அவங்களுக்கு டிவி போதும்!- இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் சிறப்பு பேட்டி

By ஆர்.சி.ஜெயந்தன்

மரண தண்டனைக்கு எதிரான குரலை முன்வைத்த ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அடுத்த படத்துக்கான ஆய்வில் தீவிரமாக இருக்கிறார் எஸ்.பி. ஜனநாதன்.

கையாளும் எல்லாக் கதைகளிலும் இடதுசாரிப் பார்வையை மைய இழையாக்கும் இவர், தேர்ந்த தொழில்நுட்பத்தையும் வளர்ச்சிக்கான கருத்தாக்கத்தையும் இணைக்கும் திரைப்படங்களை தருவதில் தனித்துப் பயணிப்பவர். ‘புறம்போக்கு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரை சந்தித்து உரையாடியதிலிருந்து…

மரண தண்டனையைக் கதைக் கருவாகத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

ஒரு சர்வதேசப் பிரச்சினையைத் தமிழ்ப் பார்வையாளர்களைத் தாண்டி சர்வதேசப் பார்வையாளர்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

ஒரு தமிழ்ப் படத்தை இன்று உலக அளவிலான பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் பார்க்கிறார்கள். படத்தைத் திரையிடும் முறையும் வெளியீட்டுக்கான எல்லைகளும் அடியோடு விரிந்துவிட்டன. முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு ஆஸ்திரேலியாவில் வாழும் ரசிகரும் மதுரையில் வாழும் ரசிகரும் அடுத்தடுத்து என்னிடம் பேசுகிறார்கள்.

தமிழ் சினிமாவின் பார்வையாளர்கள் இன்று உலகப் பார்வையாளர்கள். ஒரு கருத்தின் மீதான அவர்களது ‘பார்வை’ என்பது அவர்கள் வாழும் தேசம், சூழல் சார்ந்து மாறுபடுகிறது.

அதனால்தான் உலகளாவிய சர்ச்சையாகத் தொடரும் மரண தண்டனையை அந்தப் படத்தின் மையக்கருவாகத் தேர்ந்தெடுத்தேன். அண்மையில் மரண தண்டனைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை ஐ.நா. சபை கொண்டுவந்தது. அதைப் பல நாடுகள் எதிர்த்தும் ஆதரித்தும் வாக்களித்தன.

அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் மரண தண்டனை மீதான அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடும், அந்த நாட்டின் மாகாணங்களின் நிலைப்பாடும் வெவ்வேறாக இருக்கின்றன. அமெரிக்காவின் பல மாகாணங்களில் மரண தண்டனையே கிடையாது.

மரண தண்டனை இல்லாத நாடுகளில் வசிக்கும் மக்களில் 80% பேர் மரண தண்டனை வேண்டும் என்று நினைக்கிறார்கள். இத்தனை சிக்கல்கள் கொண்ட ஓர் உயிர்ப் பிரச்சினைதான் இது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஓர் உயிரை சட்டரீதியாகப் பறித்துவிடுவது என்பது சரியா தவறா என்பது ஆழமான விவாதம். முடிவு காண வேண்டிய, மனிதம் சார்ந்த பிரச்சினை. அதனால்தான் அதைக் கையில் எடுத்தேன்.

நம்பிக்கைக்குரிய இயக்குநர்’ என்று மதிக்கப்படுவது உங்களைப் பொறுத்தவரை பலமா? இல்லை அதுவே சிறையா?

நிச்சயமாக பலம்தான். மூன்றாம் உலக வெகுஜனத் திரைப்படங்களில் எல்லா சாகசங்களையும் வித்தைகளையும் செய்து தங்களுக்கான பெருந்திரள் பார்வையாளர்களை உருவாக்கிக்கொள்கிறார்கள் நாயக நடிகர்கள். ஆனால் என்னைப் போன்றவர்கள் படத்தில் கையாளும் கருத்துகளுக்காக நடிகர்களுக்கு இணையான பெருந்திரள் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறோம்.

அவர்களைத் தக்கவைத்துக்கொள்ள நாங்கள் வித்தைகள் ஏதும் செய்வதில்லை. ஆனால், கையாளும் கருத்துகள் கூர்மையானதாக இருந்தால் கத்தி மேல் நடந்து காட்டப் பழகியிருக்கிறோம். ‘ப்ராமிசிங் டைரக்டர்’ என்ற ஒளிவட்டத்திலிருந்து விடுபட்டு வாருங்கள் என்று சில நண்பர்கள் சொல்வதுண்டு. அதற்கு அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

பார்வையாளர்கள் மதிக்கும் இயக்குநராகத் தொடர நாம் வலிந்து எதையும் செய்ய வேண்டியதில்லை. எந்தக் கதையைத் தேர்வு செய்தாலும் அதில் நமது தனித்துவமான பார்வையை இழந்துவிடாமல் இருந்தாலே போதும்.

பார்வையாளர்களும் அதையே விரும்புகிறார்கள். காதல் கதை எடுத்தாலும் அதில் இவரது பார்வை வேறாக இருக்கும் என்று என்னிடம்தானே அவர்கள் எதிர்பார்க்க முடியும். ‘இயற்கை’ படம் கூட இடதுசாரிப் பார்வை கொண்ட ஒரு காதல் படம்தானே.

உளவியலாளர் ஷாலினி ஒரு பேட்டியில் “நீலப்படமே ஆண்களுக்கான படமாக இருக்கிறது. அதிலும் ஆணாதிக்க முனைப்புதான் அதிகமிருக்கிறது. பெண்களுக்கான நீலப்படம் தயாரிக்கப் படுவதில்லை” என்கிறார். ஆக, ஓவியம், சிற்பம், எழுத்து என எந்தக் கலையாக இருந்தாலும் பார்வை மிக முக்கியம். எல்லாக் கலைகளும் இணைந்து இயங்கும் திரைக்கு அது இன்னும் முக்கியம். ஆழமான பார்வை கொண்ட இயக்குநரால் மட்டுமே இதையெல்லாம் சாத்தியப்படுத்த முடியும்.

ஒரு மாஸ் மசாலா நாயகன் தனக்கிருக்கும் ஓபனிங் வசூலைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு ஃபார்முலாவுக்குள் சிக்கிக்கொள்வது போன்றதுதானே நீங்கள் சொல்வதும்?

ஃபார்முலா என்பது என்னைப் போன்ற இயக்குநர்களுக்குப் பொருந்தாது. ஆனால் ‘இவர் நம்ம சாதி ஹீரோ… இவர் நம்ம ஆளு’ என்று சாதிரீதியாக, அடையாளரீதியாகக்கூட பல கதாநாயகர்களுக்கு ஓபனிங் இருப்பதை மறுக்க முடியாது. வேடிக்கைக்காக இதை நான் சொல்லவில்லை. உண்மை! ஆனால், என்னைப் போன்ற ஒரு சிலருக்குக் கிடைக்கும் ஓபனிங் எங்கள் பார்வையை முன்வைத்து மட்டுமே உருவானது.

இன்று தரமான சினிமாவுக்காக இயங்கும் பெரும்பாலான இயக்குநர்கள் வெகுஜன சினிமாவுக்கு வெளியேதானே இருக்கிறார்கள்?

சுதந்திரமாக இயங்குபவர்கள் வெளியேயும் இருக்கிறார்கள். ஆனால், வெகுஜன சினிமாவில் சுதந்திரமாக இயங்கத் தேவை தொடர்ச்சியான வணிக வெற்றி. ஆனால், வெகுஜன சினிமாவுக்கு வெளியே இயங்கும் இயக்குநர்கள் திரைப்பட விழாக்களுக்காகவே படமெடுத்து அங்கே கவனம் ஈர்த்து, அங்கிருக்கும் நூற்றுக் கணக்கான தொலைக்காட்சிகளில் வாய்ப்பைப் பெற்று, போட்ட பணத்தை விடப் பல மடங்கு லாபம் ஈட்டும் ஜாலம் அது. சிறப்புப் பார்வையாளர்களுக்குத்தான் அது திரைப்பட விழா.

படத்தைத் தயாரித்து இயக்கியவர்களுக்கு அது லாபகரமான சந்தை. கேரளத்தில் அப்படித் தயாராகும் பல படங்கள் மோகன்லால் படங்கள் ஈட்டும் வசூலை விடத் திரைப்பட விழாக்களில் அதிகம் ஈட்டிவிடுகின்றன. அவை திரையரங்குகளில் வெளியாக வேண்டிய அவசியமில்லை.

இந்த முறையில் இயங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. காரணம், திரைப்படத்தை வெகு மக்களுக்கான கலையாகவே நான் கையாள விரும்புகிறேன். ஆனால், தமிழ்ப் படங்களின் வெற்றி ‘பி.கே.’ படத்துக்கு நிகழ்ந்ததுபோல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சீனாவில் வெகுமக்கள் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டாடி யிருக்கிறார்கள். ‘புறம்போக்கு’ படத்துக்கு அவ்வாறான சர்வதேசப் பதிப்பைத் தற்போது ஒழுங்கு செய்துகொண்டிருக்கிறேன்.

அதை சர்வதேசத் திரைப்படச் சந்தைக்கு எடுத்துச்செல்ல யூடிவி போன்ற பலம் வாய்ந்த ஒரு நிறுவனத்தால்தான் இயலும் என்பதால்தான் அந்த நிறுவனத்துக்காக இந்தப் படத்தை இயக்கினேன்.

கதாநாயகர்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு திரையுலகில் தனித்து இயங்குவதில் உங்களுக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன?

இந்திய சினிமாவின் முதல் 40 ஆண்டுகளில் கடைக்கோடிப் பார்வையாளர்களையும் சென்றடையும் விதமாகத்தான் திரைப்படங்கள் இருந்தன. எளிய விளிம்புநிலை மனிதர்களின் கதாபாத்திரங்களைக் கதாநாயகர்கள் ஏற்றார்கள்.

கதாநாயகர்களாக இல்லாவிட்டாலும் திரைப்படங்களில் எளிய மனிதர்களின் பாத்திரங்கள் உலவின. ஆனால், இன்று உலகம் முழுவதும் இருக்கும் ‘ஏ சென்ட்டர்’ பார்வையாளர்களைக் கவர்ந்தால் போதும் என்று தயாராகும் படங்கள்தான் அதிகமாக இருக்கின்றன. உலகம் முழுவதும் இருக்கும் ‘ஏ சென்ட்டர்’ திரையரங்குகளில் ஒரு கதாநாயகனின் படம் வெளியாகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அந்தத் திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 200 முதல் ரூ. 500 வரை என்று வைத்துக்கொள்ளுங்கள். ரூ. 30 கோடியில் தயாராகும் ஒரு படம் மூன்றே நாட்களில் ரூ. 60 கோடியை ஈட்டிவிடுகிறது. இதுபோன்ற படங்களின் நோக்கமே ‘ஏ சென்ட்டர்’ என்று ஆகிவிடுவதால் இவற்றுக்குள் விளிம்பு நிலைக் கதாபாத்திரங்கள் வருவதில்லை. அவை அங்கே தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.

எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையே சொல்கிறேன். ஒரு பிரபலக் கதாநாயகனுக்கு நான் கதை சொன்னபோது “நமக்கு முக்கியம் ‘ஏ சென்ட்டர், ஆடியன்ஸ்தான். சாமானிய மக்களைப் பற்றி சிந்திக்காதீங்க. அவங்களுக்குத்தான் நாம டிவியில் இலவசமாகக் காட்டுறோமே” என்றார்.

அவரது கூர்மையான வியாபார தொனியை எண்ணி எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. தமிழ்நாட்டில் சாமானிய ரசிகர்கள் இன்று ரூ. 120 கொடுத்துத் தனியாகவோ குடும்பமாகவோ படம் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

அவர்களைப் பற்றிக் கவலைப்படாதே என்று சொல்வது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. வெகு மக்களுக்கான படத்தை எடுக்க வேண்டும் என்று நினைக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இதுவே சவாலாகவும் இருக்கிறது.

புறம்போக்கு’ படம் தணிக்கையில் எப்படித் தப்பி வந்தது என்பது குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்ட வியப்பைக் கவனித்தீர்களா?

கவனித்தேன். அது நமது தணிக்கைக் குழுவின் மீதான நம் பார்வையாளர்களின் பார்வையைக் காட்டுகிறது.

‘பேராண்மை’ படத்துக்கு 16 இடங்களில் வெட்டு கொடுத்து சுமார் 1,000 அடிகளை வெட்டச் சொன்னார்கள். அத்தனை பெரிய வெட்டுக்குப் பிறகு என்னால் படத்தின் கதையை சரியான வரிசையில் விவரிக்க முடியவில்லை. அதன் பிறகு கொஞ்சம் எச்சரிக்கை அடைந்தேன்.

எத்தகைய கேள்விகளுக்கும் ஆதாரங்களையும் அவற்றுக்கான பதில்களையும் முன்தயாரிப்புடன் கைவசம் வைத்திருந்தேன். தணிக்கை அதிகாரி படம் பார்த்துவிட்டு ‘எல்லாவற்றுக்கும் சரியான தரவுகளை வைத்திருக்கிறீர்கள், பாராட்டுகள்’ என்றார்.

இன்று தணிக்கைக் குழு என்பது சர்ட்டிபிகேட் போர்டாக மாறிவிட்டது. அதன் பெயர் தணிக்கைக் குழு அல்ல ‘சான்றிதழ் குழு’தான். அது ‘யூ’ அல்லது ‘ யூஏ’ அதுவும் இல்லையென்றால் ‘ ஏ’ கொடுக்கும் அவ்வளவே.

இந்தக் காட்சியை வெட்டச் சம்மதித்தால் ‘யூ’ தருகிறோம் என்பார்கள். சம்மதிக்காவிட்டால் ‘யூஏ’ என்பார்கள். ஏதாவது ஒரு கருத்தை முன்மொழிந்தாலே அவர்களைப் பொறுத்தவரை அது ‘யூஏ’தான். இதை மீறி நாம் அவர்களிடம் எதிர்பார்ப்பது நியாயமில்லை.

அடுத்த படத்துக்கான வேலையைத் தொடங்கிவிட்டீர்களா?

உடனடியாகத் தொடங்கிவிட்டேன். எனது ‘பைனரி பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பு. ஒரு காதல் கதையின் உளவியல் பக்கங்களைப் புரட்டும் சர்வதேச வெகுமக்கள் படைப்பாக இது இருக்கும். திரைக்கதை விவாதமும் ஆய்வும் செய்துகொண்டிருக்கிறேன். விரைவில் நட்சத்திரத் தேர்வு தொடங்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்