ஒருமணி நேரம் நின்ற ரயில்!

By பிரதீப் மாதவன்

ஊர்வசி சாரதா 70-வது பிறந்த தினம்: ஜூன் 12

நடிகர்கள் உருவாவதில்லை பிறக்கிறார்கள் என்று சொன்னார் எல்லீஸ் ஆர் டங்கன். அவரது கூற்று உண்மை என்பதற்கு வாழும் உதாரணம் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடும் முன்னாள் நாயகி இன்னாள் குணச்சித்திர நடிகை சாரதா. இந்திய சினிமாவில் ஒப்பிட முடியாத நட்சத்திரமாக விளங்கும் இவர் யதார்த்தமான நடிப்புக்காகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆகிய நான்கு மொழிகளில் கொண்டாடப்படும் தன்னிகரற்ற தாரகை.

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்ற முதல் இந்திய நட்சத்திரம். நடிப்புக்கான அன்றைய தேசிய விருது ‘ஊர்வசி விருது’ என்று அழைக்கப்பட்டதால் ‘ ஊர்வசி சாரதா’ என்று அழைக்கப்படும் இவரை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்டு தயாரான ‘அம்மேக்கோரு தாராட்டு’ என்ற மலையாளப் படம் கடந்த ஜனவரியில் வெளியாகி மலையாள ரசிகர்களைக் கவர்ந்தது.

கண்ணீரின் தத்துப் பிள்ளை

துன்பமும் துயரமும் துரத்த, ததும்பும் கண்ணீரை ஏந்தி நிற்கும் கண்களையும் கேள்விக்குறியைத் திலகமாய்ச் சூடியதுபோன்ற வாழ்வையும் சுமக்கும் கதாபாத்திரங்களுக்காகவே தத்து கொடுக்கப்பட்ட நாயகி இவர். கூடு விட்டுக் கூடு பாய்ந்து காட்டிய இவரது நடிப்புத் திறமையைக் கண்டு, கதாபாத்திரங்களை இவருக்காகவே வார்க்க ஆரம்பித்தார்கள் தென்னிந்திய இயக்குநர்கள்.

எத்தனை சோகமான கதாபாத்திரங்களில் மீண்டும் மீண்டும் நடித்தாலும் அவரது பெயரைத் தங்களது பெண் பிள்ளைகளுக்கு வாஞ்சையுடன் வைத்தார்கள் மலையாள ரசிகர்கள். ஆந்திராவில் பிறந்து சென்னையில் வளர்ந்து, மலையாள சினிமாவில் மகுடம் சூடிய சாரதாவை மலையாள மக்கள் தங்கள் சேச்சியாகவும் அம்மேயாகவும் இன்றும் கொண்டாடுகிறார்கள்.

சென்னை வாசம்

1945-ல் வெங்கடேசலு ராவ் – சத்தியவதி தம்பதியின் மூத்த மகளாக ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலியில் பிறந்த அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் சரஸ்வதிதேவி. கலைமகளின் பெயரைச் சூட்டியதாலோ என்னவோ ஆறு வயதில் ஆரம்பித்துப் பரதம் கற்றுக்கொண்டார். தனது பதினோராவது வயதில் என்.டி.ராமாராவ் நாயகனாக நடித்த ‘கன்னியா சுல்கம்’ என்ற தெலுங்குப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டே பள்ளிக்கல்வியை முடித்தார். பதிமூன்று வயது முதல் நாடகங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

மொத்தத் தென்னிந்திய சினிமாவும் சென்னையில் இயங்கியதால் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

1961-ல் வெளியான ‘இத்தரு பித்ருலு’(இரு நண்பர்கள்) என்ற படத்தில் நாகேஸ்வர ராவின் தங்கையாக முதல் முழுநீள வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்பைக் கண்டு துணைக் கதாபாத்திரங் களுக்கான தெலுங்குப் பட வாய்ப்புகள் வரிசை கட்டி வந்தன. இன்னொரு பக்கம் நாடக வாய்ப்புகளுக்கும் பஞ்சமில்லை. இவரது அபார நடிப்புத் திறமையைப் புரிந்துகொண்ட மலையாளப் பட உலகம் இவரை மொத்தமாக ஸ்வீகரித்துக்கொண்டது.

சாதனைகள் படைத்த துலாபாரம்

திரைக்கதையின் பிதாமகன் என்று வர்ணிக்கப்படும் எம்.டி. வாசுதேவன் நாயர் தனது சிறுகதையொன்றை விரித்து எழுதித் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமான படம் ‘முறப்பெண்ணு’. முதுபெரும் இயக்குநர் ஏ. வின்சென்ட் இயக்கத்தில் பிரேம்நசீர் நாயகனாக நடித்து 1965-ல் வெளியான படம். இந்தப் படத்தில் பாக்கியலட்சுமி என்ற முறைப்பெண் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி மலையாள ரசிகர்களைக் கவர்ந்தார்.

அதன் பிறகு எம். டி. வி. – ஏ. வின்சென்ட் – பிரேம் நசீர் கூட்டணி வெற்றிகளைக் குவித்த படங்களில் சாரதா ஆஸ்தான நாயகி ஆனார்.

தொடர்ந்து பத்து ஆண்டுகள் மலையாளப் பட உலகின் தன்னிகரற்ற நாயகியாகக் கோலோச்சிய சாரதா நடிப்புக்கான முதல் தேசிய விருதைப் பெற்றது 1968-ல் வெளியான ‘துலாபாரம்’ படத்துக்காக. ஏ. வின்சென்ட் இயக்கிய இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டபோது இவருக்கு மாற்றாக யார் என்ற யோசனைக்கே இடமில்லாமல் எல்லாவற்றிலும் கதாநாயகியாக நடித்தது சாரதாவேதான்.

துலாபாரத்தின் தெலுங்குப் பதிப்பு ஆந்திராவின் பெஜவாடா நகரில் இருக்கும் லீலா மஹால் என்ற திரையரங்கில் வெளியாகியிருந்தது. அந்தத் திரையரங்குக்குத் துலாபாரம் படம் பார்க்கப் போயிருந்தார். இவர்தான் சாரதா என்று யாருக்கும் தெரியவில்லை. படத்தின் உச்சகட்டக் காட்சியில் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அத்தனை பெண்களும் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து சாரதாவும் ஆனந்தத்தில் அழுதார்.

ஒரு பெண் ரசிகை வாய்விட்டுக் கதறி “பாவி மகளே… மூணு குழந்தைகளை வச்சுக்கிட்டு இவ்வளவு கஷ்டப்படுறியே... என் வீட்டுக்கு வந்தா வயிறார நான் போஜனம் தர மாட்டேனா” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதிருக்கிறார். அந்தக் கணமே ஓடிப் போய் அந்த ரசிகையைக் கட்டிப்பிடித்துக்கொண்டார் சாரதா.

ஒருமணி நேரம் நின்ற ரயில்

சாரதாவின் நடிப்பாளுமைக்கு மேலும் பெருமை சேர்ப்பது அடூர் கோபால கிருஷ்ணனின் கலைப்படங்களில் அவர் கதாபாத்திரங்களாக மிளிர்ந்த காலம். அடூர் இயக்கத்தில் 1972-ல் வெளியான ‘ஸ்வயம்வரம்’ படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான ஊர்வசி விருதை இரண்டாவது முறையாகப் பெற்றார். முன்றாம் முறை அவர் தேசிய விருதைப் பெற்றது பி.எஸ். நாராயணா இயக்கத்தில் 1979-ல் வெளியான ‘நிமாஜனம்’என்ற தெலுங்குப் படத்துக்காக.

25-ம் வயதில் முன்னணிக் கதாநாயகியாக இருந்தபோது ஒரு படப்பிடிப்புக்காகச் சென்னையிலிருந்து கல்கத்தா மெயிலில் சென்றுகொண்டிருந்தார் சாரதா. ஆந்திராவின் அனக்காபள்ளி என்ற நிலையத்தில் ரயில் நின்றது. சாரதாவை ரயிலில் பார்த்துவிட்ட உள்ளூர் ரசிகர்கள் திமுதிமுவென்றுகூட ஆரம்பித்தார்கள். ரயில் கிளம்பிப் போய்விட்டால் சாரதாவைக் காண முடியாதே என்று கிளம்பிய வண்டியை அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டார்கள். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.

ரயிலை விட்டு எந்தக் கர்வமும் இல்லாமல் இறங்கிவந்த சாரதா “இந்த வண்டியில் நான் மட்டும் பிரயாணம் செய்யவில்லை. பலர் அவசர வேலையாகச் செல்லலாம். தயவுசெய்து எல்லோரும் உதவுங்கள்” என்று அவர் கேட்டுக் கொண்ட பிறகே ரயிலுக்கு வழிவிட்டார்கள் ரசிகர்கள். ஐந்து நிமிடங்கள் மட்டுமே நிற்க வேண்டிய அந்தச் சிறிய நிலையத்தில் சாரதாவுக்காக ஒருமணி நேரம் ரயில் நின்றது.

சிவாஜி கண்டுபிடித்தார்

எத்தனை பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் எளிமையின் உருவமாக வாழ்ந்துவரும் சாரதாவைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ‘திருப்பதி’ என்ற நாடகத்தில் சாரதா நடித்துக் கொண்டிருந்தபோது, அந்த நாடகத்துக்குத் தலைமை தாங்க வந்தார் சிவாஜி.

நாடகத்தில் சாரதாவின் நடிப்பைப் பார்த்து வியந்து 1963-ல் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான ‘குங்குமம்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ‘துளசி மாடம், ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ ‘ஞான ஒளி’ ‘என்னைப்போல் ஒருவன்’உள்ளிட்ட பல படங்களில் சிவாஜியுடன் சரிக்குச் சரியாக நடித்துப் புகழ்பெற்ற சாரதா எம்.ஜி.ஆருடன் ‘நினைத்ததை முடிப்பவன்’படத்தில் நடித்தார்.

சென்னையில் வசித்தாலும் தனது சொந்த ஊரான தெனாலியில் 100 ஆண்டுகளாகத் தன் குடும்பத்தார் வசித்த பாரம்பரிய வீட்டை வாங்கி அதைப் புதுப்பித்து அதற்கு ‘ஊர்வசி பவனம்’என்று பெயர் சூட்டியிருக்கிறார் அரசியலிலும் கால் பதித்த இந்தச் சாதனை நட்சத்திரம்.

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்