நடிகருக்கும் இயக்குநருமான உறவு தாம்பத்திய உறவைப் போன்றதுதான். ஒரு நடிகருக்கு நல்ல பாத்திரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்த நடிகரைக் கதாபாத்திரமாக மாற்ற இயக்குநர் செய்யும் முயற்சிகள். செவன் பவுண்ட்ஸ் திரைப்படத்தைப் பார்த்தவுடன் இது எனக்குத் தோன்றிய எண்ணம்.
‘பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ்’ வில் ஸ்மித்தின் ஜீவன் மிக்க நடிப்பைக் கொண்டு வந்த படம். கேப்ரியல் மக்கினோ என்ற இயக்குநரின் பெயர் முதல் சில முறைகள் அந்தப் படத்தைப் பார்த்தபோதுகூட மனதில் பதியவில்லை. பிறகுதான் இவரைப் பற்றித் தெரிந்துகொண்டேன், இவர் வில் ஸ்மித்தால் ஹாலிவுட்டுக்கு அழைத்து வரப்பட்ட இத்தாலிய இயக்குநர் என்று. ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாதவர் முதலில் தயங்கியிருக்கிறார். பின் வில் ஸ்மித் மேலுள்ள நம்பிக்கையில் சரி என்று சொல்லியிருக்கிறார். பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் போலவே இந்தப் படத்திலும் வில் ஸ்மித் பல தயாரிப்பாளர்களில் ஒருவரும்கூட. இவ்விரு படங்களையும் பார்த்தபோது இவர்களின் உறவின் தரம் எளிதில் விளங்குகிறது.
இந்தப் படத்தின் கதை மிகவும் எளிமையானதுதான். சற்று நாடகத்தனமாகக்கூடத் தோன்றலாம். ஆனால் அதைப் படமாக்கிய விதமும் நல்ல நடிப்பும் இதைச் சிறந்த படமாக மாற்றுகிறது. தவிர, கதைக் கரு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் முக்கியமாகப் பட்டது.
புரட்டிப் போட்ட விபத்து
காதலியுடன் உல்லாசமாக காரில் செல்கையில், வேலை விஷயமாகக் கைபேசியில் அவசரமாகக் குறுந்தகவல் அனுப்ப முயற்சி செய்கையில் அந்த விபத்து நடக்கிறது. பல கார்கள் மோதிய விபத்தில் காதலி உட்பட ஏழு பேரின் மரணத்துக்குக் காரணமாகிறான் டிம்.
குற்ற உணர்ச்சியால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளான டிம், இரு வருடங்களில் ஒரு முக்கிய முடிவை எடுக்கிறான். ஏழு பேரின் வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என்பது அது. தன் உறுப்புகளை ஒவ்வொன்றாகத் தானம் செய்ய நினைக்கிறான்.
தான் உதவும் அனைவரும் நல்லவர்களா, கருணை உள்ளம் படைத்தவர்களா, நிஜமாகவே வசதிக் குறைவானவர்களா என்றெல்லாம் துப்பறிந்து ஒவ்வொரு ஆளாய்த் தேர்வு செய்கிறான். நுரையீரல் பாதிக்கப்பட்ட தன் தம்பிக்கு ஒரு நுரையீரல் அளிக்கிறான். அவனின் அரசுத் துறை அடையாள அட்டையை எடுத்து ஆள் மாறாட்டம் செய்துதான் ஆட்களைத் தேர்வு செய்யும் துப்பறியும் வேலையைச் செய்கிறான்.
பார்வையற்ற இசைக் கலைஞன் ஒருவனைத் தேர்வு செய்கிறான் கண் தானத்துக்கு. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணிக்குத் தன் குடலைத் தானம் செய்கிறான். காதலனால் வன்முறைக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணிக்கும் அவள் குழந்தைகளுக்கும் தன் வீட்டை எழுதி வைத்துவிட்டு ஓட்டல் அறைக்கு மாறுகிறான். எலும்பு நோயுள்ள ஒரு சிறுவனையும் தேர்வு செய்கிறான்.
உயில் காத்த உயிர்
இடையில் இதய நோய் பாதிப்பில் உள்ள எமிலி என்ற ஓர் இளம் பெண்ணைச் சந்திக்கிறான். அவளுடைய ரத்த வகையும் எளிதில் கிடைக்காதது. சில வாரங்களில் இறக்கும் அவளுக்கு உதவப்போக, இருவரும் நெருக்கமாகிறார்கள். தன் காதலி நினைவில் உயிர் வாழும் டிம்மிற்கு எமிலியின் அன்பை ஏற்க முடியவில்லை.
எனினும் இறக்கும் தறுவாயில் உள்ளவள் என்ற கருணை மெல்ல அன்பாக மாறுவதையும் கவனிக்கத் தவறவில்லை. அவள் தரும் தனி விருந்தில் அவளுடன் காதல் செய்கிறான். அந்த நேரத்தில் டிம்மின் தம்பி, அண்ணனின் முரணான நடவடிக்கைகளைக் கண்டு சந்தேகப்பட்டு அவன் காரையும் அடையாள அட்டையையும் மீட்டுப் போகிறான்.
எமிலி படுக்கையை விட்டு எழுவதற்குள், ஆஸ்பத்திரிக்கு ஓடி அவள் டாக்டரைச் சந்தித்து அவள் பிழைக்க வாய்ப்புள்ளதா என்று பதற்றமாகக் கேட்கிறான். இல்லை என்று தீர்மானமாகத் தெரிந்ததும் தன் இறுதிப் பணியை நிறைவேற்றுகிறான்.
அவன் உயிலின்படி அவன் இதயம் எமிலிக்குப் பொருத்தப்படுகிறது. அவள் பிழைக்கிறாள். டிம்மின் உயில் கடிதங்கள் மூலம் அவன் உதவிய ஏழு பேர் பற்றி அறிகிறாள். மனம் உடைந்துபோகிறாள்.
டிம்மால் பார்வை பெற்ற எர்சா குழந்தைகளுடன் இசை நிகழ்ச்சி நடக்கையில் அவனைச் சென்று சந்திக்கிறாள் எமிலி. டிம்மின் கண்களை எர்சாவிடம் கண்டு கலங்குகிறாள். அவள் அழுகையைக் கண்டவுடன், “நீ எமிலியாகத்தான் இருக்க வேண்டும்!” என்று சொல்ல டிம்மின் நினைவில், நன்றியுணர்வில் இருவரும் அணைத்துக்கொள்கிறார்கள்.
குற்றவுணர்ச்சிக்குப் பிறகு
குற்றவுணர்ச்சி தரும் பாரம் அசாத்தியமானது. சுய மதிப்பை, உறவுகளை, வேலையை, சமூகப் பொறுப்புகளை என எல்லாவற்றையும் களவாடிவிடும். தனக்கு இழைத்துக்கொள்ளும் தண்டனையாய்த் தன் முக்கிய உறவுகளையும் தண்டிக்கும். எந்த தர்க்க விதிகளுக்கும் சிக்காத சிந்தனைகளைக் கொடுக்கும்.
தப்ப முடியாத குற்றவுணர்ச்சிகளால் பாதிக்கப்படுகையில் அதிலிருந்து மீளுதல் மாபெரும் சாதனை. அதற்கும் அடுத்த கட்டமாக அதற்குப் பிராயச்சித்தமாக ஒரு நற்காரியத்தின் தன் சக்திகளையும் நேரத்தையும் நினைவுகளையும் குவிப்பது மிகச் சிறந்த சுய சிகிச்சை. ஏழு பேரைத் தெரியாமல் கொன்றதற்காக ஏழு பேர் வாழ்க்கையை மாற்றத் தன் உயிரைத் தரும் பாத்திரம் பூஜிக்க வேண்டிய குணநலன் கொண்டது.
செய்கின்ற தவறுகளுக்கு நியாயம் கற்பித்தும், பிறர் மீது பழி சுமத்தியும், தன் சுயத்தைக் காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யலாம் என்று பெரும்பாலானோர் நினைக்கும் இந்தக் காலகட்டத்தில் தன் தவறுக்கு வருந்தி அதன் மூலம் பிறர் வாழ்க்கையை மாற்றிய நாயகனின் தியாகம் போற்றத்தக்கது.
டைனமைட் எனும் வெடி மருந்தைக் கண்டுபிடித்த ஆல்ஃப்ரெட் நோபல் தனது கண்டுபிடிப்பால் நிகழக்கூடிய அழிவை எண்ணி குற்றவுணர்வு கொண்டார். அந்தக் குற்ற உணர்விலிருந்து மீளத்தான் மனித குலத்துக்குச் சிறப்பு சேர்க்கும் பணிகளுக்கு நோபல் பரிசை நிறுவினார்.
குற்றத்தின் பாதிப்பு எதிராளிக்குப் பல நேரங்களில் ஒரு முறைதான். குற்றம் இழைத்தவனின் குற்றவுணர்ச்சி சம்பந்தப்பட்டவருக்கு வாழ்நாள் முழுதும்கூட நீடிக்கலாம். ஆனால் இந்த உணர்வை ஏற்று, அதிலிருந்து மீண்டு, பின்னர் இயல்பு நிலையில் பிறர் துயர் நீக்கப் பணி புரிதல் என்பது ஒரு அரிய செயல். இந்தப் பட கதாநாயகன்போலத் தன்னை அழித்துக்கூடச் செய்யத் தேவையில்லை. நாம் வாழ்ந்து அதைச் செய்யலாம்.
தன் சுயத்தால் ஒப்புக்கொள்ள முடியாத மன நிலையை மாற்றி அந்த எதிர்மறை சக்தியை, சமூகம் ஒப்புக்கொள்ளும் நேர்மறை சக்தியாக மாற்றுவதை உளவியலில் Sublimation என்பார்கள். அதுதான் மனிதத் துயருக்கான மாமருந்து எனவும் சொல்லலாம்.
தன் துயரிலும் பிறர் நலம் காண வாழ்வதுதான் தெய்வீகம். அந்த ஒரு தெய்வீக அனுபவம் இந்தப் படைப்பைக் காண்கையில் ஏற்படுகிறது.
தொடர்புக்கு:gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago