பெண்களுக்கு துணிச்சலைத் தருகிறது சின்னத்திரை: சுதா சந்திரன் சிறப்பு பேட்டி

By மகராசன் மோகன்

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை வரும் திங்கள் முதல் தொகுத்து வழங்க உள்ளார் நடிகை சுதா சந்திரன். புதிய பயணத்தை தொடங்கவுள்ள அவரைச் சந்தித்தோம்.

இதுபோன்ற ரியாலிடி நிகழ்ச்சிக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்?

நம் சொந்த பிரச்சினைகளில் சில நேரத்தில் தீர்வு காண திணறும்போது இதுபோன்ற நிகழ்ச்சிகள் அதற்கு சரியான வழியைக் காட்டுகிறது. நிஜ வாழ்க்கையிலும் போராட்டங்களை கடந்து தனி ஒரு அடையாளத்தை பெற்ற அனுபவம் எனக்கு உள்ளது. அதை வைத்துத்தான் இங்கே பலரும் என்னை ‘நிஜ வாழ்க்கை நாயகி’யாகப் பார்க்கிறார்கள். மக்கள் விரும்பி பார்க்கும், சரியான தீர்வை எதிர்நோக்கும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் என் பங்களிப்பு இருக்கப் போவதை பெருமையாகவே நினைக்கிறேன்.

ஒரு காலத்தில் சின்னத்திரை வில்லி என்றாலே உங்கள் முகம்தான் நினைவுக்கு வரும். இப்போது வில்லி வேடங்களை ஏற்க மறுத்துவிடுகிறீர்களாமே?

தமிழ், இந்தி என்று மாறிமாறி நிறைய தொடர் களில் வில்லியாக நடித்திருக்கிறேன். ஒரு கட்டத் தில் எனக்கே அந்த கதாபாத்திரம் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து அதுமாதிரி நடிப்ப தால் நிஜ வாழ்க்கையில் உள்ள நேர்மறையான எண்ணங்கள் மறைந்துவிடுமோ என்ற அச்சத்தா லேயே பெரும்பாலும் அதை தவிர்த்தேன். இனி வித்தியாசமான வேடங்களில்தான் நடிப்பேன்.

‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நீங்கள் அதை எப்படி நகர்த்தி செல்லப்போகிறீர்கள்?

முன்பெல்லாம் பெண்ணுக்கு ஒரு பிரச்சினை என்றால் கடவுளிடமும், பெற்றோர்களிடமும் முறையி்டுவோம். இன்றைக்கு அப்படி இல்லை. பிரச்சினைகளை எதிர்நோக்குகிற விழிப்புணர்வு இங்கே பலரிடம் வந்துவிட்டது. ஒரு பெண் தன்னுடைய பிரச்சினையை தானே முன் நிறுத்தி பேசுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்.

அந்த துணிவை இப்போது சின்னத்திரை வழங்குகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியே பெண்கள் தங்கள் துணிச்சலை வெளிப்படுத்துகிறார்கள். இந்த சூழலில் அவர்களுக்கு சரியான பாதையை மட்டும் கொடுத்தால் போதுமென்று நினைக்கிறேன்.

பிரச்சினைகளை சரியாக ஆராய்ந்து உண்மையான செய்திகளை கொடுக்க பாலமுருகன், எட்வர்டு, பிரவீனா, மணிமேகலை, சதீஸ், கிருஷ்ணா, ருக்கு மாங்கதன், ஜெயராமன், ஆன்டனி, சுசீந்திரன் ஆகியோர் கொண்ட ஒரு சிறப்பான குழுவை வைத்து இந்த நிகழ்ச்சியை இயக்குநர் சரவணன் நகர்த்திக் கொண்டு போகிறார். அதோடு, சமூக பிரச்சினை ஒன்றை பார்க்கும்போது அதை வெறும் பார்வையாளராக மட்டுமே அணுகாமல் அதை தீர்க்க முயற்சி எடுப்போம்.

சின்னத்திரை நிகழ்ச்சி மற்றும் சீரியல்கள் தற்போது டிஆர்பி ரேட்டிங் என்பதை கடந்து மக்களின் எதிர் பார்ப்பு, அவசியம் இவற்றில் கவனம் செலுத்துகிறதா?

இன்றைக்கு தொலைக்காட்சி மண்டல அளவில் இருந்து தேசிய அளவில் கவனிக்கும் ஒரு அங்கமாக விரிவடைந்திருக்கிறது. இளம் தலைமுறையினர் நடைமுறை யதார்த்த வாழ்க்கைக்கு அவசியமான விஷயங்களை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். தான் எதிர்பார்த்த ஒரு விஷயம் ஒரு சேனலில் கிடைக்கவில்லை என்றால் அடுத்த சேனலுக்கு மாறுகிறார்கள். தொலைக்காட்சிகளும் அதை சரியாக உணர்ந்து வித்தியாசமான நிகழ்ச்சிகளை தருகின்றன. தமிழ் சின்னத்திரையில் வரவேற்கக் கூடிய நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது.

உங்கள் சொந்த ஊர் தமிழ்நாடு. ஆனால், மும்பை வாசியாகவே இருக்கிறீர்களே?

எங்கள் பூர்வீகம் திருச்சி. ஆனால் நான்கு தலை முறைக்கு முன்பே கேரளாவிலுள்ள திருச்சூருக்கு இடம்பெயர்ந்துவிட்டோம். நான் பிறந்து வளந்தது எல்லாம் மும்பைதான். இந்தியில் சினிமா, சீரியல் களில் பிஸியாக இருந்தபோது ‘தமிழ்ல நடிக்கணும். அதுவும் கே.பாலசந்தர் இயக்கத்தில் ஒரு காட்சி யிலாவது நடிக்கவேண்டும்’ என்று என் அம்மா சொல்லிக்கொண்டே இருப்பார். இப்போது அவர் இல்லை. ஆனால் அவரது ஆசிர்வாதத்தால் நான் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் எனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருக்கிறேன்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

33 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்