பெரிய படங்கள் வெளியாகும்போது, “காலைக் காட்சி கேன்சலாம். இன்னைக்குப் படம் வர்றதே சந்தேகம்தானாம். பிரச்சினை பண்ணனுங்கிற திட்டம் இருக்கும்போது வெளியீட்டுக்கு முன்பே பேசித் தீர்க்க வேண்டியதுதானே? கொட்டுவாயிலதான் பிரச்சினை பண்ணுவாங்களா?” என ரசிகர்கள் பேசுவது சாதாரணமாகிப் போய்விட்ட காலமிது.
தடையுத்தரவு, அரசியல் காரணங்கள், நீதிமன்றம், வழக்கு எனப் பரபரப்பு கிளப்புவது விளம்பரத்துக்கு என்று சிலர் மேம்போக்காகச் சொல்லிச் சென்றாலும் அதையெல்லாம் மீறி வெளியீட்டுக்கு முன் முட்டுக்கட்டை போடுவது ஃபைனான்ஸ்தான்.
நிதிப் பிரச்சினையின் மூலம்
பெரிய படங்களுக்கு ஃபைனான்ஸ் பிரச்சினை என்பது முக்கியமான ஒன்று. ஆனால் ஃபைனான்ஸே பிரச்சினையாய் இருப்பது சிறு முதலீட்டுப் படங்களுக்குத்தான். உத்தமவில்லனோ, கொம்பனோ, ஏன் வெளிவரவில்லை? யார் யாரால் பிரச்சினை என்று ஊடகத்தில் போட்டி போட்டுக்கொண்டு செய்தி வாசித்துக்கொண்டிருக்கக் காரணம் அப்படம் பற்றிய எதிர்பார்ப்பு.
ஆனால், கடைசி நேரத்தில் க்யூப் டிஜிட்டல் திரையிடலுக்குக் கட்டப் பணமில்லாமல் நின்றுபோன படங்கள் பலநூறு. இது ஒரு பக்கமென்றால், அதற்கான ஆரம்ப நிலைக்குக்கூடப் பணமில்லாமல் நிற்கும் படங்கள் ஏராளம். எல்லாவற்றுக்கும் காரணம் ஊதாரித்தனமான நிதி நிர்வாகம். தொழில் பற்றிய போதிய அறிவின்மை என்றும் சொல்லலாம்.
தோல்வியின் நிழல்
பெரிய பட்ஜெட் படங்களில் ரிஸ்க் அதிகம்தான் என்றாலும் அதே அளவுக்கு மினிமம் கேரண்டியும் அதிகம். முதலில் அப்படத்தின் நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான வியாபாரம். உதாரணத்துக்கு இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர். வெளிநாட்டு உரிமை, விநியோக உரிமை, சாட்டிலைட் உரிமை, மற்ற மொழி வெளியாக்க உரிமை எனக் குறைந்தபட்சம் போட்ட முதலீட்டை எடுக்க அத்தனை சாத்தியங்களும் இருக்கின்றன. பெரிய படம் ஒன்று வெற்றிபெற்றால் அதைத் தயாரித்த நிறுவனத்தின் அடுத்த படத்துக்கு இன்னும் பெரிய படம் செய்யும் வாய்ப்போ, வியாபாரமோ மிகச் சுலபமாகச் சாத்தியப்படும்.
மாறாகத் தோல்வி அடைந்தால் அந்தத் தோல்வியின் நிழல் புதிய படத்தின் மேல் படர்ந்து மேலும் சூழ்நிலையை இறுக்கமாக்கிவிடும். படமெடுக்கிறவங்களுக்குத் தெரியாதா இவ்வளவு கடனிருக்கு... அதை முதலில் செட்டில் பண்ணனும் என்று!? பிறகு ஏன் ரிலீஸ் தேதி அறிவிக்கிறாங்க? போராட்டம் பண்ணனும்னு ப்ளான் பண்றவங்க ஏன் ரிலீஸ் நேரத்தில வந்து நிக்கிறாங்க. உங்க பிரச்சினையினால பாதிக்கப்படறது அந்தப் படத்தைப் பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கிய மக்களில் ஆரம்பித்து, திரையரங்க உரிமையாளர்கள், அதன் ஊழியர்கள்வரை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
பிரிண்ட் டெலிவரி
பிரசவமும் பட வெளியீடும் ஒண்ணு. அதனாலதான் பிரிண்ட் டெலிவரின்னு வச்சிருக்கான் என்றார் ஒரு படத்தயாரிப்பாளர். அது உண்மைதான். வெள்ளிக்கிழமைதோறும் கோடம்பாக்கத்துக்குப் பிரசவம்! சரி இந்தப் படத்துலதான் இவ்வளவு பிரச்சினை ஆயிருச்சே நஷ்டம் ஆயிருச்சு சின்னதா எதையாச்சும் பண்ணலாம்னு பிளான் பண்ணுவாங்கன்னு நினைக்கிறீங்களா? அதுவும் பிரசவ வைராக்கியம் போலத்தான்.
கடைசி நேர அவ்வளவு டென்ஷனும், பட வெளியீட்டுக்கு அப்புறம் சகஜமாகிவிடும். இன்னைக்கு பிலிம் சேம்பரில் நடக்கும் பேச்சுவார்த்தை ஒரு காலத்தில் பிலிம் லேபாரட்டரி அலுவலகத்தில் நடைபெறும். எனக்குத் தெரிந்து பல தயாரிப்பாளர்கள் க்ளைமேக்ஸ் அங்குதான் நடந்திருக்கிறது. கடைசிநிமிடம் வரை ஏன் இழுத்தடிக்கிறார்கள் என்றால் என்னதான் பெரிய படங்களின் வியாபாரம் முடிவடைந்திருந்தாலும், கொடுக்க வேண்டியது, வாங்க வேண்டியது எல்லாமே கடைசி நாட்களில்தான் நடக்கும்.
ஒரு பெரிய பட்ஜெட் படத்தை ஆரம்பிக்கும் போதே யாரும் ஐம்பது, அறுபது கோடி பணத்தை வைத்துக் கொண்டு ஆரம்பிப்பதில்லை. ஒரு படம் ஆரம்பிக்கப்பட்டது முதலே ஷூட்டிங், போஸ்ட் புரொடக்ஷன் என ஒவ்வொரு நிலையிலும் ஆகும் செலவுகளுக்கு ஃபைனான்ஸ் வாங்கித்தான் செய்வார்கள். அப்படத்தின் ஹீரோவின் முந்தைய பட வெற்றியைப் பொறுத்தும், ஹீரோவைப் பொறுத்தும்தான் வியாபாரம். பைனான்ஸ் செய்கிறவர்கள் விநியோகஸ்தராக இருந்தால் இந்த இந்த ஏரியாக்களைப் பணத்துக்குப் பதிலாகக் கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தமிருக்கும்.
அப்படி வாங்கிய பைனான்ஸில் படமெடுத்துக்கொண்டிருக்கும்போது, பெரிய நிறுவனங்கள் படத்தை வாங்குவதாய் சொல்லி ஒப்பந்தம் போட வரும். அப்படி வரும் நிறுவனம் கடைசி நேரத்தில் சில பல காரணங்களால் ஆட்டத்திலிருந்து விலகிக்கொள்ள நேரும்போது தயாரிப்பாளர் ஏற்கனவே வாங்கிய கடன், நிறுவனம் மூலம் பெற்ற பணம், எல்லாவற்றையும் திரும்பக் கொடுத்தால்தான் இறுதி செட்டில்மெண்ட் ஆகும்.
ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை ஒப்பந்தம் போடப்பட்ட தொகை எவ்வளவாக இருந்தாலும் அட்வான்ஸுக்குப் பிறகு பட வெளியீட்டுக்கு முன்னர்தான் மீதித் தொகையைக் கொடுப்பார்கள். ஒவ்வொருவரிடமிருந்து வரும் இத்தொகைகளைக் கணக்கிட்டு, கடனைத் திரும்பக் கொடுக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அத்தயாரிப்பாளரின் முன் படப் பிரச்சினை போன்ற பல விஷயங்களை அடிப்படையாக வைத்துக் கடைசி நேரத்தில் காலை வாரி விடுவதோ, அல்லது அடிமாட்டு விலைக்குக் கேட்பதோ வழக்கமாக நடப்பதுதான். அப்படிப் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் அநேகர்.
நெஞ்சுவலி தயாரிப்பாளர்
அதையெல்லாம் மீறி கடைசி கட்ட பேச்சுவார்த்தையைத் தில்லாலங்கடியாய் முடிக்கும் தயாரிப்பாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். படம் டெபிஸிட் பணமில்லை என்று தெரிந்துகொண்டே லேப் பக்கம் வராமல் மருத்துவமனையில் ஹார்ட் அட்டாக் என்று படுத்துக்கொண்டு அம்பேல் என்று கையைத் தூக்கி உன்னால் ஆனதைப் பார்த்துக்கோ என்று படுத்துக்கொண்டு, தன் ஆட்களை விட்டு என்ன நடக்கிறது என்று விசாரித்துக்கொண்டிருப்பார்கள். விநியோகஸ்தர்களே ஃபைனான்ஸியருடன் பேசி முன்னே பின்னே காசு போட்டு ரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் ஏராளம். படத்தை விலைக்கு வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். பைனான்ஸ் கொடுத்தவருக்கோ. இந்தச் சமயத்தை விட்டால் காசு வராது.
இவர்களின் நிலையைச் சரியாகப் புரிந்துகொண்ட தயாரிப்பாளர் கல்லுளிமங்கனாய் “என்னால ஒண்ணும் பண்ண முடியலை” எனப் பேசி, ஒரு கோடி ரூபாய் ஃபைனான்ஸில் எடுத்த படத்தைப் பல சமயங்களில் வட்டி கூட வேண்டாம் அசலைக் கொடுத்தாலே போதும் என்கிற மனநிலைக்கு ஃபைனான்சியரைக் கொண்டுவந்து விடுவார்கள். இன்னும் சிலர் ஏற்கனவே எட்டு மாசம் வட்டி கரெக்ட்டாத்தான் கொடுத்திருக்கேன். அதனால கொடுக்கிற அசலில் இன்னும் கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சலாக மிரட்டி, வாங்கிய பணத்தைவிடக் குறைவாகக் கொடுத்து செட்டில்மெண்ட் செய்த கதைகளும் உண்டு.
இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் இருக்கும் துறையில் படம் வெற்றியோ தோல்வியோ, கையில் பணத்தை வைத்துக்கொண்டு, தயாரிப்பில் இறங்கும் தயாரிப்பாளர்களும், பட்ஜெட்டிலிருந்து வியாபாரம் வரை துறையைப் பற்றிய தெளிவான அறிவும், பண பலமும் கொண்டு சரியாகப் பயணிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உத்தம பயணியாக இருந்தாலும் நிஜத்திலும் வில்லன்கள் நிறைந்ததுதான் தமிழ் சினிமா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago