சினிமா எடுத்துப் பார் 13- சினிமாவுக்குள் நுழைந்த எம்.எஸ்.வி!

By எஸ்.பி.முத்துராமன்

கவிஞர் கண்ணதாசனின் காரைப் பின்தொடர்ந்து சென்று, ஒருவழி யாக அவரது காரை சேஸ் செய்து நிறுத்தினோம். கவிஞர் என்னை பார்த்துவிட்டு, ‘‘ஏன் இந்த பதற்றம்?’’ என்று கேட்டார்.

ஸ்டுடியோவில் பாடல் ஒலிப்பதிவு நடந்துகொண்டிருப் பதையும், செட்டியார் சொன்ன செய்தியை யும் அவரிடம் சொன்னேன். காரில் இருந்தபடியே சரணத்தை பல்லவியாக வும், பல்லவியை சரணமாகவும் மாற்றிக் கொடுத்தார் கவிஞர். வாங்கிக்கொண்டு ஸ்டுடியோவுக்குப் பறந்தேன்.

இந்த நேரத்தில் கவிஞரின் ஓட்டுநர் சிட்டிபாபுவைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் சென்னைத் தமிழ்தான் பேசுவார். அதில் பாசம் இருக்கும். கவிஞர் இரவில் கூட்டங்கள் முடிந்து களைப்புடன் காரில் வருவார். சிட்டிபாபு, ‘‘கவிஞா அந்த டீக் கடையில் மசாலா டீயும், மசாலா வடையும் மஜாவா இருக்கும். துண்றியா?’’ என்று கேட்பார். கவிஞர் சிரித்துக்கொண்டே வாங்கி வரச் சொல் வார். மசால் வடையை செய்தித்தாளில் மடித்து கொண்டுவந்து கொடுப்பார்.

அப்படித்தான் ஒரு தடவை சிட்டிபாபு வாங்கி வந்து கொடுத்த மசால் வடையை ரசித்து சாப்பிட்டப் பிறகு, வடை இருந்த செய்தித்தாளில் கையைத் துடைக்கப் போனவர், அதில் அச்சாகியிருந்த பட்டினத்தார் பாட்டை படித்தார்.

அந்தப் பாட்டில் சாறு எடுத்ததுதான் ‘வீடு வரை மனைவி, வீதி வரை உறவு, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ’ பாடலாகும். அர்ச்சுனனுக்கு தேரோட்டி கண்ணன் என்றால் கண்ணதாசனுக்கு காரோட்டி சிட்டிபாபு!

ஸ்டுடியோவுக்கு வந்து செட்டியாரிடம் பாடல் வரிகளைக் கொடுத்ததும், அதை வாங்கி பார்த்துவிட்டு, ‘இதுக்குத்தான் உன்னை அனுப்பினேன்’ என்று பாராட்டி னார். மகிழ்ச்சியாகவும், பெருமையாக வும் இருந்தது. கவியரசரிடம் இருந்து மாற்றி எழுதி கொண்டுவந்த பாடலை வைத்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசை ஒத்திகை பார்க்கத் தொடங்கினார்.

அப்போது செட்டியார் அவர்கள் எம்.எஸ்.வி-யை அழைத்து, ‘‘பேக்ரவுண்ட் மியூசிக் அதிகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். பாட்டில் வார்த்தை தெளிவாக புரிய வேண்டும். வார்த்தை வரும் இடத்தில் இசையைக் குறைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார். ஏவி.எம் படப் பாடல்களை எல்லாம் கேட்கும்போது வார்த்தைகள் நன்றாக புரிவதற்கு இதுதான் காரணம்.

இந்திய அளவில் சிறந்த ஒலிப்பதிவாளராக (சவுண்ட் இன்ஜினீயர்) திகழ்ந்தவர் முகுல் போஸ். மும்பையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவர் சென்னை ஏவி.எம் ஸ்டுடியோவில் வேலைக்குச் சேர்ந்தார். அவரிடம் பயிற்சி பெற்று எஸ்.பி.ராமநாதன், ஜே.ஜே. மாணிக்கம், சி.டி. விஸ்வநாதன், சம்பத் ஆகியோர் சிறந்த சவுண்ட் இன்ஜினீயர்களாக உருவானார்கள்.

இவர்களில் எஸ்.பி.ராமநாதன் பல தேசிய விருதுகளை பெற்றார். ஜே.ஜே.மாணிக்கமும், சம்பத்தும் தென்னக மொழி களில் அதிக படங்களுக்கு சவுண்ட் இன்ஜினீயர்களாக பணியாற்றி சாதனை படைத்தார்கள். இவர்கள் அத்தனை பேரின் ஒலிப்பதிவிலும் இசையும், பாடல்களும் மிகத் தெளிவாக இருக்கும்.

எம்.எஸ்.வி சினிமாவுக்குள் நுழைந்ததே ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி. எம்.எஸ்.வி பள்ளிக்கு போகும் வழியில் நீலகண்ட சாஸ்திரி என்ற வித்வான் தனது வீட்டில் சிறுவர்களுக்கு பாட்டுச் சொல்லிக்கொடுப்பதைப் பார்த்திருக் கிறார். பள்ளிக்கூடம் போகும்போதெல் லாம் வித்வான் பாட்டு கற்றுக் கொடுப்பதை உள்வாங்கியிருக்கிறார். ஒருநாள் வித்வான், சொல்லிக்கொடுத்த பாட்டை பாடும்படி கூறியபோது எந்த மாணவர்களும் பாடவில்லை.

வாசலில் நின்ற எம்.எஸ்.வி அந்தப் பாட்டை பாடியிருக்கிறார். வித்வான் இவரைப் பார்த்து ‘‘யாரப்பா நீ? பணம் கொடுத்து பாட்டு கற்றுக்கொள்ளும் இவர்களுக்கு பாட்டு வரவில்லை. நீ அழகாக பாடுகிறாயே!’’ என்று எம்.எஸ்.வியை வீட்டுக்குள் அழைத்து, அவருக்குத் தொடர்ந்து பாட்டுச் சொல்லிக் கொடுத்ததுடன், விஸ்வநாதன் மேடை ஏறி அரங்கேற்றம் செய்யவும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

அதன் பிறகு எம்.எஸ்.விக்கு இசை யமைக்க வேண்டும், நடிக்க வேண்டும் என்கிற ஆசைகள் மலர்ந்துள்ளன. ஊரில் இருந்து கிளம்பி கோவை ஜூபிடர் பிக்சர் நிறுவனத்தில் ஒரு எடுபிடியாக வேலைக்கு சேர்ந்து, அதன் பிறகு அங்கே இருந்த இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடுவிடம் ஏகலைவன் நிலையில் இருந்து திரை இசை நுணுக் கங்களைக் கற்றுக்கொண்டுள்ளார்.

ஒருமுறை சுப்பையா நாயுடு ஒரு மெட்டு அமைப்பதற்கான முயற்சியில் இருந்த போது, அதை கவனித்த எம்.எஸ்.வி அந்தச் சூழலுக்கு ஒரு மெட்டை அமைத்து சுப்பையா நாயுடுவிடம் வாசித்துக் காட்டியுள்ளார். சுப்பையா நாயுடு தயாரிப்பாளருக்கு அந்த மெட்டை வாசித்துக் காட்ட, அவருக்கும் அது பிடித்துபோய்விட்டது. எம்.எஸ்.வியின் மெட்டு என்று சொல்லப்படாமலேயே பாட்டு ஒலிப்பதிவானது. அந்த சமயத்தில் ஜூபிடர் பிக்சர்ஸை கோவையில் இருந்து சென்னைக்கு மாற்ற ஏற்பாடானது.

அப்போது, எஸ்.எம்.சுப்பையா நாயுடு ‘‘ஒலிப்பதிவான அந்தப் பாட்டை நான் இசையமைக்கவில்லை. எம்.எஸ்.விஸ்வநாதன்தான் இசையமைத்தான்’’ என்கிற உண்மையை கூறி ‘‘அவனையும் சென்னைக்கு அழைத்துப் போங்க. அவன் பெரிய ஆளா வருவான்’’ என்று கூறியிருக்கிறார். அந்த வார்த்தைதான் எம்.எஸ்.வியின் இசைப் பயணத்துக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பின்னாளில் பொருளாதாரரீதியில் ரொம்ப வும் கஷ்டப்பட்ட எஸ்.எம்.சுப்பையா நாயுடுவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து தன் வீட்டிலேயே வைத்துக்கொண்டார் எம்.எஸ்.வி.

அவர் இறந்தபோது ஒரு மகனைப் போல அவரது இறுதிச் சடங்கை முன்நின்று நடத்தி, தன் குருவுக்கு கொள்ளி வைத்தார். இதுதான் குரு பக்தி. மெல்லிசை மன்னர்களைத் தேடி வெற்றிகள் வந்ததற்குக் காரணம் ஈடுபாடு, திறமை, தன்னம்பிக்கை, கடுமையான உழைப்பு, குருபக்தி ஆகியவைதான்! இளைஞர்கள் இவர்களை உதாரண மனிதர்களாக (ரோல் மாடல்) எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் அவர்களைப் போல முன்னேற வேண்டும்; வெற்றி அடைய வேண்டும்.

கிருஷ்ணன் - பஞ்சு ஏவி.எம் ஸ்டுடியோவின் சமஸ்தான இயக்குநர் கள். 20 ஆண்டுகளில் 11 தமிழ் படங்கள், 7 ஹிந்திப் படங்கள், 4 தெலுங்குப் படங்களை இயக்கியவர்கள். ‘பராசக்தி’ படத்தை பார்த்ததால்தான் எனக்கு சினிமா ஆசையே வந்தது என்று முன்பே கூறியிருந்தேன். அந்தப் படத்தை இயக்கியவர்கள் கிருஷ்ணன் - பஞ்சு. பகுத்தறிவு கருத்துகளையும், சமூக கருத்துகளையும் திரைப்படங்களில் ஆழமாக பதிய வைத்தவர்கள்.

பெரியவர் கிருஷ்ணன் கதை, பாடல் களில் கவனம் செலுத்துவார். சின்னவர் பஞ்சு படப்பிடிப்பு, எடிட்டிங்கில் கவனம் செலுத்தினார். எடிட்டிங் ‘பஞ்சாபி’ என்று பெயர் வரும். பஞ்சு எடிட்டிங் செய்யும்போது அவருக்கு ஆர்.விட்டல் தான் பிரதான உதவியாளர். விட்டல் சாருக்கு நான் உதவி செய்வேன். அதனால் பஞ்சு சாருக்கு என்னைப் பிடிக்கும். விட்டல் சாரையும் என்னையும் ஷூட்டிங் சமயத்தில் துணை இயக்குநர் பட்டு சாருக்கு உதவியாக வந்து வேலை செய்ய சொல்வார்.

இயக்குநர்களுக்கு எப்பவுமே நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். விளையாட்டாக ஒருமுறை ‘நடிக்க வேண்டும்’ என்ற என் ஆசையை என்னோடு பணிபுரிந்தவர்களிடம் கூறியிருந்தேன். இந்த விஷயம் பஞ்சு அவர்களின் காதுக்கு போய்விட்டது. சிவாஜிகணேசன் நடித்த ‘தெய்வப் பிறவி’ படத்தில் அங்கமுத்துவின் மகனாக என்னை நடிக்க வைத்துவிட்டார். அதுவும் நடிகர் திலகத்தோடு என்னை நடிக்க வைத்து என் ஆசையை நிறைவேற்றி வைத்தவர் பஞ்சு. என் நடிப்பு ஆசைக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது.

இப்படி எடிட்டிங், ஷூட்டிங் என்று மாறி மாறி வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஒருநாள் ஏவி.எம்.சரவணன் சார் என்னை கூப்பிட்டு, ‘‘முத்துராமன், இப்படி ஒவ்வொருத்தர்கிட்டேயும் வேலை பார்த்துக்கிட்டிருக்கீங்க. இனி, புதிய இயக்குநர் ஒருத்தரிடம் வேலை பாருங்க’’ என்றார். என் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்துக்கான விதை விழுந்தது. யார் அந்த இயக்குநர்?

- இன்னும் படம் பார்ப்போம்...

முந்தைய அத்தியாயம்: >சினிமா எடுத்துப் பார் 12 - மெட்டுக்குப் பாட்டா? பாட்டுக்கு மெட்டா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்