அலசல்: ரசிகர்களை நோகடித்த வில்லன்!

By ஆர்.சி.ஜெயந்தன்

சினிமாவைக் கொண்டாடும் ரசிகர் பட்டாளம்தான் அதன் அஸ்திவாரம். ரசிகர்கள் தரும் பணத்தின் மூலமே எத்தனை பெரிய தொழில்நுட்பத்தையும் பிரச்சினைகளையும் உள்வாங்கிச் செரித்து வணிக சினிமா தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது.

தங்கள் அபிமான நாயகனுக்கும் இயக்குநருக்கும் மன்றம் வைத்துக் கொண்டாடும் ரசிகர்கள் பலர் அவர்களை அப்படியே பின்பற்றவும் தயங்குவதில்லை. தங்கள் அபிமான நாயகனின் படத்தை வெளியான முதல் நாளே திரையரங்கில் பார்த்துவிட வேண்டும் எனத் துடிக்கும் வெறித்தனமான ரசிகர்களின் எண்ணிக்கைதான் சம்பந்தபட்ட நாயகனின் வியாபார எல்லையை விஸ்தரித்துக்கொண்டே செல்கிறது.

நாயகர்களின் ஆன்மப் பலம் என்பதும் அவர்கள் தரும் நிபந்தனையற்ற ஆதரவுதான். அத்தகைய ரசிகர்களையே வில்லன்களாக மாற்றிவிடும் சூழல் துரதிஷ்டவசமானது. வெளியீட்டுத் தேதியை அறிவித்த நாளில் படம் வெளியாகவில்லை என்றால் திரையரங்குவரை சென்று ஏமாற்றதுடன் திரும்பும் ரசிகனின் கோபம் அவனை வில்லன் நிலைக்குக்கூடத் தள்ளிச் செல்லும்.

உத்தம வில்லன் வெளியாக வேண்டிய நாளில் வெளியாகாமல்போனதும் திரையரங்கின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரசிகர்கள் தங்கள் ஆத்திரத்தைக் காட்டிய சம்பவங்களே இதற்குச் சாட்சி. உத்தம வில்லன் வெளியீட்டில் ரசிகர்களைக் கொதிப்படையச் செய்தது யார் என்று அலசினால் முதலில் படத்தின் தயாரிப்பாளரே வந்து முன்னால் நிற்கிறார் என்கிறார்கள்.

கடைசி நேர உஷார்!

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரிக்கும் போது, சினிமா தொழிலுக்கு வட்டிக்குக் கடன் தருபவர்களை நம்பிக் களமிறங்குகிறார்கள் பல தயாரிப்பாளர்கள். அடுத்து விநியோகஸ்தர்களிடமும் திரையரங்க உரிமையாளர்களிடமும் படத்தின் விநியோகம் மற்றும் திரையிடல் உரிமையைத் தருவதாக முன்பணம் பெறுகிறார்கள். இவற்றோடு பெரிய பட நிறுவனங்களிடம் படத்தின் நெகட்டிவ் உரிமையை முன்னதாகவே விற்றும் பணம் பெறுகிறார்கள்.

இப்படி எல்லாப் படங்களுக்கும் பணத்தைக் கடனாகத் திரட்ட முடியாது. தமிழ்நாடு , மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் என எங்கும் வியாபார மதிப்பு கொண்ட முன்னணி நாயகர்கள் நடிக்கும் படம் என்றால் மட்டுமே நம்பிக் கடன் தருகிறார்கள். படம் முடிந்து, தணிக்கைக்குத் தயாராகும்போதே படத்தின் வியாபாரம் களை கட்டத்தொடங்கிவிடும். வியாபாரம் முடித்துப் பணம் கைக்கு வந்ததும் தயாரிப்பாளர் கடன் வாங்கிய அனைவருக்கும் வட்டியுடன் பணத்தைத் திரும்பக் கொடுப்பார்.

அதன் பிறகே படம் வெளியாகும். ஆனால் படத்தின் வியாபாரம் முடிந்தும் கடன் கொடுத்தவர்களுக்குக் கொடுத்த மொத்தப் பணமும் வட்டியுடன் கைக்கு வரவில்லை என்றால் படம் வெளியாவதைச் சட்ட ரீதியாகத் தடுத்துவிடுகிறார்கள். கடன் கொடுத்தவர்கள் படம் வெளியாகும் கடைசி நேரத்தில் உஷாராவதற்குக் காரணம், அப்போது கடனை வசூல் செய்யாவிட்டால் அந்தப் பணம் அவ்வளவுதான் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். எல்லாம் அனுபவம் தந்த பாடம்.

அகலக் கால் வைத்தால்

ஒரு படம் அறிவித்த தேதியில் வெளியாகாத சூழ்நிலை ஏற்படும் என்று தெரிந்தால் அதைத் தீர்க்க முன்னதாகவே தயாரிப்பாளர் களத்தில் இறங்குவார். கடன் கொடுத்தவர்கள், தயாரிப்பாளர் உருவாக்கி வைத்திருக்கும் நல்லெண்ணம், நாணயம் ஆகியவற்றை முன்னிட்டு வட்டியின் ஒருபகுதியை விட்டுக் கொடுப்பார்கள்.

படத்தின் நாயகனும் சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்துப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர முன்னால் நிற்பார். ஆனால் உத்தம வில்லன் விவகாரத்தில் படத்தின் தயாரிப்பாளர் ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரிக்க முனைந்து அகலக் கால் வைத்ததுதான் படம் சிக்கலில் மாட்டிக்கொண்டதன் பின்னணிக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

முதல் பிரதி அடிப்படையில் கமல் உருவாக்கித் தந்த இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமை அவரது சம்பளத்தின் ஒரு பகுதியாக அவர் வசமானதாகத் தெரிகிறது. இதனால் பிரச்சினை வெடித்த நேரத்தில் கமல் ஊரில் இல்லாமல் வெளிநாட்டில் படத்தை விளம்பரப்படுத்தச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

கமலின் கால்ஷீட்டைப் பெற்றுப் படத்தைத் தயாரித்த லிங்குசாமி, அதன் பலனை அனுபவிக்க முடியாமல் தவித்தார். நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மத்தியஸ்தம் செய்து படத்தை வெளியிட உதவின. கடைசியில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் லிங்குசாமிக்குக் கைகொடுத்தது.

கடனுக்கான பொறுப்பை ஏற்று படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவுக்கு உத்தம வில்லன் படத்தின் முக்கிய உரிமைகளை விற்க வேண்டிய சூழல் உருவானதாம். அப்படியும் கடன்களை அடைக்க முடியாததால் சூர்யாவை வைத்துத் தயாரிக்க இருந்த சதுரங்க வேட்டை 2 படம், சிவகார்த்திகேயன் நடித்து முடித்த ’ ரஜினி முருகன்’ படம் உட்பட மேலும் பல படங்களின் வியாபார உரிமையையும் லிங்குசாமி தாரை வார்க்க வேண்டியிருந்ததாகச் சொல்கிறார்கள்.

வெற்றிகரமான இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருந்துவரும் லிங்குசாமியை முதலில் கடன் சுமையில் சிக்க வைத்தது ’அஞ்சான்’ படம் ஏற்படுத்திய நஷ்டம் எனத் தெரிகிறது. யூடிவி வெளியீடு செய்திருக்க வேண்டிய அந்தப் படத்தை அதீத நம்பிக்கையுடன் தாமே வெளியிடுவதாக லிங்குசாமி நிறுவனம் எடுத்த முடிவு பெரும் இழப்பில் முடிந்துவிட்டது என்கிறார்கள்.

சினிமா தொழிலில் ஒரே நாளில் மொத்தக் கடனையும் அடைக்க வழி இல்லை. இதனால் ஒரு கடனை அடைக்க இன்னொரு கடனை வாங்க வேண்டிய நிலைக்கு லிங்குசாமி தள்ளப்பட்டாராம். இன்னொரு பக்கம் உத்தம வில்லன் படத்தை வெளியிடுவதாக ஈராஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டிருந்ததாகவும் ஆனால் கடைசி நேரத்தில் அவர்கள் பின்வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

ரசிகர்களுக்கு முதல் நாள் இழப்பு

உத்தம வில்லன் படம் அறிவித்த நாளில் வெளியாகாமல் மறுநாள் வெளியானதால் அந்த ஒரு நாளில் ஓபனிங் வசூலாகக் கிடைத்திருக்க வேண்டிய எட்டு முதல் பத்துகோடி ரூபாய் கணிசமான இழப்பாகிவிட்டதாகச் சொல்கிறார்கள் வசூல் வட்டாரத்தில். முதல் நாள் இழப்பு தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, இணையங்கள் வழியே டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கும்தான்.

ரசிகர்களின் நஷ்டம் வெறும் பணம் சம்பந்தப்பட்டதல்ல. அதற்கும் மேலே. வேலைக்கு விடுப்பு எடுத்துவிட்டு, வாகனங்களை பார்க்கிங் செய்துவிட்டு திரையரங்கு நோக்கி ஓடி வந்தவர்களுக்குப் படம் வெளியாகாது என்ற செய்தி கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்த ரசிகர்களின் ஏமாற்றத்தைத் திரையரங்கின் வாசல்களில் பார்க்க முடிந்தது. டிக்கெட் கட்டணத்தையாவது திரும்பப் பெற்றுச் செல்லலாம் என்று நினைத்தவர்களுக்குப் பணம் திரும்பத் தரப்படவில்லை.

காரணம் பெரும்பாலான ரசிகர்கள் சம்பந்தப்பட்ட திரையரங்கம் நடத்தாத ‘தேர்ட் பார்டி’ இணையதளங்களின் மூலம் முன்பதிவு செய்தவர்கள். இவ்வாறு சினிமா டிக்கெட் விற்பனை செய்துவரும் இணையதளங்கள் டிக்கெட் விலையோடு கமிஷனாக வசூல் செய்யும் கணிசமான கட்டணம் கணக்கில் வராத பணம் என்பதால் அதை திருப்பித் தருவதில்லை என்றும், எஞ்சிய டிக்கெட் கட்டணத்தைத் திரும்பக் கொடுக்க ஒருவாரம் வரை ஆகும் என்றும் தெரிய வந்த காரணத்தால்தான் பல ரசிகர்கள் திரையரங்கின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கோபத்தைக் காட்டினார்கள் என்கின்றன திரையரங்க வட்டாரங்கள்.

எப்படியிருப்பினும் பெரும் முதலீட்டில் தயாராகும் ஒரு படம் சிக்கல்களில் இருக்கிறதென்றால், அது முன்னதாகவே தயாரிப்பாளருக்கும் நாயகனுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. படம் வெளியாகும் கடைசி நேரம் வரை படம் சம்பந்தப்பட்ட முக்கியப் புள்ளிகள் அமைதி காத்தால் உத்தம வில்லனுக்கு ஏற்பட்டதுபோன்ற சங்கடத்தைத் தவிர்க்க முடியாது என்பதுதான் தயாரிப்பாளர் வட்டாரத்தில் பலரது கருத்து.

தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் குறைகளைக் கவனிக்கத் தனித்தனி அமைப்புகள் உள்ளன. மனம் கவர்ந்த நாயகனின் படத்தை முன்பதிவு செய்துவிட்டு ஆவலோடு காண வந்த ரசிகர்களின் ஏமாற்றத்திற்குத்தான் பதில் சொல்ல யாருமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்