இந்தித் திரையுலகத்தை யோசிக்க வைத்திருக்கிறது, கடந்த வாரம் வெளியான அனுராக் காஷ்யப்பின் ‘பாம்பே வெல்வெட்’ படத்தின் வணிகத் தோல்வி. பாக்ஸ் ஸ்டார், ரன்பீர், அனுஷ்கா ஷர்மா, திரிவேதியின் இசை, கரண் ஜோஹரின் நடிப்பு அறிமுகம் போன்ற அதிகபட்ச சுவாரஸ்யங்கள் இதில் இருந்தன. அனுராக்கின் முதல் கமர்ஷியல் படமான இதன் பட்ஜெட் சுமார் எண்பது கோடி என்கிறது பாலிவுட் வட்டாரம், அதுவும் திரையிடம் மற்றும் விளம்பரச் செலவு ஆகியவை தவிர்த்த தொகையே இது என்கிறது.
தன் பட தோல்வி குறித்து அனுராக் ஒரு பக்கம் பதில் சொல்லிக்கொண்டிருக்க, டிவிட்டரில் ராம்கோபால் வர்மா கலாய்க்க, பதிலுக்கு அனுராக் அவரின் ‘ஆக்’ திரைப்படத்தைக் கலாய்க்க விஷயம் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. வியாபாரரீதியில் படம் தோல்வி என்றாலும் அனுராகின் இன்னொரு மைல்கல் படமென்று கொண்டாடும் தரப்பும் இருக்கத்தான் செய்கிறது.
அறுபதுகளின் பம்பாய்
ரன்பீர் கபூர் பம்பாயில் பாலியல் தொழில் செய்யும் தாய்க்குப் பிறந்தவன். அந்தச் சூழலில் வளர்ந்து வருபவன். அதனால் மிகச் சுலபமாக கிரிமினல் வேலைகளில் சிறுவயது முதலே ஈடுபட்டு வருகிறவன். தாயின் வேலை பிடிக்காமல் வளர்பவன். பாசத்துக்காக ஏங்குகிறவன்.
அவனுக்கும் இன்னொரு சிறுவனுக்கும் நட்பாகி இருவரும் ஒரு சேர சிறு சிறு கிரிமினல் வேலைகள் செய்து வளர்கிறார்கள். வளர்ந்துவரும் நேரத்தில் பம்பாயின் பிசினெஸ்மேன், டோரண்ட் எனும் பத்திரிகை அதிபரான, கரண் ஜோஹருக்கு அறிமுகமாகிறார். அவர் தனது நிழல் உலக வேலைகளுக்கு ரன்பீரைப் பயன்படுத்தி, தன் எதிரிகளை அழிக்கிறார்.
ரன்பீருக்கோ தான் பிறந்து வளர்ந்த சூழலிலிருந்து மும்பையின் பெரிய மனிதராக வர வேண்டுமென்ற ஆசை. அந்த ஆசையைப் பயன்படுத்திக் குளிர்காய்கிறார் கரண். ரன்பீர் பெயரில் பினாமியாய் ஆரம்பிக்கும் பம்பாய் வெல்வெட் எனும் உயர் ரக பார் ரெஸ்டாரண்டைத் தன் ஆதாயத்துக்காக விருந்தினர்களைக் குஷிப்படுத்துமிடமாக மாற்றிக்கொடுக்க, ரன்பீர் விறுவிறுவென்று வளர்ந்து நிற்கிறார்.
ஒரு நெகடிவ், ஒரு அழகி
கோவாவில் போர்ச்சுகீஸியக் குடும்பத்தில் பிறந்து அருமையான குரல் வளம் கொண்ட சிறுமியான அனுஷ்காவை அவருடைய ஆசிரியை தன் பொறுப்பில் வளர்க்கிறார். ஆசிரியையின் ஒடுக்குதல் தாங்காமல் அனுஷ்கா பம்பாய்க்குத் தப்பித்து வருகிறார்.
பம்பாயில் சாதிக்க வரும் அனுஷ்காவுக்கு நிழல் உலக மனிதர் ஒருவரின் தொடர்பு கிடைக்கிறது. கரணுக்கும் அவருடைய நண்பனாய் இருந்து பின்னாளில் போட்டி பத்திரிகையை ஆரம்பித்த கிளிட்ஸ் பத்திரிகையின் அதிபருக்கும் பிரச்சினை. அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் நுழைந்து பம்பாயின் மேயருடன் நெருக்கமான நண்பராகி சில பல வேலைகளில் இறங்குகிறார்.
நேர்மையான அமைச்சர் ஒருவரின் அந்தரங்க போட்டோ நெகட்டிவ் ரன்பீரிடம் இருக்கிறது. அதை வைத்து ரியல் எஸ்டேட் தொழிலில் பெரிய நாரிமன் பாயிண்ட் இருக்கும் ஒரு முக்கிய இடத்தை ஆக்கிரமிக்க முயல்கிறார் அவர். அந்த போட்டோ நெகட்டிவை வாங்க கிளிட்ஸ் பத்திரிகை ஆசிரியர் ரன்பீரின் பாம்பே வெல்வெட்டுக்கு அனுஷ்காவைப் பாடகியாய் அனுப்பிவைக்கிறார்.
உளவு பார்க்க வந்த அனுஷ்காவுக்கும், ரன்பீருக்கும் காதல் பற்றிக்கொள்கிறது. தன் மனைவியை வைத்தே காரியம் சாதித்துக் கொள்ளும் கரண், ரன்பீர் அடுத்த கட்டமாய் வளர்ந்தால், தனக்கு அடங்கமாட்டானென்று ரன்பீரை அடக்கப் பார்க்கிறார். கடைசியில் கரணின் சதிக்கு, தன் காதலாலும், தீரா ஆசையாலும் இறக்கிறார். ரன்பீர்.
எங்கே சிக்கல்?
இதே போன்ற கதையைப் பல நடிகர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள் ஏற்கெனவே கையாண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் அனுராக் சொல்ல முயன்ற விஷயங்கள் அபாரம். அக்காலகட்டத்தை கண்முன் நிறுத்தும் கலை இயக்குநரின் கை வண்ணம். வெள்ளைக்காரனை வெளியேற்றிய பின், வெள்ளைக்காரனின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய பணக்காரர்களின் நடவடிக்கைகள், பம்பாயை வியாபாரத் தளமாகக் கொண்டு நடக்கும் அரசியல் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள், நிழலுலக வேலைகள்.
அரசியல் பின்னணிகள், ரன்பீரை, அவனது நெட்வொர்கைப் பிடிக்க முயலும் போலீஸ் அதிகாரி கே.கே.மேனன், அரசியல்வாதியுடன் இணைந்துகொண்டு அவருக்கு எதிராகச் சதி செய்யும் போலீஸ் கமிஷனர் என நிறைய விஷயங்களைத் தொட்டிருக்கிறார்.
இத்தனை கதைகளையும் சொல்லும் பாணியில், ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கும் மாறும் விஷயங்களில், குறிப்பாக ரன்பீரின் சிறு வயது காட்சிகளிலிருந்து பதினைந்து வருடங்கள் முன் நோக்கி வரும் ஸ்டைல், அனுஷ்கா சிறு வயதுப் பெண்ணாக அவரின் ஆசிரியையிடம் பின்னங்காலில் அடிவாங்கித் தழும்பேறிய காலுடன் நடக்க ஆரம்பிக்க, அடுத்த ஷாட்டில் வேறொரு பெரிய பெண்ணின் பின்னங்காலில் ஆரம்பித்து, அனுஷ்காவைக் காட்டும்போது அவரது வளர்ச்சியை, கால ஓட்டத்தைப் புரியவைத்த விதம் பளிச்.
பாலியல் தொழில் செய்யும் தாயின் மேலுள்ள கோபத்தை வெளிக்காட்ட, வெளிநாட்டுப் படங்களில் வருவதைப் போலக் கூண்டினுள் சண்டை போடும் ஆளிடம் தன் கோபத்தை, வெறியை, ஏமாற்றத்தை வெளிப்படுத்தி, அடி வாங்கிக்கொண்டு பணத்தைக் கொடுக்கும் தருணம் என நேர்த்தியாக நகருகிறது படம்.
அமித் திரிவேதியின் இசையில் வரும் அருமையான க்ளாஸிக்கல் இசை, அதற்கான விஷுவல்கள், காஸ்ட்யூம்கள், என ஓபராவைக் கண் முன் நிறுத்தியது. ஆக்ஷன் காட்சிகளில் வெளிப்படும் வன்முறை, அழகியல், ரவிராயின் விஷுவல்கள். சின்ன சின்ன வசனங்கள் என மெனக்கெட்டிருக்கிறார்கள்.
சினிமா மீது ஆர்வமுள்ள கலைஞர்கள் கதை சொல்லும் விதத்திலும், நடிகர்களின் நடிப்பு, பேசப்படாத வசனங்கள், காட்சிகளை நகர்த்திய விதம் இப்படி நுணுக்கமாகப் பார்த்தால் நிறைய விஷயங்கள் ஒவ்வொரு முறையும் பார்வையாளனுக்குப் புதிதாகத் தோன்றக்கூடியவை சினிமாவை நேசிக்கத் தொடங்கும் புதியவர்கள் கற்றுக்கொள்ளக் கூடிய விஷயங்கள் ஏராளம்.
புளிப்பேறிய காதல்
அதே நேரத்தில் தாதாக்களை, அரசியல்வாதிகளைப் பற்றிய கதையில் காதல் எனும் டெம்ப்ளேட்டை அடித்து நொறுக்கி, நெளியும்வரை புடைத்தெடுத்திருப்பதால் காட்சிகளில் பெரிய திருப்பங்களில்லை. பார்வையாளனைக் கவர நினைத்து எழுதப்பட்ட நிறைய கிளைக் கதைகள், பின்பு அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லாத திரைக்கதை, ஓபரா டைப் காதல், குழந்தைத்தனமான ரன்பீரின் முகம், அழுத்தமில்லாத காதல், கூண்டுச் சண்டை எனத் தடம் மாறி போய்க்கொண்டிருக்கிறது. இதனால் இந்த பாம்பே வெல்வெட்டின் காட்சிகள் ரசிகனுக்குத் தொடர்பற்று அன்னியமாகப் போய்விட்டன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago