சினிமா மீதான எனது ஈர்ப்பு பால்யத்திலேயே தொடங்கிவிட்டது. அதற்குக் காரணமானவர் என் அப்பா பாலசுப்ரமணியன். அவர் நாடக ஆசிரியர், இயக்குநர், நடிகர், நாடக சபா நடத்தியவர். அன்றைய முன்னணி நடிகர் மோகனை வைத்து ஒரு திரைப்படத்தைத் தயாரித்து இயக்க ஆரம்பித்தார். ஆனால் அதைத் தொடர முடியாமல் தன் அரசுப் பணிக்குத் திரும்பினார்.
அவரின் தோல்வி காரணமாக எங்கள் குடும்பத்திலிருந்து யாரும் சினிமா பக்கம் ஒதுங்க மாட்டார்கள் என்றே எண்ணியிருந்தார்கள். ஆனால் சினிமா என்பது விடாது கறுப்பு. ஒரு முறை தெரிந்தோ, தெரியாமலோ காலை வைத்தால் அது உங்களை இழுத்து ஒரு ஆட்டு ஆட்டாமல் விடாது. சிறு வயது முதலே சினிமாவைப் பற்றி அப்பாவுடன் விவாதித்தே வளர்ந்தவன் நான். அவர் விதைத்த விதை என்னுள் மரமாய் வளர்ந்திருந்தது.
கற்றுத் தந்த தோல்வி
நான் இதைச் சொல்வதன் காரணம் அவரின் சினிமா முயற்சி தோல்வி எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம். பணம் மட்டுமே நம் ஆசைக்கும் கனவுக்குச் செயல் வடிவம் தரும் என்ற காரணத்தால் குடும்பத்தைக் காப்பாற்ற முதலில் பணத்தைச் சம்பாதித்துவிட்டுப் பிறகு சினிமாவுக்கு வர வேண்டுமென்று விரும்பினேன். நான் பொறியியல் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் செய்யும் தொழில் எல்லாமே பொழுதுபோக்குத் துறை சார்ந்ததாகவே அமைந்துவிட்டன.
வீடியோ பார்லர், கேபிள் டிவி என ஒரு வட்டமடித்து எழுத்து, சினிமா இயக்கம் என என் அப்பாவின் ஆசையான இயக்குநர் நாற்காலியில் நான் அமர்ந்தபோது அதைப் பார்க்க அவரில்லை. என்றாலும் அவரது கனவை நிறைவேற்றிய வகையில் அவரின் ஆத்மா சந்தோஷமடைந்திருக்குமென்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
சினிமாவைப் பற்றி நான் இணையத்தில் சோர்வின்றித் தொடர்ந்து எழுதிவந்ததன் மூலம் எனக்குக் கிடைத்த அங்கீகாரம் மிகப் பெரியது. ஒவ்வொரு படத்தைப் பற்றியும் நான் எழுதும்போதெல்லாம் பலவாறான விமர்சனங்கள் வந்ததுண்டு. ஆனால் ஒரு வசனகர்த்தாவாய், திரைக்கதையாளனாய், இயக்குநராய் நான் ஆனதற்கு என் எழுத்துகளும் முக்கியக் காரணம் என்று நம்புகிறேன்.
எழுத்தும் இயக்கமும்
நான் இயக்கிய ‘தொட்டால் தொடரும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அதன் தயாரிப்பாளர் துவார். சந்திரசேகரிடம் “இவருக்கு எதனால் படம் இயக்கும் வாய்ப்பு கொடுத்தீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “ எல்லாப் படங்களையும் விமர்சனம் பண்ணி எழுதுறீங்களே. உங்களுக்கு ஒரு படம் கொடுக்கிறேன். ஒழுங்கா எடுக்கிறீங்களான்னு பார்க்குறேன் என்று சொல்லித்தான் படம் கொடுத்தேன்” என்றார். படம் தயாரான பிறகு “நான் இதுவரை எடுத்த படங்களில் நல்ல படமாய் வந்திருக்கிறது” என்றார்.
‘தி இந்து’ தமிழில் கட்டுரை தொடர் எழுதியதும் அதுபோன்றதுதான். வலையில் எழுதுபவரால் நாளிதழ் வாசகர்களுக்கும் எழுத முடியும் என்று ஆசிரியர் குழுவினர் நம்பியதால்தான் கடந்த 30 வரங்களாக நான் உங்களிடம் பேசியிருக்கிறேன். கோணங்கள் தொடர் ஆரம்பித்தும் அதற்குக் கிடைத்த வரவேற்பு ஆச்சரியகரமாய் இருந்தது. இதுவரை எழுதிக் கிடைத்த வரவேற்பைவிட அதிகமான வாசகர்களை இந்தத் தொடர் சென்றடைந்தது.
தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் எனக்கு வந்த மின்னஞ்சல்களும், தொலைபேசி அழைப்புகளுமே இதற்குச் சான்றுகள். சினிமா எனும் மாபெரும் மீடியாவின் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
பலர் என்னிடம் பகிர்ந்துகொண்ட வகையில் அவர்களுக்குத் தெரியாத பல விஷயங்களைத் தெரிந்துகொண்டதாகவும், மேலும் பல சந்தேகங்களையும் கேட்டு ‘எங்களுக்கு மின்னஞ்சலில் பதில் எழுதாதீர்கள் உங்கள் கட்டுரைகளில் எழுதுங்கள் என்னைப் போலத் தெரிந்துகொள்ள இணைய வசதியில்லாத பலருக்கும் அது சென்றடையும்’ என்று சுட்டிக்காட்டியபோது ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ரீச்சும் வீச்சும் என்னவென்று இந்த முப்பது வார நீச்சலில் துல்லியமாய்ப் புரிந்தது.
பெரும்பாலும் இங்கு நான் எழுதிய கட்டுரைகளில் துறையின் பிரச்சினைகள் சார்ந்தும், அதன் நேர்மறை விஷயங்களைவிட எதிர்மறை விஷயங்களை அதிகம் முன்வைத்தும்தான் எழுதினேன். ஏன் சினிமாவில் நல்ல விஷயங்களே இல்லையா என்று கேட்டவர்கள் அதிகம்.
நிச்சயம் இருக்கிறது. ஆனால் இத்தொடர் வியாபாரம் சம்பந்தப்பட்டதாய் அமைந்தது. எனவே இதில் உள்ள சாதகங்களைவிட, பாதகங்களைச் சொல்ல வேண்டிய கட்டாயம். முக்கியமாய் இத்துறையின் உள்ள முதலீடும், வருமானம் என்பதும் ஊக வியாபாரம் போன்றது. எனவே அதன் அடிப்படையைத் தெரிந்துகொண்டு இயக்குவது அவசியம்.
திரைத்துறையில் அவ்வப்போது நடக்கும் பிரச்சினைகள் தொடர்பான பல கட்டுரைகள் எழுத நேர்ந்தது. அவை தற்செயலாய் அமைந்தவை. அம்மாதிரியான கட்டுரைகள் எழுதியபோது நண்பர்கள் சிலரின் தவறுதலான புரிதலால் நான் உத்தம வில்லனாக மாறிய அனுபவங்களும் உண்டு. பின்பு புரிந்துகொண்டு பாராட்டியவர்களும் உண்டு. என்னைப் பொறுத்தவரை நான் சார்ந்த துறையைப் பற்றி எனக்குத் தெரிந்த, நானறிந்த அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். துறை சார்ந்த பலரும் அதை ஆமோதித்திருக்கிறார்கள் என்கிற வகையில் எனக்குச் சந்தோஷமே.
இவ்வளவு எதிர்மறையான விஷயங்களை மீறி நான் இயங்கிக்கொண்டிருப்பது இதே துறையில்தான். நீந்துகிறவன் மட்டுமே கரை சேர முடியும் என்று நம்புகிறவன் நான். இக்கட்டுரை எழுத வாய்ப்பளித்த தமிழ் இந்து ஆசிரியருக்கும், நிறுவனத்துக்கும், ஆதரவு அளித்த வாசகர்களுக்கும் என்றென்றும் நன்றிகள்.
(கோணங்கள் தொடர் நிறைந்தது)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago