மிக மிக உயர்ந்த ரசனை கொண்டவர்கள் நமது தமிழ்நாட்டு சினிமா பார்வையாளர்கள் என்பது உண்மை. இவர்கள், எந்த மொழிப்படமாக இருந்தாலும் சரி, அவை உன்னதமான படங்களாக இருந்தால், அந்தப் படங்களை மொழி தெரியாமலேயே மீண்டும் மீண்டும் பார்த்துப் பாராட்டி மகிழ்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட நல்ல படங்கள் வெளியாகத் தாமதமாகும்போது, பொழுதுபோக்க வேண்டும் என்பதற்காக மிக மிக மோசமான படத்தைக்கூட ஒருதடவை அல்ல; பல தடவை பார்ப்பார்கள். முறையான சினிமா பற்றித் தெரிந்த எவரும் பார்த்துச் சிரிப்பார்களே என்ற வெட்க உணர்வு துளியும் இல்லாமல், நாகரிகத்தின் உச்சாணிக்கு நாம் போய்விட்டதாகச் சொல்லிக்கொள்ளும் இன்றைய காலகட்டத்திலும் நம் சினிமாக்களில் காதலன், காதலி டூயட் பாடியாடும் அலங்கோலம் அரங்கேறுகிறது. இந்த அலங்கோலத்தை இந்திய நாட்டைத் தவிர வேறு எந்தவொரு நாட்டின் சினிமாவிலும் பார்க்க முடியாது’.
‘சினிமாவும் நானும்’ என்ற நூலில் இயக்குநர் மகேந்திரன்.
தமிழ்நாட்டில் நிலவும் சினிமா ரசனையை இதைவிடத் துல்லியமாகக் கணித்துவிட முடியாது. ஒரு ‘சராசரி’ (இந்த வார்த்தையே கண்டிக்கத்தக்கது. ஏன் என்று சற்றுப் பின்னால் கவனிப்போம்) திரைப்பட ரசிகனாக இன்றைய தேதியில் நமக்குத் தேவையானது என்ன என்று யோசித்தால், ‘நல்ல திரைப்படம் பார்க்க வேண்டும்’ என்ற ஆசை எல்லாருக்குமே இருப்பதை மறுக்க முடியாது. இதில் ‘நல்ல’ என்பதுதான் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது.
இருவகை ரசிகர்கள்
ஒரு சாரார், ‘உலகின் சிறந்த திரைப்படங்களைப் போலவே தமிழில் திரைப்படங்கள் எடுக்கப்படும் காலகட்டம் வர வேண்டும்; அப்படங்களே எங்களைப் பொறுத்தவரையில் நல்ல படங்கள்’ என்கிறார்கள். இவர்கள் யார் என்று கவனித்தால், செர்கய் ஐஸன்ஸ்டைனில் தொடங்கி சமீபத்தில் வெளியாகியிருக்கும் இயக்குநர் டாட் ஹெய்ன்ஸ் இயக்கியிருக்கும் ‘கரோல் ’(Carol - 2015) திரைப்படம் வரையில் தேர்ந்தெடுத்தே பார்ப்பவர்கள். எல்லா உலக சினிமா விழாக்களுக்கும் தவறாமல் ஆஜராகிவிடும் தீவிரமான சினிமா நேசிப்பாளர்கள். இவர்களைப்பொறுத்தவரை சினிமா என்பது வணிகம் என்ற அம்சத்தைத் தாண்டி, கலை என்பதன் முழுமையான வெளிப்பாடு. ரித்விக் கட்டக், சத்யஜித் ராய், ஜான் ஆப்ரஹாம், ராமு காரியத், அடூர் கோபாலகிருஷ்ணன், எம்.டி.வாசுதேவன் நாயர், கிரீஷ் காஸரவள்ளி, கிரீஷ் கர்னாட், மிருணாள் சென், தபன் சின்ஹா போன்ற பல இயக்குநர்களின் படங்களைக் கரைத்துக் குடித்திருக்கும் தீவிர ரசிகர்கள் இவர்கள்.
இன்னொரு சாராரோ இவர்களுக்கு நேர் எதிரானவர்கள். ‘திரையரங்கு சென்றால் எங்களுக்குப் பொழுது போக வேண்டும். எங்களை சுவாரஸ்யப்படுத்தும் காட்சிகள் வர வேண்டும். அலுப்பே ஏற்படக் கூடாது’ என்பவர்கள். இவர்களுக்குத் தேவை வணிகப் படங்கள். இவர்களால் சென்ற பத்தியில் சொல்லியிருக்கும் இயக்குநர்களின் படங்களில் ஒன்றைக்கூட முழுமையாகப் பார்க்க இயலாது.
முக்கியமான மூன்றாம் குழு
இந்த இரண்டு நேர் எதிரான குழுக்களுக்கு இடையே அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத இன்னொரு கும்பலும் உள்ளது. இவர்கள்தான் திரைப்பட ரசிகர்களில் அதிகமான சதவிகிதம். இவர்களைத்தான் இயக்குநர் மகேந்திரன் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் உள்ள மேற்கோள் மூலம் அடையாளப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தின் பெரும்பாலான திரை ரசிகர்களாகிய இவர்களுக்கு எப்படிப்பட்ட படங்கள் வேண்டும் இப்போதைய காலகட்டத்தில் கணினி, இணையம் ஆகியவற்றை அதிகமாக உபயோகப்படுத்தும் மக்கள் இவர்கள். இதன்மூலம் விரும்பியோ விரும்பாமலேயோ நல்ல படங்களின் தாக்கம் இவர்களைச் சென்று அடைந்திருக்கிறது. உடன் வேலை செய்யும் நண்பர்கள் சொல்லியோ, இணையத்தில் தேடியோ, தொலைக்காட்சியைப் பார்த்தோ, வலைப்பூக்கள், சினிமா பற்றிய புத்தகங்கள் ஆகியவற்றின் மூலமோ இவர்களுக்கு உலகின் சிறந்த திரைப்படங்கள் பற்றிய ஞானம் ஓரளவு உள்ளது. இவர்களால் அப்படிப்பட்ட படங்களை அவசியம் ரசிக்க இயலும். அதே சமயம், எப்போதுமே அப்படி இருக்காமல், அவ்வப்போது வணிகப் படங்களும் பார்த்து ரசிக்கக்கூடியவர்கள் இவர்கள்.
ஓராண்டுக்கு முன்னர் சென்னையில் உலகத் திரைப்பட விழாவின்போது லூஸியா திரையிடப்பட்டது. அந்தத் திரையரங்குகளில் நிரம்பிய கூட்டத்தால் பலரும் நின்றுகொண்டே அப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. அந்தப் படம் திரையிடப்பட்ட எல்லாச் சமயங்களிலும் இதேதான் நடந்தது. இது மட்டுமல்லாமல், இன்னும் உலகத் திரைப்பட விழாக்களில் விருது வாங்கிய புகழ்பெற்ற படங்கள் எல்லாவற்றுக்குமே நிரம்பும் பெரும்பாலான கூட்டம் இவர்களால்தான்.
இந்த வகையைச் சேர்ந்த ரசிகர்கள்தான் இப்போது இணையத்திலும் எந்தப் படம் வெளிவந்தாலும் உடனடியாக அதைப் பற்றிய விமர்சனத்தை முன்வைக்கின்றனர். எந்த நடிகருக்கும் ரசிகராக இல்லாமல், நடுநிலையாக ஒரு திரைப்படத்தைப் பார்க்க இவர்களால் முடிகிறது. ஃபேஸ்புக்கில் இருக்கும் பல திரைப்படக் குழுமங்களில் இவர்கள்தான் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றனர். தினந்தோறும் பல படங்களை இணையத்தின் மூலம் பார்த்துவிட்டு இக்குழுக்களில் இவர்கள்தான் அவற்றைப் பரிந்துரைக்கின்றனர். இந்தத் திரைப்பட ரசிகர்கள் நாள்தோறும் வளர்ந்தும் வருகின்றனர்.
அனுபவமாக மாறுமா?
இந்த வகைத் திரை ரசிகர்கள் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். “ஒரு திரைப்படம் என்பது கொடுக்கும் ஆழமான அனுபவத்தைத் தேடிச் செல்கிறோம்” என்பதே அது. அப்படம் எந்த மொழியில் இருந்தாலும் சரி; எந்த வகையாக இருந்தாலும் சரி; அது ‘லைஃப் இஸ் ஃப்யூட்டிஃபுல்’(Life is Beautiful) படமாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான்; அதுவே ‘எ செர்பியன் பிலிம்’ (A Serbian Film) படமாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான். அப்படங்களின் வாயிலாகச் சொல்லப்படும் கருத்துகளில் எங்களின் திரை ரசனையை நாங்கள் மேம்படுத்திக்கொள்கிறோம் என்பதே இவர்களின் நோக்கம்.
உங்களுக்காகவே
இந்த வகையைச் சேர்ந்த, தமிழகத்தின் பெரும்பாலான நடுநிலையான திரை ரசிகர்களுக்குத் தேவையான படங்கள் என்னென்ன? அவற்றின் மூலம் சொல்லப்படும் செய்திகள் என்னென்ன? அவற்றின் இயக்குநர்களும் திரைக்கதையாசிரியர்களும் அப்படங்களில் சொல்ல முயன்றவை என்ன? அந்த நோக்கம் நிறைவேறியதா? இதுபோன்ற இன்னும் பல விஷயங்களை ஒவ்வொன்றாக, தெளிவாக இத்தொடரில் கவனிக்க இருக்கிறோம். நீங்கள் தரமான திரைப்படங்களை விரும்புபவராக இருந்தால் உங்களுக்காகத்தான் இத்தொடர் எழுதப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளலாம். இப்படங்கள் எப்படி உலக அளவில் பேசப்படுகின்றனவோ, அப்படிப்பட்ட படங்கள் தமிழகத்திலும் எடுக்கப்பட வேண்டும்; அவை மூலம் பல்வேறுபட்ட கருத்துகள் பேசப்பட வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம். இடையிடையே சினிமா பற்றிய பல விஷயங்களும் உள்ளே வரும்.
ஆரம்பிக்கலாமா?
தொடர்புக்கு: rajesh.scorpi@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago