப்பட்ட பானுமதி “வாங்க சார்!” என்றார். நான் ‘வணக்கம்’ என்றேன்.“வணக்கம்! இன்னிக்கு வெளியே போக வேண்டி இருந்தது. போயிட்டு வந்துடலாம்னு பார்த்தேன்.
சீக்கிரம் வந்துட்டீங்களே! பரவாயில்லை முதல்ல நான் விட்ட இடத்திலிருந்து பேசிடுறேன்” என்று எதிர் சோபாவில் அமர்ந்தவர், “எங்கே நிறுத்தினேன் சொல்லுங்க பார்ப்போம்” என்றார். ‘ஏதோ சூறாவளின்னு சொன்னீங்க. எனக்கு இருப்புக் கொள்ளலை. என்னன்னு தெரிஞ்சுக்கணும்னு ஒரு அவசரம். அதான் சீக்கிரம் வந்துட்டேன்’ என்றேன். “வேறென்ன சூறாவளி? சினிமா சூறாவளிதான்!” பானுமதி எனும் கதைசொல்லியின் முகத்தில் உற்சாகம் ஒளிர்ந்தது. என் நோட்டைப் பிரித்துக் குறிப்புகளை எழுதத் தொடங்கினேன். பானுமதி பகிர்தலைத் தொடர்ந்தார்.
கரி அடுப்பில் சமையல்
“ஒருநாள் எங்கள் புதுவீட்டில் இரண்டு கரி அடுப்புகளில் நெருப்பு மூட்டி சமையல் செய்யும் மும்முரத்தில் இருந்தேன். அன்று பிற்பகல் என் கணவருடன் சினிமா பார்க்கப் போவதாகத் திட்டம். அந்த நேரம் பார்த்து லிங்கமூர்த்தி அண்ணா வந்தார். ‘பெத்தம்முடு’ (மூத்த பெண்) என்று கூப்பிட்டார். கல்யாணத்துக்கு முன்பிருந்தே என்னை பெத்தம்முடு என்றும் என் தங்கை செல்லியை சின்னம்முடு என்று அழைப்பது அவர் வழக்கம். கரி அடுப்புகளைப் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தேன்.
அதைப் பார்த்துவிட்டு ‘ஆகா! கடவுளின் விசித்திரமான விளையாட்டுகளில் இதுவும் ஒன்றா?’ என்று என் பக்கத்தில் தரையில் உட்கார்ந்துகொண்டார். அண்ணா நாற்காலியில் உட்காருங்கள் என்றேன். அவரோ, ‘பரவாயில்லை அம்முடு. நீங்க மனசுல என்னதான் நினைச்சுகிட்டு இருக்கீங்க? என் மைத்துனர் மனசுல என்ன திட்டம்? நீ காலமெல்லாம் இந்தக் கரி அடுப்பு முன்னாடியே உட்கார்ந்து கிடக்கணும்னு நெனைக்கிறாரா? ஐயோ அம்மா இதைப் பார்க்க என்னாலேயே சகிக்க முடியவில்லையே. உன் அப்பா பார்த்தால் மயக்கம் போட்டே விழுந்துடுவார். அடடா, என் செல்லமே உனக்கு ஏனம்மா இந்தக் கஷ்டம்?’ - லிங்கமூர்த்தி அண்ணா பேசும்போது சினிமா வசனம் பேசற மாதிரியே இருக்கும். என்றாலும், எனது நிலைமையைப் பார்த்துத் தவித்துப் போய்விட்டார்.
அவரது தவிப்பைப் போக்கும் விதமாக ‘அண்ணா இதில் என்ன கஷ்டம்? சொல்லப்போனா இதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. இந்த வாழ்க்கை நானே விரும்பி ஏத்துக்கிட்டதுதானே? இப்படிப்பட்ட சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கை முறை எனக்குப் பிடிச்சிருக்கு. இப்படி வாழணும்னுதான் கனவு கண்டேன். சினிமா சமாச்சாரம் எல்லாம் எனக்குப் பிடிக்காதுன்னுதான் உங்களுக்குத் தெரியுமே?’ என்றேன். ஆனால், அவர் சமாதானம் அடைந்தபாடில்லை.
‘அதெல்லாம் சரி அம்மா! கடவுள் உனக்கு எப்பேர்பட்ட இனிமையான சாரீரத்தைக் கொடுத்திருக்கிறார். இதை அடுப்பூதி கெடுத்துக்கணுமா? இந்த மாதிரி புகை அடுப்பை ஊதணுமா? இல்லை அழகாப் பாடணுமா? உன் பாட்டு எத்தனை பேரைச் சொக்கவச்சிருக்கு! எவ்வளவு பெரிய எதிர்காலம் உனக்காகக் காத்திருக்கு. பி.என். ரெட்டி எப்பேர்பட்ட ஜீனியஸ். அவருக்கே நீ எடுத்த முடிவு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு’ என்று தன் கன்னத்தில் கைவைத்தார். ஓஹோ, லிங்கமூர்த்தி அண்ணா இதுக்குத்தான் வந்திருக்கிறாரா?
நிஜமா, நடிப்பா?
எனக்குள் எரிச்சலும் ஆத்திரமும் மூண்டன. இந்த சினிமாப் பேர்வழிகள் எங்களை நிம்மதியாக வாழவிட மாட்டார்கள் போலிருக்கிறதே. எனக்குள் ஒரு விதமான பயமும் ஏற்பட்டது. கையிலிருந்த பருப்புப் பாத்திரத்தைக் கீழே வைத்தேன். அவருக்கு உறைப்பதுபோல, ‘அண்ணா நாங்க இருக்கிறது போதுமென்ற மனசோடு வாழ்ந்துகிட்டு இருக்கோம். இது உங்களுக்குப் பிடிக்கலையா?’ என்று குரலைச் சற்று உயர்த்தினேன். ‘ஐயோ பெத்தம்முடு நான் என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சுகிட்டுப் பேசு’ என்றார்.
நான் அவரை விடுகிற மாதிரி இல்லை. ‘ஓ நல்லாவே புரிஞ்சுட்டது அண்ணா! யாரோ என்னை மறுபடியும் சினிமா வலையில் சிக்கவைக்கப் பார்க்கிறார்கள். நீங்கள் அதற்கான தூண்டிலாக வந்திருக்கிறீர்கள். தூண்டில்காரர் பி.என்.ரெட்டிதான் சரியா?’ என்று முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு சொன்னேன். ‘அம்மா உன்னிடம் பேசவே பயமா இருக்கு நான் புறப்படுகிறேன்’ என்று கிளம்பியவரை, ‘காபி சாப்பிட்டுவிட்டுப் போங்கள்’ என்றேன். ஆனால் அவர் ‘இன்னொரு நாள் வருகிறேனம்மா’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட எத்தனித்தார்.
லிங்கமூர்த்தி அண்ணா படங்களில் மட்டுமல்ல; தேவை ஏற்பட்டால் நிஜ வாழ்க்கையிலும் நன்றாகவே நடிக்கக்கூடியவர்தான். இவர் நடிக்கிறாரா? நிஜமாகப் பேசுகிறாரா? ‘அண்ணா உட்காருங்கள். எனக்கு இந்தப் பட்டினத்தில் உங்களைவிட்டால் வழிகாட்ட யார் இருக்கிறார்கள்? அப்பா வேறு இல்லை. அவருக்கே சினிமாத் துறை பிடிக்காது.என் கணவர் சினிமாவில் டெக்னீஷியனாக இருப்பதால் வேறு வழியின்றி இங்கே இருக்கோம்’ என்று அவரைச் சமாதானப்படுத்தினேன்.
‘அம்மா பி.என். ரெட்டிகாருவிடம் ஒரு அருமையான கதை இருக்கு. இதில் பானுமதி பாடி நடித்தால் நமக்கு ஒரு திரைக்காவியம் கிடைக்கும். எங்கே நீ சம்மதிக்க மாட்டாயோ என்ற கவலையில் அவர் பாக்கெட் பாக்கெட்டாக சிகரட்டை ஊதித் தள்ளுகிறார். என்ன செய்வாயோ தெரியாது. பானுமதியையும் ராமகிருஷ்ணாவையும் சம்மதிக்க வைக்க வேண்டியது உன் பொறுப்பு என்று சொல்லிவிட்டார். நான் என்ன செய்யட்டும்? இந்தக் காரியமாக வந்திருந்தாலும் நீ கரி அடுப்பில் கஷ்டப்படுவதைப் பார்த்து எனக்குக் கண்ணீர் வருகிறது. உனக்கு வருவது புகையால் வரும் கண்ணீராக இருக்கலாம். எனக்கு உன் மீதான அக்கறையால், உனது தகப்பானார் மீதுள்ள மரியாதையால்’ என்று வந்த விவரத்துடன் தனது கவலையையும் சேர்த்துக்கொண்டார். உண்மையில் இதைக் கூறும்போது அவர் கண்கள் கலங்கியிருந்தன.
என் கணவருக்கு நான் ராணி
நான் பிரமை பிடித்துப்போய் உட்கார்ந்திருந்தேன். ‘உண்மையிலேயே நீ மட்டும் இந்தப் படத்தில் நடித்தால் அது மிகப் பெரும் வெற்றிப் படமாக இருக்கும். அதில் வருகிற முக்கியக் கதாபாத்திரத்துக்கு நீதான் உயிர் கொடுக்க முடியும். பி.என்.ரெட்டி மட்டுமல்ல; கே.வி.ரெட்டி, காமேஸ்வரராவ், சக்கரபாணி என்று படக் குழுவினரின் ஒருமித்த கருத்தும் இதுதான். ஆனால், இதுக்கு பாவா ஒத்துக்கணுமே. நீயும் சரி சொல்லணும். பி.என்.ரெட்டி அதிர்ஷ்டம் எப்படியோ?’ என்று சொல்லிக்கொண்டே பாயில் உட்கார்ந்தார் லிங்கமூர்த்தி.
அந்த நேரத்தில் என் கணவர் வந்து சேர்ந்தார். அவரிடம் என்னென்னவோ சொல்லி சம்மதிக்க வைக்கப் பார்த்தார் லிங்கமூர்த்தி. ‘இந்த ஒரு படம் மட்டும் பண்ணட்டும். அப்புறம் வேண்டுமானால் நடிப்பதை நிறுத்திக்கொள்ளலாம்’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். சினிமா சூறாவளி எங்களை நெருங்கி எங்கள் வாழ்க்கைப் படகை முன்னும் பின்னுமாக அசைக்க ஆரம்பித்தது. அன்று சாயங்காலம் பிள்ளையார் கோயிலுக்குப் போனோம். விநாயகரை வழிபட்டு வீடு திரும்பினோம். என் கணவர் சாய்வு நாற்காலியில்அமர்ந்தபடி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு ‘ராணி..’ என்று கூப்பிட்டார்.
திருமணத்துக்குப் பிறகு அவர் என்னை இப்படித்தான் கூப்பிடுகிறார். ‘பானுமதி சினிமா பெயர். அது எனக்கு வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார். கமலம்மா சொன்னார். ‘நீ பானு என்றே கூப்பிடலாமே!’ அன்று மாலை என் கணவர் சினிமா அலுவலகத்தில் இருந்து திரும்பியதும் என்னருகே வந்து காதுக்குள் எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி ‘ராணி’ என்றார். நான் திகைத்தேன். ‘பானுமதி என்ற பெயரில் எனக்கு இஷ்டமில்லை. உன்னை ராணி என்றுதான் இனிமேல் கூப்பிடப் போகிறேன்!’ இப்படிச் சொல்லிக்கொண்டே என்னைக் கைகளில் வாரிக்கொண்டார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத கணம் அது. ‘உனக்கு ஆண் குழந்தை வேணுமா பெண் குழந்தை வேணுமா?’ என்று கேட்டார். ‘எனக்கு ஆண் குழந்தைதான் வேணும். பெண்ணாய்ப் பிறந்து என் தாய் தந்தைக்கு நான் தந்த மனக்கஷ்டம் போதாதா?’ என்றேன்.
என் கணவரின் குரலில் ஒரு வேகம் விசிறியது. ‘ராணி இனியும் தாமதிக்க வேண்டாம். என் சொந்த ஊருக்கே போய்விடுவோம். என் அப்பா அங்கே வேலையில் இருக்கிறார். நானும் ஏதாவது வேலை தேடிக்கொண்டு விடுவேன். இந்த சினிமா சூழலில் இருந்து விடுபட்டு எங்காவது தூரமாகப் போய்விடுவோம்’ என்றார் ‘நாளைக்கே புறப்படலாம்’ என்றேன் உற்சாகத்துடன்.
ஆனால், அடுத்த சில நொடிகளில் என் கணவரின் நெற்றி சுருங்கியது. ‘பி.என்.ரெட்டி, வாஹினி ஸ்டுடியோ அதிபர் எல்லாம் நமது நலனின் அக்கறைகொண்ட பெரிய மனிதர்கள். இவர்களிடம் என்ன சொல்வது?’ என்று தயங்கினார். ‘நான் சினிமாவில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டதைச் சொல்லுங்கள். எனக்குத் துளிக்கூட அதில் ஆர்வமில்லை என்று சொல்லுங்கள்’ என்றேன்.
நான் இப்படிச் சொன்னபோது என் குரலில் வீசிய அனல் என்னையே சுட்டது ‘ நீங்கள் சொன்ன மாதிரி எங்காவது கண்காணாத இடத்துக்குப் போய் விடுவோம். என் கணவரின் முகம் மலர்ந்தது. ‘அப்படியே செய்யலாம்’ என்று மீண்டும் உற்சாகம் அடைந்தார். ஓர் எளிய உண்மையை நாங்கள் இருவருமே மறந்துவிட்டோம். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. இதில் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடும் என்று நம்புவது எவ்வளவு பெரிய அசட்டுத்தனம்”
பானுமதி எழுந்துகொண்டார். வாதாம் மரத்தில் உட்கார்ந்திருந்த அணில் கீச்சுக் குரலில் விட்டுவிட்டு கத்தத் தொடங்கியது.
(தாரகை ஒளிரும்)
தொடர்புக்கு:-
thanjavurkavirayar@gmail.com
படம் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago