எழுத்தைக் கையில் எடுக்கிறேன்!- நடிகர் விவேக் சிறப்பு பேட்டி

By மகராசன் மோகன்

‘‘கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முழு நேரம் கேமரா வெளிச்சத்தில் விழுகிற சூழலை உருவாக்கியிருக்கிறேன். தொடர்ந்து மரக்கன்றுகளை நடுவதற்காக எடுத்துக்கொண்ட இடைவெளிதான் இது.

‘சிங்கம் 2’ படத்துக்குப் பிறகு பெரிதாக வெள்ளித்திரையில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தாலும் ‘என்னை அறிந்தால்’, ‘வை ராஜா வை’ போன்ற படங்களில் என் பாணி நடிப்புக்கு வரவேற்பு இருக்கவே செய்தது’’ என்று கலகலப்பாகப் பேச்சைத் தொடங்குகிறார், விவேக். ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தின் ரிலீஸ், புரமோஷன் வேலைகளில் மும்முரமாக இருந்த அவரைச் சந்தித்தோம்.

பொதுவாக உங்களது பெரும்பாலான காமெடி ட்ராக்கில் ஆழமான கருத்து ஒன்றை பிரதிபலிக்கச் செய்வது வழக்கம். அந்த வகையில் ‘பாலக்காட்டு மாதவன்’ படத்துக்காக மெனக்கெட்டிருப்பது என்ன?

எல்லா இடங்களிலும் கருத்து சொல்ல வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. என்.எஸ்.கே.வுக்குப் பிறகு அந்த பாணியை நான் கையில் எடுத்தேன். அதற்குக் காரணம் நகைச்சுவை வழியே கருத்து சொல்ல வசதிகள் இலகுவாக அமைந்ததுதான்.

‘பாலக்காட்டு மாதவன்’ படத்தைப் போல ஒரு படமெடுக்கும்போது முழுவதும் கருத்து சொல்லிக்கொண்டே இருக்க முடியாது. அப்படிச் செய்தால் அது பிரச்சாரமாக மாறிவிடும். எனினும், பெற்றோரை வயதான காலத்தில் தவிக்க விடக் கூடாது என்ற ஆழமான கருத்தை இந்தப் படத்தின் இறுதிப் பகுதியில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறோம்.

படத்தின் கதை என்ன?

ஐடி நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் மனைவி, அதே நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் கணவன்; இருவருக்குள்ளும் ஏற்படும் ஈகோ பிரச்சினை; இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போது வளர்ப்புத் தாயாக ஒருவரைத் தத்தெடுக்கிறோம். அம்மா வீட்டுக்குள் வந்த பிறகு நடக்கும் நிகழ்வுகள்தான் மையக் கரு. படத்தில் எனக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருக்கிறார்.

சரண்யாவை விட்டால் அம்மா கதாபாத்திரத்துக்கு ஆள் இல்லாத நிலை இருக்கிறது. அதை அம்மாவாக நடித்த ‘செம்மீன்’ ஷீலா இந்தப் படத்தில் மாற்றியிருக்கிறார். இவர்களுடன் மனோபாலா, சிங்கமுத்து, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி என்று பெரிய கூட்டணியே இருக்கிறது. அவர்களில் மொட்ட ராஜேந்திரன் எஸ்.பி.பி. சார் மாதிரி ஒரு பெரிய பாடகராக வர வேண்டும் என்று முயற்சி செய்கிற எஸ்.பி.பி. சந்தோஷ்குமார் என்ற பாத்திரத்தை ஏற்றுள்ளார்.

காமெடிக்குத் தட்டுப்பாடே இருக்காது. படத்தில் ‘உச்சி மேல உச்சி மேல ஏறப் போறேன்டா’ என்ற பாடலை நான் எழுதியிருக்கிறேன். அதை அனிருத் பாடியிருக்கிறார். இப்படி நிறைய சிறப்புகள் இருக்கும் படமாகத்தான் வந்திருக்கிறது.

விவேக் இயக்குநர் அவதாரம் எடுக்கப் போகிறார் என்ற தகவல் பறந்ததே?

அடுத்த இலக்கு அதுதான். ‘பாலக்காட்டு மாதவன்’ படத்துக்குக் கிடைக்கும் வரவேற்பை வைத்து அந்த வேலைகளைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறேன். சில மாதங்களாக ஒரு கதை உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதில் நான் வில்லன். காமெடி விஷயங்களாகச் செய்துகொண்டே நகரும் நான், ஒரு கட்டத்தில் வில்லனாக மாறிவிடுவேன். அதற்கான காரணம் என்ன என்பதுதான் கதை. இங்கே உள்ள ஹீரோக்களுக்காகக் கதை எழுதும் திட்டமும் உள்ளது. பலரும் என் நண்பர்கள் என்பதால் யாரும் மறுக்கப்போவதில்லை.

நீங்கள் நாயகனாக நடித்த ‘நான்தான் பாலா’ பெரிதாகப் போய்ச்சேரவில்லையே?

அந்தப் படத்தில் என்னுடைய சீரியஸ் கதாபாத்திரம் மக்களைப் பெரிதாக ஈர்க்கவில்லை. அதுபோன்ற கதாபாத்திரத்தில் மக்கள் என்னை எதிர்பார்க்காததால்தான் அது சரியான வரவேற்பைப் பெறவில்லை. இனி அதை நானும் விரும்பப்போவதில்லை. விவேக், நகைச்சுவை நடிகனாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

முன்பைப் போல முன்னணி காமெடி நடிகர்கள் ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் சூழல் தற்போது உருவாவதில்லையே. ஏன்?

ஹீரோக்களே காமெடியைக் கையில் எடுக்கத் தொடங்கிவிட்டனர். ஹீரோக்கள் காமெடி நடிகர்களை அரவணைத்துப் போகும் சூழல் இருந்தால் நீங்கள் சொல்வது சாத்தியமாகலாம். மற்ற காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க நான் தயாராகவே இருக்கிறேன். விவேக், சந்தானம், சூரி காம்பினேஷனில் இணைந்து ஒரு கதை அமைந்தால் பச்சைக்கொடி காட்ட முதல் ஆளாக நான் தயாராகவே இருக்கிறேன்.

கார்த்திக்கு அப்பா, சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் என்று ‘காஸ் மோரா’ படம் செம ரகளை போல?

அஜித்துடன் படப்பிடிப்பில் இருந்தபோது, ‘நீங்களோ, நானோ இந்த ஹேர் ஸ்டைல் வைத்துக்கொண்டால் நல்லாதான் இருக்கும்’ என்றார். ‘உங்களுக்குதான் சரியாக இருக்கும்’ என்று நான் சொன்னேன். ‘இல்லையில்லை. ஒருமுறை முயற்சி செஞ்சு பாருங்க’ என்று கூறினார். ‘என்னை அறிந்தால்’ படப்பிடிப்பு முடிந்த பிறகு திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டேன்.

அதற்குப் பிறகு தலைமுடியை அப்படியே விட்டுவிட்டபோது இந்த வண்ணம் கிடைத்தது. கார்த்தியின் அப்பா பாத்திரத்துக்கு விக் எல்லாம் வேண்டாம், இப்படியே இருக்கட்டும் என்று சொன்னேன். ரொம்பவே பொருத்தமாக இருந்ததால் இதே தோற்றத்தில் அடுத்தடுத்துப் பட வாய்ப்புகளும் வருகின்றன.

ஒரு கோடி மரக்கன்றுகள் என்ற இலக்கில் இதுவரை 27 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறீர்கள். அவையெல்லாம் முறையாகப் பராமரிக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்குப் பயன் ஏதும் கிடைக்கிறதா?

என் இலக்கு பெரும்பாலும் பள்ளி, கல்லூரி வளாகங்கள்தான். சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி சென்றபோது அங்கே 4 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த ஒரு பூவரசு மரத்துக்குக் கீழே நின்று செல்பி எடுத்துக்கொண்டேன். சென்னை நியூ காலேஜ் வளாகத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு நான் வைத்த கன்று இன்று மரமாகி அதன் கீழே மாணவர்கள் அமர்ந்து படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மரம் வளர்க்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துவது என் நோக்கம். அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பை மாணவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். அது முழுக்க அவர்களின் பொறுப்பாகத்தான் கருதுகிறேன். அந்த எண்ணத்தை விதைப்பவனாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

45 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்