சினிமா ரசனை 5: இவர்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை!

By கருந்தேள் ராஜேஷ்

நுழைவாயில்

காட்சி -1:

ஹீ-ஸூ, ஸெல்லோ (cello) என்ற இசைக்கருவியை வாசிப்பதைக் கிம் பார்க்கிறான். அவளிடமிருந்து அழகிய, மனதை வருடும் இசை பெருகுகிறது. இந்த இசை, கிம்மின் மனதையும் இதயத்தையும் அசைக்கிறது. ஹீ-ஸூவின் சிறுசிறு அசைவுகளைக் கவனிக்கும் கிம், அந்த அழகிய உணர்வை அப்போதுதான் முதல்முறையாகத் தனது மனதில் உணர்கிறான். அவன் மனம் கனிகிறது (Bittersweet Life).

காட்சி 2:

ஒரு நடுத்தர வயது மனிதனை, அவனது அபார்ட்மெண்டுக்கே சென்று, அவனது மனைவி, தாய், மகள்கள் முன்னிலையில், தனது மகளின் வயதை விடக் குறைந்த வயதுச் சிறுமியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள எப்படி மனது வந்தது எனக் கேட்டு, அடிக்கிறார் யோங்-கி. அவர் அங்கிருந்து சென்றபின், மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறான் அந்த மனிதன் (Samaritan Girl).

இவை பிரலமான இரு கொரியத் திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கும் இருவேறு மையக் காட்சிகள். கொஞ்சம் விரிவாக கொரியத் திரைப்படங்களை அறிய கட்டுரைக்கு உள்ளே போகலாமா?

உலக சினிமா சரித்திரத்தில் ஒரு காலத்தில் ஜெர்மன், இத்தாலியன், பிரெஞ்ச் படங்கள் ஆதிக்கம் செலுத்தின. அவ்வப்போது அகிரா குரஸவா, ரித்விக் கட்டக், சத்யஜித் ராய் போன்ற இயக்குநர்கள் உலகின் கவனத்தைக் கவர்ந்திருந்தாலும், பெரும்பாலான தரமான திரைப்படங்கள் இந்த நாடுகளைச் சேர்ந்தவையே. இதன் பின் தொண்ணூறுகளில் அருமையான ஈரானியப் படங்கள் வெளியாகி உலகத் திரை ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன. ஈரானிலிருந்து ஒரு உலக சினிமாப் படையே ரசிகர்களின் மீது கெரில்லாத் தாக்குதல் நடத்தியது.

தற்போதும் அந்தப் பிராந்தியத்திலிருந்து தரமான படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இருந்தாலும் உலக சினிமாவில் தற்போது பரவலாகப் பேசப்படுபவை கொரியத் திரைப்படங்களும் தென்னமெரிக்கத் திரைப்படங்களும்தான். இவற்றில் கொரியப் படங்கள் இப்போது முன்பைப் போல் வாழ்வின் அழகியலை மையமாகக் கொண்டு வருவதில்லை. பெரும்பாலும் ஆக்‌ஷன் சார்ந்த வன்முறை அழகியலையே அவை முன்னிலைப்படுத்துகின்றன.

கொரியாவிலிருந்து அட்டகாசமான திரைப்படங்கள் வெளியாகும் என்பதை உலகுக்கு முதன்முறையாக நிரூபித்தது ‘ஓல்ட்பாய்’ (Oldboy) என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அதற்கும் முன்னரே ‘ஷிரி’ (Shiri) என்ற திரைப்படம் 1999-ல் ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தாய்வானில் திரையிடப்பட்டுப் பெரும் வெற்றி பெற்றது. இதிலிருந்துதான் ஆசியா முழுவதும் கொரியப் படங்கள் பரவலாகத் திரையிடப்படத் தொடங்கின.

இதன் பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் கொரியப் படங்கள் பிரபலமாயின. இது இப்போது எந்த நிலையில் உள்ளது என்றால், கொரியப் படங்களை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப் பல மில்லியன்கள் அளிக்கப்படுகின்றன (ஆனால் என்னதான் ரீமேக் செய்தாலும் ஹாலிவுட், கொரியன் படங்களின் ஜீவனைக் கெடுத்துவிடுகிறது. இதனால்தான் சென்ற வருடம் வெளியான ஓல்ட்பாயின் ரீமேக் படுதோல்வி அடைந்தது).

கொரியன் படங்களில் அப்படி என்ன பிரத்யேக அம்சம்?

பொதுவாகவே கொரியன் படங்களில், ஆங்கிலப் படங்களில் இல்லாத பல அம்சங்கள் உண்டு. ஷாட்களை அமைப்பதிலிருந்து, இயல்புத்தன்மை, இசை, வேகமான திரைக்கதை, மனித வாழ்வின் அபத்தங்களைப் பற்றிப் பேசுதல் போன்ற பல விஷயங்களில் கொரியன் படங்கள் ஹாலிவுட்டைத் தாண்டி நிற்கின்றன. வேகமான திரைக்கதை, நல்ல நடிப்பு, அருமையான பின்னணி இசை ஆகியவை மூலம் பல பரிமாணங்களை நமது மனதில் காட்டும் படங்களே கொரியன் பாணி.

எந்தக் கதையாக இருந்தாலும், கதாபாத்திரங்களை நன்றாக உருவாக்கி, கதையுடன் அவற்றை இயல்பாக நடமாட விடுவதில் கொரியன் படங்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. காதலில் ஆரம்பித்து, திகில், உளவியல் சார்ந்த த்ரில்லர்கள், மென்சோகம் ததும்பும் இயல்பான படங்கள் என்ற அனைத்து வகைகளும் கொரியன் படங்களில் உண்டு.

தற்காலத்தின் சிறந்த கொரியன் இயக்குநர்களில் முதன்மையாக இருப்பவர் கிம் கி டுக். இவரைப் பற்றி உலக சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமே தேவையில்லை என்னும் அளவு அனைவருக்குமே இவரைத் தெரியும். பொதுவாக, கிம் கி டுக் படங்களின் ஓரிரு காட்சியைப் பார்த்தாலே அது அவரது படம் என்பது கட்டாயம் தெரிந்துவிடும். ஏதாவது ஒரு மிருகம். மவுனம். அதீத வன்முறை. காதல். வழக்கமான காட்சிகளில் வித்தியாசமான, உணர்வுபூர்வமான செய்கைகள். இதுபோன்ற பல விஷயங்கள் அவரது படங்களை நமக்குத் தெளிவாக அடையாளம் காட்டிவிடும்.

அவரது படங்களில் வரும் கதாபாத்திரங்கள், பொதுவாகத் தங்களது உணர்வுகளை வசனங்களின் மூலம் வெளிப்படுத்தாமல், செய்கைகள் மூலமே வெளிப்படுத்துவதைக் காணலாம். தனது படங்களில், படம் பார்க்கும் ரசிகர்களையும் நேரடியாக ஈடுபடுத்துவது அவரது பாணி. இவரது மறக்க முடியாத படங்களாக, ‘Spring, Summer, Fall, Winter and Spring’, ‘Isle’, ‘3-Iron’, ‘Samaritan Girl’, ‘Birdcage Inn’, ‘Pieta’, ‘Breath’, ‘Time’ ஆகியவற்றைச் சொல்லலாம். இவரது படங்களைப் பார்த்தால், அவற்றில் வசனங்கள் மிகக் குறைவாகவும், உணர்வுகள் மிக அதிகமாகவும் இருப்பதை அறியலாம்.

கிம் கி டுக்குக்கு நேர் எதிராக, தனது ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு விதமாக எடுத்து மிகப் பிரபலமாக இருப்பவர் கிம் ஜி வூன். தனக்கு என்று எந்தவிதப் பாணியும் இல்லாமல் அதே சமயம் இயக்கும் எல்லாப் படங்களையும் படம் பார்ப்பவர்கள் முழுமனதுடன் ரசிக்கும்படி எடுப்பதே இவரது ‘பாணி’. இவரது ‘Bittersweet Life’ மிகவும் பேசப்பட்ட படம்.

இசையை இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தைப் போல் உருவாக்கியிருப்பார். படத்தின் அத்தனை காட்சிகளிலும் இந்த இசை, பார்வையாளர்களுடன் நேரடியாகப் பேசுவதைக் காணலாம். அதே சமயம் இது ஒரு முழுநீள ஆக்‌ஷன் படமும் கூட. ஆக்‌ஷனும் இசையும் கச்சிதமாக சங்கமித்து இப்படத்தை ஒரு உயரிய தளத்தில் வைத்திருப்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.

கிம்-ஜி-வூனின் பிற படங்களில், ‘I saw the Devil’, ‘A Tale of Two Sisters’, ‘The Good, the Bad and the Weird’ ஆகிய கொரியப் படங்கள் அடங்கும். இவையெல்லாமே ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. இவை அனைத்துமே அருமையான படங்களும் கூட.

கிம் ஜி-வூன் (Kim-Jee-Woon), பார்க்-சான் வூக் (Park-Chan-Wook), கிம்-கி-டுக் (Kim-Ki-Duk), போங்-ஜூன் ஹோ (Bong-Joon-Ho), ச்சோய்-டாங்-ஹூன் (Choi-Dong-Hoon), லீ-சாங்-டோங் (Lee-Chang-Dong), நா-ஹோங்-ஜின் (Na-Hong-Jin) போன்ற அட்டகாசமான இயக்குநர்களின் படங்கள் தற்போது உலகின் பல நாடுகளில் வலம்வருகின்றன. இந்தப் படங்களின் மூலம் கொரியா உலக சினிமாக்களில் தனக்கென்று ஒரு இடத்தையும் பெற்றுவிட்டது. இந்த இயக்குநர்களின் படங்கள் அனைத்துமே மிகப் பிரபலமான கொரியப் படங்கள் என்பதால் அவற்றைப் பார்த்தாலே கொரியப் படங்களைப் பற்றி அவசியம் தெரியவரும்.

தொடர்புக்கு: rajesh.scorpi@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்